Saturday, January 19, 2019

MOTHER




என்றும் எண்ணமாய் ... J.K. SIVAN ...

எண்பதை தாண்டியும் எத்தனையோ சமையலறைகளில் அம்மா சம்பளமில்லாத சமையல்காரி. அப்பாக்கள் அல்லும் பகலும் உழைக்கும் எடுபிடிகள். மாதாந்திர முறையில் அம்மா ஒரு வீட்டில் அப்பா ஒரு வீட்டில் கூறு போட்டுக்கொள்ளும் வீடுகளும் உண்டு. ஏச்சுக்கும் பேச்சுக்கும் மரத்துப்போன உணர்வுகள்

எதிரே இருக்கும் வைரத்தை கண்ணாடித்துண்டாக பார்க்கும் கண்கள் இருந்தால் என்ன செய்வது.
என்னவோ அம்மாவை பற்றி எழுத ஒரு எண்ணம்.
எண்ணம் எழுத்தாயிற்று. அது இது:

''உனக்கு யாரோ வைத்த பெயர் சீதா, கீதா, ராதா, வேதா. ஆனால் உலகம் முழுதும் உனக்கு ஒரே பெயர் ''அம்மா''
உன்னை நினைத்து தொடுத்த இச் சொல் மாலையில் பூக்கள் செடியில் மலரவில்லை. என் மனத்தில் வளர்ந்தவை. உன் நினைவில் பிறந்தவை. யோசிக்க யோசிக்க அம்மா புரிவாள். அவள் உறவை உள் வாங்கினால் தெரிவாள். எந்த ராஜாவோ எந்தப் பட்டினமோ போகட்டும். அமைதியாக ஒரு மூலையில் கண்ணை மூடி உட்கார்ந்து சிந்தித்தால் வரிசையாக அம்மா அம்மா அம்மா .

உனக்கு கோடி ரூபாய், அரண்மனை போல் வீடு, புது புது கார்கள், நிலம் நீச்சு உண்டா? வைரத்தால் நகைகள் அணிந்த மனைவி உண்டா? அழகழகாய் பிள்ளைகள் பெண்கள் இருக்கிராளா ? அதெல்லாம் சரி உனக்கு அம்மா இருக்கிறாளா, இல்லையென்றால் நீதான் உலகிலேயே பரம தரித்திரன் பஞ்சத்து ஆண்டி - புரிந்து கொள்.

பையிலுள்ள காசைவிட கை நழுவி கீழே விழுந்த ரூபாய்க்கு மதிப்பு அதிகம்- இருப்பதை விட்டு போனதை தேடுகிறாய். இல்லாத அம்மாவின் நினைவு நெஞ்சை நிறைத்தால் எத்தனை சந்தோஷம். அடேயப்பா!
நிழலே இப்படி என்றால் நிஜமே நேரில் நின்றால் ? மதிக்கவேண்டாமா? அம்மாக்கள் யாரானாலும் ஆயிரம் நமஸ்காரம் அம்மா இருப்பவர்கள் மில்லியனர்கள் .கோடீஸ்வரர்கள். அம்பானிகள்.

ஒரு இளவயது அம்மா நடக்கிறாள். முடிவற்ற நீண்ட வாழ்க்கைப் பாதை எதிரே.
''ரொம்ப தூரமோ? ''
''ஆம் அம்மா என்றான் ஒரு வழிப்போக்கன். வழியெல்லாம் கல், முள், பள்ளம் மேடு . போய் சேருவதற்குள் நீ ஒரு கிழவியானால் ஆச்சர்யமில்லை '' என்றான். கிருஷ்ணன் அவன் பெயர்.
''முடிவில் அங்கே என்ன உண்டு?.
''ஹா ஹா... இதைவிட அது சுகம்''- என்றான் அவன்.
இதைவிடவா அது சுகம் ?? நம்பமுடியவில்லையே . இருக்காதே. இத்தனை வருஷங்கள் அனுபவமே ஒரு தனி சுகம் ஆயிற்றே.''
அம்மா நடந்தாள்...
குழந்தைகளோடு விளையாடி,, போகும் வழியில் நிறைய பூ பறித்து சூட்டி, வழியில் ஜில்லென்று பனி நீர் ஆறு, அதில் நீரெடுத்து தெளித்து... மகிழ்ந்து சுள்ளென்று சூரிய கதிர்கள் கததகப்பு தர,

''ஆஹா இதை விட வேறு சுகம் உண்டோ ?'' என்றாள்

இரவு கவிந்தது. உஸ்ஸ்ஸென்று புயல் சீறியது. குழந்தைகள் அவளைக் கட்டிக்கொண்டு குளிரில் நடுங்கின
இருட்டு பயம் தந்தது. பழம்புடவையால் அவர்களை அணைத்து போர்த்தினாள்.

''அம்மா நீ இருக்கும்போது பயம் இல்லை. யாரும் எங்களை ஒண்ணும் பண்ணமுடியாது ''

இரவு நகன்று பொழுது விடிந்தது. எதிரே ஒரு மலை - குழந்தைகள் ஓடி ஏறியது. நடந்த வலியில் சற்று அமர்ந்தாள்.
''இன்னும் கொஞ்சம் தூரம் தான் குழந்தைகளே. அங்கே போய் சேர்வோம்'' என்றாள்
''அம்மா, நீ மட்டும் இல்லை என்றால் எங்களால் மலை ஏறமுடியாது''
பயணத்தில் மீண்டும் இரவு. படுத்தால் மேலே நக்ஷத்திரங்கள், நகரும் விண்மீன்கள். சந்திரன்.....
''ஆம் நேற்றைக்கு இன்று சற்று தேவலை.. குழந்தைகளுக்கு அச்சம் தீர்ந்தது.எதிர்ப்பை சந்தித்தால் தான் தைர்யம் வளரும். நேற்று நான் அவர்களுக்கு தைர்யம் ஊட்டினேன்.இன்று மேலும் நடக்க ஊக்க சக்தியும் தந்தேன்.

மறுநாளும் வந்தது. மேகங்கள் கூட்டமாக மேலே, சூரியனை கூடாரமாக மறைத்து எங்கும் இருள்
யுத்தம், வெறி, கோபம், இருள் ,பொறாமை காமம் எல்லாமே கருப்பு நிறம் தான். குழந்தைகள் தடுமாறின இருட்டில் அம்மாவை தேடின

மேலே பாருங்கள், வெளிச்சம் கொஞ்சம் தெரிகிறதா?
ஆமாம், அம்மா, மேகத்தின் இடுக்கில் வெளிச்சம். அது தான் வழி காட்டுகிறதா?

அன்றிரவும் அம்மா சொன்னாள் :
எல்லாவற்றையும் விட இன்று சிறந்த நாள். ஆமாம் கடவுளைக் காட்டினேன் இன்று. இருளில் ஒளி தான் இறைவன்.

நாட்கள் வாரங்களாகி மாதமாகி வருஷங்களாகி அம்மா இப்போது தொண்டு கிழவி. தும்பைமுடி,கூனல் முதுகு பல்லைக்காணோம். குழந்தைகள் எல்லோரும் பெரியவர்கள் இப்போது தைரியசாலிகள், பலசாலிகள். பயணம் தொடர்ந்தது.

அவளைத் தூக்கிக்கொண்டு போனார்கள். இறகாக இருந்தாள் பளு இல்லை. மலை வந்தது.
அதை தாண்டி பளிச்சென்று ஒரு பாதை. திறந்த தங்கக் கதவுகள்.

''அப்பாடா நான் போகுமிடம் வந்து சேர்ந்தேன்... ஆமாம் அவன் சொன்னபடி முதலை விட முடிவு இன்பமே''''
என் வாரிசுகள் அடுத்தடுத்து இனி தானே நடக்கும்.

''இல்லை அம்மா நீ என்றும் கூடவே இருக்கவேண்டும்.''

அம்மா உள்ளே சென்றதும் கதவுகள் மூடின.

''அம்மா நீ தெரியவில்லை. ஆனால் கூடவே இருக்கிறாய் நீ நினைவு. காற்றின், இலையின் அசைவு.
உடம்பு சரியில்லை என்றால் நெற்றி, புருவத்தில் உடல் உஷ்ணத்தை உணரும் விரல்கள் .சிரிப்பில் எதிரொலி. கண்ணீரில் ஒரு துளி. அம்மா நம் குடியிருந்த முதல் வாடகை தராத வீடு. நாம் போகுமிடத்தின் வழிகாட்டி ,கைகாட்டி மரம்.

அம்மாவை எதுவும் பிரிக்க முடியாது. காலம்,நேரம், மரணம்...ஆமாம் .. எதுவுமே..



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...