Tuesday, January 19, 2021

NATARAJA PATHTHU




 நடராஜ பத்து -     J.K. SIVAN

                                                                       
                  சிறு மணவை  நிரஞ்ஜீஸ்வரர்

சென்னை யிலிருந்து  70 கி.மீ தூரம்  தான்.   திருவள்ளூர் ஜில்லாவில்  பேரம்பாக்கத்திலிருந்து 4  கி.மீ. தூரத்தில் சின்னமண்டலி  என்ற கிராமம் தான்  அக்காலத்தில் சிறுமணவை.  சென்னை- அரக்கோணம் மார்கத்தில் கடம்பத்தூர்  ரயில் நிலையத்திலிருந்து  நிரஞ்ஜீஸ்வரர்  சிவாலயம் 8 கிமீ தூரம்.  ஒருகாலத்தில் கூவம், தக்கோலம் போன்ற ஸ்தலங்களில் இன்றும் இருக்கும்  பிரசித்தியான சிவாலயங்களில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் எத்தனையோ  சிதிலமான கோவில்களில் இதுவும் ஒன்றாகி  உள்ளூர் மக்களால்  மீண்டும் புனருத்தாரணம் செய்யப் பட்டு ஒரு சிறு கோவிலாக  இன்றுள்ளது.  கோவிலை ஒட்டி புஷ்கரணி. கோவிலை இட மூன்று மடங்கு பெரியது. சென்று தரிசித்தேன். அப்போது மனதில் தோன்றியது தான் இந்த நடராஜ பத்து பற்றி எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம்.

இருநூறு வருஷங்களுக்கு முன்பு  வெள்ளைக் காரன் ஆண்ட காலத்தில் இந்த கிராம  சிவா லயத்தில் நாள் தோறும் ஒரு  உள்ளூர்க்கார முதியவர்  வந்து அமர்ந்து  அங்குள்ள நடராஜனைக்  கண்கொள்ளாமல்  நேரம் காலம் பார்க்காமல் தரிசித்து வந்தார்.  அவரே  சிறுமணவையை சேர்ந்த  முனுஸ்வாமி முதலியார்.   மரகதவல்லி  சமேத  நிரஞ்ஜீஸ் வரனை,  சிதம்பரம்  நடராஜனாக  மனதில் தேக்கி  அவர்  இயற்றியது தான் நடராஜ பத்து.  

ஆதி சங்கரர்  திருவாலங்காடு செல்லும் வழியில் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்ததாக தெரிகிறது.  சிதம்பரம் நடராஜாவுக்கும்  இந்த  சிறுமணவை நடராஜாவுக்கும் வித்யாசமில்லாமல்  முதலியார் தில்லை நடராஜனை நினைத்து தான்  இந்த பதிகத்தை  இயற்றி இருக்கிறார்.  கொஞ்சும் தமிழில் பக்தியில் தோய்ந்த சந்தம் நிறைந்த  வார்த்தைகள்.  எளிதில் மனப்பாடம் செய்யக்கூடியவை.  அவசியம்  எல்லோரும் இதை மனப்பாடம் செய்யவேண்டும். முக்யமாக  குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும். 
இந்த பத்து பாடல்களைப்  படித்தவுடன் அங்கே சென்று தரிசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு நாள் ஒரு நண்பருடன் சென்றேன்.  யாருமே இல்லாத  ஒரு சிறிய கோவில்.

ஏதோ ஊர் மக்கள் சேர்ந்து பணம் திரட்டி அந்த சிதிலமான பழங்கோயிலை  சிறிதாக கட்டி இருக்கிறார்கள். உள்ளே நடராஜர் சிலையை முக்கியமாக  தரிசிக்க சென்றேன். ஒரு அறைக்குள் வைத்து வெளியே தெரியாதபடி மூடி பூட்டி வைத்திருந்து எனது துர்பாக்கியம்.

வெளியே  படம் இருந்தது.  அடுத்தமுறை சென்று நிதானமாக தரிசிக்க ஒரு ஆவல். கொரோனா முடியட்டும்.

அந்த பத்து பாடல்களை பொறுத்த வரை;சிவன்  மீது ஒரு  அருமையான  பாடல் திரட்டு.  படித்து, மகிழ்ந்து, மனப்பாடம் செய்ய தகுதி வாய்ந்த பக்தி தேனில் தோய்ந்த  எளிய  தமிழ் வார்த்தை கள்.  ஒவ்வொரு பாடலிலும்   அதே   கடைசி வரி   பாசத்தைக்   கொட்டுகிறதே. நெஞ்சை விட்டு நீங்க வில்லையே! என்ன நேர்த்தி! ளிமை!

'''ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே'' 

எண்ணற்ற  பக்தர்கள்  சிவனை  வணங்கி வாழ்த்தி  பாடியுள்ளனர் என்றாலும்  ஒரு சிலர்  பாடல்கள் அபூர்வ சக்தி வாய்ந்தவை.  அத்தகைய பாடல்களை   அடையாளம் கண்டு  நாம்  என்றும்  மறவாமல்  நம் மனதில் இருத்தி,  நிறுத்தி, சுவைத்து, பாடுகிறோம்.    தமிழை   எளிமையாக   எழுதுவதின்  மூலம்  பக்தி உணர்வைக் கொண்டு வரமுடியுமா?    எளிதாக எழுதினாலும்  என்றும்  அப்படியே  நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும்  வலிமை பக்திபூர்வமான  எழுத்துக்கு உண்டே!
 
சிலர்  தனக்கு  வேண்டியதை  பணிவோடு  கேட்பார்கள்.  சிலர்  உரிமையோடு  அதட்டிக் கேட்பார்கள்.     ரெண்டும்  சிவனுக்கு  பிடிக்கும்.  ரெண்டாம் வகையில்  அமைந்த  ஒரு  பாட்டுத் தொகுப்பு தான்  ''நடராஜ பத்து''.  

முனுசாமி முதலியார்  சிதம்பரம் நடராஜனை என்ன சொல்லி அழைக்கிறார்? 

நீ தான்  மண்,  விண் என்ற பஞ்சபூதம். நான்கு வேதங்களின் வடிவம். சந்திர சூர்யன், கங்கைமுதலிய ஆறுகள், அக்னி, பதினான்கு லோகங்கள், ஆணும் பெண்ணும்,ரெண்டும் சேர்ந்ததும் நீயே தான். எல்லா உயிர்களும் நீ தான். ஒன்றாக பலவாக காண்பவன். வித்யாசங்கள் இல்லாதவன், காலிலிருந்து தலை  வரையில் எல்லாம் நீ. பெட்ரா தாய் தந்தை, பொன், பொருள், இருட்டு வெளிச்சம், என் குரு,  நவகிரஹங்கள் நீ.  இந்த பூமியை படைத்த தாய். எண்ணற்ற  ஜீவராசிகளை பெற்றவள் நீ. அம்மையப்பன்.  அப்பா  ஈஸா , சிவகாமி மணாளா, என்னைப்பெற்ற தாயே,  சிதம்பரம் நடராஜா......என்பது முதல் பாடல்:  


பாடல் : 1
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பேன்  
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே ''


இந்த உலகமே  எக்கணமும் அசைவில் இயங்குகிறது.  வரிசையாக  எதெல்லாம்  ஆடுகிறது என்று ஒரு லிஸ்ட் தரட்டுமா?  மான்,  உன்னிடம் இருக்கும் மழு, உன் தலையில் சந்திரன்,  கங்கை, உன் இடப்பாகத்தில் இருக்கும்  உமை , உன் அருகே உள்ள விஷ்ணு, பிரமன், வேதங்கள், பெரும் சமுத்திரங்கள் அவற்றின் அலைகள் , நவகிரஹங்கள், மேலும் கீழும் உள்ள லோகங்கள்,   உன்  மகன்கள்  யானை முக  விநாயகன், சுப்பிரமணியன்,   உன் காது தோடுகள், நீ உடுத்தீய  புலித்தோல் ஆடை.   சைவசமய  குரவர்கள் , இந்திரன் முதலான தேவர்கள்,  சகல முனிவர்கள், ரிஷிகள்,  எட்டு திக்கையும் காக்கும் திக் பாலகர்கள்,  நீ அணிந்த கொன்றை, தும்பை, அருகம்புல்,  உன் வாகனம் நந்தியும் ஆடுகிறது.  அரம்பை ஊர்வசி முதலான அனைத்து நாட்டிய பெண்களும் ஆடுகிறார்கள்.  நான் என் கர்மவினை அகல உனைப் பாடுகிறேன்,  அதைக் கேட்டு நீ ஆடிக்கொண்டு சீக்கிரம் வா  ஈஸா,சிவகாமி நேசா, எனைப்  பெற்ற சிதம்பரேசா. 
 
பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

மீதி எட்டு பாடல்களை தினமும் ரெண்டு ரெண்டாக தருகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...