Wednesday, January 9, 2019

NOSTALGIA

ஒலியும் எதிரொலியும் J.K. SIVAN

மதராஸ் என்கிற பேர் மறந்தே போய்விட்டது. மதராஸ் மெட்றாஸ் ஆகி அதுவும் காணாமல் போய்விட்டது. ரேடியோவில் ஆகாசவாணி மதராஸ் வானொலி நிலையம் கொரகொரா சப்தத்தினிடையே கேட்பதில் ஒரு அலாதி சந்தோஷம். சூளைமேடு வந்தபோது ஒரு சிலர் வீட்டில் இருந்தது. AC DC ரேடியோ என்று வால்வ்கள் பொறுத்தபட்டிருக்கும். பெரிதாக நிறைய இடத்தை அடைத்துக்கொள்ளும் பெட்டியாக இருக்கும். அடிக்கடி திசை திருப்பி வைக்கவேண்டும். ARIEL என்று ஒரு கம்பி மொட்டை மாடிக்கு அல்லது வாசலில் உயரமாக ஒரு இடத்தில் கொம்புக்கு ரேடியோவின் தொப்புள்கொடியாக செல்லும்.

எனக்கு தெரிந்த முதல் ரேடியோ கோடம்பாக்கத்தில் வடபழனி ஆண்டவர் கோவில் பகுதியில் நங்கள் வசித்தபோது தான். ரேடியோ கண்டுபிடித்த மார்கோனி எனக்கு பரிச்சயமில்லை. தெரியாது. நுங்கம்பாக்கத்தில் கார்பொரேஷன் பள்ளிக்கூடத்தில் சயன்ஸ் வாத்யார் விஜயராகவன் சாருக்கு தெரிந்து அவர் மூலம் அறிமுகமானார். விஜயராகவன் ஏழாவது எட்டாவது வகுப்பில் எனக்கு சயன்ஸ் வாத்தியார். வேஷ்டிக்கு மேலே எப்போதும் ஒரே கருப்பு கோட் . பட்டன் கிடையாது. பாதிநேரம் வகுப்பில் எங்களை ஏதாவது எழுதச் சொல்லிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்த வாறே தூங்குவார்.

ரேடியோ நான் இலவசமாக கேட்டு ரசித்தது. கேசவ நாயர் கோடம்பாக்கம் ஆற்காட் ரோடு டீ கடையில் தான். அதுவும் சாயந்திரம் ஐந்து மணிக்கு இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நேயர் விருப்பம் என்ற ரேடியோ சிலோன் நிகழ்ச்சியை எல்லோரும் ஆவலாக கேட்பதை அறிந்து நாயர் அதை பெரிதாக ஒலிக்க விடுவார். மயில்வாகனம் என்று ஒருவர் நீளமாக மூச்சுவிடாமல் கொஞ்சு தமிழில் பேசுவார். லேசில் பாட்டு கேட்க விடமாட்டார். நிறைய கிராமங்கள் ஆசாமி பேர்கள் எல்லாம் சொல்லி விட்டு அதுவரை ஏ. எம். ராஜா, கண்டசாலா, திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோரை காக்க வைப்பார். விரும்பிக் கேட்ட நேயர்கள் குடும்பங்களின் பெயர்கள் விசித்தரமாக இருக்கும். நடு நடுவே கேட்கவிடாமல் கோபால் பல்பொடி உபயோகியுங்கள்

மதராஸ் வானொலி சுசித்ராவின் குடும்பம் என்று ஒரு நிகழ்ச்சியை ஹார்லிக்ஸ் நிறுவனம் இடையில் செருகும்.

ஆகாசவாணியின் சிவரஞ்சனி ட்யூன் வெகுநாள் என்னை கவர்ந்தது. அந்த ட்யூனை பாடிக்கொண்டே சைக்கிளில் சுற்றியது நினைவிருக்கிறது

ரேடியோவை முதலாக ஒரு வீட்டில் தரிசித்தது முதலில் சூளைமேட்டில் குளக்கரையில் ஜம்பகம் மாமி வீட்டில். முத்து சாமி மாமா சாதுவாக காணப்பட்டா
லும் கோபக்காரார். அவர் மகன் மாலி அவரிடம் ஒருநாள் அறையும் குத்தும் வாங்கியபோது தான் தெரிந்தது.. மாமாவிடம் ஒரு மர்பி ரேடியோ பெரிதாக உண்டு. அதன் தலையிலிருந்து ஒரு வயர் ஜன்னலை கடந்து மொட்டை மாடிக்கு போகும் அங்கு ஒரு மூங்கில் கொம்பில் ஐக்கியமாகி இருந்தும் மர்பியை அடிக்கடி வலது இடது பக்கமாக மாற்றி மாற்றி திருப்பி அதன் கொரட்டையை கொர கொர சப்தத்தை ம் கொஞ்சம் குறைப்பார். கிரிக்கெட் கமெண்ட்ரி ரொம்ப புரியாது எனக்கு. கொர கொராவிற்கு இடையே இருமிக்கொண்டே மகாராஜா ஆப் விஜயநகர் விஜி இந்திய கிரிக்கெட் வீரர் உம்ரிகர் ஒருவர் வெள்ளைக்காரன் சுழற்றிய பந்தை எப்படி போட்டான் எங்கே போகவேண்டிய அது எப்படி மார்க்கம் திரும்பி கிரிக்கெட் குச்சியில் படாமல் ப்ராரப்தமாக உம்ரிகர் காலையே சுற்றியது. அதனால் வெகுண்டு உம்ரிகர் அதை தாக்க பந்து எகிறி யார் தலைமேல் பறந்தது, யார் துரத்தியது. அதற்குள் தலை தெறிக்க அங்கும் இங்குமாக ஓடி எத்தனை ஓட்டங்கள் என்றெல்லாம் சொல்வார். விஜய் மர்ச்சண்ட், விஜய் மஞ்சரேக்கர் துரானி போன்ற பேர்கள் ஜனங்களின் சப்தம் கொரகொரவோடு சேர்ந்து ஒரே களேபரமாக இருக்கும்.

மாலி ஒருநாள் தானே மார்க்கோனியாக மாறி, மர்பியை எங்கோ திருகி உள்ளேயிருந்து சப்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடி கண்டுபிடிக்க முயன்றபோது மர்பி இறந்து விட்டது. முத்துசாமி பழிவாங்க அன்று அவனைப் பின்னி விட்டார். இவ்வளவு அடி வாங்கி மாலி துடிக்கும்போது பார்த்துக்கொண்டிருந்த மர்பி, பிறகு மாமா அதன் தலையிலும் ஒரு தட்டு தட்டி ஒரு குலுக்கு குலுக்கினவுடன் புனர் ஜன்மம் பெற்றது. முன்னையை விட அதிக கொர
கொர தொடர்ந்தது.

நான் ஒருதரம் ரேடியோ பக்கத்தில் ஒரு பெரிய கும்பலே நெருக்கி அடித்து அது சொல்வதை
கேட்டுக்கொண்டிருப்பதை எப்போது பார்த்தேன் என்றால் ஜனவரி 30 1948 அன்று. காந்தி தாத்தாவை யாரோ கொலை செய்து விட்டார்கள். அது பற்றி யார் யாரோ நிறைய பேசினார்கள் அழுதார்கள் என்று ரேடியோ சொல்லியது. இறுதி ஊர்வலம் எப்படி எல்லாம் ஊர்ந்து சென்றது. இடையே இடையே திருவாசக தேவார ஆழ்வார் பாசுரங்கள் வயலின் வீணை அழுகைகள் வேறு கேட்டது. ஒன்பது வயதில் காந்தி பற்றி அதிகம் தெரியவில்லை. எனவே அவர்கள் என்ன கேட்கிறார்கள் ஏன் ரேடியோ அழுகிறது என்பதால் அதன் அழுகை ஓலம் என்னை ஈர்க்கவில்லை. தெருவில் மண்ணில் விளையாட போய்விட்டேன்.

நான் வாங்கின முதல் ரேடியோ ரீசா (RESA ) என்று கிண்டியில் ஒரு ரேடியோ தொழிற் சாலையிலிருந்து. ரங்கராஜன் என்று ஒரூ ஒல்லியானவர் நிறைய அலைய வைத்தார். ஏதாவது கேட்டால் எங்கோ யோசித்துக்
கொண்டே பாதி பதில் சொல்பவர். அவர் அந்த ரேடியோ கம்பனியின் க்வாலிடி கண்ட்ரோல் பரிசோதனை செய்து ஒரு சிறு காகிதத்தில் கையெழுத்துப்போட்டு ஒவ்வொரு ரேடியோ முதுகிலும் ஒட்டி அனுப்புபவர். வீட்டில் எப்போதும் ரேடியோ ரிப்பேர் பண்ணுபவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி படையெடுத்து ஒரு ரேடியோ சல்லிசான விலையில் வாங்கி தர ஒப்புக் கொண்டதால் அவரைச் சுற்றினேன். நூற்று முப்பது ரூபாய்க்கு எங்க கம்பனி புது மாடல் ரேடியோ எத்தனை BAND எத்தனை வால்வு VALVE என்னென்ன வேவ்ஸ் WAVES என்று புரியாமல் சொல்லி தருகிறேன் வா என்று கிண்டிக்கு தொழிற்சாலைக்கு பல முறை நடக்க வைத்து நான் அங்கே சென்றால் அவர் என்னை துளியும் லட்சியம் பண்ணாதவர். நான் நிற்பதை கவனிக்காமலோ, பார்த்
துமோ, யார் யாரிடமோ நீளமாக பேசிக்கொண்டே சென்று விட்டார். நிறைய பேர் விரட்டினார்கள். எனினும் சிலையாக நின்றேன். பிறகு வந்தார்.

'நீ 'எப்போ வந்தே ?''
''குண்டாக வழுக்கை தலையோடு ஒருவருடன் பேசிக்கொண்டே நீங்கள் காபி குடித்தபோது''
''ஒ அவரா. சரி எதற்கு இங்கே வந்தே ?''
''ரேடியோ தருவதாக ரெண்டு நாள் முன்பு இன்று வரச் சொன்னீர்கள்.''
''இருக்காதே. சரி எந்த ரேடியோ வேண்டும்?
''நீங்கள் ஏதோ ஒரு புது மாடல் வந்திருக்கிறது. 130 ரூபாய் கொண்டுவா என சொன்னீர்கள் என்று அவர் எழுதிக்கொடுத்த மாடல் நம்பரை அவரிடமே காட்டினேன்.''
இடது சுண்டுவிரலால் காதைக் குடைந்து கொண்டே, '' இது இப்போது வருவதிலையே. எதற்கும் பார்க்கிறேன்''

சற்று நேரத்தில் ஒரு அட்டைப்பெட்டியோடு ரீசா ஒன்று அது வந்தது. ஏகப்பட்ட பார்மாலிட்டி. கடைசியில் பல கைஎழுத்துகள், ரிஜிஸ்டர்கள் அதன் பெயரை எழுதிக்கொள்ள வெளியே தூக்கிக்கொண்டு வந்தேன். வீட்டுக்கு தூக்கிக்கொண்டு போ. நான் ராத்திரி வரேன் பிக்ஸ் பண்ணி தருகிறேன். வெகு ஆர்வமாக எப்போது இரவு வரும், ரங்கராஜன் வருவார், அதற்கு உயிர் வரும் என்று காத்திருந்தது ஞாபகம் இருக்கிறது.

அன்றிரவு ரங்கராஜன் வந்து அதைப் பொருத்திகொடுக்க ரேடியோ பாடியது. முதலில் எங்களுக்கு நெல் பயிர் செய்வது எப்படி என்று ஒருவர் சொல்லிக்கொடுக்க, அப்புறம் தெலுங்கில் விஜயவாடாவில் ரண்டி மண்டி என்று ஒரு நிகழ்ச்சி, தொடர்ந்து வேறொரு ஸ்டேஷனில் திருப்பி யானைக்கு உடல் அரித்தால் என்ன செய்யும் என்று ஒருவர் கவனித்து உபதேசிப்பதற்குள் அவரை ஓதுக்கி விட்டு ஒரு மலையாள பாட்டு பிற்பாதியை கேட்டோம். என் அப்பாவுக்கு ரேடியோ பிடித்து விட்டது. பிபிசி வருமாடா இதில் என்று ஷார்ட் வேவ் ஸ்டேஷன்கள் தேடினார். அலை அலை யாக ஒ வென்ற சப்தம். வெறுத்துப்போய் ''இந்த சனிக்கு எவ்வளவு கொடுத்தாய்?'' என்று திட்டு கிடைத்தது.

அதற்கப்புறம் பல வருஷங்களில் ட்ரான்சிஸ்டர் என்று புதிதாக ரேடியோ உருமாறியது. அதை எல்லோர் வீட்டிலும் விஜிபி போன்ற நிறுவனங்கள் மாதாந்திர தவணையில் கொடுத்தார்கள். அதில் கொஞ்சம் சத்தம் குறைவாக பாடினார்கள். கொரகொர அப்பவும் சிற்றலை ஸ்டேஷன்களில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. இதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் தூக்கிச் செல்லமுடிந்தது. ac dc வால்வ் ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தன. பினாகா கீத் மாலா கேட்டு ரபி, முகேஷ் லதாவெல்லாம் நிறைய அர்த்தம் புரியாமல் இந்தியில் ருசித்து கேட்டிருக்கிறேன்.

பல வருஷங்கள் ஓடிய பின் பாக்கெட் ட்ரான்சிஸ்டர்கள் வர ஆரம்பித்தன. கையில் வைத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் பாட்டு கேட்க ஆரம்பித்தோம். ராஜி அத்தையால் இந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. ''அட இந்த பயல் கையிலே ஒரு சின்ன பொட்டியில் தியாகராஜ பாகவதரே பாடுகிறாரே'' என்று அதிசயித்து எல்லோரிடமும் சொன்னது ஞாபகம் வருகிறது.



ரேடியோக்கள் டெலிவிஷன் வரும் வரை ஏக போகமாக அரசாண்டன. இன்று அவை தனித்வத்தொடு இயங்க காணோம். FM என்று நிறைய சேனல்கள் மாற்றி மாற்றி எல்லாவற்றிலும் வாய் ஓயாமல் ஆண்கள் பெண்கள் பேசி தங்களுக்குள்ளே சிரிப்பதை நான் கேட்க பிடிக்காமல் அதை தொடுவதில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...