Friday, January 22, 2021

thevittadha vittala

 தெவிட்டாத விட்டலா          J K  SIVAN   


         
                                                      பாப மூட்டை !!


மனித  ஸ்வபாவத்தில்  பொறாமை முக்கிய  பங்கு கொண்டது.   பிறரது அழகு, சந்தோஷம், செல்வம், அந்தஸ்து, தாராள மனப்பான்மை, சாமர்த்தியம்  எதைக் கண்டாலும் நம்மிடம் அது இல்லையே  என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.   நெருப்பு   எப்போதுமே  அருகிலே உள்ளதை தான்  முதலில் அழிக்கும்,  எரித்து சாம்பலாக்கும். இந்த பொறாமைத்தீ அப்படி யல்ல.  அதைவிடக் கொடியது. 
பொறாமைப்படுபவனை அப்பளம்  மாதிரி வாட்டி வதைக்கும், துன்புறுத்தும், நிம்மதியில்லாமல் கோபப்  பெருமூச்சு  விட வைக்கும்.   ஒருவனை அப்படி வாட்டியது.  அந்த  ஆசாமியை இந்த கதையில் இன்று சந்திப்போம்.

மஹாராஷ்டிராவில்  தேஹு  கிராமத்தில்  நாளுக்கு நாள்  பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது.  அங்கே தானே  துக்காராம்  வசிக்கிறார்.  அவரது பக்தியைக்கண்டு வியந்து,  துக்காராமின் அபங்க பஜனையில் தனை மறந்து  ஆனந்த கண்ணீர் பெருக  பக்தியில்  மூழ்காதவர்களே கிடையாது.    எங்கிருந்து எல்லாமோ  வெளியூர்களிலிருந்து  அவரைப் பற்றி  கேள்விப்பட்டு   சாதுக்களும்  பாகவதர்களும்  கூட  அவரிட மிருந்து  அபங்கம்  பாட கற்றுக் கொள்ள பெருகி விட்டனர்.

ஆனால்  அதே  தேஹு  கிராமத்தில்  வாழ்ந்த  ராமேஸ்வர  பட்  என்கிறபிராமணருக்கு  இந்த துக்காராம் விஷயங்கள் கொஞ்சமும்  பிடிக்க வில்லை.   பட்  நன்றாக ஸமஸ்க்ரிதம்  அறிந்தவர். பிரசங்கங்கள் பண்ணுவார் .  அனால்  அவருடைய  பிரசங்கங்களுக்கு  உள்ளூர்  ஆட்களே கூட  வருவதில்லை,  துக்காராமின் பஜனைக்கு மட்டும்  எத்தனையோ பேர் வருவது  பட்   டுக்கு   தாங்கமுடியவில்லை. பொறுக்க வில்லை.  

துக்காராம் படிக்காதவர்,  வைஸ்யர், ஸம்ஸ்க்ரிதமே  தெரியாதவர்,  மராத்தியில்  தானாகவே  இட்டு கட்டி பாடுபவர், தன்னுடைய  அபங்கத்தால்  இந்த  ஊரையே, உலகத்தையே  கெடுக்கிறாரே!  என்று  பட் புலம்பினார். இது  பரவலாக  துக்கா ராமின்  காதிலும்  விழ,  அவர்  ஓடி சென்று ராமேஸ்வர் பட் காலில் விழுந்து  வணங்கினார்

"நான்  ஏதாவது  தப்பு செய்து விட்டேனா சுவாமி?"  

"என்னய்யா சொல்கிறீர் நீர்?  தப்பைத்  தவிர வேறொன்றுமே செய்ய வில்லையே  ஐயா  நீ.     உனக்கு  கொஞ்சமாவது சாஸ்திரம் தெரியுமா?  புராணம்  தெரியுமா?, சொந்தமாக ஏதாவது மனதில் தோன்றிய படி  கற்பனையாக  மற்றவர்க்கு  பிரசங்கம்  செய்வது  பெரும்  பாபம்.  இதை  கேட்பவர்க்கும் அந்த பாபம் போய்ச் சேருகிறதே? இதை கொஞ்சமாவது உணர்ந்தாயா?''.  கத்தினார் பட்

"அப்படியா. இது எனக்கு தெரியவில்லையே சுவாமி.  நான்  அறிவிலி, படிக்காத முட்டாள்.  நீங்கள்  நன்றாக படித்த மகான்.  தயவு செய்து  என் தவறுகளை மன்னித்து  நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்" என்று கண்ணீர் மல்க  கேட்டார் துக்காராம்.

"இனிமேல் நீ  ஒரு  அபங்கமும்  எழுதவோ  பாடவோ வேண்டாம். இதுவரை எழுதியதை எல்லாம்  தூக்கி நீரில் எறிந்து விடு.  பாபத்தை குறைத்துக்கொள் "

துக்காராம்  சரியென்று தலையாட்டி  வணங்கிவிட்டு  நேராக  பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் முன் சென்று கைகட்டி நின்றார். கண்ணீர் மல்க:

"விட்டலா,  பாண்டுரங்கா,  நான்   அறியாமல்செய்த  பிழையை  பொறுத்துக் கொண்டு  என்னை  க்ஷமிப் பாயா?    இனி  நன்றாக கற்ற  பண்டிதர்  ராமேஸ்வர் பட்    சொன்னது போலவே  நடக்கிறேன்.   எனக்கு  
உன் நாமத்தை  தவிர  வேறு  எதுவும்  தெரியாதே.   அதைத்  தானே  எனக்கு தெரிந்த  மராத்தியில் மனம்  போன  போக்கில் இத்தனை நாட்களாக   பாடிக்கொண்டு  எனை மறந்திருந்தேன்.  அந்த பெரியவர்  எப்போது  நான்  செய்வது  பாபம்  என்று  உணர்த்தி விட்டாரோ  இனியும்  அதை பண்ண மாட்டேன்.நான் செய்த தவறை மன்னித்துவிடு''.

அழுது கொண்டே  தன்னுடைய  ஒரே  செல்வமான, கண்ணின் மணியான,  விட்டலன்  அபங்கங்களை எல்லாம்  எடுத்து மூட்டை கட்டி  இந்த்ராயணி  ஆற்றில் எறிந்துவிட்டார்.   ஆற்றங்கரையில்  சோகமாக  அமர்ந்தார்.

"வெகு  நேரமாக உங்களை  காணோமே, இங்கே  அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். வாருங்கள், வீட்டுக்கு" என்று  மனைவி  ஜீஜாஅவரைத்   தேடிக்கொண்டு  அங்கே  வந்து அவரை  வீட்டுக்கு  அழைத்துப்  போனாள். சிறகொடிந்த  பறவையாக  வாய்  மட்டும்  "பாண்டுரங்கா, விட்டலா" என்று  ஸ்மரணை செய்து கொண்டே  தூங்கிப்  போனார்  துக்காராம்.  இரவு கழிந்தது. பொழுது விடிந்தது.   சில மணிநேரங்களில் யாரோ  வந்து கதவை தட்டினார்கள்.

"யார்?

"துக்காராம், துக்காராம்,   இங்கே வாருங்கள்"  என்று  உணர்ச்சி வசத்தோடு  பாண்டுரங்கன் ஆலய  
பிரதம அர்ச்சகர்  வாசலில் நின்றார்.  அவரது  கையில்  துக்காராம்  இந்த்ராயணி ஆற்றில் எறிந்த அபங்க சுவடிகளின்  மூட்டை!  

"இது என்னசுவாமி?  ஏன்,  நான் செய்த  பாபங்களை  ஆற்றிலிருந்து  மீட்டு  எடுத்து  கொண்டுவந்தீர்கள்?   என்று  அதிர்ச்சியோடு கேட்டார்  துக்காராம்.

"துக்காராம்ஜி, நாங்கள் 
யாருமே  எந்த  ஆற்றிலிருந்து  எதையும்  எடுத்து வரவில்லை. பாண்டுரங்கன்  தானே போய்  ஆற்றில் இறங்கி  இந்த மூட்டையை  எடுத்து வந்து  தன்  தலையில் சுமந்து  ஈரம் சொட்ட சொட்ட  நின்று கொண்டிருந்தார்.   இன்று காலை  வழக்கம்போல்  கதவை திறந்து  சுப்ரபாதம் சேவை செய்ய  நுழைந்த போது  இதை  பார்த்து  திகைத்தேன். கர்ப்ப கிரஹத்தில் ஒரே ஜலம் . எங்கிருந்து நீர் வழிகிறது விக்ரஹத்தின் மேல்  என்று தெரிந்தது.  என்னது இந்த  மூட்டை?  எப்படி  பாண்டுரங்கன்  தலைமேல்  வந்தது?  கதவை பூட்டியதும் திறந்ததும் நான் தானே  என்று   அதை எடுத்து அவிழ்த்துப் பார்த்த போது தான்  தெரிந்தது   அவைகள் நீங்கள் எழுதிய  அபங்கங்கள்  என்று.     எங்கோ  ஏதோ தவறு நடந்திருக்கிறது  என்று  எடுத்துக்  கொண்டு  ஓடோடி வந்தேன்.  நீங்கள்  ஈடற்ற பாண்டுரங்க  பக்தர்  என்று எனக்கு தெரியுமே  என்கிறார் கோவில் அர்ச்சகர்.

"விட்டலா,  எனை  மன்னித்து விட்டாயா. உன் கருணையே  கருணை!!". துக்காராம் ஆனந்த கண்ணீர் வடித்தார்

ஊர் முழுதும்  இந்த  அதிசயம்  காட்டுத் தீ போல்  பரவி  ராமேஸ்வர் பட் காதிலும் விழ அடித்து பிடித்து கொண்டு அவர்  துக்காராமிடம்  வந்து  கண்ணீர் பெருக காலில் விழுந்தார்.

 "நீங்கள்  எவ்வளவு  பெரிய  மகாத்மா,  பாண்டுரங்கனின்  அபிமானம்  நிறைந்த பக்தர்.  பகவானே  உங்கள்  அபங்கங்களை  ஆற்றிலிருந்து மீட்டு  தன் தலையில் சுமந்து நின்றார்  என்ற போது  என்  அறியாமையை உணர்ந்தேன்.  நானே  மகா பாபி.   பொறாமை பிடித்தவன். என்னை மன்னிக்க வேண்டும்"  என்று கதறினார்  

"அபச்சாரம்  சுவாமி.   நீங்கள்  சாஸ்த்ரங்கள் உணர்ந்த  பண்டிதர்.  பிராமணர்.  நான்  தற்குறி. அறிவிலி  என் காலில்  விழுவது அபசாரம்
.  பாண்டுரங்கா,   விட்டலா"  என்று  கண்களில்  நீர் பெருக  அவனை  நன்றியோடு வணங்கினார் துக்காராம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...