Wednesday, January 20, 2021

THIRUVAIYARU SAPTHASTHANAM





 



திருவையாறு  ஸப்த ஸ்தானம்.  J K   SIVAN 
திருப்பழனம். 
                                
                           ஆபத் ஸஹாயர் 

எவ்வளவு  எதிர்ப்புகள் இருந்தாலும்,  தீயசக்திகள்  அழிக்க  காத்திருந்தாலும்,  பணமும்  பதவியும்  அதற்கு  ஒத்துழைத்தாலும் இன்னும்  பக்தி  வளர்ந்து கொண்டு தான்  இருக்கிறது.  நமக்குள்  ஒற்றுமை  அவசியம். அதைவிட  தைரியமும் நேர்மையும், பயமின்மையும் வேண்டும். அப்போது தான் நீதிக்கு  நேர்மைக்கு நியாயத்திற்கு குரல் கொடுக்க முடியும். 

கொரோனா போன்ற  கொடிய சக்தி வாய்ந்த தீமைகள் நம்மை  வாட்டினாலும் அதையும் எதிர்கொண்டு  பண்டிகைகளை,  நாள் கிழமைகளை விடாமல்  கொண்டாடி வருகிறோம்.  பாதுகாப்பு விதிகளை மீறாமல் இது அனுமதித்த அளவிற்கு தக்கவாறு நடந்து கொள்கிறோம்.  முன்பு இந்த  தொந்தரவு எல்லாம் இல்லை.

திருப்பழனம்  ஒரு  திருவையாறு ஸப்தஸ்தான  க்ஷேத்ரங்களில்  ரெண்டாவது.  அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும், கற்பக விருக்ஷமான   வாழை,   தோப்புகளாக  எங்கும்  பல  ரகங்களில்  பல்சுவையோடு  கனிந்து   வித விதமாக பழங்ளை அளிக்கும்  இடமாதலால் திருப்பழனத்துக்கு  கதலி வனம் என்றும். பெயர்   திருப்பழனம் தவிர மற்ற  ஆறு  ஸ்தலங்கள்:   திருவையாறு, திருவேதிகுடி, திருசோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை.  சித்ரா பௌர்ணமி அன்று  ஸப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக   வருஷாவருஷம் நடைபெற்று வருகிறது.  
 
சுசரிதன் என்னும் அந்தணன் யாத்திரை மேற்கொண்டு திருப்பழனத்தில் வந்து தங்கினான். அன்றிரவு அவனது கனவில் யமதர்மன் தோன்றி, 'இன்றிலிருந்து ஐந்தாவது நாள் நீ இறந்து விடுவாய்' என்று கூறிவிட்டு மறைந்தான். அந்தணன் கண்விழித்து இத்தலத்து ஈசனை வேண்ட,   '' நீ உடனே திருவையாறுக்கு சென்றால் உயிர்பிழைத்துக் கொள்வாய்''   என்று அசரீரி பதிலளித்தது.  உயிருக்கே  வந்த  ஆபத்திலிருந்து இவ்வாறு  ஈசன் காத்து உதவியதால்  இந்த  க்ஷேத்ரத்தில்  பரமேஸ்வரனுக்கு பெயர்  'ஆபத்சகாயநாதர்' என்று வணங்கப் படுகிறார். அம்பிகை 'பெரியநாயகி' யாக  தரிசனம் தருகின்றாள். வெளிப்பிரகாரத்தில் 'சுந்தர நாயகி' என்ற மற்றொரு அம்மன் சன்னதியும் உண்டு.

இத்தலத்து பெருமாளை திருமாலும், இலக்குமியும் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோயில் பிரகாரத்தின் பின்புறத்தில் ஸ்ரீவேணுகோபாலன் சன்னதி ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டு சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இவ்வூருக்கு அருகில் அப்பூதி அடிகள் தொண்டு செய்த திங்களூர் உள்ளது. அது நவகிரஹ க்ஷேத்ரங்களில் சந்திர தோஷ பரிஹார ஸ்தலம். வைப்பு  ஸ்தலங்களில் ஒன்று.  

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 'ஏழு திருப்பதி' என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும். ஸப்தஸ்தானத் தலங்களுள் திருவையாறு, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு மட்டும் தனித் திருப்புகழும் உள்ளது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடிய  ஸ்தலம்  திருப்பழனம். இக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிலாத முனிவர்  மகன் நந்தியெம்பெருமானுக்கு ஈசன் திருமழபாடியில்   கல்யாணம் பண்ணி வைக்க   விரும்பினார்.  திருமழபாடியில் விமரிசையாக  திருமணம் நடைபெற்றது. நந்தியும் ஈசனுடைய பிள்ளை போன்றவராதலால் அவரை ஏழூர் ஊர்வலமாக அழைத்துவர ஈசன் விரும்பினார். அவ்வூர்வலம் திருவையாற்றில் தொடங்கி, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைஸ்தானம் வழியாக மீண்டும் திருவையாற்றை வந்தடையும்.

திருமண நாளன்று ஈசன் கண்ணாடிப்பல்லக்கில் எழுந்தருளியிருக்க, நந்தி அவருடன் மனைவி ஸ்வயம்ப்ரகாசையுடன் இருக்க, ஏழூர் உற்சவமாகச் செல்வதுதான் சப்தஸ்தான ஐதீகமாகும் . இதில் மற்றுமொரு சிறப்பு என்னவெனில் ஏழூருக்கும் பல்லக்கு தோள்களிலேயே சுமந்து செல்லப்படுகிறது. வாகனம் பயன்படுத்தப்படுவது இல்லை. சித்திராபௌர்ணமியன்று இவ்விழா நடைபெருகிறது.

கௌசிக முனிவர் தனக்களிக்கப்பட்ட அமிர்தத்தைக் கொண்டு, அதனோடு மணலைப்பிசைந்து சிவலிங்கம் செய்தார் என்று கூறப்படுகிறது. சந்திரன், குபேரன், இந்திரன், திருமால், திருமகள் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.  மஹா விஷ்ணு  பூஜித்த ஸ்தலம் . மஹா விஷ்ணுவைத் தேடிவந்த லக்ஷ்மி பயனடைந்து சென்றதால் ப்ரயாணபுரி என்று பெயர் உண்டு. மற்ற பெயர்கள்  
கௌசிகாசிரமம்,  பழனப்பதி. ஆபத் ஸஹாயநாதருக்கு மற்ற  பெயர்கள்  அமுதலிங்கேசர், சுதாலிங்கமூர்த்தி, கரிதலேஸ்வரர், பழனநகர். 

நான் சென்று தரிசித்தபோது  புராதனம் மாறாமல், அதாவது சரியாக பராமரிக்கப்படாமல் காட்சி யளித்தது.   மூன்று  நிலை ராஜ கோபுரம். வெளி கோபுரத்திலிருந்து சுமார் 100 அடிகள் தொலைவில் உள்கோபுரம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே போனால்  வலது பக்கம்  மங்களதீர்த்தம் பயனின்றிக் காட்சியளிக்கிறது. சிதிலமடைந்துள்ளது. இவை செப்பனிடகாத்திருந்தது.

 மற்ற தீர்த்தங்கள்: காவிரி, தேவ தீர்த்தம், மற்றும் அமுத தீர்த்தம். சுப்பிரமணியர், வினாயகர் சன்னிதிகள் உள்ளன. முன்மண்டபத்தின் வாயிலிலேயே குழந்தைகள் பள்ளிக்கூடம் ஒன்று இயங்குகின்றது. மண்டபத்தின் உள்பகுதி வாகன மண்டபமாகப் பயன்படுகிறது. மண்டபத்தின் உள்ளே சென்றால் சப்த கன்னியர்கள், வினாயகர், வேணுகோபாலர் சன்னிதிகளும், நடராஜ சபையும் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி நின்ற நிலையிலும், தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி நின்ற நிலையிலும், மேற்கு திசையில் அண்ணாமலையார்,, வடக்கே பிரம்மா நின்ற நிலையிலும் உள்ளனர். அர்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கூப்பிய கரத்துடன், உடைவாளுடன் உள்ளார். சுவாமி சன்னிதிக்குப் பின்புற பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கவேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் இருக்கிறார். இது எங்கும் காணமுடியாத சிறப்பாகும்

நேரே தெரிவது மூலவர். இருட்டில் இருக்கிறார். உயர்ந்த பெரிய மூர்த்தம். எவ்வித விளக்குகளும் நாம் சென்றபோது இல்லை. தற்போது இருக்கலாம். வழக்கம்போல் வெளவால்கள். ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி அம்மன் உறைகிறார்.

அம்பாள் வெளிப்பிரகாரத்தில் ஈசனுக்கு இடப்பக்கமாக தனிக்கோயிலில் உறைகிறார். வாழை மரம்  ஸ்தல விருக்ஷம்.    சிவன் சுயம்புமூர்த்தி.

 பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.

தேவாரப்பதிகம்:   வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே.--அப்பர்   தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 50வது தலம்.

திருவையாற்றிலிருந்து 3 கீ மீ தொலைவில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 3 ஆவது கீ மீ காவிரிக்கரையருகே அமைந்துள்ளது இத்தலம். தஞ்சை மற்றும் குடந்தையிலிருந்து நகரப்பேருந்துகள் உள்ளன.  சென்னையிலிருந்து  16 பேருடன்  ஒரு மகிழ்வூர்தியில் பல க்ஷேத்ரங்கள் சென்றபோது திருப்பழனம் சென்று தரிசித்தேன்.  ஆபத் சகாயர் எனக்கு ஒரு பேருதவி செய்தார்.  நான்  என் சக பிரயாணிகளை நிற்கவைத்து  போட்டோ எடுத்தேன். அப்போது கையிலிருந்த  13000 ரூபாய்க்கு மேல் இருந்த  பணப்பையை  அருகே இருந்த ஒரு கல் மீது வைத்துவிட்டு  அவர்களைப்   படமெடுத்தேன்.  சற்று தள்ளி  உள்ளே  சென்றும்  அவர்களை சில படங்கள் எடுத்தேன். பணப்பையை சில நிமிஷங்கள் மறந்து போனேன்.  உள்ளே தரிசனம் செய்யும்போது  கவனம் வந்து ஓடினேன். கல் இருந்தது பணப்பையைக்   காணோம்.  விளையாடிக்கொண்டிருந்த உள்ளூர்  சிறுவர்களும் காணோமே.   சிறுவர்கள் எங்கள் எல்லோரையும்தவிர  வேறு எவருமே  அப்போது ஆலயத்தில் இல்லை.    ஆகவே  சில வீடுகளில் சென்று விசாரித்தேன்.  யாருமே  பணத்தையோ பையோ இதுவரை பார்க்காதவர்கள் போல் ஆச்சர்யமாக பதிலளித்தார்கள்.  என்னையும் சேர்த்து  கூட வந்த  15 பேரை எப்படி சென்னைக்கு திருப்பி அழைத்துச் செல்வேன்?     ஆபத்சகாயரை வேண்டிக் கொண்டு எல்லோரிடமும்  ஊர்தியில் நடந்ததைச் சொன்னேன். 

 எல்லோருக்கும் பணம் எப்படியாவது சென்னை சேர்ந்தவுடன் திருப்பி தருவதாக வாக்களித்தேன். எவருமே  பணம் திரும்பப் பெற முன்வரவில்லை. அவரவர்  தமது கைப்பணத்தை போட்டுக்கொண்டு வழிச்செலவு வண்டி வாடகை எல்லாம் கணக்கு தீர்த்து விட்டார்கள்.  இது ஆபத்ஸஹாயர் செய்த  உதவி.  எனக்கு இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி  ஆபத் சகாயம்  செய்ததற்கு  ஆபத் ஸஹாய நாதரை மீண்டும் வணங்கினேன்.  என்னைப் பொறுத்தவரை  அதற்குப் பிறகு பல வருஷங்களாக  பழனத்தை நினைக்கும்போது எல்லாம் பணமும் ஞாபகம் வருகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...