Sunday, January 27, 2019

MORAL STORY

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.....
J.K. SIVAN

இந்த உலகம் விசித்திரமானது. இதைப் படைத்த ப்ரம்ம தேவன் அடேயப்பா பலமடங்கு அதை விட விசித்ரமானவன். இல்லாவிட்டால் இத்தனை விதமான மனிதர்களை படைத்து, அவர்களுக்குள் சொல்லமுடியாத அளவு விசித்திர புத்தியை கொடுப்பானா? சாமண்ணா தான் அதிகம் எல்லா விஷயமும் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதில் பெருமை அடைபவன். தனக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்று தீர்மானமாக இருப்பவன். நான் அவனைப் பார்த்தபோதெல்லாம் தமிழில் என்ன சாமு சௌக்கியமா. உடம்புக்கு ஒண்ணுமில்லாமல் இருக்கிறாயா? என்று வழக்கம்போல் அர்த்தமில்லாத, அவன் உடலில் அக்கறையே இல்லாமல் கேட்கும்போது எல்லாம் எனக்கு இங்கிலீஷில் தான் பதில் சொல்வான். அவன் பதிலில் உடம்பு என்றால் என்ன என்று அங்கு வேறு ஆணி வேறு என்று தெரிந்தவன் போல், சௌக்கியம் என்பது அவரவர் சாமர்த்தியத்தால் தான் உண்டாவது என்றும் 1900த்தில் ஒருவர் இன்னொருவரை பார்த்து இப்படி கேட்டதை பற்றி எல்லாம் சொல்வான். சொல்லும்போது உரக்க சொல்வான். பதில் எனக்கு மட்டும் அல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து. அவர்கள் கவனிக்கிறார்களா, தனது அறிவுபூர்வ பதிலை ஒரு வார்த்தை விடாமல் கேட்கிறார்களா என்று அளவெடுப்பான்.

பதிலுக்காக நான் மாட்டிக்கொண்டு நிற்பேன். அவனைப் பற்றி தெரிந்தவர்கள் ஆவியாக மறைந்திருப்பார்கள்.

சாமு ஒரு ஊருக்கு சென்றான். அங்கே ஒரு பெரிய புளியமர தோப்பு முதலாளி புருஷோத்தமனை பார்த்தான். புருஷோத்தம நாயக்கர் பரம்பரை பணக்காரர் . ஐந்து ஆறாவது வகுப்போடு படிப்பு போதும் என்று நிறுத்தி புளி யை அபிவிருத்தி செய்து பணம் சேர்த்தவர். வாயாடி. ஆகவே சாமு வை புளியைப் போல் சரியாக எடை போட்டுவிட்டார் .

ரெண்டு பேரும் ஆற்றங்கரை அரசமரத்தடி விநாயகர் அருகே மேடையில் அமர்ந்து காற்று வாங்கும்
போது சாமு ஆரம்பித்து விட்டான்.

''நாயக்கரே உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா?''.
''எதுக்கு தம்பி?''
''இல்லை. சின்ன கேள்வி தான். விளையாட்டு வினா. பயப்படாதேங்கோ. சுலபமாக தான் கேட்பேன். சரியா பதில் சொன்னால் பத்து ரூபா. அப்பறம் நீங்க கேளுங்கோ நான் பதில் சொன்னா எனக்கு ஐந்து ரூபா கொடுத்தா போதும். ஆளுக்கு ஒரு கேள்வி மாத்தி மாத்தி கேட்போம்.''
''அட போ தம்பி. இதெல்லாம் எதுக்கு நிறைய ஜோலி இருக்கு நமக்கு''.
''என்ன நாயக்கரே ஜகா வாங்குறீங்க. சரி போங்க, ஒரு கேள்விக்கு ஐம்பது ரூபா தரேன்''.
''எனக்கு வேணாம்பா''
''நூறு ரூபா''
''ஹுஹும் தேவை இல்லை ப்பா''
''இருநூறு ரூபா.
''நான் தான் சொல்லிட்டேனே வேண்டாம்னுட்டு . உடமாட்டேங்கிறியே''
''சும்மா உங்களோடு பேச ஆசைப்பட்டு தானே கேக்கறேன் நாயக்கர். இப்படி வச்சுக்கலாம். நீங்க கேள்வி கேட்டு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஆயிரம் ரூபா தரேன். உங்களுக்கு பதில் தெரியாவிட்டால் ஒரு ரூபா கொடுத்தா போதும்.''
''சரி தம்பி இன்னிக்கு நேரம் சரியில்லே போல் இருக்கு யாருக்கோ. போவட்டும். ஆனால் நான் தான் முதல்லே கேள்வி கேட்பேன். சரியின்னு சொன்னீன்னா ஆரம்பிக்கறேன்.''
சாமுவுக்கு சந்தோஷம். ஜெயித்து விட்டோம் இந்த நாட்டுப்புறத்தானை மடக்க வேண்டும். தனது அறிவை அவன் மெச்சி திகைக்க வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டான்.
''நீங்க முதல்லே கேள்வி கேளுங்க நாயக்கரே'' .

தலையில் முண்டாசை ஒரு முறை அவிழ்த்து இருக்க மறுபடியும் கட்டிக்கொண்டு மீசையை இடது கையால் ஆசையாக தடவி விட்டு நாயக்கர் தொண்டையை கனைத்துக் கொண்டு தனது கேள்வியை கேட்டார்.

''இதோ பார் தம்பி, எதுக்கு ஐந்து தலை, நாற்பது காலு, குளத்துதண்ணிலே அடியிலே இருக்குது. சொல்லு?''

சாமு மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்தான். பல விதங்களில் கேள்வியை புரட்டி புரட்டி விடை தேடினான். ஒன்றுமே புரியவில்லை.

''என்னாது தம்பி அது சொல்லு?''

மீண்டும் மீண்டும் தலையை சொரிந்துகொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று எல்லாம் யோசித்தான் சாமு. ஹுஹும் விடை கிடைக்காமல் ஈனஸ்வரத்தில் ''தெரியலே நாயக்கரே '' என்று சொல்லி பையில் துழாவி ஆயிரம் ரூபாய் எண்ணி நாயக்கரின் நீட்டிய கையில் வைத்தான். அதை வாங்கி எண்ணி இடுப்பில் வேட்டியில் முடிந்து கொண்டு நாயக்கர் எழுந்து நின்றார். புளியந் தோப்புக்கு நடந்தார்.

''நாயக்கர், நீங்களே விடை சொல்லுங்க. அது என்னாது ?''

''அட போ தம்பி எனக்கு என்ன தெரியும். சும்மா ஏதோ வாயிலே வந்ததை கேட்டேன். இந்தா ஒத்தை ரூபா நான் தோத்ததுக்கு'' என்று சொல்லி நடந்தார்.



சாமு இப்போதெல்லாம் யாரையும் கேள்வி கேட்பதில்லையாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...