Friday, January 22, 2021

PESUM DEIVAM

 




பேசும் தெய்வம். J K SIVAN

காமாட்சிக்கு கனக விமானம்
காஞ்சிபுரம் போகும் போதெல்லாம் காமாக்ஷி ஆலயத்தின் கம்பீர, அழகான கோபுரம் கண்ணைக் கவர்வதால் பத்து நிமிஷமாவது உட்கார்ந்து அந்த கோபுர அழகை ரசிக்கத் தவறியதில்லை. எத்தனை மஹான்கள், எத்தனை புண்யபுருஷர்களின் உழைப்பால் உயர்ந்த ஆலய கோபுரம். காமாக்ஷி லலிதா மஹா திரிபுரசுந்தரி. திரிசக்தி.
கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாட்சி காசி விசாலாக்ஷி தவிர திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆகியோர் ஒவ்வொரு ஹிந்துவும் தாயாகப் போற்றி வணங்கும் தெய்வங்கள். அம்பாள் பரப்பிரம்ம சக்தி ஸ்வரூபிணி. காமாக்ஷி அம்மன் ஆலயம் ஒரு முக்கிய சக்திபீடம். சதி யின் உடலை பரமேஸ்வரன் சுமந்து தாண்டவ மாடியபோது அவள் உடல் பல துண்டுகளாக பூமியில் 51 இடங்களில் விழுந்த ஸ்தலங்கள் எல்லாம் சக்தி பீடங்கள். சதியின் தொப்புள் கீழே விழுந்த இடம் தான் காஞ்சி காமாக்ஷி அம்மன் ஆலய ஸ்தலம்.
அம்பாள் சந்நிதி காயத்ரி மண்டபம், நான்கு சுவர்களும் நான்கு வேதங்கள். 24 தூண்களும் காயத்ரி மந்த்ர பீஜ அக்ஷரங்கள். காமாட்சிக்கு ரஹஸ்ய காயத்ரி என்று ஒரு பெயர்.
காமாட்சி ஆலயம் பல்லவர் காலத்தில் கட்டியது . அம்பாள் நான்கு கரங்களுடன் பத்மாசனத்தில் யோக நிலையில் அமர்ந்திருப்பாள். கரும்பு வில் ஏந்திய ஒரு கரம். இருக்கரங்களில் ஐந்து மலர் அம்புகள் கொத்துக்கள், மற்ற இருகரங்களில் பாசம் அங்குசம். பூங்கொத்துகளில் ஒரு கிளி.
ஒரு முக்யமான விஷயம். காஞ்சிபுரத்தில் வேறு எங்கும், அம்பாளை கோயில்களில் தரிசிக்க முடியாது. ஆதி சங்கரர் சக்ரம் ஸ்தாபனம் செய்து உக்ர காமாட்சியை சாந்த காமாக் ஷியாக மாற்றிய ஆலயம். 5 ஏக்கரா விஸ்தீரணம். இங்கிருந்த பங்காரு காமாக்ஷி தான் தஞ்சாவூர் சென்றவள்.
மூல விக்ரஹ காமாட்சி அம்மன் சந்நிதிக்கு மேலே உள்ள அழகிய விமானம் ஒரு காலத்தில் தக தக வென்று கண்ணைப் பறிக்கும் பொன் மயமாக இருந்தது. காலம் செல்ல செல்ல விமானத் தின் மீது இருந்த தங்க ரேக் கெல்லாம் அழிந்து உதிர்ந்து வெறும் செம்பாக காட்சி அளித்தது. வருத்தமான ஒரு விஷயம்.
இனி விஷயத்துக்கு வருவோம். நான் சொல்லப்போவது பல வருஷங்களுக்கு முன்பு. அப்போதெல்லாம் காஞ்சி காமகோடி மடத்துக்கு பண வசதி போதாது. அன்பர்களும், பக்தர்களும் கொடுப்பதை வைத்து தான் மடம் நடந்து கொண்டிருந்தது.பல நாட்கள் பிக்ஷா வந்த னத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த் துக் காத்திருப்பது கூட உண்டு. சந்நியாச தர்மப்படி அந்த பிக்ஷா வந்தனத்தை வைத்துத்தான் மஹா பெரியவாளுக்கு அன்றாட பிக்ஷை.
ஒருநாள் என்ன தோன்றியதோ தெரியவில்லை. மஹா பெரியவாவிடம் மட நிர்வாக மானேஜர் ஏதோ கேட்க வந்தபோது காமாக்ஷி அம்பாள் கோவிலைப் பற்றி பேச்சு எழுந்தது.
" அம்பாள் விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் வெறும் செம்பாக வைத்திருக்கிறதே . என்ன ஏற்பாடு?
'' என்ன பண்றது பெரியவா, பண வசதி போறவில்லையே " - மானேஜர்
பெரியவா யோசனை பண்ணினா. பிறகு ஒரு ஆசாரியை வரவழைத்து விமானத்துக்கு தங்க ரேக்கு பதிக்க எவ்வளவு பவுன் தேவைப்படும் என்று விசாரித்தார். ஆசாரி கணக்குப்போட்டு அனுபவத்தால் எத்தனை கிராம் தங்கம் தேவைப் படும் என்று சொல்வதற்காக விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது.
ஆசாரி பார்த்து கணக்குப்போட்டு எத்தனை தங்கம் தேவைப்படும் என்று சொன்னார். மஹா பெரியவா தலையை ஆட்டினார்.
"இவ்வளவு பவுனுக்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில்.
அடிக்கடி "காமாட்சியோட விமானத்துக்கு தங்க ரேக்கு சார்த்தி பளபளன்னு காட்சி தரும்படியாக பண்ண ஆசையிருக்கு, எப்படி என்றுதான் தெரியலை?" என்று மஹா பெரியவா அடிக்கடி சொல்வார்.
ஒருநாள் பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், ( பிரபலமான மகாராஜபுரம் சந்தானத்தின் தந்தையார்) காஞ்சிபுரத்துக்கு மஹா பெரியவாளை தரிச னம் பண்ண வந்தார். பெரியவா கட்டளைப் படி அவர் எதிரில் அமர்ந்து தேவகானம் பொழிந்தார். மஹா பெரியவா அவரிடம்,
"விஸ்வநாதா, எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தை தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக இருக்கு. இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் அது எல்லாம் முடியாத காரியம். அவ்வளவு தங்கத்துக்கு எங்கே போறது என்கிறார்கள். எனக்கு அது பெரிய குறையாக இருக்கிறது. ஆனால்,உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்து விட்டது. உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர். அங்கே வந்திருந்த பெண்மணிகளில் சிலர்," எங்களுக்கு மனப்பாடமாக தெரியும்" என்று பாட முன் வந்தனர். விஸ்வநாதய்யரும் அவர்களோடு சேர்ந்துகொண்டு கனகதாரா ஸ்தோத்திரத்தை அற்புதமாக பாடி முடித்தார்கள். அவர்கள் ஸ்தோத்ரத்தை சொல்லி முடிக்கும்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது.
என்ன ஆச்சர்யம் பாருங்கள். பெரியவா ஒரு தட்டை எதிரே நீட்டுகிறார். அங்கிருந்த பெண்கள் அனைவருமே தங்களுக்கு முடிந்த தங்க வளையல், செயின், தோடு, மூக்குத்தி, நெக்லஸ், மோதிரம் என்று கழற்றி தட்டில் இட்டனர்.
"ஆஹா ஆதி சங்கராச்சார்யருடைய கனக தாரா ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் சொன்னீர்கள் பொன்மாரி பொழிகிறதே" என்று மஹா பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார். அன்று ஏராளமான கூட்டம். பெண்கள் ஆண்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்க ஆபரணங்களை பெரியவா நீட்டிய தட்டில் போட்டு நிரப்பினார்கள்.
இனிமேல் தான் ஆச்சர்யம். மஹா பெரியவா ஆசாரியை கூப்பிட்டு இந்தப்பா இதை வைத்துக் கொண்டு இன்னும் ஐந்து நாட்களுக்குள் தங்க ரேக்கு சார்த்திய விமானம் பண்ணி எடுத்து வா'' என்றார்.
ஆச்சாரி அந்த தங்க ஆபரணங்களை எடை போட்டுப் பார்த்தபோது விமானம் முழுதும் தங்க ரேக்கு செய்து பதிக்க எவ்வளவு தங்கம் தேவைப் பட்டதோ அதற்கு கொஞ்சமும் , ஒரு ஒரு குந்து மணி கூட, கூடாமல், குறையாமல் தங்கம் சரி யான அளவில் தேறிற்று . ஆசாரிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஓடிவந்து பெரியவாளிடம் வந்தார். கண்களில் நீர் மல்க அவர் காலடியில் விழுந்தார். மகா பெரியவா கண்ணை மூடி காமாட்சியை வேண்டிக்கொண்டிருந்தார். மஹா பெரியவாளை காமாக்ஷி ஸ்வரூபம் என்று சொல்வார்கள். அவ்வளவு தவ வலிமை வாய்ந்த ஞானி. இப்படிப்பட்ட தவ ஸ்ரேஷ்டர் காமாக்ஷி ஸ்வரூப பேசும் தெய்வமான மஹா பெரியவா ஒன்று நினைத்தால் அது நிறைவேறாமல் போகுமா ?
ஆறே நாளில் தங்க விமானம் வந்து, கும்பா பிஷேகமும் அமோகமாக நடந்தேறியது. ஆதி சங்கரர் முழங்கிய கனக தாரா ஸ்தோத்ரத்தை கேட்டு ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள் ,அன்று பொன்மழை பொழிந்தாள். இன்று
பல ஏழைப் பெண்மணிகள் அம்பாளாகவே உருவெடுத்து மனதால் ஒன்றுபட்டு, நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தாரளமாக விரும்பி அளித்த கனகம் காமாட்சி அம்மன் விமானத்துக்கு ஒளி மயம் தந்தது. அந்த ஒளி மஹா பெரியவா முகத்திலும் வீசியது என்று சொல்லி இதை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...