Sunday, November 21, 2021

ULLADHU NARPATHU

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்  J K  SIVAN -

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி 

40.   ஞான ஒளி 

உருவ மருவ முருவருவ மூன்றா
முறுமுத்தி யென்னி லனுருவ –
மருவ முருவருவ மாயு மகந்தை
யுருவழிதன் முத்தி உதருள் ரமணன் 40

உள்ளது நாற்பது மோன்றுகலி வெண்பாவா
முள்ளது காட்டு மொளி.

ஸ்ரீ பகவான் ரமண மஹரிஷியின்  அற்புத  ஆத்ம விசார தத்வ பாக்கள்  கலிவெண்பா என்ற வகையைச் சேர்ந்தவை.  ரொம்ப எளிமையான தமிழ். இவ்வளவு  விவரமாக ஆத்ம தத்வம் இதுவரை எவரிடமும் அறிந்ததில்லை. தனது வாழ்நாளையே  ஆத்ம ஞானம் தேடி அடைய  அர்ப்பணித்த  ஆத்ம  ஞானி அவர். ஆத்ம ஸ்வரூபமாகவே வாழ்ந்து காட்டியவர். இந்த  உள்ளது நாற்பது பாக்களும் அவசியம்  படித்து  யோசிக்க தகுந்தவை.

ஒவ்வொரு மனிதனும், சாதகனும் அடையக்கூடிய  ஆத்ம ஞான முக்தியை  எப்படி  அறிகிறான்?  சிலர்  அது உருவம் உள்ளது என்றும்,  சிலரைப் பொறுத்தவரை அதற்கு உருவமே  கிடையாது என்று அழுத்தம் திருத்தமாகவும்,   அப்படி ஒன்றுமில்லை, அதை  ரெண்டுவிதமாகவும்  அடையலாம் என்றும் சமாதானம் சொல்கிறார்கள்.  எது ஐயா சரி என்று என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன் தெரியுமா?

இப்படி எல்லாம் ஆராய்ச்சி செயகிறீர்களே, அதற்கு காரணமான  அகந்தை, அஹம்பாவத்தை, மனதை, முதலில் அறவே அழித்துவிடுங்கள்,  அதை முழுதுமாகவே அகற்றிவிட்டால் அங்கே எஞ்சி இருப்பது முக்தி எனும் ஆத்ம ஸாக்ஷாத் காரம் தான்.  இதை தான் மனோநாசம் என்பது. இதுவே  அத்யாத்ம ரஹஸ்யம்.

முக்தி என்கிறோமே  அது தான் ஆத்மாவின் ஸ்வரூபம்.அதை எங்கும் சென்று பெறவேண்டாம். அஹங்காரம் எனும் அகந்தை தன்னுடைய உற்பத்தி ஸ்தானத்தில், மூலத்தில் அடங்கிவிட்டால் நித்ய ஸித்தமான  ஆத்மஸ்வரூபம் தானே  விளங்கும். அதை உணர்ந்தவனுக்கு தேஹமோ, மனமோ, அகந்தையோ கிடையாது. 

எல்லோரும் முயல்வோம்.  ஆத்ம ஒளி பெறுவோம்.  நம்பினோர் கெடுவதில்லை.  முயற்சி வீண் போவதில்லை. மீண்டும்  ரமணரை சந்திப்போம். 
  
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...