Saturday, November 6, 2021

SRI LALITHA SAHASRANAMAM


  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (249 -259)    

ஸ்லோகங்கள் 61-62.    நாமங்கள்  249-259.

पञ्चप्रेतासनासीना, पञ्चब्रह्म स्वरूपिणी ।
चिन्मयी, परमानन्दा, विज्ञान घनरूपिणी ॥ 61 ॥

பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிநீ |
சிந்மயீ பரமாநந்தா விஜ்ஞாந கநரூபிணீ || 61

ध्यानध्यातृ ध्येयरूपा, धर्माधर्म विवर्जिता ।
विश्वरूपा, जागरिणी, स्वपन्ती, तैजसात्मिका ॥ 62 ॥

Dhyanadhyatru dhyeyarupa dharmadharma vivarjita
 Vishvarupa jagarini  svapanti taijasatmika

த்யாந த்யாத்ரு த்யேயரூபா தர்மாதர்ம விவர்ஜிதா |
விச்வரூபா ஜாகரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா || 62

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (249 - 259)  அர்த்தம்

* 249 *  पञ्चप्रेतासनासीना - பஞ்சப்ரேதாஸநாஸீநா --  
இது ஒரு விசித்திர நாமமாக தோன்றும்.  அதாவது  அம்பாள் ஸ்ரீ லலிதை ஐந்து பிரேதங்களை ஆசனமாக கொண்டு அவற்றின் மேல் அமர்ந்திருப்பவள்  -  இங்கு பிரேதம் என்று சொல்லப் படுகிறவர்கள் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசன்,  சதாசிவன்.   ஜீவ சக்தியை பிரித்து விட்டால் பிறகு  எல்லாமே பிரேதங்கள் தானே.   அவளன்றி ஓர் அணுவும் அசையாதே . ஹயக்ரீவர் அழகாக தான் சொல்கிறார்.

* 250 *  पञ्चब्रह्मस्वरुपिणी - பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிணீ -  
பரப்ரம்மத்துக்கு  ஐந்து  காரியங்கள்.  சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம்  அனுக்ரஹம். இதில் எதுவுமே  அம்பாளின் சக்தி இல்லையென்றால் நிறைவு பெறாது . தாயில்லாமல் நாம் இல்லை.  தாய் மொழி, தாய் நாடு. எல்லாவற்றிலும் அவளே  அடி நாதம். பஞ்சபூதங்களால் ஆன  இந்த பிரபஞ்சத்தை இயற்கை அன்னை  MOTHER  NATURE   என்கிறோமே. ஜீவ பரிணாமத்தின் உச்சி  மனிதன் என்பது  யாவருமறிந்த வெளிப்பாடு.   அவனை  ஆட்டுவிக்க  அதி  அற்புத நுண்ணிய அபூர்வம் அவனுள் அம்பாள் வைத்த  ''மனம்''.  தனிமனிதனின்  பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, மொத்தத்தில் மறைவு, மீண்டும் புனருத்தாரணம் இவையே மேலே சொன்ன ஐந்தொழில்கள் .   சகலமும்  ஈஸ்வரனில்  அடக்கம், ஈஸ்வரனே ஈஸ்வரியில்  அடக்கம்.  எல்லாமே  ஒன்றான பின் எது எதோடு சேர்ந்தால்  என்ன?  எப்படி சொன்னாலும் ஒன்று தான்.

* 251 *   चिन्मयी -சிந்மயீ -  
எதிலும்  நிறைந்து செயல்படுபவள்.   எல்லாம் ஒன்றானவள் என்பதை  அறிவது, அறிவு, அறிபவன் மூன்றும்  இணைவது. த்ரிபுடி.  
சின்  என்பது சித்  என்ற  பிரம்ம  ஞானத்திலிருந்து வரும் சொல்.

* 252 * परमानन्दा -  பரமானந்தா -  
சதா சர்வ காலமும்  ஆனந்தத்தில்  லயித்திருப்பவள்  ஸ்ரீ லலிதாம்பிகை. எங்கோ ஒரு மூலையில் கண்ணை மூடிக்கொண்டு ஜபித்தால் அது செயல் அல்ல. செய்யவேண்டிய கர்மாவை செய்து கொண்டு எல்லாம் அவள் செயல், அவள் செய்விக்கிறாள் என்ற உணர்வு கொண்டு  செயல் படுவது.இது தான் ''தன்னை அறிவது'' SELF REALISATION.  நான் அந்த பரம்பொருளே என்ற உணர்வு. AHAM  BRAMMASMI . ஆத்ம ஞானம்.

* 253 * विज्ञानघनरूपिणी -    விஞ்ஞான  கனரூபிணீ --  
விஞ்ஞானத்தின்  முடிவு  ஞானம்.  கூர்ந்து பகுத்து அறிவது விஞ்ஞானம். அதன் உண்மை தான் ஞானம். அது அம்பாள்.   
உணர்தலின் புனித நுண்ணிய  ஸ்வரூபத்தை எப்படி அறிவது என்றால்  அதற்கு ஒரு உதாரணம் ''ஒரு பாத்திரத்தில் நிறைய நீர் நிரப்பி அதில் ஒரு ஸ்பூன் உப்பை போட்டால், உப்பு கரைந்து காணாமல் போகிறது. ஆனால்  உப்பு இருப்பது நீரின் ருசியில் தெரிகிறது. நீரின் எந்த பாகத்திலும் அது கலந்திருக்கிறது. ஒவ்வொரு ஜீவனிலும் இது போல் தான்  பரம்பொருளான அம்பாள் இருக்கிறாள்.  ஆத்மா ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் மறையக்  கூடியவை.

* 254 * ध्यानध्यातृध्येयरूपा - த்யாந த்யாத்ரு
த்யேயரூபா --  
மேலே சொன்னேனே  த்ரிபுடி  என்று - செயல்,செய்பவன், செய்வது   - இந்த   மூன்றும்  ஒன்றானது தான்  த்ரிபுடி. அம்பாள் அவ்வாறு தான்  இங்கே  தியானமாக இருக்கிறாள், தியானம் செய்வது என்கிற காரியமாக இருக்கிறாள், தியானம் செய்பவனாக இருக்கிறாள்.  எல்லாம் ஒன்று என்று அறிவிக்கும் அற்புத சொல் த்ரிபுடி.  தியானம் என்பது  இடை வெளியில்லாத விடாது   மனம் ஈடுபடும் ஒருமித்த செயல் என்று பதஞ்சலி யோக சூத்ரம் கூறுகிறது. .

* 255 *  धर्माधर्मविवर्जिता -தர்மாதர்ம விவர்ஜிதா -  
தர்மமோ அதர்மமோ  எதற்கும் அப்பாற்பட்டவள் , அதெல்லாம் கடந்தவள்  ஸ்ரீ லலிதாம்பிகை. சகலமும் ஒன்றாக கலந்தபின் எது அதர்மம்,  தர்மம்? குணங்களுக்கு அப்பாற்பட்டவள். பரிசுத்தமானவள் .

* 256 * विश्वरुपा - விஸ்வரூபா -  
அகில பிரபஞ்ச ஸ்வரூபம் அம்பாள். எல்லையற்றவள். விவரிக்க முடியாதவள்.  முழுமையாக காணமுடியாதவள்.  ப்ரம்மஸ்வரூபிணி.  எங்கும் எதிலும் நிறைந்து காணப்படுபவள்.

* 257 * जागरिणी -
ஜாகரிணீ --  சதா சர்வகாலமும் விழித்திருப்பவள்.  நமக்கெல்லாம் மூன்று நிலை, விழிப்பு, கனவு, அயர்ந்த உறக்கம்.  சகல உயிர்களின் விழிப்பு நிலைக்கே  அவள் தான் காரணி.  இதை தான் சிவ சூத்ரம்  (I.8) 'ஞானம் ஜாக்ரத்'' என்று கூறுகிறது.  ராத்திரி எல்லாம் நாம் உறங்கும் போது  நம்மை பாதுக்காக் கிறவன் தூங்காமல் ரோந்து சுற்றி வரும் கூர்க்கா என்று  ஒருவனுக்கு காசு கொடுக் கிறோம் .  அம்பாள் எப்படி சகல ஜீவராசிகளையும்  தான் உறங்காமல் காசு கேட்காமல் 
 பாதுகாக்கிறாள்!

* 258 *स्वपन्ती - ஸ்வபந்தீ  --
 உறக்கநிலையிலும்  நாம் அவளை தான் நம்பியிருக்கிறோம். அவளே நமது உறக்கம் கூட..
எது அவளில்லை?   வெளியே கண் பார்ப்பது தான் மனதில் எண்ணமாக  பதிவாகிறது. பல யுகங்கள் கூட அது நினைவாகிறது.  அதுவே சில நேரம் கனவாகிறது.  கனவு என்பதே  எண்ணத்தின் பெட்டகம். இதில் புலனுக்கோ, இந்திரியங்களுக்கோ இடமில்லை.  கனவுகள் எப்போதுமே  நமக்கு என்றோ எப்போதோ, எவருடனோ நிகழ்ந்த சம்பவத்தையையே சுற்றி சுற்றி வரும்.  ஆத்மா அமைதியாக  ஒரு சாட்சியாக  மனம் நிகழ்த்திடும் காட்சியை பார்க்கும் அனுபவம் கொண்டது.. ஜீவன் சூக்ஷ்ம சரீரமாக  அந்த காட்சிகளில் பங்கேற்கிறான்.

* 259 * तैजसात्मिका -  தைஜஸாத்மிகா --  மேலே சொன்ன கனவில் ஜீவன் பங்கேற்பதை தான்  தைஜஸம் என்பது.  அம்பாள் இந்த பெயர் கொண்டவள்.  ஜீவனின் எண்ணங்கள், வாசனா, ஸ்தூல சரீரரத்தை விடுத்து, சூக்ஷ்ம சரீரமாகி அவற்றில் லயிப்பது தான்  கனவு. கனவில் அடையாளம் தெரியும் ஸ்தூல சரீரம் சம்பந்தப்படாமல் எங்கோ படுத்து கிடக்கிறது.  சூக்ஷ்ம சரீரம் காஷ்மீரில்  குதிரை மேல் வேகமாக பறக்கிறது.  பள்ளத்தில் விழுகிறது. மலை ஏறுகிறது. என்னன்னவோ செய்து  ஸ்தூல சரீர நடவடிக்கையை நடிக்கிறது. நிஜம் போல காட்டுகிறது.

அயர்ந்து ஆழ்ந்த தூக்கத்துக்கு  சுஷுப்தி என்று பெயர். அதில் தான் கனவு உருப்பெறுகிறது. யோகி சமாதி  நிலையில் அம்பாளை  தரிசித்து இணைந்து  ஆனந்தமயமாக  அவளைப்  பணிகிறான்.  அவனது பிரஞை அப்போது அம்பாள். எனவே அம்பாளுக்கு  பிரஞாத்மிகா  என்று ஒரு நாமம்.

இன்று ஒரு சக்தி ஆலயம்  -   காளிகாம்பாள், சென்னை.

சென்னையில் இருக்கும் இந்த  ஸ்தலத்திற்கு  அடிக்கடி செல்லும் பாக்யம் எனக்கு கிடைத்தது.
மிகப்  பெருமை, பழமை, சரித்திரம் படைத்த  ஆலயம். சென்னையின் வளரும் நெரிசலில் இப்படி ஒரு அமைதியான கோயிலா ? மராத்திய சிங்கம், சத்ரபதி சிவாஜி வந்து வணங்கிய கோயில் . சென்னையில்  தம்புச்செட்டி தெருவில் உள்ளது.   காளிகாம்பாள்  ஆதிசக்தி  அம்சமான ஸௌம்ய ஸ்வரூபமாக இங்கே காட்சி தருகிறாள். ஸ்ரீ சக்ரம் ப்ரதிஷ்டையான இந்த  ஆலயம் மூவாயிரம் வருஷம் வயசானது.   அம்பாள்  பாசம் அங்குசத்தோடு  அமர்ந்த கோலம். சதுர்புஜத்தில் மற்ற ரெண்டு கரங்களில்  நீலோத்பல புஷ்பம், வரத ஹஸ்தம் ஒன்று.   மேற்கு பார்த்த கர்ப க்ரஹம். க்ஷிப்ர ப்ரஸாதிநீ. அதாவது  வரங்களை சூட்டோடு சூடாக கொடுப்பவள். 1677 அக்டோபர் 3ம் தேதி  சிவாஜி மஹாராஜா இங்கே  வந்து தரிசித்தார். அம்பாள் பவானி பக்தர் அல்லவா.  காளிகாம்பாளை விடுவாரா?  சிவாஜி குதிரைமேல் வீற்றிருக்கும் படம்  கோவிலில் உள்ளது.  சிவாஜி விஜயம் பற்றிய கல்வெட்டும் கோவில் சுவற்றில் பதித்திருக்கிறார்கள். அம்பாள் பக்தர் சக்தி உபாசகர்  மஹாகவி பாரதியார் தினமும் காளிகாம்பாள்  தரிசனம் செய்வார்.''யாதுமாகி நின்றாய்  காளி '  பாடல் நினைவுக்கு வருகிறதா?
ஆரம்பத்தில்  சென்னை அம்மன் என்றும்,  கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரர்கள்  கோவிலை  கோட்டைக்குள் நகர்த்திய போது  கோட்டை அம்மன் என்றும்.  திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி பெருமாள் கோவில் கட்டிய  விஸ்வ கர்மா  சிற்பிகள் திருவண்ணாமலையிலிருந்து கல் கொண்டு வந்து  காளிகாம்பாள் கோவில் உருவாகியது.

காளிகாம்பாள்  ஆலய  குங்குமப்பிரசாதம் வாழ்வில் உயர்வும், மோட்சமும் தரும் சக்தி படைத்தது. கிடைக்கும்.காளிகாம்பாள் மகாலக்ஷ்மியையும்,  ஸரஸ்வதியையும்   ரெண்டு  கரங்களாகப் பெற்றவள். ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்தில்   காமாக்ஷி .  ஆலயத்தில் ரெண்டு  ப்ரஹாரகாரங்கள்.  உள் பிரகாரத்தில் அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டி மகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.

தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல்,  “குண வாயில்”. அர்மீனியன் தெரு என்ற  தமிழில்  சம்பந்தமே இல்லாமல் ஆகிவிட்ட அரமனைக்காரன் தெருவில்  மேற்கு கோபுர வாசல் “குட வாயில்”
“உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார். ஸ்தல விருட்சம்  மாமரம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...