Monday, August 17, 2020

BAGAVANNAMA BODENDRA SWAMI

            



சதா பகவன் நாமம்       J.K. SIVAN 


படித்து  விஷயங்களைத்  தெரிந்துகொள்பவன்  முழு மனிதன். சம்பாஷணை அவனை தயார் மனிதனாக்குகிறது என்றாலும்  எழுதுபவனுக்கு என்ன படித்தோம், எதை  எப்படிச்  சொல்லவேண்டும் என்ற ஞானம் இருந்தால் அவன் தான் சரியான மனிதன்... இதை பிரான்சிஸ் பேகன்  என்றோ சொல்லிவிட்டு போய் விட்டார்.  எழுதுவதற்கு முன் நிறைய  பிளான் பண்ண வேண்டி இருக்கிறது. ஏதோ மனதில் தோன்றியதை  உளறிக்கொட்டுவது எழுத்தல்ல.  நான் பேகன் சொல்லும் எழுத்தாளனாக   ரொம்ப  ரொம்ப காலமாகலாம். ஞாபக சக்தி ரொம்பவே  அவசியம்.  நான் மூக்குக்கண்ணாடியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டே  வீடு முழுதும் தேடுபவன். 

இன்று  பகவன் நாம  போதேந்திர சுவாமி பற்றி  எழுத எண்ணம். 

காமகோடி சங்கர 58வது ஜகதகுரு  ஸ்ரீ  ஆத்ம போதேந்திரரின்  அனுகிரஹத்தால் கேசவபாண்டுரங்க யோகி - சுகுணா தம்பதியருக்கு பிறந்த   குழந்தை புருஷோத்தமன்.   

'' கேசவ பாண்டுரங்கா, இந்த குழந்தை யார் அருளால் கிடைத்தது?
'' உங்களது  ஆசிர்வாதத்தால்,  சுவாமி ''
  ''அப்படியென்றால் இந்த குழந்தையை  மடத்துக்கு  நீங்கள் இருவரும் தந்துவிடுவீர்களா?
'' பகவான் அனுக்கிரஹம் அப்படி என்றால் அவ்வாறே நடக்கட்டும் சுவாமி ''

பெற்றோர் அவனை சங்கரமடத்துக்கே தந்துவிட்டார்கள். அங்கேயே வளர்ந்தான்.  வேதங்கள் சாஸ்திரங்கள்  எல்லாம் கற்ற புருஷோத்தமனின்  நண்பன்  ஞானசேகரன் இரண்டு பெரும்  ஞானஸ்தர்களாக வளர்ந்த மாணவர்கள். 

ஜகதகுரு ஆத்ம போதேந்திரர் ஒரு முறை  காசியாத்திரை போகும்போது '' நான்  இப்போ காசி போகிறேன்.  புருஷோத்தமா , ஞானசேகரா, ரெண்டுபேரும் கொஞ்ச நாள் கழித்து காசிக்கு வாங்கோ '' என்கிறார் . ஞானசேகரன் உண்மையில் சகல ஞானமும் தெரிந்தவன். சில நாளில் தான் மரணம் அடையப்போவது அவனுக்குத் தெரிந்து விட்டது.**

''புருஷோத்தமா, நீ  மட்டும்  தாண்டா  போய்சேருவே.  நான் காசி போய் சேர மாட் டேன்''

'ஞானசேகரா, அப்படி சொல்லாதேடா. உனக்கு மரணம் ஏற்பட்டால் நானும் காசியில் கங்கையில் மூழ்கி என் உயிர் துறப்பேன்'

**ஞானசேகரன் மறைந்தான். புருஷோத்தமன் காசிக்கு போனான். குரு ஆத்ம போதேந்திரரிடம் தனது முடிவை சொன்னான். புருஷோத்தமனின் எதிர்காலம் பற்றி நன்றாக உணர்ந் தவர் ஆச்சார்யர் ஆத்ம போதேந்திரர்.**

'புருஷோத்தமா, நீ கங்கையில் மூழ்கி இறந்தால் மறு ஜென்மம் எடுக்க போகிறாய். சன்யாசம் பெறுவது மறு ஜன்மத்துக்கு ஒப்பானது. சன்யாசம் பெற்றுக்கொள்''.**

'அப்படியே'' என்ற புருஷோத்தமன் குருவிடம் சன்யாசம் பெற்று இனிமேல் போதேந்திர ஸரஸ்வதி.. 

''நீ நேராக காஞ்சிக்குப் போ. போகும் வழியில் பூரி ஜெகந்நாதத்தில் லக்ஷ்மி ஸ்ரீதரர் என்கிற மஹான் ஒருவர் இருக்கிறார். அவரிடம் ''பகவந் நாம கெளமுதி'' எனும் கிரந்தத்தை உபதேசம் பெற்று அதன் அடிப்படையில் லக்ஷம் ஸ்லோகங்'கள் இயற்று''
போதேந்திரர்   பூரி  சென்ற சமயம் மஹான் லட்சுமி ஸ்ரீதரர் காலமாகி விட்டார் என அவர் மகன் ஜெகந்நாத பண்டிதர் மூலம் அறிகிறார் . அப்போது அங்கே ஒரு தம்பதியை பார்க்கிறார். ஆச்சர்யமான சம்பவத்தை அறிகிறார்.**

ஒரு தென்னிந்திய தம்பதி பூரிக்கு ஜெகந்நாத தரிசன யாத்திரை வரும்போது வழியே ஏதோ ஒரு ஊரில் சில முஸ்லிம்கள் அந்த பெண்ணை மட்டும் கணவரிடமிருந்து பிரித்து கடத்திக் கொண்டு போய் விட்டதால் கணவன் செய்வதறியாது தேடுகிறார்.

ஒரு நாள் விடிகாலை ஒரு நதிக்கரையில் சில முஸ்லிம் ஸ்த்ரீகள் ஸ்னானம் செய்கிறார்கள். இந்த மனிதர் வருவதைப்பார்த்த அவர்களில் ஒருத்தி அவரிடம் ஓடி வருகிறாள்.

' நாதா சீக்கிரம் வாருங்கள். இங்கிருந்து தப்பி விடுவோம்'' என்றதும் ஆச்சர்யம் அவருக்கு. எங்கோ சென்று தப்பி மறைந்து கொள்கிறார்கள். பிறகு அவர் தனது மனைவியை ப்ராயச்சித்தம் செய்ய  பூரிக்கு அழைத்து வந்திருந்தார். அங்கே அது விஷய மாக ஜெகந்நாத பண்டிதர் வீட்டுக்கு வரும்போது தான்  தற்செயலாக  அங்கே போதேந்திரர் அவர்களை பார்க்கிறார். விஷயம் அறிகிறார்.

*ஜெகநாத பண்டிதர் அந்த பெண்ணிடம் ''ஸ்ரீ ராம நாமத்தை'' விடாமல் ஜபம் பண்ணு. அதுவே பிராயச்சித்தம் என்கிறார்.

'சுவாமி, நீங்கள் சொன்னதற்கு ஏதேனும் சாஸ்த்ர பூர்வ ஆதாரம் இருக்கிறதா " என்று போதேந்திரர் கேட்கும்போது பண்டிதர் தனது தந்தை எழுதிய பகவன் நாம கௌமுதி யில் ஆதாரம் காட்டுகிறார். போதேந்திரர் தனது குரு இட்ட கட்டளையை நினைவு கூறுகிறார். இனி பகவன்நாம மஹிமையை எல்லோருக்கும் நிரூபிக்கவேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார்.

முஸ்லீம் ஆடையோடு வந்திருந்த அந்த பெண்ணையும் அவள் கணவனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போதேந் திரர் ஜெகந்நாதர் ஆலய புஷ்கரணியில் அவளை ஸ்ரீ ராமநாமம் உச்சரித்தவரே ஸ்னானம் செய்யச்சொல்கிறார். ஜலத்திலிருந்து எழுந்திருக்கும்போது அவள் பழைய ஹிந்து ஆடை ஆபரணங்களுடன், மாங்கல்யத்தோடு, நெற்றியில் குங்குமத்துடன் வெளிவருகிறாள். இது போதேந்திரரின் தெய்வீக அனுக்கிரஹம் என்று தம்பதியர் போற்றுகிறார்கள். அவளது பாபம் விலகி போதேந்திரரால் ஏற்கப்பட்டு அவரது பகவந்நாம ஜெப சக்தியால் கரைந்தது.**

**போதேந்திரர் பகவன் நாம கௌமுதி யோடு காஞ்சி செல்கிறார். பலமாதங்கள் சென்றபின் ராமேஸ்வர யாத்ரை முடித்து காஞ்சிக்கு திரும்பும் வழியில் கோவிந்தபுரம் என்ற கிராமத்தை அடைகிறார். அந்த ஸ்தலத்தில் தங்கிவிடுகிறார். தனது குரு ஆத்மபோதேந்திரர் சமாதி அடைந்ததிலிருந்து (1639) போதேந்திரர் காஞ்சி காமகோடி 59வது பீடாதிபதி ஆகிறார். பகவான் நாமா, ராமாயண பாராயணம் இதிலேயே நேரம் செல்கிறது.   அவரை உலகம்  இன்றும்  கோவிந்தபுரம் பகவந்நாம   போதேந்திரா என்று பூஜிக்கிறது. 

 ஒருநாள் கோவிந்தபுரத்தில் அவர் இருந்த நதிக்கரை ஆற்று மணலில் குழி தோண்டு கிறார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த சில பையன்களை கூப்பிட்டு,**
'''நான் இந்த குழியில் உட்கார்ந்து கொள்கிறேன். என்னை மண்ணால் மூடிவிடுங்கள். பிறகு சில மணிநேரங்கள் கழித்து குழியில் மண்ணை அகற்றுங்கள் நான் அப்படியே இருப்பேன் '' என்கிறார். இந்த விளையாட்டு பையன்களுக்கும் பிடித்த்திருந்தது. ஒரு வார காலம் இப்படி கழிந்தபின் ஒருநாள்

 ''இன்று குழியில் என்னை மண்ணால் மூடிவிடுங்கள். ஆனால் பிறகு குழி மண்ணை அகற்றக்கூடாது'' என்கிறார்.**

'எங்கே ஸ்வாமிகளை காணோம் ''என்று பக்தர்கள் மடத்தில் அவரைத்தேடி வருகையில் ஊர் பையன்கள் நடந்ததைச்  சொல்கிறார்கள். பக்தர்கள் கலவரமடைந்து குழியை தோண்ட முயற்சிக்கும்போது

*நான் குழியில் சமாதி அடைந்துவிட்டேன். குழி மண்ணை அகற்றவேண்டாம்'' என்ற ஸ்வாமிகள் குரல் அவர்களுக்கு கேட்கிறது. அங்கே ஒரு பிருந்தாவனம் அமைத்தார்கள். புரட்டாசி பௌர்ணமி திதி (1692) போதேந்திரர்  சமாதி அடைந்தார்.**

*எத்தனையோ ஆண்டுகள் கழித்து ஒரு நாள் போதேந்திராள் மஹத்வத்தை அறிந்த  சத்குரு ஸ்வாமிகள் என்கிற ஒரு சாது கோவிந்தபுரம் வருகிறார். சமாதி இருந்த இடமே அழிந்து போயிருந்தது. எங்கே என்று தேடுவது? எவராலும் சரியாக சொல்ல முடியவில்லை. போதேந்திராள் த்யானத்தில் ஈடுபட்டு அந்த பக்கத்தில் இருந்த மணல் பரப்பில் எல்லாம் மண்ணில் காதை பொருத்தி பல இடங்களில் படுத்தார். மூன்றுநாள் தேடி விடிகாலையில் மண்ணில் ஓரிடத்தில் ஸ்ரீ ராமநாமம் மெல்லிதாக இடைவிடாமல் கேட்டது.

*பக்தா '' விடாமுயற்சியுடன் இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டாய். இந்த இடத்திலேயே என்னுடைய ஆராதனையை இன்றைய திதியில் நடத்தி வாருங்கள்' என்று அசரீரி  சத்குரு ஸ்வாமிகளுக்கு கேட்டது.**

**அப்புறம் என்ன, சத்குரு ஸ்வாமிகள், ஊர்மக்கள் ஒத்துழைப்பில் அதிஷ்டானம், பிருந்தாவனம், ஒரு சிறிய மடம் உருவானது. மாளய பக்ஷ துவாதசி அன்று போதேந்திராள் ஆராதனை. .மருதாநல்லூர் சத் குரு ஸ்வாமிகள் தான் சம்பிரதாய பஜனை பத்ததியை பிரபலப்படுத்தியவர்.

கலியுகத்தில்  பக்தி  ஒன்று தான்  பகவானை அடைய உதவும் சாதனம்.  அதை   நாம  ஜபத்தின் மூலம்  அடையலாம்… கஷ்டங்களைப் போக்கலாம்’ என்று  உலகுக்கு  உணர்த்தியவர்.  நாம சங்கீர்த்தன மார்க்கத்தின மூல புருஷர்களாகத் திகழ்ந்த மும்மூர்த்திகள்  கோவிந்தபுரம்  ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ,திருவிசநல்லூர்  ஸ்ரீதரவேங்கடேச ஐயாவாள்,  மருதாநல்லூர் ஸ்ரீ வேங்கடராம ஸத்குரு ஸ்வாமிகள் ஆகியோர்.  அருகிலேயே இருக்கும் இந்த  மூன்று  ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்த பாக்யம் எனக்கு கிடைத்தது பகவான் கிருஷ்ணன் அருள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...