Thursday, January 28, 2021

SAPTHASTHANAM

 


திருவையாறு  ஸப்த ஸ்தானம்:திருப்பூந்துருத்தி   --

                                           



-      J K SIVAN


குடகில்  மலை உச்சியில்  அகஸ்தியர் தவமிருக்க, அருகில்  கமண்டலத்திலிருந்த நீரை நேரம் பார்த்து ஒரு காகம் கவிழ்த்தது.  காவிரி நதி பெருகி ஓடி சோழ நாடு செழித்தது.  எங்கும் வெள்ளம்போல் நீர். இந்திரன் திருவையாற்றில்  பஞ்சநதீஸ்வரனை வேண்டி, காவிரி திரும்பினாள்.   காவிரிக்கும்  குடமுருட்டிக்கும்  நீரின் நடுவே  வெள்ளையாக  நிலம் தெரிந்தது.  ஆற்று மண்ணில் வெள்ளையாக  பூவைப்போல்  நீரின் நடுவே  துருத்திக்கொண்டு   தோன்றியதால் அந்த இடம் பூந்துருத்தி என்று பெயர் பெற்றது. புண்யஸ்தலம் என்பதால் திருப்பூந்துருத்தி. புஷ்பவனநாதர்  ஆலயம்  இருக்கும் இடம் மேல பூந்துருத்தி. 

இன்னொரு  காரணம்:  சோழன் ஒருவனுக்கு  கொல்லன் பட்டறையில் துருத்தி சிவலிங்கமாக மாறி காட்சி கொடுத்ததால் என்பார்கள்.   சிவனுக்கு இங்கே  புஷ்பவன நாதர்  என்று பெயர்.  ஆறாவது திருவையாறு ஸப்தஸ்தானம். 

ஏற்கனவே சொன்னேனே,  திருமழபாடியில்  நந்திக்கு  கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. சிவனும் பார்வதியும் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.   கல்யாணத்திற்கு தேவையான அத்தனை பூக்களும்  திருப்பூந்துருத்தியிலிருந்து சப்ளை .  முதலாம்  ஆதித்த சோழன் முதல்  ராஜேந்திரன் வரை பல சோழர்கள் பராமரித்த  கற் கோவில். கல்வெட்டுகள் நிறைய கதைகள் சொல்கிறது. 
கிழக்கு பார்த்த ராஜகோபுரம்.  ஸப்தஸ்தான  ஏழு ஊர்களிலிருந்து பல்லக்குகளில் சிவன் வந்து இறங்கும் பஞ்ச மூர்த்தி மண்டபம்.

 தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணைக்கு  போகும் வழியில் கண்டியூரைத்தாண்டி  3 கி.மீ. தூரம் நடந்தால்  திருப்பூந்துருத்தி.  


பல  நூற்றாண்டுகளுக்கு முன்  ஒரு முத்துப்பல்லக்கு  ஆடிஅசைந்து கொண்டு வந்தது.  உள்ளே  ஒரு  சிறு குழந்தை. வெகு நன்றாக  பாட்டுகள் இயற்றும்,  பாடும்.   மதுரையில்  சமணர்களை வாதத்தில் வென்ற  அபூர்வ ஞான குழந்தை.  தஞ்சையை  நோக்கி  வைகைக்கரை ஓரமாக  முத்துப் பல்லக்கு வருகிறது.  திருநெல்வாயல்  சிவன் அருளிய பல்லக்கு அது.  அடியார்கள் போட்டி போட்டுக்கொண்டு பல்லக்கை சுமக்கிறார்கள்.  ஒரு முதியவர்  தானும் சுமக்க விரும்பி  தூக்கிக்கொண்டு வருகிறார். 

''பூந்துருத்தி  எங்கிருக்கிறது. அங்கே போங்கள் .  எனக்கு  திருநாவுக்கரசரை தரிசிக்கவேண்டும்'' என்கிறார் ஞான சம்பந்தர் பல்லக்குள்ளே  இருந்து .

உடல் புண்ணாக வாடி நொந்து  கயிலைக்கு நடந்த அப்பரை  சிவன் திருவையாற்றில் கொண்டு சேர்க்கிறான். அங்கிருந்து  பூந்துருத்திக்கு   நடந்து புஷ்பவனநாதரை தரிசிக்க  செல்கிறார் அப்பர்.  அங்கு அப்பர்  இருப்பார்  அவரை  தரிசிக்கவேண்டும் என்று  ஞான சம்பந்தருக்கு  ஆவல்.  

கூட்டமாக  பலர் சுமந்து அழகிய  ஒரு  பல்லக்கு பூந்துருத்தி  நோக்கி  செல்கிறது.

''பல்லக்கில்   ஞான சம்பந்தர் வருகிறார்''   என்று கேள்விப்பட்டு அந்த  ஞான பண்டிதனை வணங்க அப்பர்  பல்லக்கு அருகில் ஓடி  இறைவன் அருளால் நாமும்  அந்த ஞானேஸ்வரனை சுமப்போம் என்று அப்பர்  தானும் பல்லக்குக்கு  தோள்  கொடுத்து சுமந்து செல்கிறார். பல்லக்கு  பூந்துருத்தி நோக்கி செல்கிறது. வழியே  திருவாலம்பொழில் எனும் ஊர்.

''இங்கே  திருநாவுக்கரசர்  எங்கே  தங்கி  இருக்கிறார்?'' என்று  பல்லக்கின்  சீலையை விலக்கி  கேட்கிறார் ஞான சம்பந்தர்.  

பல்லக்கை சுமக்கும்  அப்பர்  அந்த ஞானகுழந்தையின் முக தரிசனம் பெறுவதற்காக  தன் தலையை உயர்த்தி தெய்வமே,   இந்த  அடியேனைப் பற்றி நினைவு கொண்டு கருணை புரிகிறீரே. உங்கள் அடியவன் நான் இதோ உம்மைத்தாங்கி வரும்  பெருமை பெற்றேன்'' என்கிறார்  அப்பர்.  ஒரு கணம் திகைத்த  சம்பந்தர்  பல்லக்கிலிருந்து குதித்து  

''ஆஹா  என்ன  அபச்சாரம் இது.  திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆட்கொண்ட  வீர சிங்கமல்லவா திருநாவுக்கரசர், அவர்  என் பாதம் தாங்கி வருவதா? இவர் திருவடியை நான் அல்லவா வணங்கவேண்டும் என்று திடுக்குற்றார். நாவரசரை வலம் வந்து பணியும் முன்பே   வயதானவரானாலும்  ஒரு மான்குட்டியைப் போல  துள்ளி க்கொண்டே ஞானசம்பந்தர் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செயகிறார்  திருநாவுக்கரசர். பல்லக்கு சுமந்த மற்ற பக்தர்கள் இரு ஞானிகளையும் கண்டதில் மகிழ்ந்து இருவரையும்  வணங்குகிறார்கள்.

திருநாவுக்கரசரும்   சம்பந்தரும் திருவாலம்பொழில் சிவனைப் பாடி பின்னர்  திருப்பூந்துருத்தி அடைந்தார்கள்.

இந்த க்ஷேத்திரம்  திருநாவுக்கரசரால்  உழவாரப்பணி செய்யப்பட்டது. அவர் கால் பதித்த நடந்த இந்த க்ஷேத்திரத்தில் எனது கால் படுவது அவமரியாதை என சம்பந்தர் கோபுரத்தின் வெளியே  நிற்கிறார். 
நந்தி  மறைக்கிறது.  அப்பர்  புஷ்பவனநாதரை வேண்டுகிறார்.  நந்தி சற்று  ஒதுங்கி  சம்பந்தர்  புஷ்பவனநாதர் தரிசனம் பெறுகிறார்.   அப்பர் மடத்தில் தங்கி உபச்சாரம் பெறுகிறார் சம்பந்தர்.

''பாண்டிய நாட்டில்  சமணரை வென்ற அற்புதத்தை காதர் கேட்கிறேன் சொல்லுங்கள்''.
''எல்லாம்  சொக்கநாதன் அருள்'' என்று   சமணர்களுடன் நடந்த வாதத்தை பற்றி சொல்கிறார் சம்பந்தர். பாண்டியன் முதுகு கூன்  நிமிர்ந்த அதிசயம் சொல்கிறார்.  பாண்டிய ராணி மங்கையற்கரசியின் சிவபக்தி பற்றி மெச்சுகிறார். மந்திரி குலச்சிறையாரின்  பக்தி, சிவத்தொண்டுகள் பற்றி விவரிக்கிறார்.  நாவரசர் ஆனந்தம் எய்துகிறார் .

சில நாட்கள் தங்கி விட்டு  மற்ற க்ஷேத்திர தரிசனத்துக்கு  சம்பந்தர் புறப்பட  திருப்பூந்துருத்தி  கிராம  எல்லை வரை அவருடன் சென்று வழியனுப்புகிறார்  நாவரசர்.  திருப்பூந்துருத்தியில் நடந்த  விசேஷம் இது.

மேலே  கோவில் ராஜகோபுரம் பற்றி சொன்னேன். பஞ்சமூர்த்தி அருகே   புஷ்பவனநாதரை நோக்கி  அமர்ந்திருக்கும் நந்தி சற்று விலகி இருக்கிறது. அதற்கான  காரணத்தை தான் மேலே சொல்லிய  சம்பவம்  அவசியமாயிற்று.  இங்கே  அம்பாள் பெயர் சௌந்தர்ய நாயகி.    இந்த கோவிலில்  கொற்றவை துர்க்கை  ஒரு காலில் நின்று  மகிஷாசுரனை வதைத்த  பாபம் தீர தவமிருந்து சாந்த துர்க்கையாக காட்சி தருகிறாள். அழகிய சிற்பம். இன்னொரு கண்கொள்ளாக்காட்சி.  வீணையை வாசிக்கும் தக்ஷிணாமூர்த்தி.  உள்ளே  வசந்தமண்டபம்.  கொடிமரம். பலி பீடம். 
மூலவர் சந்நிதிக்கு தெற்கே,  சோமாஸ்கந்தர் மண்டபம். நடராஜ சபை.   உள்ளே  ப்ரஹாரத்தில்  கணேசர், சப்தமாதர்கள்,  நால்வர்,   இங்கே  அமர்ந்த கோலத்தில் நாவரசர்,  அருகே  பறவை சங்கிலி நாச்சியார்கள் சமேத  சுந்தரர்  சிலைகள்.  இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடி இருக்கிறார். 


அப்பர் தேவாரத்தில் சில வரிகள் அற்புதமாக அமைந்த க்ஷேத்திரம்: 


தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்

கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம் இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ

மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்

வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்

கால்களால் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்

உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ

இறுமாந்து இருப்பன்கொலோ - ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந்
தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...