Sunday, January 13, 2019

AINDHAM VEDHAM



 ஐந்தாம் வேதம்      J.K. SIVAN
மகா பாரதம்

             
      யுதிஷ்டிரனின் பெருந்தன்மை

ஜனமேஜயா,  கிருஷ்ணன் வெகுநாட்களுக்கு பிறகு  சத்யபாமாவோடு பாண்டவர்களை வனவாசத்தின் போது  சந்திக்கிறார். அவர் மனதில் எண்ணங்கள் அலைமோதுகிறது.  இனி நடக்கப்போவது அவர் மட்டுமே அறிவார் அல்லவா. நேரம் நெருங்குகிறது.  அவர் சிந்தனை இவ்வாறு இருக்க சத்யபாமா  பாஞ்சாலியை கேட்கிறாள்:

'பாஞ்சாலி,   பாண்டவர்களோடு நீ  சந்தோஷமாக  வாழ்வதும் , அவர்கள் ஐவருமே உன்னை அன்போடும், மரியாதையோடும் போற்றி  பெருமைப்படுத்துவது எனக்கு  மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களிடம் எவ்வாறு இவ்வளவு  மதிப்பு மையாதையும் பெறுகிறாய்'' என்று  கேட்டாள்   சத்யபாமா.

"சத்யபாமா,  என் கணவர்களை  நான்  தெய்வங்களாக வழிபட்டு வருகிறேன். அவர்கள் மனம் கோணாமல்  பணிவிடை   செய்வதே என் கடமையாக கொண்டவள் நான்'' என்ற திரௌபதியை சத்யபாமா வாழ்த்தி விடைபெற்று  கிருஷ்ணனோடு  துவாரகை திரும்புகிறாள்.

பாண்டவர்கள்  அங்கிருந்து வனத்தின் மற்றொரு பகுதி அடைந்து அங்கே ஒரு  பிராமணனை சந்திக்கிறார்கள். அவன் அவர்களை வணங்கி விட்டு  ஹஸ்தினாபுரம் செல்கிறான். திருதராஷ்டிரனிடம் அவர்கள்  வனத்தில் எவ்வாறு மெலிந்து, அடையாளம் தெரியாமல்   வாடி வதங்கி இருக்கிறார்கள்  என்று  தெரிவித்த போது  திருதராஷ்டிரன் மிகவும் விசனம்  அடைகிறான். ''எல்லா
வற்றுக்கும்  நானே காரணம்'' என்று  மனம்  உடைகிறான்.

மகா சக்திமானான பீமன்  என் மக்களை  உயிரோடு  விடமாட்டான். அவனது கோபம்  இப்போது  தக்க  காலத்தை  எதிர்பார்த்து காத்திருக்கிறது. என் செய்வேன்? அர்ஜுனனும்  பீமனும்  ஒரு சேர  என் மக்களையும் மற்றோரையும்  அழிப்பது  நிச்சயம் என என் உள்மனதில் அடிக்கடி தோன்றுகிறதே. என் பிள்ளைகளின் மேல் உண்டான பாசம் என்னை  அதர்ம வழியில் போகச் செய்ததே,  என் செய்வேன்''

அப்போது சகுனி, துரியோதனனிடம், ''இப்போது  இந்த உலகே உன் ஆணைக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.  அந்த  பாண்டவர்கள்  சகலமும் இழந்த பரதேசிகளாக த்வைத வனம் என்ற பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறார்களாம். போய்  அவர்கள்  நிலையை ஒரு தரம் பார்த்து வருவோமா? '' என்றான். பிறரைத் துன்புறுத்துவதிலும், அவர்கள் துன்பத்தை கண்டு ரசிப்பதிலும் அலாதி ஆனந்தம் சகுனிக்கு. அதுவும் பாண்டவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

''அர்ஜுனனையும் பீமனையும்  மரஉரி ஆடைகளில் பார்த்து  சிரிக்க  நன்றாகத்தான் இருக்கும்  ஆனால்  என் தந்தைக்கு நமது எண்ணம்  விருப்பமளிக்காது. வேண்டாம் நாம்  அவர்களை  போய்  பார்க்க வேண்டாம்.பீஷ்மரும்  இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்.  வேறு ஏதாவது  ஒரு  யுக்தி சொல்லுங்கள்?  என்றான் துரியோதனன்.   கர்ணன் தீவிரமாக யோசிப்பதை கண்டா துரியோதனன் அவன் பக்கம் திரும்பினான்.  கர்ணன் பேசுகிறான்:

''துரியோதனா , எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,  நமது  பசுக்கள்  த்வைத வனத்தில் இருப்பதை  மேற்பார்வை செய்வதற்காக,   செல்வதாக ஒரு திட்டம் போட்டு  அங்கே செல்வோம்''  என்றான். எல்லோரும்  திருதராஷ்டிரனிடம் சென்று அவனது அனுமதி கேட்கும்போது ''துரியோதனா , இது உசிதமல்ல, பாண்டவர்கள் இப்போது சர்வ சக்தி படைத்தவர்கள்,  அர்ஜுனன் மூவுலகும் சென்று சக்தி ஆயுதங்கள் பெற்று வந்திருக்கிறான், பீமன் திரௌபதி ஆகியோர்  உங்கள் மேல் கோபத்தில்  இருக்கிறார்கள், நீங்களும் சும்மா  இருக்கமாட்டீர்கள், வீணே  ஒரு யுத்தம் வரவழைத்து  நீங்கள் அனைவரும் எதற்காக  மாள  வேண்டும். வேண்டாம். வேறு யாரையாவது அனுப்பி  ஆநிரைகளை கவனித்து வரட்டும். நீங்கள் யாரும் போகவேண்டாம்.''  என்றான் திருதராஷ்டிரன்.

''அரசே, பாண்டவர்கள்  பன்னிரண்டு வருஷ  வனவாசம் இருக்க கட்டுப்பட்டவர்கள்.  அவர்களை நாம்  சந்திக்கப்  போவதில்லை. நமது  ஆநிரைகளை கவனித்து வர மட்டுமே  போகிறோம். எதற்கு அவர்கள் இதில் தலை இட அவசியம். ஆகவே  இதில் எந்த  உபத்ரவமும் வர  வாய்ப்பில்லையே'' என்றான் சகுனி. ஒருவாறு  திருதராஷ்டிரன் அனுமதி அளித்தான்.

துரியோதனன், கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோர், தேர்கள், யானை, குதிரைகள், படையுடன், த்வைத  வன பகுதிக்கு செல்ல ஆயத்தமானார்கள். அந்த வனப்பகுதிக்கு  நான்கு மைல்  தூரத்தில்  தங்கினார்கள்.

அவர்கள் தங்க உத்தேசித்த  வனப்பகுதி கந்தர்வர்கள் ஆதிக்கத்தில் இருப்பது. எனவே கந்தர்வர்கள்  துரியோதனனின்  வீரர்களை  அங்கிருந்து விரட்டியதால்  அவர்களோடு யுத்தம் நடக்கிறது. கர்ணனைத் தவிர மற்ற  வீரர்கள்  கந்தர்வர்களால் தாக்கப்பட்டு ஓடுகிறார்கள். கந்தர்வ சேனையை  கர்ணன்  அழிக்க முற்படுகிறான். கந்தர்வர்கள் தலைவன் சித்ரசேனன் கோபம்கொண்டு  பெரும் படையை அனுப்பி அனைவரையும் சிறை பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறான்.  துரியோதனன் படையில் சிலர்  அந்த வனத்தில் பாண்டவர்கள் இருப்பதை அறிந்து யுதிஷ்டிரனிடம்  தஞ்சம் அடைந்து  துரியோதனன், துச்சாசனன், சகுனி, கர்ணன் ஆகியோர் கந்தர்வகளால் பிடிபட்டதைக்  கூறி உதவி கேட்கிறார்கள்.

துரியோதனனும் அவனை  சேர்ந்த அனைவருமே  சித்ரசேனன் என்ற கந்தர்வ அரசனால்  பிடிபட்டு  தவிக்கிறார்கள்  என்று விஷயம்  பாண்டவர்களை அடைந்ததும்  பீமன் சிரித்தான்.

 ''அண்ணா, பார்த்தீர்களா ''நாம்  தவறு செய்தாலும் நம்மை பொறுத்து ஆட்கொண்டு நமக்கு நல்லது செய்வதற்கும்  சிலர் இருக்கிறார்கள்  என்பார்களே  அது நம் விஷயத்தில் எவ்வளவு பொருத்தம்.  நமக்கு  கெடுதல் விளைவித்து, சுகமாக  நம்  சொத்தை  ஆண்டு  அனுபவித்து, அது போதாதென்று நாம்  படும் இன்னல்களைக்கண்டு களிக்க இந்த த்வைத  வனம் வந்து இங்கே  ஆபத்தில் மாட்டிக்கொண்டு  தவிக்கும் இந்த  ஜன்மங்களை என்னவென்று சொல்வது.''

"பீமா,  அவர்களை  ஏளனம் செய்யாதே. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே. நம்மிடம்  உதவி என்று வந்தபோது நாம் வேறெதையும் நினைக்கக் கூடாது. கந்தர்வ ராஜன் சித்ரசேனன்  நாம்  இங்கே  வசிக்கிறோம் என்று நன்றாக அறிந்தவன்.   துரியோதனன் நம் உறவினன். நம் குலத்தவன் என்பதும் தெரிந்தவன்.  அவனுக்கு  தீங்கு செய்தால் நமக்கு செய்தது போல்  என்று  அந்த சித்திரசேனன்  உணரவில்லை.  நீ அர்ஜுனன் மற்றும் சகோதரர்கள் உடனே செல்லுங்கள். இதோ அந்த துரியோதனனனின்  எஞ்சிய படை வீரர்களும் உள்ளனர். அவர்களையும் அழைத்து செல்லுங்கள். துரியோதனனையும் மற்றோரையும் விடுவியுங்கள்.  சித்ர சேனனைக் கண்டு  பேசி அவர்களை  விடுவியுங்கள். அவன் எதிர்த்தால் அவனை அழித்து  அவர்களை  விடுவியுங்கள்.

கந்தர்வர்களுக்கும்  பாண்டவர்களுக்கும் யுத்தம் நிகழ்கிறது. அர்ஜுனன் வீரத்திற்கு முன்பு அவர்கள் சேனை அழிகிறது. சித்திரசேனன்  ஓடிவருகிறான்.

''அர்ஜுனா  உன் வீரம் கண்டு மெச்சினேன்.  இந்திரனே  என்னைக் கூப்பிட்டு  உனக்கு உதவ  ஆணையிட்டிருக்கிறான்.  இந்த  துரியோதனனும் அவனைச் சார்ந்தவர்களும்  உங்களை இந்த வனத்தில் கண்டு உங்கள்  நிலையைக் கண்டு களிக்க தீய  எண்ணம் கொண்டு வந்தவர்கள். அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கவே  நான்  இவர்களை கைதிகளாக  பிடித்து சங்கிலியில் கட்டி  வைத்திருக்கிறேன். அவர்களை இங்கே இழுத்து வர செய்கிறேன்''

உடனே  சித்திரசேனன் தனது வீரர்களுக்கு கட்டளையிட்டு  சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைதிகளாக பிடிபட்ட  துரியோதனன் , சகுனி, துச்சாதனன், கர்ணன் அவர்களது சேனைத்தலைவர்களை எல்லாம் இழுத்து வர ஆணையிடுகிறான்.

இதோ இன்னும் சில மணித்துளிகளில்  அவர்கள் யுதிஷ்டிரன் முன்னே இழுத்து வரப்படுவார்கள்......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...