Tuesday, November 2, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


தீபாவளி  கங்கா ஸ்னானம்  ---  மஹா பெரியவா

மஹா விஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்ததே,  அசுரர்களைக் கொன்று பூமாதேவியின் பாரத்தை குறைக்கவும், உலகில் தீமையை அகற்றவும் தான்.  தனது மகன், நரகாசுரனை  கிருஷ்ணன்  சம்ஹாரம் செய்தபோது  பூமாவுக்கு,  தாயார் ஸ்தானத்தில் ஒருபக்கம் துக்கம் பொங்கியது.  லோக க்ஷேமஹத்துக்காக  தகாத குணங்கள் கொண்ட பிள்ளையை இழந்ததில் வருத்தம் இல்லை.
 “என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருந்தாலும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும்  சந்தோஷமாக இருக்க வேண்டும் என வேண்டினாள்! “இந்த வேண்டு கோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்ந்தது. என்ன அற்புதமான குணம் அந்த தாய்க்கு. 
“நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்“ எனும் மனப் பான்மையை வள்ர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன்“தாத்பர்யம்“ என்கிறார்  மஹா பெரியவா.   தீபாவளிக்கு மூன்று குளியல்  உண்டு.

* தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த  நேரம்  கங்கை நதியே இருப்பதாக ஐதீகம். அதனால், அந்த நேரத்தில் எண்ணைய் ஸ்னானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வர வேண்டும். இதற்கு“கங்கா ஸ்னானம்“ என்று பெயர்.

* வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதிந்த பின், ஆறு நாழிகை நேரம்வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். ஆப்பொது, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு, “துலாஸ்னானம்” என்று பெயர். இரண்டாம் ஸ்னானத்தில் பரமேஸ்வரன் நினைவு வர வேண்டும்.

* வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்னானம் ஒன்றுண்டு.அது தான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும்   “கோவிந்தேதி ஸதா  ஸ்னானம்“ அப்போது, நம் ஜீவன் தூய்மை யாகிறது. பெரிய ஸ்னானம் என்றுசொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணி விடக்கூடாது.இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்னானம் செய்யுங்கள்.

கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப் பெருமைபெற்றதாக  எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருனாள். 

ஸ்ரீ மஹா பெரியவா 1966 ல்   காளஹஸ்தியில் இருந்த  போது, தீபாவளி ஸமயம் . தரிசிக்கச் சென்ற பக்தர்  ஒருவர், “ பெரியவா  தீபாவளிக்கும் கங்கா ஸ்நானத்துக்கும் என்ன தொடர்புன்னு  சொல்லணும் ” என்று  வேண்டினார்.

மஹா பெரியவா புன்னகைத்தார்.  “ஏன், தீபாவளிக்கும் கங்கைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதென்று நினைக் கிறாயா? தீபாவளி  கிருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை. கங்கையோ பரமேச்வர ஸம்பந்த முள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. ‘யமுனா தீர விஹாரி’ என்றே அவரைச் சொல்கிறோம். அதனால் தீபாவளியில் யமுனானனம் என்று சொல்லாமல் கங்கா ஸ்நானம்  னு  ஏன் விசேஷமா  சொல்லியிருக்கு என்று உனக்குத் தோன்றுகிறதாக்கும்?” அது இருக்கட்டும்; தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கிறாயோ?” என்று ஓர் அபூர்வ விஷயத்தை  கேள்வியாக கேட்டார்.

“இல்லை. பெரியவா தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்” 
'' இங்கே இருக்கிறவா  வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா ? பெரியவா கண்கள் துழாவியது. மௌனம்.ஒரு பண்டிதர்  “ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை'' என்றார்.
“பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கே.   ராமாயண, பாரத, பாகவதாதிகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும்  வருகிறதே.  கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும்  இதெல்லாமே   மூல ராமாயண, பாரத, பாகவதாதிகளுக்கு complimentaryயாகவே (இட்டு நிரப்பி முழுமை தருவனவாகவே) இருக்கின்றன. ஆகையால், மூலக்ரந்தத்துக்கு contradictoryயாக (முரணாக) இல்லாதவரை இப்படிப்பட்ட additional (கூடுதலான) ஸமாசாரங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்ற பெரியவா தொடர்ந்தார்.
 “நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோ இல்லையோ?”
“ஆமாம்  பெரியவா. வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங்களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்ல. நரகாஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் ''என்று பூமாதேவி வேண்டினதாக வருகிறது. 
“வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianship லேயே விட்ட மாதிரி” என்று  சிரித்தார்  மஹாபெரியவா.“அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப் பட்டிருக்கிறாயோ ?
“கேட்டிருக்கிறேன்” 
“எனக்கென்னவோ அவனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பதுதான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவான் ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியா மல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும், அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டா ளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு அபிப்ராயம்” என்றார்.

கிருஷ்ணன் காவேரி ஸ்நானம் செய்தது பற்றி பெரியவா சொல்லணும்''

“ஒருத்தர்  இப்போ ‘கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு’ ன்னு கேட்டார். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொனால்   “ஒருவேளை  ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது போல இருக்குன்னு அவர்  நினைச்சுப்பார். அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்”  என்று சிரித்தார் மஹா பெரியவா. 
“இந்த பண்டிதர்  ”பாகவதத்திலே  அது இருந்தால் தான் ஒப்புத்துக்குவேன்”  னு சொன்னாலும் கூட  நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்தான் சொல்லப் போகிறேன். காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது. அதிலொன்றில்   ''துலா காவேரி மஹிமையைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்களையும் கொடுத்திருக்கிறார்” .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...