Thursday, November 18, 2021

krishna story

 **எனக்கு பசிக்கிறது... நங்கநல்லூர் J K SIVAN **


**ஒரு மாலைப்பொழுது. திரௌபதி ஹஸ்தினாபுரத்தில் அரண்மனை நந்தவனத்தில் தனியாக ஒரு சிறு தடாகத்தின் கரையில் ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் பிம்பம் தெளிந்த தடாக பளிங்கு நீரில் தெரிந்தது. அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தவள் மனம் பின்னோக்கி பறந்தது.**

**கிருஷ்ணன் எப்படியெல்லாம் எனக்கு உதவி இருக்கிறான். அவள் நந்தவனத்தில் உட்கார்ந்திருந் தாளே தவிர அவள் எண்ணம் ஒரு சம்பவத்தை மீண்டும் அவள் மனத்திரையில் படமாக ஓட விட்டது. **

**அவள் அப்போது வனவாசத்தில் பாண்டவர்களோடு பல வித கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த நேரம். தனக்கு அவ்வளவு துன்பங்களையும் தந்தது யார்?. ஒரே ஒரு ஜீவனின் விடா முயற்சி அல்லவா அது? துரியோதனன்.... அவன் இப்போது இல்லை.. தான் செய்த பாவங்களுக்கு பரிசைப் பெற்று மறைந்துவிட்டான். அவன் செய்த செயல்கள்???**

**பிறர் சந்தோஷமாக, சௌக்கியமாக, சௌகர்யமாக, சுபிக்ஷமாக வாழ்ந்தால் பிடிக்காதவர்கள் அன்றும் இன்றும் என்றும் உண்டு.துரியோதனன் அப்படி பிறந்தவன். எந்நேரமும் அவனுக்கு பாண்டவர்களை எப்படி துன்புறுத்துவது, அழிப்பது, ஒழிப்பது என்றே நினைவு. **

**ஒரு முறை துர்வாசர் ஹஸ்தினாபுரம் வருகிறார் என்று கேள்விப்பட்டு ஊர் எல்லையிலேயே சென்று சகல உபசாரங்களோடும் அவரை வரவேற்றான். அவருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்தான். ரிஷியும் சிஷ்யர்களும் சந்தோஷமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல இந்த கபட உபச்சாரம். அதன் நோக்கமே வேறு.துர்வாஸர் கோஷ்டிக்கு விருந்து முடிந்தது. ரிஷி கிளம்பும் நேரம். **

**“நீ இவ்வளவு என் மீது பாசமும் பக்தியும் கொண்டவன் இன்று இதுவரை நான் அறியவில்லை துர்யோதனா . எவ்வளவு நேர்த்தியாக எங்களை உபசரித்து மகிழ்வித்தாய்!! வரம் எதாவது கேளப்பா என்றால் அதிலும் உன் சகோதர பாசத்தை தான் காட்டுகிறாய். இந்தா, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ விரும்பியபடியே, என் சிஷ்ய கோடிகளோடு - (கிட்ட தட்ட ஆயிரம் பேர்! ) அவசியம் நான் தர்மனை வனத்தில் சென்று அடைந்து நீ கேட்டுக்கொண்டபடியே, அவர்கள் பகலுணவு கழித்த பிறகே எங்களுக்கு பிக்ஷை ஏற்பாடு பண்ண சொல்கிறேன். திருப்தியா?” என்றார் துர்வாஸர். **

**துர்வாஸர் ரொம்ப கோபக்கார ரிஷி. ''இந்தா பிடி சாபம்'' என்பது தான் அவருடைய பழக்கமான வழக்கமான டயலாக்.**

**துர்வாஸர் இப்படிச் சொன்னதில் துரியோதனனுக்கு பரம திருப்தி. ''அப்பாடா, தொலைந்தார்கள் பாண்டவர்கள் இதோடு!!.என்று மகிழ்ந்தான்.**

** துர்வாஸரின் கோபம் தான் கின்னஸ் ரெகார்ட் ஆயிற்றே!. அவன் போட்ட பிளான் ரொம்ப சிம்பிள். வனவாசத்தில் இருக்கும் பாண்டவர்கள் சூர்யனிடமிருந்து திரௌபதி பெற்ற அக்ஷய பாத்திரத்தை உபயோகித்து அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் அதைக் கவிழ்த்து வைத்து விட்டால் அவ்வளவுதான். அதால் மறுநாள் தான் உணவு தர முடியும். இதைத் தெரிந்தே, ஆயிரக் கணக்கான சிஷ்யர்களுடன் துர்வாஸர் பாண்டவர்களை பிற்பகலில் அடைந்தால் சாப்பாடு கூப்பாடாக அல்லவோ ஆகும்! பசியுடன் துர்வாஸர் இடும் சாபம் பாண்டவர்களுக்கு வெந்த புண்ணில் வேலாகட்டுமே!**

**ஒருநாள் துர்வாஸர் தன் குழுவுடன் காம்யவனத்துக்கு மத்தியானம் மூன்று மணி அளவில் (பாண்டவர்கள் உணவு முடித்த பிறகு, அக்ஷய பாத்ரம் கழுவி கவிழ்க்கப்பட்ட பின்) வந்து விட்டார். அவரைக் கண்டது தர்மபுத்ரன் ரொம்ப மகிழ்ந்தான். வரவேற்று வணங்கி உபசரித்தான்.**

**"தர்மா, நீயும் உன் சகோதரர்களும் என்னை வரவேற்றது உன் சகோதரன் துர்யோதனன் உபசரித்ததை விட மேலாக இருக்கிறதே. உங்களது உண்மையான அன்பு வெளிப்படுகிறதே. நீ சொல்லிய வாறே இதோ நங்கள் அனைவரும் அருகே இருக்கும் ஆற்றில் நீராடி ஜபம் முடித்தபின் வருகிறோம். பிறகு நீங்கள் அளிக்கும் பிக்ஷை ஏற்றுக் கொள்கிறோம்..**

**வயிற்றில் புளி கரைத்தது திரௌபதிக்கு! இன்றைக்கு அக்ஷயபாத்ரம் இனிமேல் உணவு தராதே! என்ன செய்ய?. கோபக்கார முனிவருக்கும் ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுக்கும் எப்படி அன்னமிடுவது . என்ன செய்வேன். இன்னும் சில நிமிஷங்களில் இங்கே வந்துவிடுவார்களே'' என தவித்தாள். **

**ஆபத்து நேரத்தில் நமக்கு என்ன தோன்றும்? ஆபத்பாந்தவன் என்று தான் ஒருவன் எப்போதுமே உண்டே! . " கிருஷ்ணா” என கதறினாள். கதவருகே வாசலில் யாரோ நிற்கும் நிழல் தெரிந்தது. யாரென்று பார்க்க ஓடினாள்.**

**சொல்லி வைத்தாற்போல் வாசலில் வந்து நின்றான் கிருஷ்ணன்.**

**“திரௌபதி நீங்கள் எல்லாம் சுகமா?. எங்கே அவர்கள் எல்லாரும்?”**

**“கிருஷ்ணா!, இப்போது தான் உன்னை நினைத்தேன். நீயே வந்து நிற்கிறாயே என் அதிர்ஷ்டம்!!” ஆதியோடந்தமாய் கதையை சொல்லி முடித்தாள் திரௌபதி.**

**“இதோ பார், துரோபதி நீ எதற்காக என்னை அழைத்தாய் என்று எனக்கு தெரியாது. நானாகவே இந்த பக்கம் வந்தேன். வந்தது வந்தோம் இங்கே சாப்பாட்டை முடித்துக் கொள்வோமே என்று பசி காதடைக்க வந்திருக்கிறேன். நீயானால் ஒன்றுமில்லை கொடுக்க என்கிறாய். அதே சமயம் சாப்பிட ஆயிரக் கணக்கான சிஷ்யர்களுடன் இப்போது துர்வாச ரிஷி சாப்பிட வரப்போகிறார் என்கிறாய். நீ பேசுவதற்கு என்ன அர்த்தம் ?**

**''கிருஷ்ணா, என்னிடம் இருக்கும் அக்ஷய பாத்திரம் இன்று மறுபடியும் உணவு தராத நிலைமை . இனி நாளை சூரியோதயம் கழித்து தான் அது மீண்டும் உபயோகப்படும். இன்றைய பொழுது அனைவருக்கும் உணவளித்தபின் வழக்கம்போல, அதைக் கழுவி கவிழ்த்து வைத்தாயிற்று. இந்த நேரத்தில், யுதிஷ்டிரன் எங்களைத் தேடி வந்த மஹரிஷியையும் அவரது ஆயிரக்கணக்கான சிஷ்யர்களையும் வரவேற்று அவராகவே பிக்ஷை ஏற்றுக்கொள்ள வந்ததால் பிக்ஷை அளிக்க சம்மதித்து விட்டதால் ஆற்றில் ஸ்னானம் செய்ய போயிருக்கிறார்கள். என்ன பண்ணுவேன். இந்த நேரம் நீயும் எனக்கு பசி உன்னிடம் என்ன இருக்கிறது நான் உண்ண, என்கிறாய். இது நான் என் நிலை. என் உயிரை இங்கேயே மாய்த்துக்கொள்வது ஒன்றுதான் எனக்கு வழி.' என அழுதாள் திரௌபதி.**

**''சரி சரி, திரௌபதி, உன் அழுகையை நிறுத்தி , நீ முதலில் உன் அக்ஷய பாத்திரத்தை கொண்டு வா. அதை நான் கெஞ்சி கேட்கிறேன் எதாவது முதலில் என் பசியைத் தீர்க்க வழி இருக்கிறதா என்று கேட்கிறேன். என் பசி தீர்ந்தால் தானே நான் உன் மற்ற கவலைகளைப் பற்றி சிந்திக்க முடியும் என் மேல் இரக்கம் கொண்டு அக்ஷய பாத்திரம் ஏதாவது உணவு அளிக்காமலா போகும்? போ , போய் கொண்டுவா அந்த பாத்திரத்தை முதலில் என்னிடம்''. **

**திரௌபதி நீட்டிய அக்ஷய பாத்திரத்தை நன்றாக கவனித்த கண்ணன் அதன் விளிம்பில் மடிப்பின் கீழே இடுக்கில் ஒரு கீரைத்துண்டு ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.முகத்தில் புன்னகை தவழ்ந்தது. **

**“ஆஹா, அதிர்ஷ்டசாலி நான். இதோ பார் திரௌபதி, எனக்கு பிடித்த கீரை இதில் இருக்கிறதே. இது போதுமே வேறென்ன வேண்டும்'' என்று அதை எடுத்து கிருஷ்ணன் உண்டான். சிறிதளவு நீரை திரௌபதியை கேட்டு வாங்கி கண்ணை மூடிக்கொண்டே பருகினான் **

**"அப்பாடா, திரௌபதி, ஒருவழியாக என் பசியெல்லாம் தீர்ந்துவிட்டதம்மா. நான் என் வழியே போகிறேன்" என்று கிருஷ்ணன் புறப்பட்டான் .**

**"கிருஷ்ணா. எனக்கு என்ன வழி காட்ட போகிறாய். இன்னும் சற்று நேரத்தில் முனிவரும் ஆயிரக் கணக்கான சிஷ்யர்களும் வந்து விடுவார்களே சாப்பிட. நான் எப்படி சமாளிப்பேன். ஒன்றும் சொல்லாமல் போகிறாயே ?''**

**"இதோ பார், திரௌபதி. நான் இங்கே வந்தது என் பசி தீர்த்துக்கொள்ள. எனக்கு பசி அடங்கி விட்டது அவர்களும் இந்த அக்ஷய பாத்ரத்தை கேட்கட்டும் அவர்களுக்கும் ஏதாவது கிடைக்காமலா போகும். பசி தீராமலா போகும். பார்த்துக்கொள்.இனி உன்பாடு, யுதிஷ்த்ரன் பாடு, அந்த துர்வாஸ முனிவர் பாடு. எனக்கு எதற்கு அந்த வீண் விவகாரங்கள் எல்லாம். நான் வந்த வேலை என் பசி ஒருவாறு தீர்ந்தது. " **

** கிருஷ்ணன் விடுவிடென்று நடந்தான். திரௌபதி செய்வதறியாது கைகைளைப் பிசைந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணன் கண்ணிலிருந்து மறைந்தான். பாவம் கிருஷ்ணன், அவனே பசியாக வந்தவன் நான் பாத்திரத்தை கவிழ்த்து வைத்தால் அவன் என்ன செய்வான்.. அவனைக் குறை கூறுவது என் தப்பு தான். இனி துர்வாஸர் என்ன சாபமிடு வாரோ அதைப் பெறவேண்டியது தான்.வேறு வழி? துன்பம் தனியாகவா வருகிறது.ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கடுக்காக அல்லவோ நமக்கு வருவது வழக்கமாகிவிட்டது.'' கண்களில் கண்ணீரோடு பெருமூச்சு விட்டாள் .**

**காம்ய வனத்தில் ஓடும் ஒரு ஆற்றில் அமிழ்ந்து ஸ்நானம் செய்த துர்வாஸரும் சிஷ்யர்களும் ஒரு வாய் ஆற்று நீரைப் பருகியவுடனே என்ன ஆச்சர்யம். பசி ஏனோ பறந்து போய் விட்டது. வயிறு முட்ட விருந்து உண்ட மாதிரி ஆகிவிட்டது. கரையில் நின்றுகொண்டு அவர்களை திரும்ப பிக்ஷைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்த சகாதேவனிடம் மெதுவாக நடந்து வந்த துர்வாஸர் **

**“ஸஹாதேவா, என்னவோ தெரியவில்லை அப்பா. எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட மாதிரி ஆயாஸமாக இருக்கிறதே. இனி நாளை மதியம் தான் மீண்டும் பிக்ஷை ஏற்றுக் கொள்ள முடியும் போல இருக்கிறது. யுதிஷ்டிரனிடம் சொல்லிவிடு இன்று பிக்ஷை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.''**

**சிஷ்யர்களில் தலைவனாக ஒருவன் முன்வந்தான். முனிவரை வணங்கினான்.**

**"குருதேவா! எங்களுக்கும் இதே நிலை தான். எப்படி உங்களிடம் சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருந் தோம். நல்லவேளை நீங்களே பிக்ஷை வேண்டாம் என்று சொன்னது எங்களுக்கு நல்லதாய் போய் விட்டது" என்றனர் சிஷ்யர்களும் கோரசாக.**

**"ஸஹாதேவா, நாங்கள் இப்போதே இங்கிருந்து புறப்படுகிறோம், யுதிஷ்டிரனிடமும் மற்ற உன் சகோதரர்களிடமும் த்ரௌபதியிடமும் எங்களைத் தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல். முழு திருப்தியுடன் தான் சொல்கிறேன். மீண்டும் ஒருமுறை எப்பவாவது பிக்ஷை கட்டாயம் இங்கு வந்து உங்களிடம் பெற்றுக் கொள்கிறோம். என்னவோ எனக்கு ரொம்ப மனசு சந்தோஷமாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய பரிபூர்ண ஆசீர்வாதம் எப்போதும் உண்டு. நீங்கள் உங்கள் முயற்சியில் நிச்சயமாக ஜெயமடைவீர்கள்'' என்று வாழ்த்தி விட்டு சென்றார் துர்வாஸர். கண்ணன் உண்ட கீரைத் துண்டு இவ்வளவு வேலை செய்ததே அது அவன் பசி தீர்க்கவா ? அவன் பசி தீர்ந்தால் உலகில் எல்லா உயிர்களுக்கும் பசி தீர்ந்துவிடுமோ ?**
**இறைவனுக்கு நைவேத்யம் அளிப்பது உலகில் அனைவரும் இன்புறுவதற்காகவே. எதையும் உண்பதற்கு முன் ''ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்'' என்று சொல்லி உண்பது என் வழக்கம்.கவா??**
A few sets of my book on complete Mahabaratham in tamil titled AINDHAM VEDHAM (2 Volumes of about 1000pages) are available for distribution. It contains such stories... any one interested can contact my whatsapp no.9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...