Sunday, January 13, 2019

BOGI AND PONGAL

                               போகியும்  பொங்கலும் 
                                             ஜே.கே. சிவன் 


வறட்சியை விரட்டும் மும்மாரி பொழிய இந்திரனை கொண்டாடும் நாள் போகி பண்டிகை.  அது  பொங்கலுக்கு முதல் நாள்,  அதாவது இன்று.  


இந்திர விழா என்று இதை வடக்கே சில பகுதிகளில் கொண்டாடுகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலுக்கும் மரியாதையோடு வரவேற்பு. பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று ஒவ்வொருவரும் வாழ்த்தும் நாள். இந்த பொங்கல் சங்க காலத்திலேயே கொண்டாடப் பட்டது. 

குப்பை கூளங்களை எரித்து எங்கும் புகை மண்டலமாக்குவது கொஞ்சம் குறைந்திருக்கிறது. போகியன்று எங்கு பார்த்தாலும் இவ்வாறு குப்பைகளை எரித்து சுற்றி வர நாங்கள் சிறு பையன்களாக இருந்த காலத்தில் தம்பட்டம் அடித்து மகிழ்ந்திருக்கிறோம். புகையும் பனியும் கவிந்து மின்சார விளக்கும் இல்லாத காலத்தில் எதிரே வருபவன் தெரியாத காலம் உண்டு.  

நாளை நாடெங்கும் மகர சங்க்ராந்தி கொண்டாடுகிறோம்.இது 'சக்ரந்தி' என்று சொல்லப்படுவதிலும் அர்த்தம் உள்ளது. சக்ரந்தி என்றால் சுழல்வது. சக்கரம் சம்பந்தப்பட்டது சுழலத்தானே செய்யும். உலகம் உருண்டை, எல்லா க்ரஹங்களும் அவ்வாறே. எனவே சுழன்றுகொண்டே தானே இயங்குகிறது. இதைச் சார்ந்த நம் வாழ்க்கையை அதனால் தான் வாழ்க்கை சக்கரம் என்கிறோம். நம்மை வாழ்க்கை  சுற்றி சுற்றி அடிக்கிறது இதனால் தான்.

சங்கராந்தியை உத்தராயணம் என்று சொல்வது தவறு என்று சில தர்க்கங்கள் உண்டு. கி.பி. 1000 மாவது வருஷம் சங்கராந்தி டிசம்பர் மாதம் 31 அன்று வந்தது. இன்னும் 9000 வருஷங்கள் கழித்து பொங்கல் ஜூன் மாதம் தான் வரும் என்கிறார்கள். என்ன கணக்கோ? சுழற்சியில் நாள் தேதி நேரம் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி தள்ளி தான் வரும். முன்பெல்லாம் ஜனவரி 1 கேலண்டர் ஜனவரி 1 மார்கழி 14 என்று காட்டியதை பலபேர் கவனம் வைத்திருப்பீர்கள். இப்போது மெதுவாக நகர்ந்து 1 - 17 இந்த வருஷம். எனவே ஜூன் மாதத்தில் பொங்கல் வர வாய்ப்பிருந்தாலும், நாம் அதை பார்க்கப் போவதில்லையே .

கொண்டாடும் விதம் மாறினாலும் கோட்பாடு ஒன்றே தான்.

இந்த நாள் உத்தராயணம் என்று புண்யகாலமாக காலம் காலமாக புனிதம் வாய்ந்ததாக கருதப் படுகிறது . ஒரு காலத்தில் உத்தராயணம் அன்று தான் துவங்கியது. சூரியன் வட கோள யாத்ரை போகிறான். சூரியனின் மகன் சனீஸ்வரன். மகர ராசிக்கு அதிபதி. தந்தை மகனது இல்லத்துக்கு செல்கிறான் என்று வழிபடுவதும் உண்டும். சூரியன் இன்றி நமக்கு ஒளியோ, சக்தியோ, உணவோ கிடையாதே.

பொங்கல் என்று தமிழ் தேசத்தில் இதை சிறப்பாக வரவேற்கிறோம். மகிழ்ச்சி பொங்குகிறதே. ஏன்? சுபிட்சத்தால் உண்டாகும் மகிழ்ச்சி. சுபிட்சம் எப்படி? இறைவன் இயற்கை உற்பாதங்களை நீக்கி நிறைய மழை பொழிந்து ஏரி, குளம், குட்டை, ஆறு எல்லாம் (இன்னும் இருந்தால் )  நிரம்பி பூமியை வளமாக்கி, விளைச்சல் அமோகமாகி விலை வாசி குறைந்து, மக்கள் வேண்டிய பொருள்களை வரிசையில் நின்று கிட்டே வரும்போது தீர்ந்து விட்டது அடுத்த வாரம் வந்து பார் என்ற வார்த்தை கேளாமல் பெறுவதற்கு,  இறைவனுக்கு நன்றி கூறும் நாள்.

சூரியன் அருமையை சிறிது காலம் முன் வந்த வெள்ள அனுபவம் கண்ட சென்னை வாசிகள் நன்றாக உணர்வார்கள். சங்கராந்தி சூரிய நாராயணனை வணங்கும் நாள். இந்த நாளில் தான் மகா விஷ்ணு அனைத்து அசுரர்களையும் அழித்து அவர்கள் தலைகளை மந்திர மலையின் கீழே வைத்தார் என்று புராணத்தில் சொல்லப்பட்டாலும் தீய சக்திகளை ஒழிக்க, தீய எண்ணங்கள் நீங்கி,  நல்லெண்ணங்கள் நெஞ்சில் குடிபுக ஒரு பண்டிகை நமக்கு வேண்டாமா? அதை சங்கராந்தி, பொங்கல்  என்று நன்றியோடு கொண்டாடி  நல்லவை உள்ளத்தில் பொங்க  இந்த பொங்கல் பண்டிகையை சங்கராந்தியை  வரவேற்போமே. 


சூர்ய கிரணம் இருக்கிறதே அது அக்னிப் பிழம்பு. ஒவ்வொரு கிரணமும் அண்டமுடியாத, நெருங்க இயலாத அக்னி. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் உடனே அதில் தீப்பற்றிக் கொள்கிறது. நாமே சிறுவதில் லென்ஸ் வைத்து காகிதத்தை பற்ற வைத்து விளையாடி  மகிழ்ந்திருக்கிறோம். என்னைப் போல வயதானவர்களுக்கு ஞாபகம் இருக்குமே. 

லென்ஸ், குவி ஆடி  குழி ஆடி என்று தமிழில் சயன்ஸ் வாத்யார்  பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்தி ருக்கிறார். அதை தான்  பூதக் கண்ணாடி என்கிறோம். பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயங்கள் பூதக் கண்ணாடியாக உள்ளது. 

ஐம்பூதங்களையும் உள்ளடக்கம் செய்து வைத்திருப்பவனின் ஹ்ருதய ஆலயம் பூதக் கண்ணாடி என்பதில் அர்த்தம் இருக்கிறதல்லவா. இன்று சூரியநாராயணனை வணங்கி ஆசி பெற்று அனைவரும் இன்புற அவன் அருள் வேண்டுகிறேன். அது அவசியமாகிறது. 

சிறியவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள், பெரியோர்களுக்கு சங்கராந்தி நமஸ்காரங்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...