Saturday, July 20, 2019

NOSTALGIA


பழங்கதை J K SIVAN

சொந்த வீடு அனுபவம்

சென்னையில் சொந்த வீடு  என்பது இப்போது குதிரைக் கொம்பு.  முப்பது வருஷ  அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து  வங்கி கேட்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகை பதில் சொல்லி,  ஆதாரங்கள் காட்டி ''கொடுக்க வேண்டியதை'' கொடுத்து, லைசென்ஸ், அப்ரூவல் பெர்மிட் எல்லாம் வாங்கி ......பெருமூச்சு விடாதீர்கள்.. இனிமேல் தான் பேராபத்து   பிறக்க போகிறது. ஆமாம்  அப்போதெல்லாம் ரெண்டே ஆப்ஷன்.  ஒன்று நீ சாமான் வாங்கிக்கொடு நான் கட்டி தருகிறேன். இல்லையேல் என்னிடம் மொத்த பணம் கொடுத்துவிடு நானே சாமான்கள், ஆட்களுக்கு கூலியெல்லாம் கொடுத்து  இத்தனை மாதத்தில் உனக்கு உன் பிளான் பிரகாரம் வீடு கட்டித்தருகிறேன் என்ற மேஸ்திரிகள்   தான் உண்டு. ராமநாதய்யர் ரொம்ப நல்லமனிதர். அவருக்கு ஞாபகம் இருக்காதது தேதிகள் மட்டும் தான்.  ''என்ன மாமா நீங்கள் சொல்லியபடி முடிந்து விடுமா?   தைமாதம் கிரஹப்பிரவேசம் பண்ணலாமா. ஏற்பாடுகள் பண்ணவேண்டும்? ஓ பேஷா'' என்று அவர் சொல்லும்போது அவருக்கே தெரியாது முடியுமா முடியாதா என்று.
.
சித்திரை வந்தும்  கூட, வீடு  மேலே  வானத்தை வீடு பார்த்துக்கொண்டிருந்தது சிமெண்ட்  கான்க்ரீட்  கூரையை காணோம்.  என் வசதிக்கு ஒவ்வொரு அறையாக  கட்டிக்கொண்டேன். என்னால் வங்கிக்கடன் பெற வழியில்லை. அரசாங்க உத்தியோகத்தை உதறிவிட்டு தனியார் துறையில்  உத்யோகம் மாற்றிக்கொண்டதால் நிரந்தரம் என்பது பெரிய கேள்விக்குறி?  எதை நம்பி எப்படி மாதா மாதம் தவணை கட்டுவது? கையில் கிடைத்தது, நண்பர்கள்  கடன், நகைகள் அடமானம் இதெல்லாம்  கைகொடுத்து ஒரு சின்ன வீடு,  ஐயையோ , இல்லை இல்லை,  சிறிய வீடு  கட்டினேன். ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்  டைப் என்று வைத்துக்கொள்ளுங்கள்.   சனிக்கிழமை  வந்துவிடுமே என்ற  பயம் பிடுங்கி தின்னும்.  எதிர்பார்த்ததை விட, சொன்னதை விட ஒன்றரை மடங்கு அதிகம் ''நாளைக்கு சனிக்கிழமை காலை தந்துவிடுங்கள். சாமான் பாக்கி,  லேபர் கூலி கொடுக்கவேண்டும்.''என்பார் ராமநாதய்யர்.
என்னுடைய வீடு காட்டும் முயற்சிக்கு  உலகமே எதிர்ப்பை  காட்டியது.  உனக்கு போயும் போயும் புத்தி ஏண்டா இப்படிப்போயிற்று.   எத்தனையோ இடங்கள் இருக்க  ஆப்பிரிக்கா பக்கம் இருக்கும் நங்கநல்லூர் தான் அகப்பட்டதா? ஆபிசுக்கு எப்படி அந்த காட்டுப்பிரதேசத்திலிருந்து வருவாய்?
உறவினர்களும் கசமுசா என்று திட்டினார்கள். அவரவர்களுக்கு தெரிந்த இடம் நல்லது, சுபிக்ஷமான பூமி, விலை சல்லிசாக கிடைக்கும் நிலம் என்று சொன்னார்கள்.அவர்கள் கணிப்பில் நங்கநல்லூர்  கடைசிக்கப்புறம் ஏதாவது ஒரு இடம் இருந்தால் அதாக  இருக்கும்.
போக்குவரத்துக்கு  எனக்கு  உதவியது என்னுடைய பச்சை கலர் செகண்ட் ஹாண்ட்  ராலி சைக்கிள். எண்ணெய் திரி விளக்கு, அதையும்  எங்குபோனாலும் கையோடு கழற்றி  யெடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் காணாமல் போய்விடும். பாக்கெட்டில் தீப்பெட்டி  எப்போதும்  இருக்க வேண்டும்.   சாயந்திரம் ஆறு மணிக்கு அப்புறம் போலீஸ் காரர் வண்டியை நிறுத்தினால் '' விளக்கு இல்லாமல் எப்படி வண்டி ஒட்டினாய்? என்று காற்றை பிடுங்கி விட்டு விடுவார்.  ஆலந்தூர் பக்கம் போலீஸ் நடமாட்டம். மீனம்பாக்கம்  ஜெயின் காலேஜ் பக்கம் இருக்கும் ஒரே வழியில்  நிச்சயம்  ஒன்றிரண்டு போலீஸ் காரர்கள் நின்றுகொண்டிருப்பார்கள்.  அரைநிஜார். சிகப்பு தொப்பி, காக்கி அரை சட்டை.
காசு கேட்கும் வழக்கம் அப்போது அவருக்கும் தெரியவில்லை. எனக்கும் கொடுக்க கையில் இல்லை.  அவர் கையை  விளக்கின் மேல் வைத்து சூடு இருப்பதைப் பார்த்து. பரவாயில்லை மறுபடியும் ஏற்றிக்கொண்டு விளக்கு அணையாமல்  போ'' என்று கருணையாக சில போலீஸ் காரர்கள் விட்டுவிடுவார்கள்.  வெட்டவெளியில் வீசும் காற்றில்  விளக்கை அணையாமல் கையால் பொத்தி அணைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்ட எனக்கு தெரியாதே.  சைக்கிளில்  வால்வு  ட்யூபை  திருகி  புஸ்  என்று காற்றை பிடுங்கி விட்டால் தள்ளிக்கொண்டே பல காத தூரம் நடக்கவேண்டும். அங்கங்கே சைக்கிள் காற்றடிக்கும் கிடைகள்  அவ்வளவாக கிடையாது.
ஒரு சில சமயங்களில்  டபுள்ஸ்  போனாலும் பிடித்தார்கள்.  பிரேக் இல்லாவிட்டாலும்  மாட்டிக்கொண்டது உண்டு. அந்தந்த போலீஸ் காரர் மனதில் என்ன தோன்றுகிறதோ அது தான் சட்டம். என் வீடு கிட்டத்தட்ட  என் நண்பர்கள் என்ற விரோதிகள் சொன்னது போல் ஆப்பிரிக்கா அருகே தான் இருக்கிறதோ  என்று  ஒவ்வொரு சமயம் எனக்கே தோன்றும். வீட்டிலிருந்து மூன்று மைல்  தூரம். (கிலோ மீட்டர் நம் ஊரில் பிறக்காத காலம் ) ஒருபக்கம்  வடமேற்கே  பரங்கிமலை ரயில் நிலையம். அதை விட்டால் தென்மேற்கே மீனம்பாக்கம் ரயில் நிலையம்.    ஏறத்தாழ அதே தூரம். சைக்கிள் இல்லாதவர்கள்  கை  ரிக்ஷா காரர்களிடம் பேரம் பேசி  பிரயாணம் செய்யலாம்.  நாலு பேர் சேர்ந்து குதிரை வண்டியில் போகலாம். நாலு பேர் சேர காத்திருப்பது நேரமாகுமே. விடுவிடுவென்று நடப்பவர்கள் ஜாஸ்தி. சைக்கிள் பஞ்சர் ஆன காலத்தில் நிறைய நாள் நடந்திருக்கிறேன். மொத்தத்தில் சுகமாக செல்ல சைக்கிள் தான் சௌகரியம்.  ரயில்  நிலையம்  அருகே  கீற்றுக்  கொட்டகை வாடகை நிலையங்களில் சைகிள்கள்   ஏராளமாக  நிற்கும்.  வண்டியை  நிறுத்தி விட்டு மின்சார ரயிலில் ரெண்டாம் வகுப்பு மாதாந்திர பாஸ் எடுத்து  தொத்தி ஏறி  நின்றுகொண்டே நெரிசலில்   பயணம் செய்யவேண்டும்.  அரைமணிக்கு ஒரு ரயில் வரும். நல்ல கும்பல்.  தள்ளுமுள்ளு. தினமும்  நிறைய பேர்  ஏண்டா காலை மிதித்தாய், கையை மடக்குய்யா, டிபன் பாக்ஸ் வயிற்றிலே சுடுதுங்க என்று சண்டை போடுவார்கள்.  நின்று  கொண்டே தூங்குபவர்களை திட்டுவார்கள்.  மாத முதலில் ஒன்று ரெண்டு வாரம்  இந்த தள்ளு முள்ளு நெரிசல்களை  நம்பி  கை  தேர்ந்த ஜேப்படி காரர்களும் பயணம் செய்வார்கள்.  எனக்கு தெரிந்து  ரெண்டு மூன்று முறை  தள்ளு முள்ளுகளில்  என் மணி பர்ஸ் காணாமல் போயிருக்கிறது. தானாகவே இல்லை.    யாரோ சொந்தம் கொண்டாடி.  எனவே அதில் அதிகம் பணம் இருக்காது.  ரெண்டு மூன்று ரூபாய்கள் என்பதே அப்போது அதிக பக்ஷ தேவையான பணம்.
அடிக்கடி யாராவது  தண்டவாளத்தில் குறுக்கே வந்து தலையைக்கொடுப்பார்கள்.  ஆடு மாடுகள் மாட்டிக்கொள்ளும். அல்லது எங்களை போல் தொத்திக் கொண்டு பிரயாணம் செய்பவர்களை மின் கம்பங்கள் இடித்து மரணம் சம்பவிப்பது உண்டு. அதை எல்லாம் விரும்பமாட்டோம்.  அரைமணி ஒருமணி நேரம் இதனால்  வண்டி நின்று விடும். ஆபிசில் இதை காரணமாக சொன்னால்  நம்பமாட்டார்கள்.  மூன்று முறை இப்படி லேட்டாக வந்தால்  அரைநாள் விடுமுறையாக கருதுவார்கள்..கோட்டையில் இறங்கி ஓட்டமாக ஓடி பாரிஸ் செல்வேன். கையில் டிபன் பாக்ஸ் நிச்சயம் தோள் பையோடு இருக்கும்.
வீட்டிலிருந்து காலை எட்டேகாலுக்கு மேல் கிளம்பினால்  ஒன்பது மணி வண்டியை பிடிக்க முடியாது. அதற்குள் வீட்டில் அன்றாட வேலைகளை முடித்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு, கையிலும் சூடாக வெந்த  வேகாத சாப்பாட்டோடு கிளம்பியாகவேண்டும். சனி , அந்த நேரம் பார்த்து சிலநாள் சைக்கிள் பஞ்சர் ஆகிவிடும். தெருவெல்லாம் கல்லும் முள்ளும் இருந்த காலம். டயரை குறை சொல்லி என்ன பயன்.  காலையிலேயே   சைக்கிளுக்கு டயரில் காற்றடித்து ( எல்லோரும் வீட்டில் காலால் மிதித்து கையால்  சர்  சர்  என்று அழுத்தி அடிக்கும் பம்ப் வைத்திருப்போம். ஒரு டயர்  காற்றடிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும்.  ஆகவே டயரை காலையிலேயே   காற்று போதுமா என்று அழுத்தி பல்ஸ்  பார்த்துவிட்டு சரி உடல் நலம் சரியாக இருக்கிறது போய் சேரலாம் என்ற நம்பிக்கையோடு மிதித்து சொல்வோம். சில சமயங்களில் பாதி வழியில் டபார் என்று ட்யூப் வெடிப்பதுண்டு. அ தை  துரதிர்ஷ்டமென்று தான் சொல்லவேண்டும்.  இதற்கு பயந்துகொண்டு     மீனம்பாக்கம் ரயில் நிலையம் பக்கம் செல்வதில்லை. நிறைய கல் அங்கே வழியில் உண்டு. பரங்கிமலைக்கு போவதால்  ஐந்து நிமிஷம் ரயில் பிரயாண நேரம் மிச்சம்.
வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால், சென்னைப்பட்டினத்தில் பல இடங்களில் வேலை பார்க்கும் நங்கநல்லூர் வாசிகள் சைக்கிளில் அடிக்கடி தெருவில் ஸ்டேஷனில், ரயிலில் சந்திப்போம். தினமும் குறித்த நேரத்தில் சேர்ந்து போவதும் உண்டு.   சிலநாட்கள் மின் வண்டி ஏதோ காரணத்தால் பிரேக்டௌன் ஆகி தாமதம் ஆவதும் உண்டு.   பல  ஸ்டேஷன்களில்  ரயில்வே கேட்டுகள் மூட கால தாமதம் ஆகும்.  கதவு மூடும் வரை ரயில் நிற்கவேண்டும். மழைக்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து, மரங்கள் விழுந்து,  கோடம்பாக்கம்-சேத்துப்பட்டு பாலம் (நுங்கம்பாக்கம் தெரியாது அப்போது )ரிப்பேர், மழையால் மின் வெட்டு என்றெல்லாம் ஆபத்துக்கள் இடைஞ்சல் தடங்கல் பண்ணுவதும் உண்டு.  ஆபீஸ் நேரம் என்பது ரயில் பிரயாணத்தை பொறுத்தவரை  காலை 8முதல் 10வரை, மாலை  5முதல் 7 வரை.  அப்போது தான் நெரிசல் அதிகம். நின்று கொண்டு தான் போக வேண்டும். தாம்பரத்தில் இருந்து பிரயாணிப்பவர்கள்  தூங்குவார்கள், சீட்டு ஆடுவார்கள், ஒரு ஜமாபந்தி சேர்த்துக்கொண்டு அரசியல் பேசுவார்கள், அவர்கள் ஆபிஸ் பற்றி குறை சொல்வார்கள்  நின்று கொண்டே  ரயிலின் ஓட்டத்துக்கு ஆடிக்கொண்டே  அதையெல்லாம்  கேட்ட அனுபவம். உண்டு. சாயந்திரம் பிரயாணம் செய்யும்   கும்பல் தனி ரகம். அதைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...