Thursday, January 10, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மகா பாரதம்

'' ஸ்வாஹா.....''

உண்மையாகவே, மகாபாரதத்தை முழுமையுமாக படித்தால் அதில் இல்லாத விஷயமே இல்லை என்று தாராளமாக சொல்ல முடிகிறது. வியாசர் ஒரு பிரபஞ்ச மனிதர், சர்வ ஞான ரிஷி.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் யுத்தம் நடக்கும். அதில் அநேகமாக அசுரர் கை ஓங்கி அநேக தேவர்கள் அழிவார்கள். இந்திரன் ஒவ்வொரு கஷ்டமான சமயத்திலும் பரமன் உதவியோடு விஷ்ணுவை வேண்டி ஒருவாறு அசுரர்களைகொன்று தேவர்களை ரட்சிக்க வழி தேடுவது வழக்கம்.

இது மாதிரி ஒரு சமயத்தில் தேவர்களைக் காக்க இந்திரன் ஒரு சக்தியை தேடினான். மானஸா மலைகளில் ஒரு இடத்தில் அமர்ந்து தியானம் செய்தான். அங்கு திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. ''ஐயோ என்னை யாராவது காப்பாற்றுங்களேன் '' இந்திரன் குரல் வந்த திசையில் ஓடி அங்கே ஒரு பெரிய ராக்ஷசன் நிற்பதைக் கண்டான். அவன் பெயர் கேசின். அந்த ராக்ஷசன் கையில் ஒரு பெண் சிக்கி இருந்தாள் . அவளே அந்த குரலின் எஜமானி. இந்திரனைக் கண்டதும் அந்தப் பெண் ''என்னை எப்படியாவது இந்த ராக்ஷசனி டமிருந்து காப்பாற்று'' என்று வேண்டினாள்.

''ஹே ராக்ஷஸா, அந்த பெண்ணை உடனே விடுவி. நான் இந்திரன், தேவர்கள் தலைவன். உன்னைக் கொன்று விடுவதற்குள் அந்த பெண்ணை விட்டுவிடு''. கேசின் பதிலுக்கு

'வா இந்திரா வா, உனக்கு என்ன தைர்யம் இந்த பெண்ணோடு திரும்பி விடுவோம் என்று கனவு காண்கிறாய். இதோ இவளோடு உன்னையும் சேர்த்து இங்கேயே கொன்றுவிடு
கிறேன்'' என்றான்.

இருவருக்கும் ஆயுத போட்டி நடந்தது. கடைசியில் இந்திரனின் வஜ்ராயுதம் கேசின் உயிரைக் குடிப்பதற்கு முன் அந்த ராக்ஷஸன் கேசின் தலை தப்பினால் போதும் என்று அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி மறைந்து விட்டான்.

''நீ யார் அம்மா ? என்ற இந்திரனுக்கு அவள்

"நான் பிரஜாபதி மகள். என் பெயர் தேவசேனா. என் சகோதரி தைத்யசேனாவை இந்த கேசின் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட்டான். என்னையும் எடுத்துக் கொண்டு போக முயற்சித்தான். நான் அபலை. எனக்கு என்று சக்திவாய்ந்த ஒரு கணவன் இருந்தால் இந்த நிலை எனக்கு வருமா? . நீங்கள் தான் அவனை எனக்கு அளிக்க வேண்டும்'' என்றாள் தேவசேனா.

இந்திரன் தெய்வங்களை வேண்டினான். சூரியனும் சந்திரனும் சக்தி கொண்டவர்கள் அவர்கள் இருவரும் அக்னியோடும் சேர்ந்து அளித்த சக்தி ஒருவனை உண்டாக்கினால் அவனே சகல அசுரர்களையும் அழிக்க காரணமாவான் என்று புரிந்தது. இந்த எண்ணத்தோடு தேவசேனாவை இந்திரன் பிரம்மாவிடம் அழைத்து சென்றான்.

''பிரம்ம தேவா, இந்த தேவசேனாவுக்கு தாங்கள் பொருத்தமான, புருஷனை, அதாவது சகல அரக்கர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் யாவரையும் அழிக்கும் சக்தி கொண்ட ஒரு வீர புருஷனை அளிக்கவேண்டும்'' என்று வேண்டிகொண்டு பிறகு இந்திரன் தேவசேனாவுடன் திரும்பினான்.

பிறகு தேவரிஷிகள் வசிஷ்டர் முதலானோர் ஒரு பெரும் யாகம் நடத்தினர். அக்னி திருப்தி அடைந்து அதிலிருந்து வெளிப்பட்ட சக்தியை ஸ்வாஹா என்கிற தேவதை மூலம் ஆறு பாகங்களாக பிரித்து தேவலோக தடாகத்தில் சேர்க்க அதிலிருந்து ஒரு சிசு உருவாகிறது . ஆறுமுகங்கள், பன்னிரு காதுகள் ,பன்னிரண்டு கண்கள், கைகள் கொண்டு உருவான அந்த குழந்தை ஸ்கந்தன் என பெயர் பெறுகிறது. கம்பீரமும் அதிக சக்தியும் கொண்டு வளர்கிறது.

தனது சக்தி ஆயுதத்தால் வெள்ளை நிறம் கொண்ட மிகப் பெரிய கிரவுஞ்ச மலையை தகர்க்கிறது. தேவர்களுக்கு ஒரு பயம் வந்துவிடுகிறது. இந்த சக்தியால் அபாயம் விளையுமோ என்று அஞ்சி இந்திரனிடமே முறையிட, அவனுக்கும் ஆறுமுகனுக்கும் யுத்தம் நடந்து வஜ்ராயுதத்தால் தாக்குண்டு ஆறு முகனிலிருந்து மற்றொரு அம்சம் வெளிப்படு
கிறது. அது விசாகன் எனப் பெயர் பெறுகிறது. தனது படையை இழந்த இந்திரன் விசாகனை வணங்குகிறான். தேவர்களின் சேனைக்கு தலைவனாக இருக்க வேண்டுகிறான். தேவர்களை எதிர்க்கும் அசுரர்களை அழித்து தேவர்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறான். ஸ்கந்தன் தேவ சேனாபதி ஆகிறான்.

பிரம்மதேவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. தேவசேனாவுக்கு ஏற்ற கணவன் ஸ்கந்தனே என்று. திருமணம் விமரிசையாக நடக்கிறது.

சப்த ரிஷிகளின் பத்னிகளும் ஸ்கந்தனை மகனாக வரிக்கிறார்கள்.

ஸ்வாஹா ஸ்கந்தனை அணுகி ''நான் உனது தாய் என்பதில் மகிழ்கிறேன். எனக்கு நீ உதவ வேண்டும் என்கிறாள்.

''உன் விருப்பத்தைச் சொல் அம்மா, நான் அதை பூர்த்தி பண்ணுகிறேன்'' என்கிறான் ஸ்கந்தன்.

''அக்னி மீது எனக்கு அளவுகடந்த ஆர்வம். அக்னி என்னை உதாசீனப் படுத்துகிறார் என்ற வருத்தம்''

''அம்மா, இனி அக்னியோடு பிராமணர்களின் முக்யமான சேவையான ஹோமம், யாகம், யக்னம் ஆகியவற்றில் நீயும் சேர்ந்தே இருப்பாய். அக்னியை உபாசிக்கும்போது உன்னையும் ''ஸ்வாஹா'' என்று சொல்லியே இனி சேர்த்து வணங்குவார்கள். அக்னியும் நீயும் இணை பிரியாமல் இருப்பீர்கள் '' என்று ஸ்கந்தன் அருள்புரிகிறான்.

ஸ்கந்தனுக்கு உண்டான பெயர்கள் ஆக்னேயன் (அக்னியின் மகன்), ஸ்கந்தன் (துகள்களாக உருவானவன்) தீப்தகிர்த்தி (அளவற்ற புகழுடையவன்), அனாமயன் (என்றும் ஒளிவீசும் உடல் கொண்டவன்) மயூர கேது (மயில் கொடியோன்) தர்மாத்மன் (உதார ஆத்மா கொண்டவன்), பூதேசன் (சர்வ ஜீவன்களுக்கும் தலைவன்) மஹிஷார்தனன் (மகிஷனை சம்ஹாரம் செய்தவன்) காமஜித் (ஆசைகளை வென்றவன்) சத்யவாகன் (உண்மையே பேசுபவன்) புவனேஸ்வரன் (பிரபஞ்ச தலைவன்) சிசு (குழந்தை) கார்த்திகேயன், குமரன், பாலன், விசாகன், சரவணன், இன்னும் எத்தனையோ பெயர்கள்.

இதையெல்லாம் மார்க்கண்டேய ரிஷி யுதிஷ்டிரன் மற்ற பாண்டவர்களிடம் சொல்லி வருகிறார் அல்லவா. அப்போது அங்கு வந்திருந்த கிருஷ்ணன் அவன் மனைவி சத்யபாமா ஆகியோரும் மார்க்கண்டேயரின் கதைகளில் லயித்து ஈடுபட்டு அப்போது சத்யபாமா த்ரௌபதியோடு சம்பாஷிக்கிறாள்.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...