Tuesday, January 15, 2019

NOSTALGIA



பாதுகா புராணம் J.K. SIVAN

''இந்தா உனக்கு ஒரு புது பாதுகை'' . கல்லிலும் முள்ளிலும் இருந்து காக்க என் காலுக்கு மெத்தை. பையன் வெளியூரிலிருந்து வாங்கி வந்து வெளியே போகும்போது போட்டுக்கொண்டு போ என்றான்.
அதை நான் வேதவாக்காக எடுத்துக்கொண்டு பத்தே நாளில் அதை இழந்தேன். என்னோடு பேங்க் வந்தது, கடைகளுக்கு வந்தது. நண்பர்கள் வீட்டுக்கு வந்தது. ஆஸ்பத்திரி வந்தது. எல்லா இடமும் என்னோடு நட்பாகி வந்த அந்த புது செருப்பு ஏன் ஒரு கோவில் வாசலில் என்னை விட்டு நிர்தாட்சண்யமாக பிரிந்தது. புதி யா நட்பு ஒன்று அதை தேடி வந்திருக்கிறது. என் செருப்பு தானாக மற்றொருவரை சரணடைந்திருக்காது.

அன்று காலை ஏதோ ஒரு பக்ஷி உள்ளே சொல்லியது. ரொம்ப கும்பலாக இருக்கும். பழைய செருப்பு போட்டுக்கொண்டு போ. மனச்சாட்சியை மதிக்காத நான் புது பாதுகை இழந்தவனானேன்.

பாதுகை நமது பாதத்தை காக்க மனிதன் கண்டுபிடித்தது. எவன் முதலில் ஒரு பாலத்தை கண்டுபிடித்தான் என்று ஒரு கேள்விக்கு சரியான பதில் எது தெரியுமா? எவன் ஒரு ஆற்றைக் கடக்கும்போது தனது காலணி நீரில் நனையக்கூடாது என்று மும்முரமாக யோசித்தானோ அவனே முதன் முதலில் ஒரு சிறிய பாலம் தோன்ற காரணமானவன்.

பாதுகையால் பாதத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் பாதுகைக்கும் ஒரு பாதுகாப்பு தேவை என்று நமது நாட்டில் அநேகருக்கு அனுபவத்தில் புரியும்.

சிறு வயதில் ஒரு நாடகம் ரேடியோவில் கேட்போம். அதில் ராஜ கலவை என்று ஒருவர் . கல்யாண வீடுகளுக்கு போனால் கையில் ஒரு சிறு பை. அதில் அவரது பாதுகை.

''பையிலே என்ன சார்?
''புது செருப்பு. கல்யாண வீடாச்சே. ஜாக்ரதையாக இருக்கணுமேன்னுட்டு' கையோடு கொண்டு வந்து விட்டேன்''. கால் செருப்பு கைப் பையில் இடம் பிடித்தது.

கோவில் வாசலில் சாமியைக் கும்பிட்டு விட்டு வெளியே வந்து நல்லதாக வேறொருவர் செருப்பை காலில் மாட்டிக் கொண்டு சுண்டல் பொங்கல் பிரசாதம் சாப்பிட்டுக்கொண்டு நடப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இப்போது சென்ட்ரல் இருக்கும் இடத்தில் ''மோர் மார்கெட்'' என்று ஒரு பெரிய ஸ்தாபனம் இருந்தது. அதற்கு போகும் வழியிலிலேயே அநேகர் தெரு ஒர வியாபாரிகள். எல்லாமே அரை இருட்டில் வியாபாரம் செய்பவர்கள். புதுசு புதுசாக கண்ணைப் பறிக்கும் செருப்புகளை கையில் ஏந்தி இருபத்திரண்டு ரூபாய் சொல்லி 9 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். என் பேரம் பேசும் சக்தியை நானே மெச்சிக் கொண்டவன். கனமான அந்த செருப்பில் பாதி அட்டை தான் உள்ளே இருக்கும். ஒரு மழையில் கூன் விழுந்து மஞ்சள் அட்டை தலையை வெளியே நீட்டும். மேலும் அதன் தலை மேல் ஒரு ஆணி அடித்து அதன் கடைசி மூச்சு வரை உபயோகித்திருக்கிறேன். சில செருப்புகள் ஒரு வார அற்பாயுசு வாழ்ந்து இரண்டாக வாய் பிளந்து முதலை வாயாக காட்சியளிக்கும்.

கொஞ்ச நாளில் டயர் செருப்பு வந்தது. அது நீண்ட ஆயுசு கொண்டது. ஆனால் வெயிலில் வைத்தால் இறுகிப்போய்விடும் ஸ்வபாவம் கொண்டது. சில காலம் அதை உபயோகித்திருக்கிறேன். இதை வேறு யாரும் சீண்டுவதில்லை. கல்யாணத்திற்கு தைரியமாக போட்டுக்கொண்டு போகலாம். நமக்காக அது என்றும் நன்றியோடு காத்திருக்கும்.

பாத் ரூம் சப்பல்ஸ் என்று ரப்பர் செருப்பு. பர்மா செருப்பு என்று அதற்கு ஏனோ பெயர்? ஒரு வார் மூணு பட்டன்களோடு வந்தது. இரண்டு பட்டன்கள் செருப்பின் வலது இடது ஓரத்தில் ஒரு சிறு துளையில் நுழைந்து அழுந்தி கெட்டியாக பிடிமானம் கொண்டு இருக்கும் சோப்பு தண்ணீர் விட்டு அதை எளிதில் நுழைப்பார்கள். . இரு வார்களையும் இணைத்து செருப்பின் நெற்றியில் ஒரு பட்டன் அதன் முகத்தில் நுனியில் ஒரு துளையில் நுழைந்து பொருந்தி இருக்கும். கால் கட்டை விரழும் அதற்கு அடுத்த நீண்ட விரல் இடுக்கிலும் ந்த வார் பிடிப்பு கொடுக்க நடக்க நடக்க பின்னால் படக் படக் என்று சத்தத்தோடு செருப்பு சுகமாக நடக்க உதவும். மழை அதற்கு மட்டும் அல்ல, நமக்கும் விரோதி. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் தெருவின் அத்தனை சேரையும் புள்ளி புள்ளியாக வேஷ்டி யிலிருந்து கழுத்துவரை சட்டையில் வாரித் தெளிக்கும். வழ வழ சிமெண்ட் தரையில், சேறு கலந்து மண் தரையில் நடக்கும்போது துரோகம் செய்ய தயங்காது. வாழ்க்கையில் அல்ல நடக்கும்போது இத்தகைய துரோகம் செய்யும் செருப்பால் வழுக்கி விழுந்து முழங்கால் முட்டி ரிப்பேர் செய்து கொண்டவர்களை நான் அறிவேன்.

இந்த 10 ரூபாய் ரப்பர் செருப்பினால் வழுக்கி விழுந்து பல நாட்கள் மருத்துவ மனையில் இடுப்பு, கால் முறிவுகளோடு இருந்தவர்கள் நிறைய பேர். ஆனால் ஒன்று. இதன் மேல் நட்புகொண்டு இதை எடுத்துச் செல்பவர்கள் ரொம்ப கம்மி என்று சொல்லலாம்.

அவசரமாக பஸ் ஏற, ரயில் பிடிக்க, பள்ளிக்கூடம் ஆபிஸ் போகும்போது மட்டும் அதற்கு எப்படி தான் தெரியுமோ முதல் ஒத்தை வார் செருப்பிலிருந்து தனியாக வெளியே பிரிந்து விடும். அல்லது அதன் பட்டன் துண்டாகிவிடும். அவ்வளவு தான் அதை தூக்கி எரிந்து விட்டு வெறும் காலுடன் ஒடுபவர்களை விட ஒரு சேப்டி பின்னால் அறுந்த வாரை துளையில் செருகி செருப்பின் அடியில் ஒரு கடையாணி போட்டு விட்டு நடந்து போவோர்கள் சிக்கன வாதிகள். நான் இந்த வைத்தியம் செய்திருக்கிறேன்.

ஆபிஸ்களுக்கு இந்த ரப்பர் செருப்புடன் நிறைய பேர் போவோம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ரங்கராஜன் என்று ஒருவர் ஒருகால் செருப்பில் ஒன்று நீலம் இன்னொன்று பச்சையோடு கூடிய செருப்போடு பல காலம் வந்திருக்கிறார். ஆபிசில் அவர் நாற்காலியில் இருப்பதில்லை. எங்காவது சுற்றிக்கொண்டிருப்பார் . அவர் ஆபிஸ் வந்திருக்கிறாரா இல்லையா என்பது இந்த ரெட்டை கலர் வார் ரப்பர் செருப்பு நாற்காலியின் அடியே இருந்து காட்டிக் கொடுத்துவிடும். ரங்கராஜன் ஆபிசில் அக்கௌன்ட்ஸ் அசிஸ்டன்ட் , அதோடு கல்லிடைக் குறிச்சி அப்பளம் வியாபாரி. அவரிடம் கடனுக்கு வற்றல் வடாம், அப்பளம் வாங்குபவர்கள் ஆபிசில் அநேகர். சப்ளை, கலக்ஷன் என்று சீட்டிலேயே இருக்கமாட்டார்.

வேலையில் கில்லாடி. ''சரச சாம தான வேத தண்ட சதுரா'' என்று பாடிக்கொண்டே வேலைகளை படு சீக்கிரம் முடித்துவிடுவார்.

அக்கௌன்டன்ட் திருவேங்கடத்தய்யங்கார் அவ்வளவுக் கவ்வளவு சிரிக்கவே மாட்டார். தனியாக எல்லோரையும் பார்த்தவாறு ஒரு பெரிய மேஜையில் நிறைய காகித கூட்டங்களின் இடையே பெருமாள் முகம் தெரியும். மேல் துண்டால் அடிக்கடி காது வைரக் கடுக்கனை துடைத்து விட்டுக்கொண்டிருப்பார் கருப்பு நிற மூக்கு தண்டின் மேல் பாகத்தை நெற்றியிலிருந்து வழியும் வெள்ளை நடுவில் சிகப்பு தென்கலை மறைக்கும். மூக்கின் மற்ற பாகத்தை ஆர்வமாக தடவிக்கொடுப்பார். பெரிய தென்கலை நாம பாதம் பளிச்சென்று எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். அடர்ந்த புருவங்களுக்கிடையே கோபமான நட்பற்ற கடுகடு பார்வை. எவரும் அவர் அருகே போக மாட்டார்கள். கையில் ஒரு வழ வழ வென்ற பெரிய உருண்டை ரூலர். அதை கவர்ன்மென்ட் ஆபிஸ் அப்போது எல்லாம் உபயோகித்த சாணித்தாள் பேப்பர் மேல் உருட்டி சுலபமாக ஒரு பக்கம் முழுதும் ஒரே அளவில் கோடுகள் போட்டு விடுவார். அவருக்கு கணக்குகள் எழுத கட்டங்கள் அவசியம். எனவே இந்த ரூலர் எப்போதும் கைவசம் இருக்கும். இந்த பெரிய இரண்டடி நீள கனமான மர ரூலர் அவரை ஒரு கோபக்கார பீமசேனனாக காட்டும். ஆஜானு பாகு. வெள்ளை முழுக்கை சட்டை, பஞ்ச கச்சம். கட்டு குடுமி அரை மண்டையிலிருந்து ஆரம்பமாகும். முன்பக்கம் எள் அக்ஷதை முள் .

அவர் எதிரே சென்று தான் அன்றாடம் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்து போடவேண்டும். நடுங்குவேன். அப்போதெல்லாம் குட்மார்னிங் சொல்லும் பழக்கம் இல்லை. ஐந்து நிமிஷம் லேட்டாக வந்தாலும் போச்சு. அந்த பார்வை கதி கலங்க வைக்கும். இன்னொரு தரம் லேட்டா வந்தா அரைநாள் லீவு கட் ஆயிடும் ஞாபகம் வச்சுக்கோ.'' என்று உறுமுவார். மதியம் ஒருமணிக்கு அவரும் அவர் நண்பர் வானமாமலை என்பவரும் கோபாலகிருஷ்ணன் என்பவரும் அவர் பெரிய மேஜை அருகே வந்து அமர்ந்து அவரவர் உணவுப்பொட்டலம் பிரிப்பார்கள். திருவேங்கடத்தான் கித்தான் பையிலிருந்து வெள்ளி டிபன் பாக்ஸை பிரிப்பார் உள்ளே, தயிர் சாதம். சின்ன டப்பாவில் ஊறுகாய். ஒரு பச்சை கலர் பாட்டிலில் ஆறின வெந்நீர். பரிசேஷணம் பண்ணி விட்டு சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.
என்னுடைய எத்தனையோ நிறைவேறாத ஆசைகளில் ஒன்று '' திருவேங்கடத்தான் ஒரே ஒரு தடவை வாய் திறந்து சிரித்து பார்ப்பேனா? அடுத்த ஜென்மத்திலாவது!! '

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...