Monday, July 1, 2019

VIKRAMADITHYAN STORIES

விக்கிரமாதித்தன் கதை   J K SIVAN                                                                                     புலியும்  கரடியும் 
நந்தன் எனும் அரசனின் மகன் ஜெயபாலன் மந்திரிகுமாரனின் அறிவுரையை கேட்காமல்  சகுனம் சரியில்லையே,  நாளைக்கு செல்லலாம் என்று சொல்லியும் கேளாமல்  பிடிவாதமாக காட்டுக்கு வேட்டையாட சென்றான் அல்லவா?
 வேட்டையாடி பல  மிருகங்களை  கொன்ற  அவனுக்கு  ஒரு மான்  டிமிக்கி கொடுத்தது. அதை துரத்தி களைத்து போனான்.  எங்கோ வளைந்து வளைந்து  ஓடிய அந்த மானின் பின்னால் துரத்தி குதிரையை ஒட்டி,  காட்டின் ஏதோ ஒரு இருண்ட  நடு பகுதியில் தனியாக மாட்டிக்  கொண்டான்.  ''திக்கு தெரியாத காடு''  இது தான் போல இருக்கிறது.  நல்லவேளை அங்கே  ஒரு  தெளிந்த நீரோடை இருந்தது.. குதிரையை விட்டு இறங்கி, அதற்கும் நீர் காட்டி விட்டு, குடித்து, குளித்து, தாகம் தணிந்து மரத்தடியில் குதிரையை லேசாக கட்டிபோட்டுவிட்டு படுத்தான்.   திடீரென்று தூக்கி வாரிப்போட்டது.     மரத்தடியில் கட்டிப்போட்டிருந்த குதிரை சப்தத்தோடு கனைத்தது.  எதையோ கண்டு பயம்..   ஏன்?   சற்று தூரத்தில்  புதரில் இரு கொள்ளிக்கண்கள்   தெரிந்தன. ஒரு பெரிய புலி எதிரே அவன் மீது  பாய  தயாராக  இருந்தது.  கட்டியிருந்த கயிற்றை அறுத்தெறிந்து விட்டு குதிரை பாய்ந்து உயிர் தப்ப ஓடிவிட்டது..  அவன் எப்படி தப்புவது. குதிரையும் காணோமே?.
''ஆஹா  புலி மரம் ஏறாது என்பார்களே. ஒரே  தாவலில்  ஒரு  கிளையை பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். அங்கேயுமா  ஆபத்து... '' வா  தம்பி  வா என்னிடம்''   என்று  ஒரு பெரிய கரடி  அவனுக்கு மேலே உள்ள  கிளையில் இருந்ததே.   சட்டியிலிருந்து தப்பி  அடுப்பில் விழுந்த கதையாகிவிட்டதே.  இருப்பது இனி ஒரே ஒரு ஆப்ஷன்.  முடிவு,  கரடி வாயிலா , புலி வாயிலா?  அவன்  மனநிலை புரிந்தது போல்  அட கரடி பேசுகிறதே.   வாசக நண்பர்களே,  என்  விக்ரமாதித்தன் கதையில்  மனிதர்களை விட மற்றவை எல்லாம்  அழகாக, கோர்வையாகவே  பேசும். ‘ராஜகுமாரா,  பயப்படாதே. இந்த மரம் தான் எனக்கு வீடு. எப்போது புலிக்கு பயந்து என் வீட்டில் சரண் புகுந்து  விட்டாயோ,நீ இனி என் விருந்தாளி.  புலி பயம் இனி  வேண்டாம்.    அது போகும்  வரை சுகமாக காத்திருந்துவிட்டு நீ போகலாம்''.  என்ற எவ்வளவு நல்ல கரடி அது.  
‘கரடி அண்ணா, ரொம்ப  நன்றி. ஒரு உயிரைக் காப்பது சிறந்த தர்மம்.  உனக்கு  எல்லாப்  பிறவியிலும்  புண்ணியம்'' என்றான் ஜெயபாலன்.   புலி நகர்வதாக இல்லை.  இரவெல்லாம்   அங்கேயே  காத்திருந்தது.  ஜெயபாலனுக்கு கண்ணை சுழற்றியது தூக்கம்.  கெட்டியாக மரத்தை  பிடித்தபடி தூங்கலாமா? ஆனால் புலி  கரடி பயத்தோடு எவனாவது தூங்க முடியுமா? தலை சுற்றியது. புலி அவனை பார்த்துக்கொண்டே கீழே படுத்துக்கொண்டிருந்தது.  மேலே  கரடி அடுத்த கிளையில் ரயிலில் மேல்  அப்பர்  பெர்த்தில் தூங்குவது போல்  குறட்டை விட்டது.  புலி  ஜெயபாலனிடம்  மெதுவாக  பேச  ஆரம்பித்தது. ‘ஹே , முட்டாள் ராஜகுமாரா, நான் சொல்வதை கவனமாகக் கேள். அந்த கிழ  கரடியை நம்பாதே.  பிடித்தால்  விடாது. எவ்வளவு கூரான நகங்கள் பார்.   நான் இங்கிருந்து போனவுடன்   உன்னை பக்ஷணம் பண்ணப்போகிறது.   அதன் மனைவி கரடி,   அதன் ஜோடி,    வெளியே போயிருக்கிறது.  அது  வந்ததும் தான்  நீ  அவற்றிற்கு ஆகாரம்.  விஷயம் தெரியாமல்  நீ  இப்படி   அப்பாவியாக இருக்கிறாயே.'' என்றது புலி.    ஜெயபாலனுக்கு  ஒன்றுமே புரியவில்லை. யாரை  நம்புவது.? இப்படி  எல்லாம் சிக்கலில் நம்மை மாட்டி வைக்காமல்  இருப்பதற்காக தான் ,  இப்போதெல்லாம்  பறவைகள், மிருகங்கள் மரங்கள் எல்லாம்  நம்மைப் போல்  பேசுவதில்லை.  ''பையா,  நான் சொல்வதைக்  கேள்.   அதோ  மேலே  கரடியைப்  பார்.   நன்றாக  அசந்து  தூங்குகிறது.  மெதுவாக மேலே கிளைக்கு சென்று அதை  வேகமாக ஒரு  தள்ளு தள்ளி  கீழே விழச்செய். நிமிஷத்தில் அதை கொன்று விழுங்கிவிடுவேன்.  நானும் பசி தீர்ந்து  போய்விடுவேன்,   நீயும் தப்பித்து  போகலாம்.  என்ன  சொல்கிறாய்.புரிகிறதா? என்றது புலி.   ஜெயபாலன்  ரோபோ   மாதிரி புலியின் பேச்சை கேட்டு கரடியை கீழே  தள்ளினான்.அது புத்திசாலி கரடி. கீழே விழாமல் தக்க சமயத்தில்  கீழ்க் கிளையைப் பிடித்துக் கொண்டு தப்பியது. கோபத்தோடு அவனை பார்த்தது.  ''அடே  நம்பிக்கை  துரோகி.  உனக்கு தக்க தண்டனை தருகிறேன்.  பிடி சாபம்.  நீ  இந்த கணம் முதல், இந்த  காட்டில் ஒரு பைத்தியமாக அலைந்து திரிய வேண்டும்''  என்று சாபமிட்டது.  எங்கே தனது தந்திரம் தெரிந்து தன்னையும்   கரடி சபித்து  விடுமோ என்று புலி  ஓடிவிட்டது.   ஜெயபாலன் பைத்தியமாகி  விட்டான்.   ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’  என்று  சொன்னதையே சொல்லிக்கொண்டு  ஓட ஆரம்பித்தான்.  என்ன அர்த்தம் ?? ஜெயபாலன் குதிரை அவனை விட புத்திசாலி.  காட்டிலிருந்து புலியிடம் தப்பி எப்படியோ வழி கண்டு பிடித்துக்கொண்டு  வைசாலியில்  நந்தன் அரண்மனைக்கு போய்விட்டது.  என்ன இது. குதிரை மட்டும் வந்திருக்கிறது.  எங்கே  இளவரசன்?   அவனுக்கு என்ன ஆயிற்றோ என  ராஜாவும் ராணியும்  மக்களும் பதறினார்கள்.  மந்திரி பஹூஸ்ருதன்  எல்லா பக்கமும்  தேட ஆட்கள் அனுப்பினான். காட்டில்  அலைந்து கொண்டிருந்த பைத்தியக்காரன்   ஜெயபாலனை  ‘ஸஸேமிரா’ ‘ஸஸேமிரா’ என்று   கத்திக்கொண்டே இருக்கும்போது  பிடித்து,  அவன்  திணறத் திணற,  அவனைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.  நாட்டின் சிறந்த வைத்தியர்கள் அவனுக்கு  பேயோட்டினார்கள்,  மந்திரம் ஜெபித்தார்கள். மருந்துகள் கொடுத்
தார்கள்.  ஒன்றும் பயனில்லை. எப்போதும் ''ஸஸேமிரா''  ''ஸஸேமிரா'' சத்தம்.   நந்தன் மகனின்  நிலை கண்டு அழுதான். ஐயோ. தப்பு பண்ணிவிட்டேன். என் ராஜகுரு மேல் அநியாயமாக சந்தேகப்பட்டு கொன்றுவிட்டேனே. அவர் இருந்தால் இவனைக்   காப்பாற்றி விடுவாரே.'' என்று கதறினான்.   மந்திரி பஹூசுருதன்   ராஜாவுக்கு  ஆறுதல் .சொன்னான்.  ‘ மஹாராஜா, இது தான் விதி. நடந்தது நடந்து விட்டது.  இனி நடக்கவேண்டியதை பற்றி சிந்திப்போம்'' என்றான். ''பஹுஸ்ருதா  நாடெங்கும்  தமுக்கடித்து சேதி  பரவ விடு ''யார்  என் மகன் ஜெயபாலனை குணப்படுத்து கிறார்களோ, அவர்களுக்கு  பாதி ராஜ்ஜியம்''. அன்றிரவு  பஹுஸ்ருதன்   ராஜகுருவை சந்தித்து  பேசினான். 
என்ன பேசினார்கள் ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...