Wednesday, January 9, 2019

YATHRA VIBARAM. GURUVAYUR

குந்து மணி கதை தெரியுமா?
J.K. SIVAN

இந்த உலகில் காணும் யாவும் இறைவன் படைப்பே. இதில் பெரிதென்ன சிறிதென்ன, உயர்ந்ததென்ன தாழ்ந்ததென்ன? ஒஸ்தியென்ன மட்டமென்ன? வித்யாசம் நமது பார்வையில் இருக்கிறது. பார்வை மனத்தின் வெளிப்பாடு.
அதனால் தான் கண்ணன் ஒரு துளி ஜலம் ,ஒரு சிறு இலை, ஏதோ ஒரு சிறு பழம், பக்தியோடு நீ எனக்களித்தால் அது போதுமே எனக்கு என்கிறான். எது கொடுக்கிறாய் என்பது முக்கியமல்ல, எப்படி கொடுக்கிறாய் என்பது தான்.

விநாயக சதுர்த்தியின் போது களிமண் பிள்ளையாருக்கு கண் வைக்கிறோமே அந்த குந்து மணி (குண்டு மணி, ஒல்லி மணி அல்ல) சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். மிக அழகாக கண்ணைப் பறிக்கும்.

கேரளாவில் அநேகமாக முக்கியமாக எல்லோர் வீட்டிலும் குந்துமணி மரம் உண்டு. மஞ்சாடி என்பார்கள். குந்துமணிக்கு மஞ்சாடிக்குரு என்று பேர்.

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய வாயகலமான பாத்திரத்தில் செக்கப் செவேலென்று நிறைய குண்டுமணி வைத்திருப்பார்கள். ரெண்டு கையாலும் அதை அளைந்து வேண்டிக்கொண்டால் நோய்கள் குணமாகும். புத்ர பாக்யம் உண்டு என்பார்கள். இதை எழுதுவதே இது சம்பந்தமான ஒரு கதை சொல்ல.

குருவாயூர் உண்ணி கிருஷ்ணன் ஆலயத்திற்கு செல்லாத ஹிந்து பக்தர்களே கிடையாது. ஒரு மலையாள கிழவிக்கு குருவாயூரப்பன் உயிர். அவனை தரிசிக்க ஆசை.ஆனால் அவள் வீடு எங்கோ தொலை தூரத்தில் ஒரு ஊரில். அவளை யார் அழைத்து போவார்கள்? பிரயாணத்திற்கு வண்டி சத்தம் கொடுக்க காசும் இல்லை. குருவாயூர் போகவேண்டும் அவனுக்கு என்ன கொண்டு போவது? அவள் வீட்டில் மஞ்சாடி மரம் அதில் இருந்து நிறைய குந்துமணி தரையில் உதிரும். கண்ணன் பயல் இதை கண்டால் அதை வைத்துக் கொண்டு
ஆசையாக விளையாடுவானே என்று தோன்றியதால் அதையெல்லாம் சேகரித்து, அலம்பி, காயவைத்து, ஒரு பெரிய துணிப்பையில் நிரப்பிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். பல நாட்கள் நடை. வயோதிகம். முதுகில் குந்துமணிப் பை . மெதுவாக ஒரு நாள் குருவாயூர் விசாரித்து தெரிந்துகொண்டு வந்து சேர்ந்தாள்.

அவள் குருவாயூர் ஆலய வாசல் அடைந்த அன்று மாதத்தின் முதல் நாள். ஒவ்வொரு மாத முதல் நாளும் அந்த ஊர் ராஜா ஒரு யானையை குருவாயூரப்பனுக்கு தானமாக தருவது வழக்கம். ஆகவே ஜேஜே என்று ஒரே கூட்டம். வழக்கமாகவே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்று ராஜாவின் பரிவாரம் வேறு. ராஜா வரும்போது ஆரவாரம் இருக்காதா? எங்கும் பரபரப்பு, தள்ளு முள்ளு. ராஜாவின் ஆட்கள் யானையும் ராஜா, அவன் ஆட்கள் உள்ளே நுழைய வழி பண்ணுவதற்கு எல்லோரையும் ஓரம் போக பிடித்து தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

கிழவி கும்பலில் மாட்டிக்கொண்டாள் . ஓரமாக நகரமுயன்ற அவளை எவனோ வேகமாக பிடித்து தள்ளி விட்டான். தொபீர் என்று கீழே விழுந்தாள். அவள் முதுகில் இருந்த பழைய பெரிய துணிப்பை கிழிந்து அதில் இருந்த எத்தனையோ மாதங்களாக அவள் பொறுக்கி சேர்த்து வைத்திருந்த அத்தனை குந்துமணிகளும்
தரையில் சிதறி ஓடியது. தான் விழுந்ததை பற்றி கவலைப்படாத கிழவி குந்துமணி சிதறி ஓடி வீணாகியதை எண்ணி கதறினாள். ''என்னப்பா குழந்தே, உண்ணி கிருஷ்ணா, உனக்கு என்று ஆசையாக கொண்டு
வந்தேன். இப்படி ஆகி விட்டதே''

திடீரென்று அமளி. ஒரே கலவரம். இதுவரை அமைதியாக நடந்து வந்த யானைக்கு ஏனோ மதம் பிடித்து எல்லோரையும் தாக்க ஆரம்பித்து விட்டது. கண்ணில் கண்ட தெல்லாம் நாசப்படுத்தியது. எல்லோரும் தப்பி ஓடினர். ராஜா திகைத்தான். ''அடடா என்றுமில்லாமல் இன்று யானை இப்படி செய்து விட்டதே '' யானையின் பின்னே சிலர் ஓடினர். அது கட்டுக்கடங்கவில்லை. ராஜா குருவாயூரப்பன் பக்தன். அவன் கண்களில் நீர்.

''என்ர குருவாயூரப்பா உனக்கு என்று கொண்டுவந்த யானை இப்படி பண்ணுகிறதே. என் தப்பு ஏதாவது இருந்தால் மன்னித்து அருளவேண்டும்.''

உண்ணிகிருஷ்ணன் பேசுவான்.நம்பூதிரி பட்டாதிரி, பூந்தானம் எல்லாரும் அவனோடு பேசி இருக்கிறார்களே.

''இது என் ஏற்பாடு தான். நான் ஆசைப்பட்டதை என் பக்தை ஒருத்தி கொண்டுவந்ததை எனக்கு சேராமல் உன் ஆட்கள் தடுத்து விட்டார்கள். ஆகவே நீ கொண்டுவந்த யானையை நான் ஏற்றுக்கொள்ளாமல் தடுத்து விட்டேன்.''

''ஐயோ என்ன பாதகம் செய்தேன் நான். கிருஷ்ணா, சொல், யார் அந்த பக்தை என்ன கொண்டுவந்தாள் என் ஆட்கள் அதை எப்படி தடுத்தார்கள்?

''அதோ பார் அந்த பிரதான வாசல் கோடி முனையில் திருப்பத்தில் ஒரு கிழவி முதுகில் அடிபட்டு விழுந்து கிடக்கிறாள். அவள் அருகே பார் ஏராளமான குந்துமணிகள் சிதறி இருக்கிறது தரையில். அதெல்லாம் எனக்காக வந்தது. காத்துக் கொண்டிருந்தேன் ஒரு மாசமாக. கண்ணுக்கெட்டியது என் கைக்கு எட்ட வில்லை''. என்றான் குட்டி கிருஷ்ணன்.

ராஜா ஆலய வாசலுக்கு ஓடினான். கிழவியை கண்டுபிடித்து அவளை வணங்கினான். அவளை தூக்கி தன் அருகில் வைத்துக் கொண்டான். அவன் ஆட்கள் ஒரு குந்து மணி விடாமல் அனைத்தையும் சேகரித்து சுத்தப் படுத்தினார்கள். ராஜா கிழவியை உபசரித்து நல்ல ஆடைகள் உடுத்தி பல்லக்கில் சுமந்து குருவாயூரப்பன் முன் தரிசனம் செய்ய வைத்தான். பரம சந்தோஷம் பாட்டிக்கு. அவள் கையால் வாயகலமான தங்க பாத்திரத்தில் அவள் கொண்டுவந்த அத்தனை குந்துமணிகளையும் ஒன்று விடாமல் நிரப்பி குருவாயூரப்பன் முன்பு ராஜா சமர்ப்பித்தார். கிழவி பரமானந்தத்தோடு குட்டி கிருஷ்ணன் அதில் குதித்து குந்துமணிகளோடு விளையாடுவதை பார்த்தாள் .

மதம் பிடித்திருந்த யானையும் நாய்க்குட்டியாக சமர்த்தாக குருவாயூரப்பனை தரிசித்தது.

இன்றும் குழந்தைகள் குருவாயூர் அப்பன் கோவிலில் குந்துமணி பாத்திரத்தில் கையை விட்டு அளாவி விட்டு மகிழ்கிறார்கள்.
உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் கிருஷ்ணன் பார்க்கிறான்.
மனத்தினால் செய்யும் தொண்டு பணத்தினால் செய்யும் தொண்டை விட ரொம்ப பெரிசு. எப்படி குசேலன் இடுப்பில் கிழிந்த அழுக்கு வேஷ்டியில் முடிந்து செருகி வைத்திருந்த அவல் மூட்டையை தேடி தானே எடுத்து வாய் நிறைய தின்றான்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...