Thursday, July 25, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J K SIVAN
12ம் நாள் யுத்தம்

''சிங்கக்குட்டி மறைந்தது''
மஹா பாரதத்தில் ஒரு எழுத்தைக் கூட இது தேவையில்லை என்று விடமுடியாது.அற்புதமான வியாஸ காவியம் என்பதால் தான் காலம் காலமாக என்றும் உயிரோட்டம் உயிரூட்டம் எல்லாமே நிறைந்து நம்மை இன்பமுறச் செய்கிறது.

துரியோதோனனுக்கு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றினால் போல் இருந்தது. இருக்காதா பின்னே? எவரைப் பார்த்தாலும் எங்கு கேட்டாலும் அர்ஜுனன் பிரதாபம். சம்சப்தகர்களை தனி ஒருவனாக எதிர்த்து வென்று கொன்றது, ராக்ஷச ராஜன் பகதத்தனை கொன்றது எண்ணற்ற கௌரவசெனையை அழித்தது. துரோணரின் திட்டத்தை தவிடு பொடியாக்கியது. கிருஷ்ணனுடன் நெருங்கிய நட்பு.......

"ஆச்சார்யாரே, உங்கள் மீது ரொம்பவே வருத்தம் எனக்கு. நீங்கள் எவருமே உங்களை எதிர்க்க முடியாத வீரர். இரு முறை உங்கள் எதிரே யுதிஷ்டிரன் போரிட்டாலும் அவனை நீங்கள் வென்று சிறைப் படுத்த வில்லை. எனக்கு கொடுத்த வாக்குக்கு அர்த்தமே இல்லை. மனது வைத்திருந்தால் செய்திருக்கலாம். உங்களை எவரும் தடுக்க முடியாதவர் நீங்கள். ஏனோ தெரியவில்லை...சொன்ன வாக்கை மீறி விட்டீர்கள். அர்ஜுனன் மீது பாசமாக கூட இருக்கலாம்..?

''துரியோதனா, என்னிடமே இப்படி பேசுகிறாயே. கிருஷ்ணன் இருக்குமிடம் வெற்றியை தவிர வேறொன்றும் அறியாது என்று சொன்னேன். நீ கேட்க வில்லை. அர்ஜுனன் கிருஷ்ணன் இருவருமே தெய்வீக சக்தி வாய்ந்தவர்கள் வெல்வது கடினம் என்றேன். நம்பவில்லை. இன்று நான் அர்ஜுனனை கொல்வேன். அர்ஜுனனை முடிந்தால் யுத்த களத்திலிருந்து இன்றும் வெளியேற்று. எப்படியும் யுதிஷ்டிரனை பிடித்து விடுகிறேன்.'' என்றார் த்ரோணர்.

துரோணர் தனது சேனையை சக்ர வியூகமாக செய்தார். தானே முதலில் நின்று காத்தார். அவர் அருகில் துரியோதனன் மகன் லக்ஷ்மணன் துணை நின்றான் . பக்கபலமாக கர்ணன், துரியோதனன், துச்சாதனன், விகர்ணன் கிருபர், ஆகியோர் பெரும் படையோடு பாண்டவ சேனையை எதிர்த்தனர். கௌரவ சேனைக்கு பின் பலமாக சகுனி, பூரிஸ்ரவஸ், அச்வத்தாமன் ஆகியோர் நின்றனர்.

எதிரே பாண்டவ சேனையில் பீமசேனன் முதலில் நின்றான். அவனை அடுத்து சாத்யகி, சேகிதானன், திருஷ்ட த்யும்னன், குந்திபோஜன் அபிமன்யு , துருபதன், க்ஷ்த்ரதர்மன் திருஷ்டகேது நகுல சகாதேவர்கள், கடோத்கஜன், விராடன், யுதாமன்யு, சிகண்டி ஆகியோர் அணிவகுத்தனர்.

அம்புகள் மழையாக பொழியத் தொடங்கின. துரோணரின் ''ஆள் குறைப்பு திட்டம்'' துவங்கியது. யுதிஷ்டிரன் அவரை தடுக்க தக்க ஏற்பாடுகள் செய்து வந்தான்.

''குழந்தாய் அபிமன்யு அர்ஜுனன் இல்லாத குறையை நீ போக்கினாய். துரோணரை எப்படியாவது தடுத்து நாம் முன்னேறி நம் படையை சீர் குலையாமல் காப்போம்'' என்றான் யுதிஷ்டிரன்.

''பீமா, துரோணரின் அணியை பிளந்து விடு. நம் படைகள் முன்னேறி தாக்கட்டும். திருஷ்ட த்யும்னன் அவ்வாறே தாக்குதலை ஆரம்பித்தான். சாத்யகி அவனை தொடர்ந்தான்.

''நான் முன்னின்று துரோணரின் வியூகத்தை பிளந்து வழி விடுகிறேன். நீங்கள் என்னை பின் தொடருங்கள்'' என்று கிளம்பினான் அபிமன்யு.

அபிமன்யுவின் தேர், துரோணரின் சக்ர வியூகத்தை பிளந்தது. புயல் வேகத்தோடு அபிமன்யு கௌரவ சேனையை நாசம் செய்து கொண்டு புகுந்தான். நாலா பக்கமும் தன் மீது வந்த பாணங்களை தடுத்தான்.

அபிமன்யு தனது சேனையை நாசம் செய்வது கண்டு துரியோதனன் கடுங்கோபம் கொண்டான்.
''எல்லோரும் முதலில் அபிமன்யுவை தாக்கி கொல்லுங்கள்'' என்று உத்தரவிட்டான். துரோணர், அஸ்வத் தாமன், கிருபர், கர்ணன், கிரிதவர்மன் சகுனியின் மகன் வ்ரிஹத்வலன் பூரிஸ்ரவஸ் எல்லோருமாக அவனை தடுத்தனர். துரியோதனனை அபிமன்யு நெருங்காமல் விலக்கினார்கள். ஒரு பக்கம் அபிமன்யு அவன் தேர்ப்பாகன் மட்டும், எதிர்பக்கம் அனைத்து மகா வீரர்களும் என்று சேர்ந்து அவனைத் தாக்கினார்கள்.

துச்சாதனன் கிருபர் சேனையுடன் அம்புகளால் அபிமன்யுவை தாக்கினான். விவின்சதி, கிரிதவர்மன் ஆகியோர் 70 அம்புகளை விடுத்தனர். அஸ்வத்தாமன் 7 அம்புகளை அபிமன்யுமேல் வீசினான். பூரி ஸ்ரவஸ் 3 ஈட்டிகளை வீசினான். துரியோதனன் சகுனி வேறு தாக்கினார்கள். வீராவேசமாக அந்த இளைஞன் அனைவரையும் எதிர்த்தான். கர்ணன், துரோணர் கிருபர் வேறு இப்போது அவனைத் தாக்கினார்கள். கர்ணனின் கவசங்களை அபிமன்யு அறுத்தான். கடும் எதிர்ப்பு அவனுக்கு இப்போது. நெருங்கிவந்த சல்லியனை த் தாக்கினான்.

''சஞ்சயா, தனி ஒருவனாக அபிமன்யு அந்த மாவீரர்களை எதிர்த்தான் என்கிறாயே. என் மக்களின் சேனை என்ன செய்து கொண்டிருந்தது அவனை தடுக்க என்ன முயற்சி செய்தது?'' என்றான் திருதராஷ்டிரன்

"சல்லியனின் சகோதரன் அபிமன்யுவை தாக்க நெருங்கியபோது அவன் தலையை துண்டித்து கொன்றான் அபிமன்யு. அவன் தேரோட்டியும் மாண்டான். கௌரவ சேனை அவனை எதிர்க்க தடுமாறியது.

"கர்ணா, இதைப் பார்த்தாயா? துரோணர் இந்த சிறுவனை, அர்ஜுனன் மகனைக் கொல்ல விரும்பவில்லை என்று தெரிகிறது. அர்ஜுனன் மகனின் வீரத்தை மெச்சுகிறாரே தவிர நம்மை காக்க முயற்சிக்கவில்லை. நீ உடனே அவனைக் கொல்வாய்'' என்றான் துரியோதனன்.

அபிமன்யுவை எதிர்த்த துச்சாதனன் மார்பில் அபிமன்யுவின் கூரிய அம்பு தாக்கி அவன் மயக்கமாக தேர் தட்டில் அமர்ந்தான்.

''கர்ணா, சாத்யகி பீமன் ஆகியோர் அபிமன்யுவைக் காக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குள் சீக்கிரம் உன் வேலையை முடி'' என்றான் துரியோதனன். கர்ணனின் அம்புகளை அபிமன்யு தடுத்தான்.

வெறி கொண்ட கர்ணன் வேகமாக அநேக சக்தி வாய்ந்த அம்புகளை அவன் மேல் தொடுத்தான். கர்ணனின் சகோதரன் அபிமன்யுவை தாக்க வந்த போது அவன் தலை வெட்டப் பட்டு கீழே தலையின்றி விழுந்தான்.
கர்ணனும் பின் வாங்கினான். கௌரவ சேனை நிலை குலைந்தது. அபிமன்யு தனி ஒருவனாக கௌரவ சேனையை துரத்திச் சென்றான். இப்போது கௌரவ சேனை அவனை நாலாபக்கமும் சூழ்ந்து கொண்டு
தாக்கியது. பாண்டவ சேனை அவனை பின் தொடர்ந்து செல்ல முயன்றது. ஆனால் அவர்களால் அபிமன்யுவை நெருங்கிச்செல்ல முடியவில்லை.

ஜெயத்ரதன் அபிமன்யுவை காக்க வந்த பாண்டவ சைன்யத்தை தடுத்தான். ஒரு விஷயம் இங்கு ஞாபகப் படுத்திக் கொள்வோம். ஒரு முறை தவம் செய்து சிவபெருமானிடம் ஜெயத்ரதன் ஒரு வரம் பெற்றான்.

'' சிவ பெருமானே, நான் தனி ஒருவனாக பாண்டவர்களை வெல்ல வேண்டும் ''
'' ஜெயத்ரதா, அப்படியே ஆகுக. ஆனால் தனஞ்சயனைத் தவிர மற்றவர்களை நீ வெல்வாய். தனஞ்சயன் என்னிடம் பாசுபதம் பெற்றவன். அவனை உன்னால் என்றும் வெல்லமுடியாது '' என்று சிவபெருமான் அருளியதால் இப்போது ஜெயத்ரதனால் அர்ஜுனன் இல்லாத பாண்டவ சைன்யத்தை தனிஒருவனாக எதிர்க்க முடிந்தது.

இதனால் ஒரு பெரும் இழப்பு பாண்டவ சைனியத்துக்கு அன்று ஏற்பட்டுவிட்டது. அபிமன்யு பிளந்து கொண்டு சென்ற கௌரவ சேனையின் பாதையில் பாண்டவ சைனியம் பின் தொடர்ந்து சென்று அவனுக்கு உதவ வழியில்லை. சிவன் அளித்த வரத்தால் பலம் பெற்ற ஜெயத்ரதன் பாண்டவர்களை முன்னேறாமல் தடுத்து விட்டு எதிர்த்தான். சாத்யகி, பீமன், யுதிஷ்டிரன், நகுல சகாதேவர்கள், திருஷ்டத்யும்னன் எவர் எதிர்த்தபோதிலும் ஜெயத்ரதனை அகற்றி முன்னேற முடியவில்லை.

அபிமன்யுவை மகா ரதர்கள் அதிரதர்கள் பல பேர் ஒன்று சேர்ந்து தாக்கினால் .....? ருக்மரதன் என்கிற சல்லியன் மகன் எதிர்க்க வந்தான். அவன் அபிமன்யுவால் உயிரிழந்தான்.

மீண்டும் ஒரு முயற்சி. துரோணர், அஸ்வத்தாமன், துரியோதனன், கர்ணன் சல்லியன்,அனைவருமே அபிமன்யுவை எதிர்த்தனர். கடும் ஆயுதங்களை அந்த சிறுவன் சமாளித்து தடுத்தான். பதிலுக்கு தாக்கினான்.
அவன் உடல் ரத்தத்தால் சிவந்து சூரிய ஒளியில் ஜொலித்தது. துரியோதனன் மகன் லக்ஷ்மணன் அபிமன்யுவை எதிர்க்க முன் வந்தபோது அவன் தலையை அம்புகளால் துண்டித்து அவனை அபிமன்யு கொன்றான். கோபத்தோடு துக்கமும் சேர துரியோதனன் கத்தினான். '' உடனே எல்லோரும் அபிமன்யுவை கொல்லுங்கள் '' . அஸ்வத்தாமன், வ்ரிஹத்வலன் , க்ரிதவர்மன், ஆகியோரும் அபிமன்யுவை சூழ்ந்து கொண்டார்கள்.

அவர்களையும் தடுத்து ஜெயத்ரதன் சேனையையும் எதிர்த்தான் அபிமன்யு. நிஷாதர்கள் அவன் வெளியேற முடியாதபடி வழி மறைத்தார்கள். நிஷாத இளவரசன் கிராதனை அபிமன்யு கொன்றான். நிஷாதர்கள் பின்வாங்கினர்.

துரோணர் கர்ணன், அஸ்வத்தாமன் கிரிதவர்மன் ஜெயத்ரதன் வ்ரிஹத்வலன் ஆகியோர் அவனை சூழ்ந்துகொண்டு மறுபடியும் தாக்கினார்கள். கர்ணன் அவன் கவசங்களை உடைத்தான். தேர் உடைந்தது. தேர் சக்கரத்தை எடுத்துக்கொண்டு துரோணர் மீது பாய்ந்தான் அபிமன்யு. எதிரிகள் ஒன்று சேர்ந்து அந்த சக்ரத்தை உடைத்தனர். ஒரு கதாயுததை கையில் ஏந்தி அபிமன்யு அச்வத்தாமனை தாக்கினான். துச்சாதனனின் மகன் அபிமன்யுவை தனது கதாயுதத்தால் தலையில் தாக்க ஒரு கணம் அபிமன்யு மயக்கம் அடைந்தான். வீழ்ந்தான். அம்புகள் உடலெல்லாம் துளைக்க அபிமன்யு இறந்தான். பாரதத்தில் இது எல்லோர் மனதையும் பிளக்கும் சோக சம்பவம். தன்னந்தனியனாகி ஒரு மஹாவீர இளைஞன் பல அதிரதர்களை திணறடித்து உதவியின்று பின்னாலிருந்து தாக்கப்பட்டு அதை சுதாரித்த போதிலும் நிராயுதபாணியாக இருந்தபோது கொல்லப்பட்டது.கௌரவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். அபிமன்யு அன்று பீஷ்மரைப் போல் பதினாயிரம் வீரர்களை தனி ஒருவனாக கொன்றவன்.

அபிமன்யுவின் மரணத்தோடு அன்றைய யுத்தம் நின்றது.என்றான் சஞ்சயன்.

திருதராஷ்டிரன் நீண்ட பெருமூச்சு விட்டான். அதற்கு அர்த்தம் என்ன? அபிமன்யுவை கொன்றதில் திருப்தியா? அர்ஜுனனுக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற கவலையா? தன் பிள்ளைகள் உயிர்தப்ப வேண்டுமே என்ற ஆதங்கமா??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...