Monday, November 15, 2021

PESUM DHEIVAM

 


பேசும் தெய்வம். -  நங்கநல்லூர் J K  SIVAN


92.  அன்னதான சிவன் 

தேப்பெருமாநல்லூர்  ராமசாமி ஐயர்  என்றால்  யாருக்கும் தெரியாது.  அன்னதான சிவன் என்றால் எல்லோருக்கும் தெரியும். அன்னதானம் செய்வதில் என்றைக்குமே சளைக்காதவர் அந்த  பெயரை பெற்றது மஹா பெரியவாளிடம் தான். 

பழைய காலத்தில்,   இப்போது போல்,  தெருக்களில்  டீ கடையோ , சாப்பாடு ஹோட்டலோ இல்லை. தெருவில் உணவு விற்பதில்லை.  சத்திரங்களில்  மத்தியான உணவு போடுவார்கள்.   திருவிழாக்கள், கோயில் விசேஷங்கள் நடக்கும் ஊர்களில் வந்து கூடும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் சாப்பாட்டுக்கு  அலைவார்கள்.   அந்த மாதிரியான  இடங்களில் வரும் பக்தர்கள்  எல்லோருக்கும் வித்தியாசமின்றி  வயிறார உணவளிக்க சில தர்ம சிந்தனை உடையவர்கள் அன்ன தானத்துக்கு ஏற்பாடு செய்வார்கள்.    எல்லா தான தர்மங்களும் சிறந்தது பசித்தவர்களுக்கு உணவளித்தல்,

முக்கியமாக  கும்பகோணத்தில்  பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தரம், மஹா மஹம் ஸ்னானத் துக்கு  லக்ஷக்  கணக்காக  நாடெங்கிலிருந்தும் வருவார்கள்.   மாயூரத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் செய்ய மக்கள் வந்து கூடுவர். இன்னும் வேறு பல ஊர்களிலும் இதுபோல பெருமளவில் மக்கள் வந்து கூடி திருவிழாக்களில் கலந்து கொள்வது வழக்கம். கோவில்களில்  கும்பாபிஷம் நடக்கும்போது அந்தந்த  ஊர்களில்  நல்ல கூட்டம் சேரும்.  இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் அன்னதான சிவனின்  அறுசுவை இலவச விருந்து  இருக்கும்.   இதனால் அவர் மேல் மஹா பெரியவாளுக்கு ரொம்ப  சந்தோஷம். 

 மஹா பெரியவா சொன்னபடி  அன்னதான சிவன்  ஒவ்வொரு ஊராகச் சென்று மஹா மஹத்துக்கு  ஒரு வருஷம்  முன்னாலேயே, அரிசி, பருப்பு, புளி என்று தேவையான பொருள்களை பலரிடமும் கேட்டு வாங்கி வந்து சேமித்து வைத்துக் கொள்வார். ஒரு நாளில் பல்லாயிரக் கணக்கில் உணவு அருந்தும் அளவுக்கு அவருடைய சேமிப்பு இருக்கும். 

ஒரு முறை மஹா பெரியவா  திருவிடைமருதூரில் முகாம்.  ஐப்பசி மாதமாதலால் அருகில் இருந்த திருவிசைநல்லூர் எனும் சிறிய கிராமத்தில் ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த வீட்டில் அவருக்கு ஆராதனை நடந்து கொண்டிருந்தது.  கார்த்திகை அமாவாசை அன்று  ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை நீர் வரும்.  நான்  ஒரு முறை சென்று பார்த்து தரிசனம் பெற்றேன்.  இந்த கங்கா  ஸ்னானத்துக்கு  மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த கிணற்று நீரை இறைத்துத் தலையில் ஊற்றிக் கொள்வார்கள். வரிசையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவனாக நானும்  கிணற்றுக்கு அருகே நகர்ந்து வந்து எனக்கும் ஒரு வாளி  கிணற்று நீர்  விடிகாலை 4 மணிக்கு  தலையில் ஊற்றப்பட்டு  ஸ்னானம் 
கிடைத்தது.
வந்தவர்  அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும். முதலில் நூற்றுக் கணக்கில் வந்த பக்தர்கள் நாளாக ஆக ஆயிரக் கணக்கில் வந்து கூடி ஸ்ரீதர ஐயாவாள் எனும் அந்த மகானுக்கு அஞ்சலி செய்ய வந்தனர். அப்படி வருகின்ற அத்தனை பேருக்கும் அன்னதானம் செய்யும் பொறுப்பு அன்னதான சிவன்  ஏற்றார்.  

பல ஆண்டுகள் திருவிசநல்லூரில்  ஸ்ரீதர ஐயாவாள் ஆராதனையும்,  அன்ன தானமும் நடைபெற்றது. ஆகவே  மஹா பெரியவா அந்த சமயத்தில்  பக்கத்தில்  திருவிடைமருதூரில்  முகாம் இட்டிருந்ததால்  வழக்கத்தை விட  திருவிசைநல்லூர்  அன்னதானத்துக்கு  அதிக  கூட்டம்.  இதை அறிந்த மஹா பெரியவா  அத்தனை பேருக்கும்  பசியாற அன்னதானம்  செய்ய  தகுந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

ஐயாவாள் ஆராதனை அன்று அந்த சிறிய கிராமம் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. பூஜை முடிந்து தீபாராதனை ஆனவுடனேயே அன்னதானம் தொடங்கலாம் என்று உத்தரவு கிடைத்தது. ஒரு பந்தியில் சுமார் இருநூறு பேருக்கும் மேலாக உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினர். வரிசையாக, ஒன்று இரண்டு, மூன்று, நான்கு என்று பந்திகள் முடிந்த பின்னும் மேலும் இரண்டு மூன்று பந்திக ளுக்குப் போதுமான மக்கள் காத்திருந்தனர். சமையல் கட்டில் மறுநாளுக்காக சேமிக்கப் பட்டிருந்த அரிசி, காய்கறிகள் அனைத்துமே இன்றைக்கே செலவிடப்பட்டு  காலியாகி விட்டன. நான்காம் பந்தி நடைபெறும் நேரத்தில் அன்னதான சிவன் மஹா  பெரியவாளிடம் சென்று ரகசியமாக 

''பெரியவா,  இன்னும்   சாப்பிட வேண்டியவா  ஐநூறு  பேருக்கு  மேலே  இருப்பா போல இருக்கு. காத்துண்டு இருக்கா.  அவர்களுக்கு  தேவையான   அரிசி, காய், மற்ற சாமான்கள் முதலானவற்றை சமாளித்துடலாம். , நெய் மட்டும் சொட்டு கூட மிச்சமில்லை ''  

மஹா பெரியவா மெல்ல தலையை ஆட்டி விஷயத்தை கிரஹித்துக்கொண்டார். எந்தவித சலனமோ, கவலையோ முகத்தில் இல்லை.   கண்ணை மூடிக் கொண்டு  சில நிமிஷங்கள் அமைதியாக இருந்துவிட்டு கேட்ட கேள்வி:
''இப்போ  நடக்கிற  பந்தி எப்போ முடியும்?
'' இன்னும் கால்மணியாவது ஆகும்''
'' சரி பார்த்துக் கொள்ளலாம்,  ஏதாவது ஏற்பாடு செய்யலாம்.   நீ  போய் மீதி வேலைய  கவனி.''     -- மஹா பெரியவா சிவனை அனுப்பினார்.
அப்போது அங்கே  வந்த உதவியாளரிடம்  'நீ போய் திருவிடைமருதூர் வடக்குத் தெரு முனையில் போய் இரு. நம் மடத்தைத் தேடிக்கொண்டு யாராவது வழி கேட்டால் அவர்களுக்கு வழி சொல்லி திருவிசைநல்லூருக்கு  அனுப்பு' என்றார்.

அடுத்த சில நிமிஷங்களில் பந்தி முடிந்து, அடுத்த பந்திக்கு இலை போட்டாகிவிடும். இதுபோன்ற இடங்களில் பரிமாறப்படும் பந்திகளில் முதலில் நெய் போடுவது தான் சம்ப்ரதாயம். 
அன்னம் பரிமாறியபின் ஒருவர் ஒவ்வொரு இலையாகப் போய் ஒரு சொட்டு நெய்யை அவர் இலையில் இடுவதும், சிறிது சாதத்தின் மீது ஊற்றுவதும் உண்டு. ஆகையால் இங்கு நெய் இல்லை என்பது  ரொம்ப  பெரிய பிரச்னை. கிராமங்களில் எங்கேயும்  நெய் கடைகளில் விற்பனை இல்லை. மாடு வைத்திருப்போர் நெய் காய்ச்சி கொடுப்பதுதான்  வழக்கம். 

திருவிடைமருதூருக்குச் சென்ற தொண்டர்  அங்கு வடக்கு வீதி சந்திப்புக்குச் சென்ற சமயம் டின்களை ஏற்றிக் கொண்டு ஒரு வண்டி வந்து நின்றது. 
வண்டி ஒட்டி,  மடத்து தொண்டரைப் பார்த்து வண்டியிலிருந்து,  "சாமி, இங்கே காஞ்சி பெரியவா சுவாமிகள் வந்து எங்கேயோ தங்கியிருக் காராமே, அந்த இடம் எது, எப்படி போவது?  என்று கேட்டார்.
வண்டியில் இருந்த டின்களில்  இருந்து  நெய் வாசனை கமகமென்று வீசியது.  
 "இது நெய் டின்கள்  போல இருக்கே? யாருக்கு கொண்டு போறீங்க?" என்றார் தொண்டர்.
 "மாயவரத்திலேர்ந்து வரோம் சாமி, எங்க முதலாளி இந்த நெய் டின்களை சாமி முகாம் போட்டிருக்கிற இடத்திலே கொண்டு போய்   இறக்கிட்டு வரச் சொன்னாங்க, ரயில் வண்டி வர நேரமா யிடுச்சி, அதான் தாமதமா வரோம், இடத்தைச் சொல்லுங்க, சீக்கிரம் கொண்டு போய் கொடுக்கணும்" என்றார்  வண்டிக்காரர்.

பெரியவா  சொல்லியபடி  தொண்டர்  வழி காட்ட  வண்டி அந்த மண் சாலையில் விரைந்து திருவிசை நல்லூர் பக்கம் சென்றது.  
தொண்டர்  பெரியவாளிடம் வந்து விஷயம் சொன்னபோது  மஹா பெரியவா முகத்தில் ஒரு   சின்ன புன்னகை. 
அன்ன தானம் நடந்த இடத்தில் அடுத்த பந்திக்கு  இலை போட்டாச்சு.  அன்னம் பரிமாறியவுடன் ஒருவர் டின்னில் வந்து இறங்கிய நெய்யை  ஒரு  பெரிய தூக்கில்  நிரப்பி சுமந்து கொண்டு ஒவ்வொரு இலைக்கும் நெய் பரிமாறினார்.   அன்ன  சுத்தி பண்ணாமல்  யாரும் சாப்பிடும் வழக்கம் இல்லை. 
மஹா பெரியவா  பேசும் தெய்வம் என்கிறேனே  எவ்வளவு சரியானது.   நல்ல உள்ளத்தோடு நல்ல காரியங்களைச் செய்வோருக்கு தெய்வமே எப்போதும்  துணை நிற்கும். இந்த விஷயம்   ஸ்ரீ  ரா. கணபதி புஸ்தகம் மூலம் அறிந்தேன்.

மஹா பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி. தொடர்ந்து உபவாசம் இருப்பதால்  மஹா பெரியவா உடல்நிலை கெட்டுவிடும் என்ற பக்தி உணர்வில் ஒரு பெரிய லெட்டர்  எழுதினார்  சிவன். 

''பெரியவா உபவாசம் இருப்பதால்  பக்தர்களுக்கு  உள்ளத்தில்  வேதனையாக இருக்கு.  மஹான் தொடர்ந்து உபவாசம் இருந்தால் அவரது உடல்நிலை கெட்டுவிடும். அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் பக்தர்கள் நீண்ட காலம் அவரது அருளைப் பெற முடியும். ஆதலால் சிறிதளவேனும் அன்ன பிக்ஷை ஏற்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் சீதோஷ்ண ஸ்திதிக்கு ஏற்றவாறு வெந்நீரில் குளிக்கவேண்டும். சமுத்திர ஸ்நானம் செய்யப்போகும்போது துணையோடு போக  வேண்டும். நதிகளில் ஆழம் பார்த்துத்தான் இறங்கவேண்டும். பூஜையை முடித்தபின் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு வெகுதூரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. தாங்கள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என்கிற காரணத்திற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்” 

மஹா பெரியவா  இதை பலமுறை படித்தார். எல்லோருக்கும்  அன்னதான  சிவன் மீது அளவு கடந்த மரியாதை. மஹான் அவசியம் இதற்கு பதில் எழுதுவார் என்று நினைத்தார்கள்.  பெரியவா ஒரு  தொண்டரை அழைத்து   ''அன்னதான சிவன் கிட்டே  அவர்  கடிதத்தில் எழுதியுள்ளபடி எல்லாம் நடக்கும் ''னு சொல்லிடுங்கோ.  இப்படி  மஹா பெரியவா மேல் உரிமை எல்லோரும் கொள்ளமுடியாது.  நேரில் பார்க்கும்போதும்  இதை நேரிடையாக  சொல்லி வேண்டிக் கொள்வார்.  பெரியவா சிரித்தவாறு அவரை அனுப்புவார். 

சிவனுக்கு முதிர்ந்த நிலை வந்தபோது அவரைக் கவனித்துக் கொள்ள மஹா பெரியவா மடத்து சிப்பந்திகளை  தேப்பெருமாநல்லூருக்கு  அனுப்பினார். சிவன் அங்கேயே இறைவனடி சேர்ந்தார். சிவன் மறைந்தபோது பெரியவா  காசி யாத்திரையில்  இருந்தார்.  திரும்பிய பிறகு தான்  விஷயம் தெரிந்தது. 

”சிவன் ஒரு சன்னியாசி இல்லை என்றாலும் துறவியைப் போல் பற்றற்ற வாழ்க்கையை மேற் கொண்டு இருந்தார். பிறருக்கு சேவை செய்ததுடன் ‘பசி’ என்று வந்தவர்களுக்கு அன்னமளிக்காமல் அனுப்பியதில்லை. மிகவும் புண்ணியம் செய்த அவர் நிச்சயம் மோக்ஷத் திற்குத்தான் போவார்”
என்றார் மஹா பெரியவா.   
 கும்பகோணத்திலும் திருபுவனத்திலும் உள்ள கோயில்களில் மோக்ஷ தீபம்   ஏற்ற  கட்டளையிட்டார்.   சிவன் மறைந்த பத்தாவது நாளன்று, கும்பகோணம் சங்கர மடத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்தார். 

அன்னதான சிவன் சாகும்போது ஏதோ சொல்ப பணம் இருந்தது. அதை அப்படியே  தர்மம் பண்ணிடுங்கோ என்று சொன்னவர். மஹா பெரியவா  அந்த பணத்தை  ஹரிஜனங்களுக்குப் பயன்படும் வகையில் குளம் ஒன்றை செப்பனிட்டு வழங்கும்படி உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...