Monday, July 15, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்           J K SIVAN
பத்தாம் நாள்   யுத்தம்

'மா பெரும்  விருக்ஷம் சாய்ந்தது.'' ''சஞ்சயா,  எனது  பிள்ளைகளின் உயிர்  பற்றிய  கவலையில் எனக்கு  நாள் கிழமை, நேரம்,அன்னம் ஆகாரம்  எல்லாமே நினைவில் இருந்து தப்புகிறது.   இன்று  எத்தனாவது நாள்  யுத்தம் ஆரம்பித்து என்று சொல். எனக்கு மறந்து  போய் விடுகிறது....?'' அரசே,  இன்று  யுத்தம்  ஆரம்பித்து  10வது நாள்.  இன்று  காலை இரு   சேனைகளும்  யுத்தத்திற்கு தயாராக முன் கூட்டியே  திட்டமிட்டபடியே  காத்திருக்கிறார்கள் . கௌரவ சேனையை பொறுத்தவரை  இன்று மிக முக்யமான நாள்.  ஏனென்றால்  எப்படியும்  இன்று மாலை அஸ்தமனத்துக்குள்  பீஷ்மர்  பாண்டவர்களை  நிர்மூலமாக்கிவிடுவார்  கொன்றுவிடுவார், அவர்களை  வெல்வேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். என்று பேசிக்கொள்கிறார்கள் நமது கௌரவ சேனையில். ''துச்சாதனா,  அளவுக்கு அதிகமாக  பீஷ்மருக்கு பாதுகாப்பு இன்று கொடுக்கவேண்டும்.  அர்ஜுனனை எதிர்த்து அவனை இன்று  கொன்றுவிட   தாத்தா திட்டமிட்டுள்ளார்.  அவரை அந்த சிகண்டி  நெருங்காமல் அவனைச் சூழ்ந்து கொள்ளுங்கள். அவனது அம்புகளையும் ஆயுதங்களையும்  தாத்தா தொடவே மாட்டார். எதிர்த்து அவனோடு யுத்தமும் புரியமாட்டாரே.  அவர்   தங்களை அழிக்கும் முன்பு அவரை முடித்துவிட  அர்ஜுனனும்  பாண்டவர்களும்  திட்டத்தோடு வந்திருக்கிறார்கள்.  22 படைகள் பீஷ்மரை சுற்றி  பாதுகாப்புக்கு அமைத்தார்கள் அன்று. ''பீஷ்மர் பெண்களோடு போர் புரியமாட்டார். சிகண்டி முதலில் அம்பை  என்ற காசிராஜன் பெண்ணாக இருந்து பிறகு ஆணாக மாறியவன். பீஷ்மரைக் கொல்வது ஒன்றே  வாழ்வின் லட்சியமாக கொண்டவன். சிங்கத்தை நரி தாக்கி கொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றான் துரியோதனன். எதிரே பாண்டவ சேனையில்  சிகண்டியையும் அர்ஜுனனையும்  பாதுகாக்க  அவனது தேரின் இடது பக்க சக்கரம் அருகில்  யுதாமன்யுவும்,   வலது சக்கரம் அருகில்   உத்தமௌஜாவும் துணையாக உள்ளார்கள். பாண்டவ சேனையில்  எதிரே  நோக்கிய  அர்ஜுனன்  ''திருஷ்ட த்யும்னா,  கௌரவர்கள்  சிகண்டியை குறி வைக்கிறார்கள்.  எனவே  நானே  சிகண்டியின் உயிரை பாதுகாக்கிறேன். அவனை என் முன்னே கொண்டு வந்து நிறுத்து''  என்று சொன்னான். பீஷ்மர்  அன்று  தனது சேனையை  ''சர்வதோபத்ரா'' என்ற ஒரு சதுர வியூகமாக அதன் சகல பக்கங்களும் நடுவே இருக்கும் சக்தியை பெறுவதாக  நிர்மாணித்தார்.  நடுவே உள்ள சக்தியாக  தானே  நின்று அவர்களை ஊக்குவித்தார். சர்வத்துக்கும் உபத்ரவம்  கொடுக்க  இந்த  ''சர்வதோபத்ரா'' வியுகம் அமைத்தாரோ என்னவோ!! கிருபர்,  கிரிதவர்மன், சல்லியன், சகுனி, சிந்து ராஜன், சுதக்ஷிணன், காம்போஜன்,ஆகியோருக்கு  ஆணையிட்டு, அவரவர் பொறுப்பில்  யுத்தத்துக்கு  தயாராயினர். மற்றும்  துரோணர், அஸ்வத்தாமன், சோமதத்தன்,அவந்தி ராஜாக்கள்,  துரியோதனன், அவன்  சகோதரர்கள் என்ற பெருஞ்சேனை பாண்டவர்களை நோக்கி நகர்ந்தது. யுதிஷ்டிரன், பீமன், நகுல சகாதேவர்கள்,மற்றும் மாபெரும் வீரர்கள் அனைவருமே தயாராக  ஆயுதங்களோடும் கவசங்கள் அணிந்தும் ஆணைக்கு காத்திருந்தார்கள். பீமன்  அர்ஜுனன், திருஷ்டத்யும்னன்  சாத்யகி ஆகியோர் முன்னிலையில் இருந்தார்கள். காதைப் பிளக்கவோ,  வானைப் பிளக்கவோ பெரும் முரச சங்க நாதம் முழங்கியது.  கோபாக்னி
யோடு வீரர்கள் பாய்ந்தார்கள்.  சட சடவென்று  தேர்கள் முறிந்தன.  யானை குதிரை பிளிறல்கள் இருபக்கமும் காதை செவிடாக்கின.   நரிகள் பகலிலேயே கூட்டமாக  ஓலமிட்டன. நாய்கள்  ஓடின.  காக்கை, கழுகுகள், வானத்தில்  சுடச்சுட சாப்பிடுவதற்கு அன்றைய பிணத்துக்கு  வட்டமிட்டன. ஓநாய்கள் பசியோடு அலைவது கண்ணில் பட்டது.   எலும்புகள் ரத்தத்தோடு கலந்து மலையாக குவிந்திருந்தது. அரை குறை உயிரோடு படு காயப் பட்டவர்களது  கூக்குரல் மிருகங்கள் பட்சிகள் சப்தத்தோடு கலந்து ஒலித்தது.   துன்பம் துயரம் இவை பேசினால்  இது தான் அதன் குரல்.. ''திருதராஷ்டிரா,  அபிமன்யு   துரியோதனன் படையோடு  மோதி அவர்களை சாடினான். அவனது அம்புகளா அர்ஜுனன் அம்புகளா என்று  துரியோதனன் அவனது  சாதுர்யத்தை வியந்தான். துரியோதனனுக்கு உதவ கிருபர் துரோணர் இருவருடனும் அபிமன்யு போரிட்டான். துரியோதனன்  ராக்ஷசப் படையை ஏவினான்.  ''நீங்கள் அபிமன்யுவை  கொல்ல தயாராகுங்கள்.  நான் அர்ஜுனனைக்  கொல்ல  வேறு ஒரு படையை அனுப்புகிறேன்.  ஒரே நாளில் அப்பன் மகன் இருவரையும் எமனுலகத்துக்கு அனுப்புவோம்''  என்று சிரித்தான். ராக்ஷசப்  படை அபிமன்யுவை சூழ்ந்தது. ஒரு பெரும் சேனை  அபிமன்யுவை நோக்கி நகர்ந்தது. அலம்புஷன் என்ற ராக்ஷச தலைவன் பாண்டவ சேனையை சின்னா பின்னமாக்கினான். அவனை வீராவேசமாக தாக்கினான் அபிமன்யு. ''சஞ்சயா,  அபிமன்யு என்ன செய்தான், பீமன்  அர்ஜுனன் கடோத்கஜன் இவர்கள் எப்படி நம் சேனையை தாக்கினார்கள் என்று பார்த்துச் சொல் சீக்கிரம்?  என்றான் திருதராஷ்டிரன். அபிமன்யுவுக்கும்  அலம்புஷனுக்கும்  வெகு நேரம் யுத்தம் நடந்து, அந்த ராக்ஷசனின் தேர் உடைந்து, குதிரைகள் மாண்டு,  அவன் கவச கிரீடங்கள் நொறுங்கி அவன் ஓடிவிட்டான்.  இதை கவனித்த பீஷ்மர்  அபிமன்யுவை தாக்க முனைந்தார்.  பீஷமரையே  குறிவைத்த  அர்ஜுனன் அவர்  தனது மகன் அபிமன்யுவை தாக்கி கொல்ல  முற்படுவதை கவனித்து அங்கே சென்று அவரை தடுத்தான். மீண்டும் அவர்களுக்குள் ஒரு போர்.  பீஷ்மரைச்  சுற்றி கௌரவ சேனையின் மிகப் பலம் வாய்ந்த ஒரு சேனை அவருக்கு துணையாக நின்றது. சாத்யகி  கிருபரை தாக்கி தனிமைப் படுத்தினான். திருஷ்ட த்யும்னன்  துரோணரை கடுமையாக  அம்புகளால் தாக்கினான்.  சாத்யகியின் அம்புகள்  அஸ்வத்தாமனை  சோர்ந்து மயக்கமடையச் செய்தன. ''சஞ்சயா,  துரோணர் அர்ஜுனனோடு கோபமாக  யுத்தம்  செய்கிறாரா என்று பார்த்து சொல். அவருக்கு அவனிடம் எப்போதும் ஒரு தனிப்பட்ட பாசம் உண்டு.'' ''இல்லை,  இல்லை,  எதிரிகளாக பாவித்து  இருவரும்  அசகாய சூரத்தனத்தோடு  மோதுகிறார்கள். அர்ஜுனனை எதிர்க்க  திரிகர்த்தர்கள் அங்கே கூடி அவனை தாக்கவே  அவன் அவர்களை கடுமையாக  அம்பு மழை பொழிந்து வீழ்த்திக் கொண்டிருக்கிறான்.  பல பேர் இப்போது அர்ஜுனனை ஒன்றாக எதிர்த்தார்கள். அஸ்வத்தாமன், சுதக்ஷ்ணன், விந்த அனுவிந்தர்கள், வல்ஹிகன், பகதத்தன், ஸ்ருதயுஷ், பூரிஸ்ரவஸ்  இத்தனை பேர் அர்ஜுனனை  தாக்குவதை பீமன் பார்த்துக் கொண்டா இருப்பான்?. அவன் தனது சைன்யத்தோடு அங்கே நுழைந்தான்.  போர்  திசை திரும்பியது.  பீமனது வருகை  அவர்களை  கதிகலங்கச் செய்தது.  அவனை எதிர்ப்பதிலும் தங்களைக் காத்துக் கொள்வதிலும்  மும்முரமாக இருந்தார்கள்.. ''உச்சியில் சூரியன் நின்றபோது  பீஷ்மர் பாண்டவர்களை  சுட்டெரித்துக் கொண்டிருந்தார் '' என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்  சொன்னான். அர்ஜுனன்  தீர்மானித்து விட்டான். அதிக சக்தி உள்ள  பாணங்களை  உபயோகித்தால். பீஷ்மர்  பிரமித்தார்.  கண் இமைக்கும் நேரத்தில் பீஷ்மரை பாதுகாத்த  கௌரவ  .கிருஷ்ணன் நிலைமையை   பீஷ்மர் எதிரே நேருக்கு நேராக  கொண்டு சென்றான். இனி பீஷ்மர்  அர்ஜுனனால் தாக்குதலில் இருந்து தப்ப  முடியாது. '' இன்னும் சற்று  நேரத்தில்  பீஷ்மரா  நானா என்பது முடிவாகும். என்னால் பீஷ்மரை வெல்ல  முடியாது.  .கொல்லமுடியும்.  அதுவும் அவர் நிராயுத பாணியாக  வில்லைக் கீழே போட்டால் மட்டும். நான் மட்டுமல்ல, மூவுலகத்திலும் எவராலும் கிருஷ்ணனைத் தவிர  அவரை வெல்ல
முடியாது.   சிகண்டி  அவரை கொல்ல தவமிருந்து பிறந்தவன்.  திருஷ்டத்யும்னன்  அர்ஜுனன் சிகண்டி மூவருமே  பீஷ்மரை அம்புகளால் தாக்கிக் கொண்டிருந்தனர். சிகண்டியை  பீஷ்மர் தாக்க வில்லை.   மூன்று ஈட்டிகளை திருஷ்டத்யும்னன் பீஷ்மர் மார்பில் எறிந்தான். கைகள், தோள்கள், மார்பு எல்லா இடத்திலும் அம்புகளை தாங்கி அவற்றை உடைத்து பீஷ்மர் அவர்களை திருப்பி  கடுமையாக தாக்கினார். நெருப்பு  காய்ந்த மூங்கில் காட்டை  எரிப்பதைப்போல    அவர் பாண்டவ சைனியத்தை அழித்தார்  என்று  சொல்லலாம்.  துருபதன் 25 ஈட்டிகளை பீஷ்மர் மேல் எறிந்தான். விராடன் 10  பெரிய  அம்புகளை அவர் மேல் வீசினான்.   சிகண்டி 25 ஈட்டிகளை அவர்மேல் எறிந்தான். பீஷ்மர்  உடல் பூரா ரத்தம் சூழ  சிவப்பாக நின்றார்.  சிகண்டியை தவிர அவர்கள் அத்தனைபேரையும் சுலபமாக  திருப்பி அடித்தார். நீண்ட நேரம் போர் நடந்தது.  தன்னை  துளைத்த  பாணங்களில்  எது அர்ஜுனனுடையது எது சிகண்டியுடையது என்று பார்த்து  மார்பில் அர்ஜுனன்பாணங்கள்  துளைக்காதவாறு   தடுத்த்துக் காத்துக்   கொண்டார். திருஷ்ட த்யும்னன் தலைமையில்  பாண்டவ சேனையின் பெரும்பகுதி பீஷ்மரை தாக்குவதில் முனைந்திருந்தது.   கௌரவ சேனையை பாண்டவர்கள் த்வம்சம் செய்வதை கவனித்த துரியோதனன் ''தாத்தா  எங்கே உங்கள் வீரம், வெல்லுங்கள் அவர்களை, கொல்லுங்கள்'' என்று கத்தினான்''
துரோணர் சல்லியன் கிருபர்  ஆகியோரையும் கடும் சொல்லால்  விரட்டினான்.  ரத்த ஆறு தான் வேகமாக ஓடியதே தவிர வெற்றி தோல்வி  யாருக்கு என்று சொல்ல முடியவில்லை. சுசர்மன் தலைமையில் வந்த திரிகர்த்த படைகளை கும்பலோடு  நொறுக்கினான்  அர்ஜுனன். சுசர்மனின் அம்புகள்  70  கிருஷ்ணனையே தாக்கின.  சுசர்மன் படை பின்வாங்கவே  துரியோதனன் அங்கே அர்ஜுனனை எதிர்க்க வந்தான்.   அவனை முந்தி பீஷ்மர் அங்கே நின்றார். சாத்யகி கிரு தவர்மனையும், துருபதன் துரோணரையும் பீமன் வல்ஹிகனை , அபிமன்யு  சித்ர சேனனையும்  காயமுற்று விலகச் செய்தனர். சிகண்டியை  அர்ஜுனன் தனக்கு முன்பாக நிறுத்திக் கொண்டான். அவனது தேரின் இரு பக்கங்களிலும் பீமனும் அபிமன்யு, கடோத்கஜன் , சாத்யகி,   சேகிதானன் ஆகியோர் அவனை எவரும் தாக்காதவாறு பாது காத்தனர். பின்புறம்  திருஷ்டத்யும்னன் துருபதன் விராடன் ஆகியோர்  துணை இருந்தனர்.
கிருஷ்ணன்  தேரை பீஷ்மன்   அருகில் கொண்டு  சென்றான். கௌரவப் படை  அர்ஜுனனையும்  சிகண்டியையும் சரமாரியாக தாக்கியது. அர்ஜுனன் அவர்கள் அத்தனை பேர்  எதிர்ப்பையும் தடுத்து  சிகண்டியின் மீது எந்த  ஆயுதமும் தாக்காதவாறு காத்தான்.  சிகண்டியோ  பீஷ்மரை சரமாரியாக  தாக்கிகொண்டிருந்தான்.அவன் அம்புகளை எதிரே  பீஷ்மர்  தடுக்கவில்லை.   தனது உடல் மீது அவற்றை தாங்கி கொண்டார். அவர் மீது சிகண்டியின் அம்புகள் ஆயுதங்கள் படாதவாறு பகதத்தன் கிரிதவர்மன், கிருபர் ஆகியோர்  தடுத்தனர்.  அவர்களுக்கு அடுத்த வரிசையில்  சுதக்ஷணன் நின்று  தடுத்தான். மகத நாட்டு ஜெயத் சேனன் ஆகியோர் பீஷ்மரை பாது காத்தார்கள். பீஷ்மரின் அம்புகள்  அர்ஜுனனையும் மற்றவர்களையும்  கடுமையாக தாக்கியதில் அவர்கள் அதை சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது. ''சஞ்சயா,  பீஷ்மர்  எப்படி  அர்ஜுனநோடும் மற்றவர்களோடும் யுத்தம் புரிந்தார் என்று சொல். கேட்கவே வீராவேசமாக இருக்கிறது '' என்றான் திருதராஷ்டிரன். பீஷ்மர் அம்பு சென்ற இடமெல்லாம் உயிர்பலி வாங்கியது.  பாதிக்கு மேல்  பாண்டவ  சைனியத்தை அழித்து விடுவார் அவர் ஒருவரே என்று ஆகிவிட்டது. வெறித்தனமாக வாழ்வா சாவா என்ற போரில் சிகண்டி மூன்று கூறிய  ஈட்டிகளை பீஷ்மர் மேல்  வீசினான். சிகண்டியிடமிருந்து வந்த ஆயுதம் என்பதால்  பீஷ்மர் அதை தொடவில்லை. அப்படியே வாங்கிக் கொண்டார். ''சிகண்டி,  நீ  என்னை எவ்வளவு துன்புறுத்தினாலும் தாக்கினாலும் நான் உன்னை தாக்க மாட்டேன். கவலைப் படாதே'' என்றார் பீஷ்மர். ''பீஷ்மரே, நீங்கள் என்னை தாக்கினாலும் தாக்கா விட்டாலும் எனக்கு நீங்கள்  செய்த துரோகத்துக்கு உங்களை உயிரோடு விட மாட்டேன்'  என்றான் சிகண்டி. மேலும் ஐந்து கூறிய  ஈட்டிகளை அவர்மேல் வீசினான். ''சிகண்டி  பீஷ்மரை  கண்டு  நீ   பயப்படாதே. உன்  உயிரைப் பற்றி கவலைப்படாதே.  நீ  உன் பாணங்களை விடாமல் அவர்மேல்  எய்துகொண்டிரு.   நான்  உன் பின் பலமாக இருந்து மற்றவர்களையும்  பீஷ்மரையும்  தாக்குகின்றேன்.  எனது அம்புகள் அவருக்கு தெரியும் அவர் அதை தடுப்பார். என் மீது பதில் தாக்குதல் செய்வார். அதைக்கண்டு நீ  கலங்காதே. உன்னையும் என்னையும்  நான் பாதுகாப்பேன்''  என்றான் அர்ஜுனன். துரோணர், அஸ்வத்தாமா, கிருபர், துரியோதனன் சித்திரசேனன் அவந்தி ராஜாக்கள், பகதத்தன் அனைவரையும் நான்  எதிர்ப்பேன். நீ உன் வேலையைச் செய்'' என்றான் அர்ஜுனன்.  திரிகர்த்தர்கள் பலமாக தாக்கினார்கள். அவர்களையும்  பதிலுக்கு  அதிக பலத்தோடு தாக்கினான் அர்ஜுனன். ''சஞ்சயா,  சிகண்டி என்ன செய்கிறான் பார்த்து உடனே சொல்'' என்றான் திருதராஷ்டிரன். என் வீரர்கள்  சிகண்டியை தாக்குகிறார்களா, அவனைக் கொல்ல  என்ன முயற்சி செய்கிறார்கள்?  அர்ஜுனன் அவர்களை  சிகண்டியை தாக்காமல்  எப்படி தடுக்கிறான்? காது செவிடு படும்படியாக ஒரே சத்தம் எங்கும். ஓலம். கூக்குரல்.  ஆயுதங்களின் உராய்வு.  மிருகங்களின் பயத்தால் விளையும்  சப்தம். அர்ஜுனனன்   கௌரவ சேனையை விலகி  பின் வாங்கச் செய்தான். சிகண்டி அந்த நேரத்தை பயன் படுத்தி பீஷ்மரை விடாமல்  தாக்கிக் கொண்டு இருந்தான். நேரம் நழுவியது.   துரியோதனன்  பீஷ்மரை கோபத்துடன் பார்த்தான். ''பீஷ்ம பிதாமகரே,  அர்ஜுனன் நமது படையை அழித்து அலங்கோலம் செய்கிறான். இன்னும் அவன் மேல் ஏன் கருணை. அவனைக் கொல்லுங்கள் '' என்று துரிதப் படுத்தினான். பீமன் ஒருபுறம்  காட்டை அழிக்க மரங்களை அகற்றுவதைப் போல், யானை, தேர்கள், குதிரைகள் எல்லா வற்றையும் எதிர்த்து வீரர்களைக்  கொன்று முன்னேறினான். அபிமன்யு அவனுக்கு  பக்க துணையாக இருந்தான்.  கடோத்கஜன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் மூவருமாக துரோணரை பீஷ்மரிடம் நெருங்காதவாறு  தடுத்து தாக்கினார்கள். i ''துரியோதனா, உன்னிடம் என்ன சொன்னேன்.  ஒவ்வொருநாளும் குறைந்தது 10, 000 பாண்டவ சேனா  வீரர்களைக் கொல்வேன் என்றேன். அவ்வாறே செய்தேன். இன்று  இன்னும் அதிகமாகவே அவர்களை சேதப் படுத்துவேன். பாண்டவர்களைக்  கொல்வேன்,  அல்லது நான் கொல்லப்படுவேன். உனக்காக என் உயிரையே விட்டு வீராவேசமாகப்  போர் புரிவேன். இது நிச்சயம்.''  என்றார் பீஷ்மர். புயலாக தேரில்  பாண்டவ சேனையை  சென்று கலக்கினார்  பீஷ்மர். இன்று பீஷ்மரின் உடலில் பல காயங்கள். எல்லாம் சிகண்டியின் கை வேலை. ''சிகண்டி,  பீஷ்மரை நெருங்கு'' என்றான் அர்ஜுனன்.  இரு கைகளாலும் பாணங்களை விட்டு  எங்கும் தீப்பிழம்பாக  அம்புகளைப் பொழிந்தான் அர்ஜுனன்.    சிகண்டி  அர்ஜுனன் தந்த  ஆதரவில்  பீஷ்மரை குறி வைத்து தாக்கினான். எண்ணற்ற அம்புகள் ஆயுதங்கள் பீஷ்மர் மேல் தாக்கின. எல்லா பாண்டவ  சேனைத் தலைவர்களும்  பீஷ்மரை தாக்கினார்கள். அவர்களை தடுத்த பீஷ்மர்  சிகண்டியை மட்டும் லட்சியம் செய்யாமல் அவனது தாக்குதலை தடையின்றி அனுமதித்தார்.உடலெல்லாம் துளைக்கப்பாடு  ரத்த ஆறு அவரிடமிருந்து உற்பத்தி ஆயிற்று.  பீஷ்மரை பாதுகாக்கும் பணியில் துச்சாதனன் ஈடுபட்டு துணிந்து அர்ஜுனனிடம் மோதினான். அர்ஜுனனின் அம்புகள் அவனை  ரணப்படுத்த தேர் ஒடிந்து, வில்லிழந்து அவன் பீஷ்மரின் தேருக்கு ஓடினான். வாய்ப்பு இருந்தும் அர்ஜுனன்  துச்சாதனனைக்  கொல்ல வில்லை.  அது பீமன் வேலையாயிற்றே என்று விட்டு விட்டான்.
சூரியன் கொஞ்சம்  கொஞ்சமாக  மலைவாயில் மேற்கே விழுமுன் பீஷ்மரை கொல்லவேண்டும்  என்று தீர்மானித்தான்  அர்ஜுனன். நேரம்  நெருங்கி விட்டது.  மிகத்  தீவிரமான தாக்குதல் தொடர்ந்தது.  பீமனை துரோணர், பகதத்தன், கிருபர், சல்லியன், கிரிதவர்மன் அவந்தி அரசர்கள், ஜெயத்ரதன் ஆகியோர்  சூழ்ந்து தாக்கினார்கள்.  துரியோதனன் தனது சகோதரர்களோடு மிகப் பெரிய  படைபலத்தோடு  பீஷ்மரை  சிகண்டி தாக்காமல் தடுக்க முயற்சித்தான். அர்ஜுனன் கடுமையான அம்புகளால் பீஷ்மரை தாக்கினான். அவனது அம்புகளை  பீஷ்மர் எதிர்த்து போராடினார். சிகண்டி விடாமல் அவரை அம்புகளால் துளைத்துக் கொண்டிருந்தான்.  துரியோதனனை  அபிமன்யு எதிர்த்தான். பீஷ்மர்  அர்ஜுனனின் அம்புகளை ரசித்து  எதிர்த்து,அவற்றை தடுப்பதிலேயே  ஈடுபட்டார். அந்த நேரத்தில்  முன்னேற்பாட்டின் படி  சிகண்டியின் அம்புகள் அவரை  கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு  வந்தான்.  பீஷ்மரை மரணம் அவராக எதிர்கொண்டால் ஒழிய நெருங்காதே.  துரோணரை எதிர்த்த திருஷ்டத்யும்னன் அவர் பீஷ்மரை நெருங்க விடாமல் தாக்கினான். கடும்போர் ஒன்று அங்கு நிலவியது. துரோணருக்கு உதவ அஸ்வத்தாமன் சேர்ந்து கொண்டபோது அவனை அபிமன்யுவும் கடோத்கஜனும் தாக்கினார்கள். அர்ஜுனனை தாக்க  இப்போது பகதத்தன் சேர்ந்து கொண்டான். பகதத்தனின் யானையை அர்ஜுனன் கொன்றான். ''சிகண்டி  நீ பீஷ்மரை இப்போது தாக்கு.''என்ற அர்ஜுனன் சிகண்டியை எவரும் தாக்காதபடி அவனை பாதுகாத்தான்.  துரியோதனாதியர்களை கலங்க அடித்தான்.  சிகண்டி  பீஷ்மரை எதிர்நோக்கி முன்னேறினான். எண்ணற்ற அம்புகளை சிகண்டி  பீஷ்மர் மேல்  தொடுத்தான்.  நெருப்பாக ஜொலித்தார்  பீஷ்மர். அவர் மீது ரத்தம் சிவப்பு வண்ணம் பூசியது.  அத்தோடு மற்றவர்களை அவர் எதிர்த்துக்கொண்டிருந்தார். மார்பின் நடுவே  நிறைய அம்புகளை தாங்கினார் பீஷ்மர். அவர் சற்றும்  அயரவில்லை. சிகண்டி  உன்னைத் தவிர வேறு எவராலும் பீஷ்மரை எதிர்க்க முடியாது.  விரைந்து உனது கொடிய அம்புகளை அவர் மீது தொடுத்து அவரைக் கொல்''  என்றான் அர்ஜுனன் பீஷ்மர் அர்ஜுனனைக்  கொல்வதற்கு கடுமையான அம்புகளை  தொடுத்தார். அவற்றை அவன் தடுத்து அவர் மேல் திருப்பினான்.  இதற்குள் சிகண்டி அவரை துளைத்துக் கொண்டிருந்தான். ''எல்லோரும் பீஷ்மரை தாக்குங்கள் என்று கட்டளையிட்டான்  பாண்டவ சேனையின் தலைவன் திருஷ்டத்யும்னன்.   மின்னல் போல்  சிகண்டி  பீஷ்மரைத்  தாக்கினான். உடல் முழுதும் அவனது அம்புகளால்  துளைக்கப் பட்டு பீஷ்மர் மற்றவர்களை எதிர்த்துக் கொண்டிருந்தார். அர்ஜுனன் பீஷ்மரின் வில்லை குறி வைத்து மிகவும் சக்தி வாய்ந்த அம்புகளால் தாக்கினான். சிகண்டி முன்னேறிக்கொண்டிருந்தான்.  எவராலும் அர்ஜுனனைத் தடுக்கமுடியவில்லை. பீஷ்மரின்  கொடியை அறுத்து வீழ்த்தினான் அர்ஜுனன்.  அவரது தேரை சிதைத்தான்.  அவரது வில்லை முறித்தான். மீண்டும் மற்றுமொரு வில்லை எடுத்துக் கொண்டார்  பீஷ்மர். அதையும் உடைத்தான். பீஷ்மர் அவன் மீது செலுத்திய அம்புகளை தடுத்தான். சிகண்டி அவரை விடாமல் தாக்கினான். ''என் மரணம் நான் விரும்பினால் மட்டுமே.   அது இன்று இப்போது நிறைவேறப்போகிறது.  பாண்டவர்களை ஜெயிப்பது சுலபமல்ல. சிகண்டியை நான் நெருங்கவே மாட்டேன். அவனுடன் யுத்தம் புரியமாட்டேன். என்று அவர் மனம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. மெல்லிதாக வானில் மழைத் தூறல் அவர் மீது பொழிந்தது.  அவர் உடல் ரத்தப் பிரவாஹமாக மழை நீரோடு கலந்து வழிந்தது.  அவரது தளர்ச்சி  உடலில் தென்பட்டது.   எதிர்க்கும் சக்தியை பீஷ்மர்  முழுதும்  இழந்து கொண்டிருந்தார்.  அர்ஜுனனை அப்படியும் அவர் தாக்கிக் கொண்டிருந்தார். அவனும் அவரை சம பலத்துடன் எதிர்த்தான். தாக்கினான். மார்பிலும்  தோளிலும்  வயிற்றிலும் உடலில் ஊசிக் கண் விடாமல் சிகண்டி அவரை அம்புகளால் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தான். அவன்  வாழ்வின் லக்ஷியம் நிறைவேறிக்கொண்டிருந்தது. பீஷ்மரின் வேகம் குறைந்து விட்டது. ஒவ்வொரு வில்லாக  பீஷ்மர் எடுக்க அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்தான் அர்ஜுனன். அவருக்கு துணை வந்த துச்சாதனன் மற்றும் அனைவரையும் காயப்படுத்தி திரும்ப செய்தான்.சிகண்டியோ மழையாக அம்புகளை பீஷ்மர் மேல் தொடுத்துக் கொண்டிருந்தான். இனி தன்மீது வரும் அம்புகளை ஒவ்வொன்றாகப்  பார்த்து கொண்டிருந்தார் பீஷ்மர்.  ''ஆஹா  இவை  அர்ஜுனன் அம்புகள். என்னாலேயே சுலபமாக வெல்லமுடியாத என் அர்ஜுனன் அம்புகள்'' என்று போற்றி மகிழ்ந்தார்.  அவரது கவசத்தை உடைத்தான் அர்ஜுனன்.  வில்லை   இழந்த பீஷ்மர்  வாளை எடுத்து அர்ஜுனன் மேல் வீசினார்  பீஷ்மர். அதையும் தடுத்து ஓடித்தான் அர்ஜுனன்.  அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.  யுதிஷ்டிரன் எல்லோரும் பீஷ்மரை தாக்குங்கள் என்று கட்டளையிட வீரர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அவர் உடலில் இரு விரல்கடை இடைவெளி கூட இல்லாதவாறு அம்புகளும் ஈட்டிகளும் பாய்ந்து ரத்த வெள்ளமாக இருந்தார்  பீஷ்மர். அர்ஜுனன் இடைவிடாமல் அவரை சக்தி வாய்ந்த அஸ் த்ரங்களால்  தாக்க தேரிலே சாய்ந்தார்  பீஷ்மர். சூரிய அஸ்தமனம் வருவதற்கு முன் பீஷ்மரை முடிப்பதாக தனக்குள் சபதம் செய்து கொண்டான் அர்ஜுனன்.  சூரியன் மலைவாயில் விழும் நேரம் வந்து விட்டது. இன்னும்  வேகமாக அவரை தாக்கினான். சூரிய அஸ்தமனம் நிகழ்ந்தது.  குரு  வம்ச சூரியனும் வீழ்ந்தது. பீஷ்மர்  தேர் தட்டிலிருந்து சரிந்து  குருக்ஷேத்ரத்தில் யுத்த களத்தில் வீழ்ந்தார்.  ஒரு  மா பெரும் விருக்ஷம் வேரோடு சாய்ந்தது. குரு  வம்சத்தையே கட்டிக் காத்த மா பெரும் சக்தி, நிழல் அளித்த விருக்ஷம் சாய்ந்தது. பிரம்மச்சர்யம் காத்த தியாக உருவம்  தேவவ்ரதன் என்ற கங்கா புத்திரன், அஷ்ட வசுக்களில் ஒருவன் பிரபாசன், பூமியில்  பீஷ்மன் என்று எல்லோராலும் போற்றி புகழப் பட்டு அந்திம யாத்ரை தொடங்கினார். வானில் யக்ஷர்கள், காந்தர்கள், வசுக்கள் தேவர்கள் அனைவரும் திடுக்கிட்டு  சிலையாயினர். அர்ஜுனன் அம்பு அவர்  மார்பில் பாய்ந்து அவரை சாய்த்தது.  நல்ல வேளை  இது சிகண்டி அம்பல்ல. என் குழந்தை  மா வீரன் அர்ஜுனன் எய்த அம்பு''  என்று அதை நோக்கி மகிழ்ந்தார் பீஷ்மர். மெல்லிய மழை மரியாதையோடு வானிலிருந்து அவர்மேல் பொழிந்தது.  தேவர்கள், ரிஷிகள் கண்ணீரோ?  உடல் குளிர்ச்சி பெற்றது. ''பீஷ்மரே நீங்கள்  மாண்டீரா?  என்று வானிலிருந்து குரல் கேட்டது.  ''இல்லை உயிரோடு தான் இருக்கிறேன்''  என்றார் பீஷ்மர்.  தரையில் உடல் படாதவாறு அவரை அம்புகள் தாங்கி நின்றன. யுத்தம் நின்றது.  கௌரவ பாண்டவ சேனைகள்  அவர் அருகே சென்றன.  அவரை வணங்கினான் யுதிஷ்டிரன் அர்ஜுனன் மற்ற சகோதரர்களோடு. தொங்கிக் கொண்டிருந்த தலைக்கு உயரமாக சில அம்புகளை தரையில் பாய்ச்சி அவர் சிரத்தை அவை தாங்கச் செய்தான்.குடிக்க நீர் வேண்டும் என்றார். அவர் தாய்  கங்கையை அம்புகளால் வரவழைத்து அவர் தாகம்  தீர கங்காஜலம் வரவழைத்து அவரை திருப்திப் படுத்தினான் அர்ஜுனன்.   ''யுதிஷ்டிரா, அர்ஜுனா,  நான்  மரணமடைய மாட்டேன்.  இன்னும் சில நாளில் உத்தரயாணம்  ஆரம்பமாகும். அப்போது என் உயிர் இந்த உடலைவிட்டு விலகும். அது  வரை இங்கேயே  அர்ஜுனன் அளித்த இந்த அம்புப் படுக்கையில் சாய்ந்து இருப்பேன்.''   என்றார் பீஷ்மர். இனி பாரத யுத்தத்தில் மாபெரும் சக்தியாக இருந்த  பீஷ்மர் பங்கெடுக்கமாட்டார்.   சங்க நாதங்கள் ஒலித்தன.  பீஷ்மர் கண்களை மூடிக் கொண்டார். த்யானத்தில் ஆழ்ந்தார். ''சஞ்சயா,  என்னால் நம்பமுடியவில்லையே,  பீஷ்மர்  சாய்ந்து விட்டாரா.  எவராலும் மூவுலகிலும் வெல்ல முடியாத பீஷ்மரா  வில்லிழந்து கீழே வீழ்ந்தார்?. அர்ஜுனனா அவரை வென்றான்? பிரம்மச்சர்யத்தின் மாபெரும்  சக்தி தோற்றதா?   கௌரவ சேனையின் உயிர் மூச்சே, பலமே, இனி  இல்லாமல் போய்விட்டதா? என் இதயம் கல்.  பீஷ்மர் வீழ்ந்தார் என்று அறிந்து இன்னும் வெடிக்காமல் இருக்கிறதே?பரசுராமனால் கூட வெல்ல முடியாத தேவவ்ரதன் அர்ஜுனனால் வீழ்த்தப் பட்டாரா? அர்ஜுனனை மெச்சி அவனையே அம்புப் படுக்கை போடச் சொன்னாரா? அவனை வாழ்த்தினாரா?  என்ன இது ஆச்சர்யம்?'' என்று அரற்றினான் திருதராஷ்டிரன். துச்சாதனன்  துரோணரிடம் சென்றான்.   பீஷ்மர்  வீழ்ந்தார் என்று சொல்லியதும்  வில்லை கீழே போட்டு அவர் தேரில் வீழ்ந்தார் துரோணர். முடிவு அவருக்கு தெரிந்து விட்டது. எதை எதிர்பார்த்தேனோ அது நடந்துவருகிறது என்று முணுமுணுத்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...