Wednesday, November 24, 2021

aadhi sankara athmapanchakam

 ஆதி சங்கரர்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஆத்ம  பஞ்சகம் 

ஐந்தே  ஐந்து ஸ்லோகங்கள்,   ஆஹா,  எவ்வளவு உயர்ந்த தத்துவத்தை அந்த மஹான்,  32 வயதுக்குள்   ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருக்கிறார்.  எத்தனை தடவை எழுதினால் தான் என்ன, படித்தால் தான் என்ன. ஒவ்வொரு தடவையும்  சங்கரர் அழுத்தமான  வார்த்தைகளில்  என்னை புரட்டி போடுகிறார். உங்களையும்  அவ்வாறு அனுபவிக்க வைக்க பிரயாசைப்படுகிறேன்.

 எனக்கு பேனாவில், பால் பாய்ன்ட் பேனாவில் பென்சிலில்  காகிதத்தின் மேல்  எழுதும் பழக்கம் போயே  போய் விட்டது.

 என்று இந்த கம்ப்யூட்டரில் இங்க்ளிஷில் எழுதி அது தமிழாக வருகிறதைஜெர்மனியில் உள்ள என் மூத்த மகன்  கண்ணன்,  சொல்லிக் கொடுத்தானோ, அன்று முதல் அதுவே சுகானுபவம், சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இங்க்ளிஷில் நன்றாக  வேகமாக  தப்பில்லாமல்  டைப் அடிக்க   அரை நூற்றாண்டுக்கு மேல்  பழக்கம். அதனால் என் மன அலைகளை, அசைவுகளை  அப்படியே அவ்வப்போது சொல்ல இது உதவுகிறது. சுலபமாகவும் இருக்கிறது. என் உலகமே இது தான்.  காசு பணம் சம்பந்தமில்லாத ஒரு அருமையான விஷயம். 

கொரோனா காலத்தில்  அதை வரவேற்று  கிடைத்த  நீண்ட நேரத்தை அமைதியாக தனிமையில்  கம்ப்யூட்டர் எதிரே உட்கார்ந்து செலவழித்தவன் நான் ஒருவனாகத்தான்  இருக்க முடியும்.  தனிமையிலே  இனிமை காண முடியுமா? என்றால் முடியும், முடிகிறது.  ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியும் அலுக்கவில்லையே.

ஆதி சங்கரர், ரமணர்,  மஹா பெரியவா, விவேகானந்தர், தாகூர்,  ஸ்தோத்ரங்கள், உபநிஷத்துகள், உலக பேரதிசயங்கள்,  இலக்கியங்கள், கவிதைகள், மஹா காவியங்கள், இதி ஹாஸங்கள், சித்தர்கள், மஹான்கள்   ------      எல்லா பண்டங்கள் மேலும்  ஈ  உட்காருவதைப்  போல் தொட்டிருக்கிறேன் என்று தான் சொல்லவேண்டும்.  படிக்க இன்பமாக இருக்கிறது, அதை எடுத்துச் சொல்ல வேண்டும்  என்று  ஒரு தீராத தாகம். அவ்வளவு தான்.  எத்தனை பேருக்கு இது பிடித்திருக்கிறது என்று தெரியாவிட்டாலும் என் மனதிருப்திக்கு ஈடு எதுவும் இல்லை. ஒரு நாளைக்கு  இருபது மணி நேரம்  போதவில்லையே  என்ற குறை .

கொரோனா  சிறை அனுபவம், நிறைய படிக்க எழுத  உதவுகிறது.  இனி இதிலிருந்து மீளுவது தான் சிரமம்.  நிறைய படிக்கும்போது அதில்  சிலவற்றை தான்  எடுத்துச் சொல்ல முடிகிறது.   நான்  எப்படி புரிந்து கொள்கிறேனோ, அப்படியே குட்டி குட்டி வாக்யத்தில்,  மூலத்திலிருந்து பிறழாமல் தொந்தரவு பண்ணாமல்  சொல்ல  எழுத  முடிந்தால் நான்  பாக்கியசாலி.  அது போதுமே.

ஆதிசங்கரரின்  ''ஆத்ம பஞ்சகம் ''   முன்பே   எழுதியது தான்.  முகநூலில்  பதிவிட்டிருக்கிறேன்.   ஆனால் இது திரும்ப திரும்ப  மறுபடியும் படிக்க வேண்டிய விஷயம்.  சில  நல்ல சமாசாரங்களை, மஹா  பெரியவா  அனுபவம்   போன்றவை, எத்தனை தடவை,  யார் யாரோ சொன்னாலும் கேட்க  ருசியாகத்தான் இருக்கிறது அல்லவா?.  இது இன்னும் கொஞ்சம் மஹா மஹா  பெரியவா  ஆதி  சங்கரர்  எழுதிய  ஐந்து ஸ்லோகங்கள்.  ஆத்மா பற்றி.    இதற்குப் பெயர்  ''ஆத்ம பஞ்சகம்'' .
++
 சந்தோஷம்  என்பது  நாலு பேருடன்  பகிர்ந்து கொண்டால்   தானே அது  இன்னும் அதிகமாகும்.  எனவே  தான் இந்த  சிறு எண்ண  பிரதிபலிப்பு.  


नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं नाहंकारः प्राणवर्गो न बुद्धिः
दारापत्यक्षेत्रवित्तादिदूरः साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥
 
Naham  deho, nendriya nyantharangam,Nahamkara prana vargaa na budhi,
Darapathya kshethra vithadhi dhoora,Sakshi nithya prathyagathma shivoham.    1

நாஹம் தேஹோ நேந்திரியந்தரங்கம், நாஹம்கார  ப்ராண  வர்கா ந புத்தி 
தாராபத்ய க்ஷேத்ர  விந்ததி  தூர;  சாக்ஷி நித்ய; பிரத்யாகாத்மா சிவோஹம்:

தேஹாத்ம புத்தி  என்பார்கள்.  இந்த  தேகத்தை  தான்  ஆத்மா என்று  தவறான கணக்கு போடுகி றோம்.  தெரிந்தும்  போடுகிறோம். தெரியாமலும் போடுகிறோம்.  பஞ்ச  இந்திரியங் களும்   ஆத்மா  இல்லை.  இன்னும் சொல்லப் போனால்  நமது  புத்தியும் ஆத்மா  இல்லை.  விடுகிறோமே மூச்சு.  பிராணன்.   அதுவும் ஆத்மா இல்லை.   
 குப்பு ராவ்  கடைசி மூச்சை நீளமாக இழுத்து விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது. பிராணன் போய்  விட்டது என்கிறோமே தவிர  ஆத்மா  போய்  விட்டது என்றா சொல்கிறோம்?.  அவர்  ஒரு நல்ல  ஆத்மா  என்கிறோமே. ஏதோ கொஞ்சம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா?  அதை  விஸ்தாரமாக புரிந்துகொள்ள  முயலவில்லை.  அஹங்காரமும்  ஆத்மா இல்லை.  பின்  எது ஐயா  ஆத்மா என்பது?  எது  பிள்ளை, பெண்டாட்டி,  வீடு வாசல்  சொத்து சுதந்திரம்  எல்லாவற்றுக்கும்  அப்பால  தனியாக   ஒரு  சாட்சியாக  தூரத்திலிருந்து சம்பந்தமில்லாமல் வேடிக்கை  பார்க்கிறதோ அது தான்  ஆத்மா.   

அடுத்த தெருவில் ஒரு  பெரிய  மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன  சம்பந்தம்  என்பது போல் இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே  சேர்க்காமல்  வைத்துக்கொள்வது.   நான் நிரந்தரமானவன். பற்றற்றவன் , சிவன். ஆனந்த ஸ்வரூபன்.

 रज्ज्वज्ञानाद्भाति रज्जुर्यथाहिः स्वात्माज्ञानादात्मनो जीवभावः।
आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु-र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥

Rajjwagnanath bhathi rajjuryyahi ,Swathma jnanad athmano jeeva bhava,
Aapthokthya hi branthinase sa rajjur,Jjevo naham desikokthya shivoham.   2

ரஜ்வஞாநாத்பாதி  ரஜ்ஜுர்யாஹி ஸ்வாத்மா  ஞானாத் ஆத்மனோ ஜீவ பாவ :  
ஆப்தோக்த்யா ஹி ப்ராந்தினஸே ஸ  ரஜ்ஜுர் ஜீர்வோ நாஹம் தேசிகோக்த்ய  சிவோஹம் :

பிரதி பாசிகம் என்பது சமஸ்க்ரிதத்தில்  ஒன்றை மற்றொன்றாகவே கண்டு உணர்வது.   அரை இருட்டில் பளபள  வென்று  ஒரு தோரணக் கயிறு  சுவர் ஓரமாக  காற்றில்  ஆடுகிறது.  ஐந்து அடி நீளத்தில்  ஒரு  நாகம்  அங்கு நெளிந்து கொண்டு இருக்கிறது என்று  அதைக் கண்டு  நடுங்குகிறோம்.  வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து  பாதி உயிர் போய்  விட்டது. பிறகு  யாரோ  அருகில் தைர்யமாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு பிளாஸ்டிக் கயிறு என்று காட்டியதும் பாம்பு  எங்கே போய்  விட்டது?. பிளாஸ்டிக் கயிறு மட்டுமே  மிஞ்சியது. பயமும் போனது இது  பாம்பு இல்லை என்ற ஞானம் வந்ததால். 

 அது போல்  உயிரற்ற  உடம்பை  உயிர் என்று கருதுகிறோம். மஹா  பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு,   ''சுவாமி  உங்க உடம்பு ஆத்மா இல்லை''  என்று  உணர்த்தினால் தான் பாம்பு கயிறாகும்.

இப்படி  தட்டி எழுப்பின பிறகு தான்  என்னுள்  இருப்பது   ஜீவன் அல்ல  அந்த  சிவனே  என்று அந்த  ஞானி, குரு,  சொல்லிக் கொடுப்பது புரியும். அப்பறம் என்ன  சதா  ஆனந்தம் தான்.  

आभातीदं विश्वमात्मन्यसत्यं सत्यज्ञानानन्दरूपे विमोहात् ।
निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥

Aabhadhedham vishwamathmanya sathyam, Sathya jnanananda roope vimohat,
Nidhramohat swapnavath thanna sathyam, Shuddha poorno nithya eka Shivoham. 3

ஆபாதிதம்  விஸ்வமாத்மன்ய  ஸத்யம்  ஸத்ய ஞானானந்த ரூபே விமோஹாத் 
நித்ராமோஹாத் ஸ்வப்னவத் தன்னசத்யம்  சுத்த  பூர்ணோ நித்ய ஏக சிவோஹம் 

காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம்  மஞ்சள்.  இந்த  உலகமே  என்றும் சாஸ்வதம். இந்த பூலோக வாழ்க்கை  அழிவற்றது  என்ற எண்ணங்கள் திரையாக  ஒரு உண்மையை மறைக்கின்றன.  எது  அழிவற்றது, உண்மையானது, நிரந்தரம்?  என்று தெரியவில்லை. உறக்கத்தில் காணும் கனவுத் தோற்றம்.  நிஜம் மாதிரியே இருக்கும். ஆனால் அது பொய்.  எது  சுத்தமோ, எது  பூரணமானதோ,  எது  ஒன்றேயோ,  அது தான் என்னுள்  உறையும் சிவன்  என்கிற 'நான்.        இதைத்தவிர   ஏதோ கலர் கலராக  சட்டை போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடம்பல்ல.

मत्तो नान्यत् किञ्चिदत्रास्ति विश्वं सत्यं बाह्यं वस्तुमायोपक्लिप्तं ।
आदर्शान्तर्भासमानस्यतुल्यं मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥

Matho nanyath kinchid athrasthi viswam, Sathyam bahyam vasthu mayopakliptham,
Adarsho andhar  bhasamanasya thulyam, Mayyadwaithe bhathi thasmad shivoham.      
                                          
மத்தோ நான்யத்  கிஞ்சிதத்ராஸ்தி  விஸ்வம்  சத்யம் பாஹ்யம் வஸ்து மயோபக்லிப்தம் 
ஆதரஸோ அந்தர் பாசமான ஸ்ய துல்யம்  மய்யத்வைதே   பாதி தஸ்மாத்சிவோஹம்.


maThis world  is in no way different from me,
Similar to everything getting reflected in a mirror,
All the world is within me,
So I am that Shiva which is without two.

எங்கும்  பரவி இருக்கும்  இந்த உலகம், நானே தான்   மாறிக்கொண்டே இருக்கும்  வஸ்து .  மாற்றம் என்றால் என்ன.  ஒன்று  இருந்து, கண்ணாடி  எத்தனையோ வஸ்துக்களை  அப்படி  பிம்பமாக காட்டுகிறது. ஆனால் ஒரு பிம்பமும் அதில் நிரந்தரமாக இல்லை.  தோன்றி மறைகிறது. ஒன்று  மறைந்து வேறொன்றாக காட்சி அளிப்பது தானே  மாற்றம்.  நானும் அப்படித்தானே.  ஐந்து வயது நான், இருவது வயது நானில்லை,  நாற்பது வயது நான்   இப்போது எண்பத்து மூன்று வயது  ''நான்'' கிடையாது.    ஆனால்  எல்லாமே  நான்.  நானே  எல்லாம். அப்போது  எல்லாவற்றிலும்  உள்ள  சிவனும் நான்,  நானே தான் சிவன். எல்லாம்  ஒண்ணே--- தலை சுற்றுகிறதா.  பொறுமை. பொறுமை. மெதுவாகத்தான்  புரிந்து கொள்ள வேண்டும். 
இது கதையல்ல. சுப்பிரமணி  ஜானகியை காதலித்து விட்டு அப்பறம் என்ன செய்தான்  என்று தெரிந்து கொள்ள.

 नाहं जातो न प्रवृद्धो न नष्टो देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः।
कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं -कारस्यैव  ह्यात्मनो मे शिवोऽहम् ॥५॥

Naham jatho na pravrudho na nashto,Dehasyoktha prakrutha sarva dharma 
Karthruthwadhi schinmaya syasthi naham, Karasyaiva hyathmano may Shivoham.                                                       5

நாஹம்  ஜாதோ  ந  ப்ரவ்ருதோ ந நஷ்டோ  தேஹஸ்யோக்தா  ப்ராக்ருதா  சர்வ தர்மா 
கர்த்ருத்வாதி ஸ்சின்மய ஸ்யாஸ்தி நாகம் காரஸ்யைவ  ஹ்யாத்மனோ மே சிவோஹம்.

அப்படி என்றால்,  நான்  பிறக்கவில்லை,  வளரவில்லை, இறக்கவில்லை, என்றால்  புரிகிறதா?. எல்லாம்  இந்த  உடல்  தான் சார். அது தான் நான் இல்லையே! . நான்  கல்கத்தாவுக்கு  ஒரு மணியிலே  வரேன் என்று சொல்கிறேனே. நானா பறந்தேன்? ஏதோ ஒரு ஏரோப்ளேன் என்னை தூக்கிக் கொண்டு போய்  சேர்த்தது.  ப்ளேன்  வந்துது என்றா சொல்கிறேன். நான்  வந்தேன் என்று தானே என் வாயில் வார்த்தை. அது போல்  என்னைத் தாங்கி நிற்கும் இந்த உடம்புக்கு தான்  எல்லா  மாற்றங்களும். இதில் அஹங்காரம் கொண்டு இருந்தால்  அது எனதில்லை. பெருமை, கர்வம்..ஹுஹூம். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் தான் சிவனாயிற்றே. எதோடும் அட்டேச்மென்ட் இல்லையே.  

नाहं जातो जन्ममृत्यू कुतो मे नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे ।
नाहं चित्तं शोकमोहौ कुतो मे नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥

Naham jatho janma mruthyu kutho may, Naham prana kshuth pipase kutho may,
Naham chitham sokamohou kutho may, Naham kartha bandha mokshou kutho may.                                                6

நாஹம் ஜாதோ  ஜன்மம்ருத்யு குதோ மே  நாகம்  ப்ராண: க்ஷுத் பிபாஸே குதோ மே 
நாஹம்  சித்தம்  சோகமோஹோ  குதோ மே  நாஹம் கர்த்தா பந்தமோக்ஷவ் குதோ மே .

நான்  தான் பிறக்கவில்லையே  எங்கேயிருந்து பிறப்பு  அதை தொடர்ந்து இறப்பு?
நான்  தான்  ஜீவன் இல்லையே,  எங்கேயிருந்து   பசி, தாகம் ?
நான்  தான் மனம் இல்லையே,  இந்த  கோப தாப துக்க  சந்தோஷ  உணர்ச்சிகள் எங்கே  இருந்து என்னை அணுகும்?  
நான்  தான்  எதையும்  பண்ணவில்லையே  எங்கேயிருந்து  இந்த  சொந்த பந்த  பாசம்  நேசம்  எல்லாம்  எனக்கு.?  சார்  நான்  ஆத்மா. இதெல்லாம்  கடந்தவன். நான் சிவன் சிவன் சிவன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...