Saturday, November 20, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் - நங்கநல்லூர்  J K  SIVAN


வீட்டுக்கு  வாசல் எப்படியோ  அப்படித்தான்  ஒவ்வொருவருக்கும் அவர் நெற்றி.   ஒருவர்  முகத்தை பார்த்தால் அது தான் முதலில் கண்ணில் படுகிறது.  நெற்றியில் தான் ஒருவரின் மேதா விலாசம், அவர் பின்னணி,  லக்ஷணம்,  தேஜஸ், அவர் கம்பீரம், ஞானம், சகலமும் புலப்படும்.  அதை  காலியாக விடுவது, வழக்கமில்லை,  ஏதாவது அணிந்து கொள்வது மரபு.  நீரில்லா நெற்றிப்பாழ்  என்பார்கள் முன்னோர்கள்.  ஏனோ  வெள்ளைக்காரனை  தெரிந்து கொண்டபிறகு இந்த பழக்கம் குன்றி விட்டது நமது துரதிர்ஷ்டம். சில தீய சக்திகளின்  சகவாசம் தரும் பரிசு.

மஹா பெரியவா அடிக்கடி சொல்லுவார் ஞாபகம் இருக்கிறதா? அது இதோ:

"எல்லோரும் அவரவருக்கு உரிய கர்ம அநுஷ்டானங்களைச் செய்ய வேண்டும்; ஆசாரங்களை அநுசரிக்க வேண்டும்! விபூதி, திருமண், ருத்ராக்ஷம் போன்ற சின்னங்களைச் தரிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறேன். சிலர் இதெல்லாம் எதற்கு என்று நினைக்கிறார்கள். நல்ல சீலங்களுடன் இருக்க வேண்டியதே முக்கியம். சீலம் மனசைப் பொறுத்த விஷயம். சமய ஆசாரங்களெல்லாம் வெளி விஷயம்தானே?" என்று எண்ணுகிறார்கள்.

உண்மையில் வெளியில் செய்கிற காரியமும், வெளியில் அணிகிற சின்னங்களும்கூட உள்ளுக்கு நன்மை செய்கின்றன. உடலின் காரியமும் உள்ளத்தின் பாவமும் பரஸ்பரம் சம்பந்தமுடையவை. ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்;

லாட்டரியில் தமக்கு லட்ச ரூபாய் விழுந்திருக்கிறது என்று ஒருவர் சற்றும் எதிர்பாராமல் கேள்விப்படுகிறார். உடனே எல்லையில்லாத சந்தோஷம் உண்டாகிறது. இது ஒரு மனோபாவம்தான். ஆனால் இந்த மனோபாவம் காரணமாக அவரது உடம்பில் ஒரே படபடப்பு உண்டாகிறது. மூச்சு அப்படியே சிறிது காலத்திற்கு அடங்கி மூர்ச்சையாகி விடுகிறார். 'குறிப்பிட்ட உணர்வு உண்டானால் இன்ன   விதமான சுவாசம் மாறுகிறது' என்ற நடைமுறை உண்மையைத் திருப்பிவைத்துக் குறிப்பிட்டபடி சுவாசப்பயிற்சி (பிராணாயாமாதிகள்) செய்தால், இன்ன விதமான உத்தமமான மனோ   பாவங்களை அடையலாம் என்று யோக சாஸ்திரம் விவரிக்கிறது. வெளித்  தோற்றமே உள் உணர்வைச் சொல்கிறது. கோபம் வந்தால் கண் சிவக்கிறது; உதடு துடிக்கிறது. துக்கம் வந்தால் எதற்காகவோ கண்ணிலிருந்து ஜலம் ஜலமாகக் கொட்டுகிறது. சந்தோஷம் வந்தால் பல்லெல்லாம் தெரிகிறது. இப்படியெல்லாம் உடம்புக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் இன்னபடி ஆசனம் போட்டால் இந்தந்த ஆத்ம குணங்களுக்கு அநுகூலமாகும் என்று மகான்கள் வழி கண்டிருக்கிறார்கள்.

மிலிடரிக்காரன் யூனிஃபாரம் போடாவிட்டால் அவனுக்கு வீரம் வராதா? என்று கேட்பவர்கள் கேட்கலாம். ஆனால் மிலிடரிக்காரன் என்றால் லோகம் முழுக்க அவனுக்கென்று யூனிஃபாரம் இருக்கத்தான் இருக்கிறது. அதுவே வீரத்தைத் தூண்டுகிறது என்றும் சொல்கிறார்கள்.

வெளியில் தரிக்கும் சின்னம், வெளியில் செய்கிற சமஸ்காரம் இவை உள்ளுக்கும் நன்மை தருவனவே ஆகும். வெறும் வேஷம் என்று நினைத்தால் வேஷமாகவே போகும். 'ஆத்மார்த்தமாக, ஜீவனைப் பரிசுத்தம் செய்து  கொள்வதற்காக இந்த சம்ஸ்காரத்தைச் செய்கிறேன்; சின்னத்தை அணிகிறேன்' என்று உணர்ந்து செய்தால் சத்தியமாகவே அது உள்ளே புகுந்து சுத்தி செய்கிறது. புறத்தில் செய்வது உள்ளுக்கு உதவுகிறது.

நான் சம்ஸ்காரங்களை முக்கியமாக சொல்வதோ ஆசாரங்களை விடாமலிருக்கப் பிரயத்தனம் செய்வதோ விபூதி, ருத்ராஷம் முதலிய சின்னங்களைத் தரிப்பதோ, பெரிதில்லை. நான் மடாதிபதி. ஆதலால் இதெல்லாம் என்னிடம் இருந்தால்  தான் என்னிடம் வருவீர்கள்; என் மடம் நடக்கப் பணம் கொடுப்பீர்கள். எனவே இவையெல்லாம் எனக்குக் காரியார்த்தமாக, வேண்டியிருக்கின்றன. ஆனால், உங்கள் விஷயம் அப்படியில்லை. உங்களுக்கு ஜீவனோபாயம் வேறு விதத்தில் கிடைத்து விடுகிறது. ஆதலால் என்னை   விட சிரேஷ்டமாக, முழுக்க முழுக்க ஆத்மார்த்தமாகவே நீங்கள் ஸம் ஸ்காரங்களைச் செய்து, சின்னங்களைத் தரித்துக் கொண்டு பரிசுத்தம் பெற முடியும்; பெற வேண்டும்.

பரம சத்தியத்தை நினைவூட்டும் சின்னங்களைத் தரித்துக் கொள்வோம்; கெட்ட வழியில் போகாமல் தடுக்கும் நல்ல கர்மாக்களை அநுஷ்டிப்போம்; அதனால் சீலம் பெறுவோம்! சித்த சுத்தி பெறுவோம்; இந்தத் தெளிவின் பயனாக அனைத்துமான ஏக பரம்பொருளைத் தியானித்து, தியானித்து, அதை அநுபவத்தில் உணர்ந்து, ஆனந்தமாக இருப்போம்!.  இதோ ஒரு  சின்ன  அறிவுரை  மஹா பெரியவா குரலில்:

அலக்ஷ்மீகரமானதற்கெல்லாம் பூர்ணகும்பம் வைப்பது போல் இப்போது பல  காரியங்கள்  நடந்து வருவதில்  முக்கியமானது  பெண்கள் முறையாகத் திலக தாரணம் பண்ணிக் கொள்ளாமலிருப்பது.

கன்யாக் குழந்தைகளுக்கும் ஸுமங்கலிகளுக்கும் திலகம் இட்டுக் கொள்வதை அத்யாவச்யமான அலங்காரமாக நம் ஆசாரத்தில் விதித்திருக்கிறது. அது முகத்துக்கே ஒரு சோபையைக் கொடுப்ப தோடு சுபமான சக்திகளை வரவழைத்துத் தருவது ‘ப்ரூகுடி’ என்ற புருவ மத்தியில் யோக சாஸ்த்ர சக்ரங்களில் ஒன்று இருக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்தி ‘கான்ஸென்ட்ரேட்’  பண்ணுவதற்கு அந்த இடத்திலேதான் நம்முடைய த்யான லக்ஷ்யத்தை வைத்துப் பார்ப்பார்கள். ‘ஸரியாக அந்த இடத்தில் திலகம் இட்டுக் கொள்வது நம்மிடமுள்ள நல்ல சக்திகள் வ்ரயமாகாமல் மூடி போட்டுக் காப்பாற்றுகிறது; energy band -ஐ protect பண்ணுகிறது’ என்று இந்த நாள் அறிவாளிகளும் சொல்கிறார்கள்.

நல்ல மஞ்சள் குங்குமந்தான் நெற்றிக்கு இட்டுக் கொள்வதற்கானது. ஸுமங்கலிகள் புருவங்களுக்கு மத்தியில் இட்டுக் கொள்வதோடு, அதைவிட முக்யமாக வகிட்டிலும் இட்டுக்கொள்ளவேண்டும். அதுவே பரம ஸெளபாக்யம், ஸுமங்கலிகளின் வகிடு மஹாலக்ஷ்மியின் வாஸ ஸ்தானங்களில் ஒன்று. அம்பாளே தன்னுடைய வகிட்டில் செக்கச் செவேலென்று ஸூர்யோதய ரேகை மாதிரிக் குங்குமம் இட்டுக்கொண்டிருந்ததை ஆசார்யாள் ‘ஸெளந்த்ர்ய லஹரி’யில் பாடியிருக்கிறார்.

கன்யாக் குழந்தைகள் சாந்தும் இட்டுக் கொள்ளலாம். அகத்திலேயே அரிசியைக் கருக்கிப் பண்ணிய கருப்புச் சாந்து.

கடையிலே கலர் கலராக விற்கிற பொட்டுக்களை வாங்கி ஒட்டிக்கொள்வது அடியோடு தப்பு, அந்தப் பொட்டை சர்மத்தோடு ஒட்டச் செய்கிற கெமிகலோ, எதுவோ ஒன்று அனாசாரமானதாகவே இருக்கும். அதனால் நாளடைவில் சர்மவியாதி ஏதாவது உண்டானாலும் உண்டாகலாம். ஜெலாடினாக அது இருக்குமானால் அதில் மாட்டுக் கொழுப்புக் கூட இருக்கக்கூடும். இப்படி இருந்தால் பரம மங்களமான திலக தாரணம் என்பதே பசுவதைக்கு உடந்தையாக இருக்கிற மஹா பாபம் வரை கொண்டு நிறுத்துவதாக ஆகிவிடும்.''

ஒரு  சின்ன வேண்டுகோள்:
பெரியவர்கள்  முக்கியமாக  சுமங்கலிகள்  இந்த பழக்கத்தை நிறுத்தியிருந்தால்  மஹா பெரியவா மேல் உள்ள அன்பினால், மரியாதையால்  ஒரு நல்ல பழக்கத்தை மீண்டும் தொடர்வோம், குழந்தைகளுக்கும் இன்றிலிருந்து இது பழக்கமாகட்டுமே. அவர்கள் முகத்தை பார்க்கும் போதே உங்களுக்கு மன நிறைவு பெறுவீர்கள். முகத்தில் பகவான் தெரிவான்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...