Monday, July 29, 2019

NOSTALGIA KRISHNAN


என் வாழ்வில்  கிருஷ்ணர்கள் J KSIVAN கிருஷ்ணனை எப்படி வேண்டுமானா லும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். பாலகிருஷ்ணன், கருப்பு கிருஷ்ணன், நீல கிருஷ்ணன், புல்லாங்குழல் கிருஷ்ணன், தேரோட்டும் கிருஷ்ணன், நாடகமாடும் கிருஷ்ணன், பாடும் கிருஷ்ணன், கிருஷ்ணம்மா,  கீதோப தேச கிருஷ்ணன், யோக கிருஷ்ணன், மாடுமேய்க்கும் கிருஷ்ணன், சகா கிருஷ்ணன், மாய கிருஷ்ணன், கல்யாண கிருஷ்ணன், பலசாலி கிருஷ்ணன்  இன்னும் எத்தனையோ வகை. என் வாழ்வில் முதல் கிருஷ்ணன் என் அப்பா.  ஜே..கிருஷ்ணன் . அவரைப் பற்றி நான் ஏற்கனவே வர்ணனை செய்திருக்கிறேன் அதையே திரும்ப கொடுப்பது எளிது. தமிழ், ஆங்கிலம் ,ஸமஸ்க்ரிதம் எல்லாவற்றிலும் நல்ல ஞானம். வல்லுனர். கையெழுத்து ரொம்ப அழகாக இருக்கும். நீளமான மரக்கட்டை பேனா வில் நிப் nib என்று கூறாக இருக்கும். அதை iris, krishnaveni, இங்க் பாட்டிலில் தோய்த்து எழுதுவார். பால் பாயிண்ட் பேனாக்கள் பிறக்காத, தெரியாத காலம். சுகவாசி. எங்கும் நடந்தே போகிறவர். எனக்கும் அவருக் கும் குறைந்தது 45 வருஷங்களாவது வித்யாசம் என்பதால் எனக்கு நினைவு தெரிந்து அவரை கருப்பு தலையோடு பார்த்த ஞாபகம் இல்லை. கொஞ்சம் ரெட்டை நாடி. இடுப்பில் வேஷ்டியில் மூக்குப்பொடி டப்பா செருகி வைத்திருப்பார். சுட்ட அப்பளத்தில் நெய் தடவி சாப்பிடும் வழக்கம் அவரிடம் தான் முதலில் அறிந்தேன்.சந்தோஷ வேளையில் சங்கீதம் கூரையை பிய்க்கும். நல்ல சரீரம் சாரீரம் கொண்ட வர்.அவர் வீட்டில் இருந்தால் அறையில் தரையில் அவரை சுற்றி அநேக ஆண் பெண் ஸ்டுடென்ட்ஸ் டியூஷனுக்கு வருவார்கள்.  நெற்றியில் கீற்று சந்தனம். பஞ்சகச்சம். ஜிப்பா, அங்கவஸ்திரம், தலைப்பாகை,  
கோடம்பாக்கத்திலிருந்து நுங்கம்பாக்கம் வரை ஸ்லோகம் சொல்லிக்கொண்டே  நடக்கும்போது கூடவே நடந்த அனுபவம் உண்டு.

 அவரைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் பழைய விஷயங்கள் புதிது புதிதாக தோன்றுகிறது. அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு இல்லாமல் என் வயது என்னை பிரித்து வைத்து விட்டது. பிடில் வித்வானாக இருந்தவர் ஒரு முறை விழுந்து கை பிசகி அதற்கப்புறம் வயலினை தொடமுடியாமல் போய்வ்ட்டது என்று அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். பிடில் என்றால் வயலின் அப்போது. அவரிடம் படித்தவர்கள் இன்னும் சிலர் என்னோடு தொடர்பு கொள்ளும்போது எனக்கு அந்த பாக்யம் இல்லையே  என ஒரு ஏக்கம்..
கிருஷ்ணா  என்று என் மனதில் ஒரு கீரலை,  மறக்கமுடியாமல் செய்தவர்  MKT பாகவதர். கிருஷ்ணா முகுந்தா முராரே  என்று கிருஷ்ணனை அர்த்தம் தெரியாத ஒரு ஆர்வத்தோடு  பாட்டாக  அனுபவிக்க வைத்தவர். என்னை மயக்கியது, குரலா, கானமா ராகமா --  இந்த நிமிஷம் வரை தெரியாத ஈர்ப்பு.
கிருஷ்ண கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே  வாசல் திண்ணையில் உட்காரும்  அப்பாவின் நண்பர் ஒருவர். பெயர் ஞாபகம் இல்லை.  உட்கார்ந்தால், நின்றால், நடந்தால் கிருஷ்ணா என்று உணரமுடியும் என்று நிரூபித்தவர்.
எங்கள் வீட்டில் பல ரோல்களில்  பரிமளித்த முனுசாமி. அவரே நாவிதர், வைத்தியர், ஜாதகம் எழுதும் ஜோசியர்,  மேளம் வாசிக்கும் வித்வான். அவரைபற்றியும் சொல்லி இருக்கிறேன். அது வே இது: ருவலாக முகம் சுருங்கி, முன் தலை முடியிழந்து, அருகில் ரெண்டடி முன்னால் இருந்தாலே கவர்னர் பீடி மணத்தோடு, விரிசல் விட்ட பெரிய காய்ந்த கீழ் உதடுகளோடு, சுருங்கிய கண்கள்,ஒட்டிய கன்னங்க ளின் மேல் முள் தாடியோடு, விரக்தியாக ஒரு பார்வையுடன், ஐந்தடி தாண்டாத உயரம். தலையில் எப்போதுமான அடையாளம், ஒரு அழுக்கு நீல துணியில் முண்டாசு, இடது கால் தாங்கி தாங்கி நடந்து கொண்டு கையில் ஒரு பெரிய கித்தான் பை, கக்கத்தில் ஒரு சிறிய அலுமினிய பெட்டியோடு உங்களுக்கு யாராவது தெரியும் என்றால் அது தான் நான் சொல்லும் முனுசாமி.

முனுசாமியின் இன்னொரு பக்கம் கபட நாடக சூத்ர தாரி கிருஷ்ணன் வேஷம்.. பல்லாவரம் பின்னால் அப்போதெல்லாம் ஒரு கிராமத்தில் தான் முனுசாமியின் ஜாகை. அந்த ஊரில் அடிக்கடி தெருக் கூத்து நடைபெறும். அதற்கு வசனம் எழுதுவது பாடுவது எல்லாமே இசை ஞானி முனுசாமி தான். முக்யமான அயன் ராஜபார்ட் , கிருஷ்ணன் வேஷம் அவருடையது தான். நாலேமுக்கால் அடி உயரத்தில் கையில் பொம்மை புல்லாங்குழலோடு தலையில் ஒரு அட்டை கிரீடம், முகம் கை மார்பு, கழுத்து எல்லாம் விஷம் போல நீல நிற சாயம், கண்கள் ஒடுங்கி முனுசாமி நடமாடி வர கோபியர்கள், பீடி பிடிப்பதை நிறுத்திவிட்டு ஆட வந்து விடுவார்கள். (கோபியர்கள் அவர் நண்பர்கள். பெண் வேஷ தாரிகள். உற்சாகமூட்ட தான் கிருஷ்ணருக்கும் கோபிகளுக்கும் கவர்னர் பீடி கொஞ்சம் தேவைப்படும். முனுசாமி உபயம்.)   மரத்திற்கு பின்னால் சென்று ரெண்டு இழுப்பு  இழுத்தபிறகு  உற்சாகம் பிறக்கும். தீவர்த்தி வெளிச்சத் தில் இரவெல்லாம் மஹா பாரதம் காட்சிகள் நடைபெறும். இதற்கு முனுசாமி எல்லாரிடமும் முன்கூட்டியே வசூல் பண்ணிவிடுவார்.
என் பள்ளி நண்பன் கிருஷ்ணன் - பட்டுநூல் கார பாஷை வீட்டில் பேசுவது எனக்கு புரியாது. அவன் அம்மா என்னை அவனுக்கு உதாரணமாக காட்டி  திட்டுகிறாள் என்பான்.  FOR  OR  AGAINST ஆ என்று  அப்போது தெரியாது. இப்போதும் புரியவில்லை. எனக்கு  பஞ்சில் இருந்து நூலாக திரிக்க தக்களி சொல்லிக் கொடுத்தவன். தென்னை ஓலையில் பாய் முடைய கற்றுக் கொடுத்து வகுப்பில் சுப்ரமணிய ஐயரிடமிருந்து காப்பாற்றியவன். அரை நெல்லிக்காய்  டவுஸர் பாக்கெட்டில் வைத்து காக்கா கடி   கடித்து கொஞ்சம் தருவான். பலப்பம்  நிறைய என்னிடமிருந்து பெற்றவன்.
நங்கநல்லூரில் முதலில் அறிமுகமானது பால்கார கிருஷ்ணன். கூப்பிடும் பெயர்  பெருமாள்.
மூவரசம் பேட்டை என்ற கிராமத்திலி ருந்து தினமும் காலையில் ஜோடு தவலையில்  (ஒரு காது மட்டும் கொண்ட, நீண்ட  தகர சிலிண்டர் உருவம்)  அதில் பாதிக்கு கீழ் பால் என்ற  வெள்ளை  திரவம்  இருக்கும்..ஒரு காது வைத்த ஆழாக்கு, அது தான் அளவு. ரெண்டு  ஆழாக்கு   எங்கள்  பாத்திரத்தில் ஊற்றி சுவற்றில் ஒரு கரிக்கோடு போட்டு விட்டு செல்வது அவன் வழக்கம். ஒரு ஆச்சர்யம். பெருமாள் நீண்ட தாக ஒரு மொட்டை கழுத்து சட்டை அணிந்தி ருப்பான், அது முழங்காலை தாண்டி கீழ் நோக்கி இருக்கும் உள்ளே  வேட்டியை மடித்துக் கட்டி இருக்கிறானா என்று இன்று வரை ரகசியம். வெறும் சட்டை மட்டும் தான் தெரியும். தலையில் ஒரு துண்டை முண்டாசாக கட்டி இருப்பான்.
நங்கநல்லூரில் என் பக்கத்து வீட்டு கிருஷ்ணன் பார்க்கும்போதெல்லாம் வென்மைப் பல் இருப்பதை காட்டிய தோடு சரி. குரல் எப்படி இருக்கும் என்று தெரியாது. அரசாங்க பஸ் கண்டக்டர்.  ஒருவேளை விசில் ஊதி ஊதி  பேச்சு மறந்து விட்டதோ?
என்னைவிட சற்று வயது குறைந்த அற்புத இளைஞனாக அறிமுகமான டாக்டர் கிருஷ்ணன் நங்கநல்லூரில் சரித்திரம் படைத்தவர். ஐங்கோணமாக ஒரு சிறிய வீடு. அதன் வாசல்கள் உள் அளவுகள் எல்லாம் சதுர செவ்வக கணக்கில் இடம் பெறாதவை. குறைந்த செலவில் அமைத்த அந்த வீடு எங்களுக்கெல்லாம் தாஜ்மஹால். சமீபத்தில் டாக்டர் கிருஷ்ணனை பார்க்கவில்லை. ஒருவேளை நங்கநல்லூரை விட்டு இடம்பெயர்ந்து விட்டாரோ. அவர் வீடும் மாறிவிட்டது.   எதிர் வீட்டு கிருஷ்ணன்  பார்த்தசாரதி. எப்போதாவது தேவைப்பட்டால் கார் ஓட்டுவார். பான்பராக் கிருஷ்ணனுக்கு கொஞ்சம் காத்து கேட்காவிட்டாலும் நல்ல ஓட்டுநர். எந்த வேளையிலும் மனம் செலுத்தி உழைப்பவர். நல்ல ஒரு கிருஷ்ணன். ஆனால்  நிறைய பேசுவார். ஜாக்கிரதையாக வாயை விடவேண்டும்.
என் உத்யோக காலத்தில் ஒரு கிருஷ்ணன். ஜகதலப்ரதாபன்.  வெளி விவகாரங்களை கவனிக்கும் வேலை. எந்த அவசர வேலையானாலும் வெற்றிகரமாக முடித்து வருவார். நிறைய பேசுவது அவரது முன்னேற்றத்துக்கு தடையாக இருந்து வேலையை இழந்தவர். அவர் ஆரூடம் ஜோசியம் எல்லாம் பார்த்து பிழைத்தார் என்று கேள்வி. கிருஷ்ணனால் முடியாதது என்ன?  இன்னொரு கிருஷ்ணன் ஆபிசில் கடைநிலை ஊழியர். எல்லோரும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று   கூப்பிட்டபோதெல்லாம் கேட்டதும் கொடுத்தவர் இந்த கிருஷ்ணன். வெள்ளை சீருடை. சிரித்த முகம் உயரமான ஒல்லி கிருஷ்ணனை மறக்க முடியவில்லை.
இன்னும் ரெண்டு மூணு கிருஷ்ணனோடு இதை நிறுத்துகிறேன். இல்லாவிட்டால் போய்க்கொண்டே இருப்பான் கிருஷ்ணன்.
நங்கநல்லூரில் என்னோடு முதியவர் சங்கத்தில் தலைவராக இருந்த ஒரு வயதான கிருஷ்ணன் ராஜாஜி கிருஷ்ணன். முசுடு. சிரிப்பில்லாத முகம். எல்லோரையும் சந்தேகப்படும் மனிதன் பொதுநல வேலைகளில், ஈடுபாடுகளில் வெற்றிகரமாக செயல்பட முடியாது என்று எனக்கு நிரூபித்தவர். தான் செய்வது சொல்வது ஒன்றே சரியானது என்று செயல்படுவர்களில் முக்கியமானவர். சிலகாலத்திற்கு மேல் இந்த வினோத கிருஷ்ணனோடு என்னால் சேர்ந்து இயங்க இயலவில்லை.ஆங்கிலத்தில் வல்லவர். கடினமான வார்த்தைகளை தேடிப்பிடித்து உபயோகிக்கும் பழக்கம் கொண்ட இந்த கிருஷ்ணன் இப்போது இல்லை.
கிருஷ்ணன் எப்படி இருப்பான், சிரிப்பான், பேசுவான், அசைவான் என்று கண்கொட்டாமல் என்னை பார்க்கவைத்த ஒரே கிருஷ்ணன்  NTR  என்ற  ராமராவ். எல்லோரும் அறிந்த திரை கிருஷ்ணன். மொட்டை அடிக்க திருப்பதி வந்த அத்தனை பஸ்களும் சென்னை தி.நகர்  பஸ்லுல்லா ரோட்டில் காலை மாலை எந்த நேரமும் வாசலில் கிருஷ்ணா என்று கூச்சல் போட்டு அவரது தரிசனத்தை பால்கனியில் பெற்று மகிழ்ந்த ஒரே நடமாடும் கிருஷ்ணன்.  உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலில்  வரும் கிருஷ்ணனை  எத்தனையோ கோடி முறை வெளியிட்டாலும் இன்றும் பார்க்க என்போல் ரசிகர்கள் கிருஷ்ணன் பக்தர்கள் உண்டே.
SR  கிருஷ்ணன், SG  கிருஷ்ணன், வெங்கட் (கிருஷ்ணன்) எனக்கு மறக்கமுடியாத தானாக தோன்றி என் முதல் கிருஷ்ணன் புத்தகம் ''விஸ்வரூபனின் வாமன கதைகளை'' வெளிக் கொண்டுவந்த காரண கர்த்தாக்கள். என் கிருஷ்ணார் பண வாழ்வில் முதல் மூன்று கிருஷ்ணர்கள்..
என்னால் ரசிக்க முடியாத மீசை, கண்ணாடி கிருஷ்ணன் சாக்லேட் கிருஷ்ணன்.  பாவம் கிரேஸி மோஹனை குறை சொல்லமாட்டேன். நல்லவர்.  கண்மூடிக்கொண்டு அவரை ரசிப்பேன். மீசை கண்ணாடி கிருஷ்ணன்  காமெடி கிருஷ்ணன் நான் தேடாத நாடாத கிருஷ்ணன்.   மற்ற எத்தனையோ கிருஷ்ணர்கள்  ஓடும் மேகங்கள். நினைவில் அப்பப்போ வரலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...