Saturday, January 9, 2021

MARGAZHI VIRUNDHU

 

மார்கழி விருந்து   J  K  SIVAN


        26.   மாலே மணிவண்ணா
 

'மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள்வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்''

(குந்தல வராளி ஒரு அபூர்வ ராகம். மனதை அப்படியே சுண்டி இழுக்கும் என்பது தெரிந்து தான் காலஞ்சென்ற ஏழிசை மன்னர் M K தியாகராஜ பாகவதர் ஒரு காலத்தில் ''மனமே நீ ஈசன் நாமத்தை'' என்று ஒரு பாபநாசம் சிவன் பாடிய கீர்த்தனையை அன்றும் இன்றும் என்றும்  ஒலிக்கும்படியாக  அவர் குரலில் பாடிவிட்டுப் போனாலும் அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துமாறு காலஞ்சென்ற M L V அவர்கள் மேற்கண்ட ஆண்டாள் திருப்பாவை பாசுரத்தை அதே ராகத்தில் பாடி நமது வீடுகளில் மார்கழியில் காதில் இன்பத் தேனாக வந்து பாயுமாறு செய்து விட்டுப் போயிருக்கிறாரோ? எல்லாமே ஆண்டாளின் கைங்கர்யம் தான்)

நேற்றைய தினம் மார்கழி 25வது நாள் நாம் என்ன கண்டோம் என நினைவிருக்கிறதா?

ஆண்டாள் தனது தோழியரோடு கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த போது கண்ணன் எவ்வளவு ஆபத்துகளை பிறந்ததிலிருந்தே எதிர் கொண்டவன்; வடமதுரையில் சிறையில் பிறந்து கோகுலத்தில் ரகசியமாகவே வளர்ந்தவன் என்பதை எல்லாம் நினைவு கூர்ந்துவிட்டு அந்த கண்ணன் கழல்களே சரணம் என வணங்கி ஆசி வேண்டியதை எல்லாம் பற்றியல்லவா பாடினாள் ?.

இன்று மார்கழி 26ல் நடந்தவற்றை முதலில் தென் கோடி வில்லிப்புத்தூரில் சென்று காண்போம்.

பொழுது புலர்ந்து விட்டது. பனியும் குளிரும் விடவில்லை. மூடு பனி. எதிரில் ஆள் வருவது தெரிய வில்லை. ஏனெனில் ஆளே வரவில்லை.

எண்ணத் தொடர் சற்று திசை மாறி  நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களின் மேல் செல்ல விஷ்ணு சித்தர் ''நாராயணா,  என்னே உன் கருணை '' என்று பூக்குடலையுடன் நந்தவனத்தில் நுழைந்தார்.

அவரைப் பொருத்த வரையில் மழை பனி எது பெய்தாலும், மலர் மலர்ந்தாலும், மாமரத்தில் மாம்பூ தென்பட்டாலும் , பசு அம்மா என்றாலும், பறவை கீதம் இசைத்தாலும், காற்று தென்றலாக இனிமையாக தேகத்தை வருடினாலும் எல்லாமே ''நாராயணா, என்னே உன் கருணை'' தான்.

''இப்போதெல்லாம் கோதை வெகு ஆர்வத்துடன் ''அப்பா ஒவ்வொரு நாளும் நானே வட பத்ரசாயிக்கு மாலை தொடுப்பேன். எந்த மலர்களை எடுத்து பொருத்தி தொடுத்தால் அவனுக்கு அழகு கூடும் என்று அமைக்கிறேன்'' என்று ஆர்வமுடன் பாடிக்கொண்டே மாலை தொடுக்கிறாள். இந்தக் கோதை என்கிற பூவையே ரங்கன் எனக்கு கொடுத்த அபூர்வமான ஒரு பூ,   பாவை கொடுத்த பூவை அல்லவோ கோதை.?''

தங்களைக்  கோதை மாலையாக தொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் அல்லவா இந்த நந்தவனம் பூக்களால் நிரம்பி பூத்துக் குலுங்குகிறது. அந்த அழகிய பூக்களைப் பார்க்கும்போதே இன்று ஒரு சிறந்த பூ மாலை அவளது பா மாலையோடு சேர்ந்து அமையப்போகிறது என்கிற எண்ணம் அவருக்கு உதயமாகி விட்டது.

மாதங்களிலே சிறந்த மார்கழி அந்த மாதவனின் ஸ்வரூபமே தான். . அவனே சொல்லியிருக் கிறானே மாதங்களில் நான் மார்கழி என்று. இந்த 26 நாட்களும் ஆண்டாள் போற்றும் கிருஷ் ணனின் தனி சிறப்பு என்ன?

ஒருவர் மற்றொருவரிடம் விரோதம் கொண்டாலோ அவரை வென்று விட்டாலோ தோற்றவர் மற்றவரிடம் சொல்ல வொண்ணா கோபமும் ஆத்திரமும் கடைசிவரை வைத்திருந்து எப்போது அவரை வீழ்த்தலாம் என்று சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருப்பது நாம் இக்காலத்தில் விடாமல் கடைப்பிடிக்கும் நிதர்சனமான உண்மை. மனித ஸ்வபாவம்.

ஆனால் என்ன விசித்ரம் பார்த்தீர்களா? கிருஷ்ணனிடம் தோற்றவர்களோ அவனை எதிர்த்த வர்களோ கடைசியில் அவன் உண்மை ஸ்வரூபம், குணம், உத்தம பண்பு, பரோபகாரம் எல்லாம் உணர்ந்து அவனிடம் சரணாகதி அடைந்து அவனால் நற்கதி அடைந்தவர்கள். நமக்கு  இது ஒரு சிறந்த வழிகாட்டி. ஆண்டாள் கண்ணனின் இந்தப் பெருமையைப்  பறை சாற்றுகிறாள்.

விட்ட இடத்திலிருந்து தொடர்கிறாள் ஆண்டாள்.

''கிருஷ்ணா, எங்களைப்பார்த்து   உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாயே. இதோ ஒரு பட்டியல் தருகிறேன்'' என்று ஒன்றன் பின் ஒன்றாகஆண்டாள் எதைக் கேட்டாள்?

மார்கழி முழுதும் யமுனையில் நீராட எங்களுக்கெல்லாம் நிறைய பெரிய சங்குகள் வேண்டும். எப்படிப்பட்ட சங்கு தெரியுமா” வெள்ளை வெளேரென்று உன்னுடைய பாஞ்சஜன்யம் இருக்கிறது பார், அதே மாதிரி தான். எங்கள் நோன்பு பாடல்களை நாங்கள் பாடிக் கொண்டு வீதி வலம் வரும்போது எல்லோருக்கும் கேட்கும்படியான இனிய நாத ஒலி , உள்ளம் கவர் சப்தத்தை  அது கொடுக்க வேண்டும்.

எல்லோரையும் ஈர்க்கும் ஒலி கொண்ட பெரிய பேரிகைகள் வேண்டும்.

திருமாலின் அவதாரமான கிருஷ்ணா! உன் புகழ் பாடி உனக்குப்பல்லாண்டு பாட எங்களுக்கு நிறைய வேத கோஷ விற்பன்னர்கள் வித்வான்கள் தேவை.

வரிசை வரிசையாக ஏற்றி வைத்து உன்னை தீபாலங்காரத்தோடு வழிபட நிறைய விளக்குகள் வேண்டும்.

எங்கும் உன் புகழ் பாடி நாங்கள் வரும்போது அனைவரும் கண்டு களிக்க கண்ணைக்கவரும் வண்ண வண்ண துணிகளில் நிறைய கொடிகள் வேண்டுமே.

அங்கங்கு பந்தல் போட்டு உன் பிரசாதங்களை அனைவருக்கும் சம்ருத்தியாக இட்டளிக்க நிழல் அமைக்க பந்தல் கூடாரம் துணிகள் வேண்டும்.

என்ன இது? மடை திறந்த வெள்ளம் போல் எதையெல்லாமோ கேட்கிறாளே இந்த ஆண்டாள் என்று யோசிக்கிறீர்களா?
 அதற்கும் காரணம் ஒன்று இருக்கிறதே! 


பிரளயம் என்ற கால ஊழியில் எதுவுமே நீரில் மூழ்கியபோது கிருஷ்ணா, நீ மட்டும்ஒரு ஆலிலையில் சுகமாக படுத்து பிரயாணம் செய்து உலகில் உயிரை மீட்டுக் கொடுத்தவனாயிற்றே, உனக்கு என் இந்த சிறிய பட்டியல் ஒரு வெள்ளமா? ஒரு பொருட்டா?

நீ இவற்றை அளித்தால் தானே எங்கள் நோன்பு விரதம் எல்லாம் சிறக்கும். புரிகிறதா?என்றாள் ஆண்டாள்.

ஒருவிஷயம் இங்கு சொல்லவேண்டும் பெரிய மேதாவிகள் ஞானிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? ஆண்டாள் கேட்ட பொருள்கள் எதை குறிக்கிறதாம் தெரியுமா?.

சங்கு:      மந்த்ராசனம்.
பேரிகைகள் :  ஸ்னானாசனம் (திருமஞ்சனம்)
வேதகோஷம் : பல்லாண்டு
அலங்காராசனம்: விளக்கு: நைவேத்ய சமர்ப்பணம்.
கொடி: விஞ்ஞாபனம்,
பந்தல்: பர்யங்காசனம்.

ஆண்டாள் கேட்ட 6 அயிட்டங்களும் பகவத் ஆராதனத்தில் உபசார ஆசனங்கள். ஆண்டாள் பார்ப்பதற்கு ஒரு குக்கிராம சிறுமி போல் காட்சியளித்தாலும் ரொம்ப விஷயம் தெரிந்தவள் என்று புரியவில்லையா? .

இன்று மார்கழி 26ம் நாள் இந்த ஆண்டாளை நாம் முத்தங்கி சேவையில் பார்க்கலாம் ஸ்ரீ வில்லிபுத்தூரில், அவள் தங்க சேஷ வாகனத்தில் பவனி வரும்போது. வில்லிப்புத்தூரில் சென்று நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு எத்தனையோ சாதனங்கள் அவற்றை வடிவெடுத்து வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே காட்டுகிறதே. பட்டிமன்றம் பார்க்கும் டிவியில் இதுவும் தெரியுமே.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...