Sunday, July 28, 2019

aindham vedham

ஐந்தாம் வேதம்   ஜே கே சிவன் 
13ம் நாள் யுத்தம்   தொடர்ச்சி           

         
                                                          
                                       '' தவிர்க்க முடியாத ஒரு நிர்பந்தம்''

அடுத்த நாள் யுத்தத்தில் அர்ஜுனன்  ஜெயத்ரதனை  எவர் தடுத்தாலும் கொல்வது நிச்சயம் என்று கௌரவர்களுக்கு அவன் சபதம் செய்தது அறிந்ததும் உறுதியானது.  

''திருதராஷ்டிரா, நமது ஒற்றர்கள் பாண்டவ அணியிலிருந்து விஷயம் க்ரஹித்தனர். அங்கே அர்ஜுனன் செய்த சபத்த்தையும், அவர்கள் எழுப்பிய சங்க நாதங்களின் ஒலியும், வெற்றியை அவர்கள் வெறியுடன் பெற முனைவது பற்றியும் அறிந்து ஓடோடி வந்து துரியோதனனிடம் சேதி சொன்னார்கள். ஜெயத்ரதனுக்கு மரண பயம் வந்துவிட்டது. நாளைக்கு  தனக்கு நிச்சயம் மரணம்   என்று அறிந்த ஒருவனுக்கு எவ்வளவு பயமும், வருத்தமும் அடைவான்?

''நான் யுத்தத்திலிருந்து விலகி, என் நாட்டை நோக்கி செல்கிறேன். அர்ஜுனனிடமிருந்து உயிர் தப்புகிறேன். இல்லையென்றால் துரோணர், கர்ணன், கிருபர், துசாததனன், துரியோதனன் ஆகியோர் என் உயிரை காப்பாற்றட்டும். அர்ஜுனன் சபதம் செய்ததால் என்னை உயிரோடு விடமாட்டான். எனக்கு உடம்பு நடுங்குகிறது. நான் உடனே எங்காவது காணாமல் போகிறேன். நான் போக அனுமதியுங்கள்.அவர்கள் என்னை கண்டுபிடிக்க முடியாத ஏதாவது ஒரு இடம் செல்கிறேன்'' என்று கெஞ்சினான் ஜயத்ரதன்.

''ஜெயத்ரதா, வீணாக அலட்டிக்கொள்ளாதே. நாங்கள் இத்தனைபேரும் உன்னை பாதுக்காகிறோம். உனக்கு அர்ஜுனனால் ஒரு ஆபத்தும் வராது. தைரியமாக இரு.  அவன் உன்னை நெருங்க விட மாட்டோம்'' என்றான் துரியோதனன்.

"திருதராஷ்டிரா, இப்படி துரியோதனன் ஆறுதல் சொன்னவுடன், தைரியம் அளித்தபின், ஜெயத்ரதன் நேராக துரோணர் கூடாரத்திற்கு சென்றான், அவர் காலடியில் விழுந்து, '' குருவே, நானும் தனுர் வேதம் பயின்றவன், பல போர்களில் ஈடுபட்டு வென்றவன். அர்ஜுனனும் தங்களிடம் தனுர்வேதம் பயின்றவன். இருந்தபோதிலும் எங்கள் இருவருக்கு மிடையே உள்ள வித்யாசம் என்ன? எனக்கு ஏன் பயம தோன்றியது?
' ஜெயத்ரதா , நல்ல கேள்வி கேட்டாய். தனுர் வேத சாஸ்திரம் இருவருக்கும் ஒன்றாக தான் கற்பிக்கப் பட்டது. அர்ஜுனன் அதை தொடர்ந்து கடின யோகப் பயிற்சி அனுஷ்டித்தவன்.தவம் மேற்கொண்டவன். தெய்வ சக்தி வாய்ந்தவன் அதில் தான் உன்னைவிட அவன் சக்தி வாய்ந்தவன். உன்னை அவனிடமிருந்து காப்பது என் பொறுப்பு'' என வாக்களித்தார் துரோணர்.

'' அர்ஜுனா உன் சகோதரர்களிடமும் என்னிடமும் கலந்தாலோசிக்காமல் நீ நாளை  மாலை  சூரிய  அஸ்தமனத்துக்குள் ஜயத்ரதனை கொல்வதாக அவசரப்பட்டு சபதம் செய்துவிட்டாய். அவ்வளவு மஹாரதர்கள், அதிரதர்கள் அவனை சூழ்ந்து காக்கும்போது இது மிகக்கடினமான பொறுப்பு'' என்று வருந்தினான் கிருஷ்ணன்.

கௌரவ அணியிலும் இதே பேச்சு.  அர்ஜுனன் பரமசிவனையே தனி ஒருவனாக எதிர்த்து அவரால் மெச்சப் பட்டு பாசுபதம் பெற்றவன். துரோணர் தலைமையில் அனைவரும் ஒன்று  கூடி பிரயத்தனம் செய்து  ஜயத்ரதன் உயிரை காக்க வேண்டும்.  கிருஷ்ணன் வேறு அர்ஜுனனுக்கு துணை.  அது நமது யத்தனத்தை மிக கடினமாக்குகிறது.'' என்கிறார்கள் கௌரவ சேனாதிபதிகள்.

''கிருஷ்ணா, எவ்வளவு அதிரதர்களாக இருந்தபோதும் உன் துணையோடு நான் மோதும்போது அவர்கள் அனைவரின் சக்தியுமே என் சக்தியில் பாதி கூட ஈடாகாது என்று எனக்கு தோன்றுகிறது.'' என்றான் அர்ஜுனன்.
அன்றிரவு அர்ஜுனனோ க்ரிஷ்ணனோ கண் மூடவில்லை. அவர்கள் இருவருமே அபிமன்யுவின் மரணத்தின் சோகத்தில் கலங்கி இருந்தனர். நாளை அர்ஜுனன் சபதம் நிறைவேறியாகவேண்டும் என்று தீர்மானித்தான் கிருஷ்ணன். மேகமில்லாத வானில் பளிச் பளிச்சென்று மின்னல் . நிலம் நடுங்கியது. காற்று பலமாக வீசியது. எங்கோ சமுத்திரம் கொந்தளித்தது. கங்கை ஆற்றின் வேகத்தை ரத்த ஆறு நாளை பெறப் போகிறதா? எனக்கு நாளை வேலை அதிகம் ஓவர் டைம் என்று முணுமுணுத்தான் யமன்.

"என் அருமை சகோதரி சுபத்ரா, என் பிரிய மகளே உத்தரா, நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.அபிமன்யு ஒரு வீர க்ஷத்திரியன் என்பதை நிரூபித்து வீர மரணம் அடைந்தான். யுத்த நெறி மறந்து, தன்னந்தனியனாக நின்ற ஆயுதமின்றி நின்ற அவனை ஆறு மஹாரதர்கள் , அதிரதர்கள் ஒன்று சேர்ந்து கொன்றார்கள். அதற்கு அர்ஜுனன் நாளை பழி வாங்கப் போகிறான். காரணமாக இருந்த ஜயத்ரதனை இந்திரனே எதிர்த்தாலும் மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாது.'' என்று ஆறுதல் சொன்னான் கிருஷ்ணன். இருந்தபோதிலும் சுபத்ரையின் சோகம் தாங்க முடியாததாக இருந்தது. அரற்றினாள்

'' பீமன், அர்ஜுனன், பாஞ்சாலர்கள், விராடர்கள் இவர்கள் பலசாலிகளாக மஹா வீரர்களாக இருந்து என்ன பயன், என் கண்ணே .. ச்சே.. உன்னைக் காப்பாற்ற இயலாதவர்கள்... இனி உன் அழகிய சுந்தர  முகத்தை எப்போது காண்பேன். எனக்கு வாழ்வே, உலகமே சூனியமாக போய்விட்டதே. உத்தரைக்கு என்ன சமாதானம் சொல்வேன்?  என கதறினாள் சுபத்திரா.  கிருஷ்ணன், திரௌபதி, உத்தரை ஆகியோருக்கும் தக்கவாறு ஆறுதல் சொல்லி அர்ஜுனன் கூடாரத்தை நோக்கி நடந்தான்.

 தர்ப்பைகளை பரப்பி  அதில் அமர்ந்தவாறு அர்ஜுனன் மகாதேவனை தியானித்தான். கோவிந்தனை வணங்கினான். இதெல்லாம் கவனித்த கிருஷ்ணன்  பிறகு தனது தேரோட்டி தாருகனை அழைத்து அவனோடு தனது கூடாரத்துக்குள்  சென்றான்.  முகம் சற்று வாடி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த கிருஷ்ணன் தனது கூடாரத்தில்  சற்று நேரம் கண்மூடி யோகத்தில் ஆழ்ந்தான்.

அர்ஜுனன் சபதம் ஜயத்ரதனை கொல்வது மட்டுமல்ல. அதைவிட  ஆபத்தான  வேறு இன்றும் சம்பந்தப்பட்டது .அஸ்தமனத்துக்குள்  ஜெயத்ரதனை கொல்ல வில்லையென்றால் தீமூட்டி அதில் தான் ப்ராணத்யாகம் செய்வேன் என்றும்  அருஜுனன் சொல்லி இருக்கிறான். அர்ஜுனன் இல்லை யென்றால் யுதிஷ்டிரன் வெற்றி நிறைவேறாது.  பாரத யுத்தம்  பாண்டவர்களின் தோல்வியுடன் அப்போதே முடிந்துவிடும். பாஞ்சாலியின் சபதம் நிறைவேறாது. குந்தியின் துயரம் தீர்க்கப் படாமல் போய்விடுமே. கிருஷ்ணன் தனது தேரோட்டி  தாருகனை அழைத்தான்.
'தாருகா,  புத்ர சோகத்தில் அர்ஜுனன், அவசரப்பட்டு உணர்ச்சி வசத்தில் மிகப் பெரிய சபதம் ஒன்றை செய்துவிட்டான். அஸ்தமனத்துக்குள் நாளை அவன் ஜயத்ரதனை தனி ஒருவனாக கொல்லவேண்டும். எண்ணற்ற அக்ஷவுணி கொண்ட கௌரவ சேனை அவனை நெருங்க விடாது. அதனால் அர்ஜுனன் உயிரை தியாகம் செய்யவேண்டி வரும் . அதைத் தான் கௌரவர்களும் எதிர்பார்ப்பார்கள். அர்ஜுனன் என் சிறந்த தோழன்.    நான் அதை  நடக்க விடமாட்டேன். அர்ஜுனன் என்னில் பாதி. அவனை எதிர்ப்பவர்கள் என்னை எதிர்ப்பவர்கள். அவனுக்காக நான் போரிட வேண்டி வரும். என் சுதர்சன சக்கரத்தால் அனைவரையுமே நான் கொல்ல நேரலாம். என் சக்தியை கௌரவ சேனை நாளை உணரும். நீ நாளை பொழுது விடிந்ததும் என்னுடைய தேரை தயார் படுத்தி எடுத்துக் கொண்டு வா .என்னுடைய சார்ங்கம் என்கிற வில், கௌமோதகம் என்கிற கதாயுதம், நந்தகம் என்ற வாள் மற்ற ஆயுதங்களையும் தயாராக கொண்டுவா. தேவைப் பட்டபோது நான் உன் தேரில் ஏறிக்கொண்டு அவர்களை எதிர்ப்பேன்'' என்றான் கிருஷ்ணன் நிதானமாக..

த்ரிதராஷ்டிரா, இரவெல்லாம் அர்ஜுனன் பாசுபத அஸ்திர, ப்ரம்மாஸ்திர, வருணாஸ்திர , ஆக்னேயாஸ்திர மற்றும் பல அஸ்திர மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருந்தான். பிறகு கிருஷ்ணனை நினைத்து வணங்கிவிட்டு சற்று கண்ணயர்ந்தான். அர்ஜுனன் கனவில் கிருஷ்ணன் வந்தான். பேசினான்: ''அர்ஜுனா, துயரத்துக்கு மனதில் இடம் கொடாதே. காலத்தை, அதன் நியதியை, மனிதர்களால் வெல்லவோ மீறவோ முடியாது.துயரம் சோகம் ஆகியவை உன் வீரத்தை, தைரியத்தை, பலத்தை, பாழ் படுத்தக் கூடியவை. எதிரிகளுக்கு சாதகமானது இது. உனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்து உன் க்ஷத்ரிய தர்மத்தை கடைப்பிடி. ஜெயவிஜயீபவ'' என்றான் கிருஷ்ணன்.''

''கிருஷ்ணா, எனக்கு புரிகிறது. புத்ர சோகத்தில் நான் வேகமாக இதை சொல்லிவிட்டேன் அதை கடைப்பிடித்து தானே ஆக வேண்டும், முடியாவிட்டால் இறந்து போகிறேன் ''
''அர்ஜுனா, நீ மஹாதேவன் கொடுத்த பாசுபத அஸ்திரத்தை உபயோகி, மகாதேவனை மனதில் த்யானம் செய். நான் உன்னுடன் இருப்பேன். கவலை கொள்ளாதே.'' அர்ஜுனன் த்யானித்தான், மனதில் கைலாயம், பனிமலைகள் சிகரத்தின் உச்சியில் ரிஷபம், திரிசூலம், புலித்தோல் தரித்த வெண்ணிற நீறணிந்த முக்கண்ணன் ஜடாமகுட தாரியாக தோன்றி புன்னகை மலர்ந்தான்,. அர்ஜுனனுக்கு ஆசி வழங்கினான்'' வணங்கிய அர்ஜுனன் கண் திறந்தான். எதிரே நின்று தன்னையே கவனித்துக்கொண்டிருந்த கிருஷ்ணனை பார்த்தான்.
'' கிருஷ்ணா, நான் முடிவெடுத்துவிட்டேன். பின் வாங்க மாட்டேன். நாளை நான் ஜெயத்ரதனை எத்தனை பேர் துணை இருந்தாலும் அஸ்தமனத்துக்குள் எப்படியும் கொல்வேன். நீ என்னுடன் இருப்பதே எனக்கு பெரிய சக்தி. என்றான். கிருஷ்ணனும் புன்னகை புரிந்தான்.

பொழுது புலர்ந்தது. யுதிஷ்டிரன் கிருஷ்ணனை சென்று வணங்கினான். ''ஹ்ரிஷிகேசா, இன்று வெகு முக்கியமான நாள். எங்களுக்கு வெற்றியை பெற்று தர உன் ஆசி வேண்டும். அர்ஜுனன் ஜயத்ரதனை வென்று கொன்று உயிரோடு எங்களிடம் திரும்பவேண்டும்''

''யுதிஷ்டிரா, மூவுலகிலும் அர்ஜுனனுக்கு இணையான வீரன் இல்லை. இன்று அஸ்தமனத்துக்குள் அபிமன்யுவின் மரணத்துக்கு காரணமான ஜயத்ரதன் உயிர் இழப்பது உறுதி. அவனைக்கொன்று அர்ஜுனன் உன்னிடம் திரும்புவான் கவலை வேண்டாம். அப்போது அர்ஜுனனும் அங்கே வந்தவன் யுதிஷ்டிரனையும் கிருஷ்ணனையும் வணங்கி நின்றான். ''அர்ஜுனா உனக்கு வெற்றி உண்டாகட்டும். உன் சபதம் நிறைவேறட்டும்'' என்று வாழ்த்தினான் யுதிஷ்டிரன். கிருஷ்ணனும் ஆசி வழங்கினான்.

யுத்தம் ஆரம்பிக்க  பதினான்காம் நாள் பொழுது புலர்ந்தது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...