Monday, January 14, 2019

RAMANUJAR


பாச (மலர்) அண்ணன் பாக்கி தீர்த்தான் -
J.K. SIVAN

ஒரு வேடிக்கையான சம்பவம். இது நிகழ்ந்த இடம் திருமாலிருஞ்சோலை.
ஆண்டாளின் தமிழ், அவளது பாசுரங்கள் எப்போதுமே ஸ்ரீ ராமானுஜருக்கு பிடித்தமானவை. திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார். அவளைத் தனது இளைய சகோதரி என்பார். ஆமாம். ராமானுஜரை ''கோதாக்ரஜா'', கோதைக்கு மூத்தவர், என்று சொல்வது வழக்கம். ஆண்டாளின் திருமொழியில் ஒரு அழகான பாசுரம் படிக்கவேண்டியது அவசியம். ஆண்டாள் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் சுந்தரராஜ பெருமாள் மீது ஒரு பாசுரம் பாடுகிறாள்.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்;
ஏறு திருவுடையான் அவை கொள்ளுங்கொலோ?
''சுந்தரராஜ பெருமாளே, உமக்கு நான் ஒரு விருந்து வைக்கப்போகிறேன். என்ன விருது ஐட்டம் என்று கேட்காதீர். உமக்கு பிடித்த பண்டங்கள் தாம். வெண்ணை உண்ட கண்ணன் நீர் தானே. உமக்கு பிடித்த பசு வெண்ணெய் நூறு தடாக்களில் (பெரிய வாயகன்ற இரு புறமும் பிடி வைத்த பாத்திரம் இன்னும் சில கோவில்களில் காணப்படுகிறது.) விளிம்பு வரை நிரம்ப கொண்டு வந்து தருகிறேன். வெறும் வெண்ணேய் எப்படி உமக்கு போதும்? கூடவே இன்னொரு நூறு தடாக்கள் நிறைய நெய் கம கம வென மணக்கும் அக்கார அடிசில் ரெடியாக கொண்டு வந்து தர ஏற்பாடும் செய்து விட்டேன். உடனே வந்து அவற்றை ஏற்றுக்கொண்டு உண்டு களிக்க வாருங்களேன் ?'' என்று கூப்பிடுகிறாள்.

மேற் சொன்ன பாடலை பாடிக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீ ராமானுஜர். அவர் போய்க்கொண்டிருப்பது ஆண்டாளின் ஸ்தலமான வில்லிப்புத்தூரை நோக்கி. போகும் வழியில் திருமாலிருஞ்சோலை வந்தது. இந்த பாட்டும் அவரை சிந்திக்க வைத்தது.

அவருக்கு திடீரென்று ஒரு கவலை வந்து விட்டது. ஸ்தம்பித்து நின்று விட்டார். ஆண்டாள் இந்த பாடலை பாடி, அதில் தன் விருப்பத்தை தெரிவித்து எத்தனை காலம் ஆயிற்று. பல நூற்றாண்டுகள் அல்லவோ ஆகிவிட்டது. பாவம் அந்த சிறு பெண் அவ்வளவு பெரிய வாக்குக்கொடுத்து விட்டாளே . அவளால் நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்காரவடிசல் தயார் செய்ய முடிந்ததோ ? யார் உதவி இருப்பார்கள்?
ஐயோ! ஒரு வேளை அவள் ஆசைப்பட்டது நிறைவேறாமலே அவள் சென்றிருந்தால்........ என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லையே. சுந்தரராஜ பெருமாளுக்கு ஆசைகாட்டி மோசமா......
சேச்சே. அது கண்டிப்பாக அன்றில்லாவிட்டால் என்றாவது ஒருநாள் நிறைவேறியே தீரவேண்டும். பாவம் ஆண்டாளால் முடியாவிட்டால் என்ன. நான் எதற்கு இருக்கிறேன். ஆண்டாள் என் தங்கை ஆயிற்றே?. மனிதர்களுக்கு கொடுத்த வாக்கையே மீறக்கூடாது. அப்படியிருக்க பகவானுக்கு ஒரு வாக்கு கொடுத்துவிட்டு மீறினால் பெரிய அபசாரம், பாப கார்யம் ஆயிற்றே. இப்படி ஒரு பெரிய கைங்கர்யம் செய்ய போவதாக என் தங்கை ஆண்டாள் என்கிற கோதை வாக்களித்து விட்டாளே . அதை நிறைவேற்றினாளா? ஒருவேளை மறந்து போய்விட்டிருப்பாளோ? 'வருவாள் தருவாள் '' என என் அப்பன் அதற்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறானோ? தங்கை ஒருவேளை செய்யாதிருந்தால் அதை நிறைவேற்றுவது அண்ணன் என் கடமை அல்லவா?

மேற்கொண்டு யோசனை செய்யவில்லை ராமானுஜர்.

உடனே எங்கெங்கோ அலைந்து தேடி பலர் உதவியோடு நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார அடிசில் தயார் செய்து விட்டார். ராமானுஜரால் முடியாத காரியம் உண்டா?

தானே முன் நின்று சுந்தரராஜ பெருமாளுக்கு நைவேத்யம் செய்தாராம். ஆண்டாள் ஒருவேளை தனது பிரார்த்தனையை நிறைவேற்றி இருந்தால் சுந்தரராஜ பெருமாளுக்கு ரெட்டை அதிர்ஷ்டம்! அதுவும் இரண்டு சிறந்த பக்தர்களிடமிருந்து. லக்கி ப்ரைஸ். இருநூறு தடா எக்ஸ்ட்ரா வாக இருக்கட்டுமே. சந்தோஷம் தானே.

தனது கடமையை தங்கைக்காக முடித்துவிட்டு மேலே நடந்தார் ராமானுஜர்.
சில நாட்கள் நடந்து ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்றடைந்த அவருக்கு அங்கும் ஒரு ஆச்சர்யம். ஆண்டாள் தனது சந்நிதியில் இல்லை.

ஆலயத்தில் நுழைந்தவருக்காக கருவறை விட்டு வெளியே வந்து, அர்த்த மண்டபத்தில் ஆண்டாளே காத்திருந்தாள் அவருக்காக.

'நன்றி அண்ணா'' திருப்பாவை பாடிய குரல் அடிமனதில் ஆசையும் பாசமும் குழைத்து நன்றியோடு ஒலித்தது. ராமானுஜர் பரவசமானார் .

''அண்ணா, நான் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நிறைவேற்றத் தவறிய ப்ரார்த்தனையை நீ நான் கேட்காமலேயே தானாகவே முடித்துக் கொடுத்து விட்டாய். எனக்கு திருப்தியாக இருக்கிறது'. உனக்கு நன்றி சொல்ல வார்த்தை தெரியவில்லை அண்ணா'' என்றாள்.

இந்த நிகழ்ச்சிக்கு அப்பறம் ஆண்டாள் மூல கர்பக்ரஹத்துக்குள் திரும்பச் செல்லவில்லை. ராமானுஜரை சந்தித்த அர்த்த மண்டபத்தி லேயே தங்கி இன்றும் நமக்கும் காட்சி தருகிறாள். வில்லிப்புத்தூர் சென்றால் இதை மறக்காமல் காணவும். ராமானுஜ ஸ்தோத்ரத்தில் ஒரு இடத்தில் ''கோதா அபீஷ்ட ப்ரபுரகா'' (கோதையின் விருப்பத்தை பூர்த்தி செய்தவரே) என்று வருகிறது.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...