Sunday, July 14, 2019

ADVICE

சொர்க்கமா நரகமா எது பிடிக்கும்?
J K SIVAN

நாம் நல்லவர்களாகளோ கெட்டவர்களாகவோ பிறப்பதில்லை. நாம் எப்படி வளர்க்கப் பட்டோம், வளர்ந்தோம், எவரோடு இணைந் தோம். நமது விருப்பம் என்ன, எதை தெரிந்து கொண்டோம் என்பதெல்லாவற்றையும் பொறுத்த விஷயம் இது. ராஜு தான் பொடி போட கற்றுக்கொடுத்தான். வரதன் தான் முதல் சிகரெட் வாங்கி தந்தான். ''இருமல் வருதுடா, மாரடைக்குதடா'' என்றாலும் விடவில்லை. '' சீ அப்படிதாண்டா இருக்கும் முதல்லே. அப்புறம் உனக்கு பிடிக்கும்'' என்று என் குருவாக இருந்தவன், என்று எல்லாம் சொல்கிறார்களே.

நமது சுய சிந்தனை நல்ல முறையில் செயல்பட்டால் நல்ல எண்ணங்கள், செயல்கள் நம்மிடமிருந்து வெளிப்படும் . எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கையில் திருப்பம் வர வாய்ப்புண்டு. கெட்டவன் கெட்டவனாகவே செத்ததையும், நல்லவனாக மாறி நானிலம் போற்ற வாழ்ந்து மறைந்தததையும் சரித்திரம் சொல்கிறதே.
சொர்க்கம் நரகம் என்று ரெண்டு சரணாலயம் நமக்குண்டு. எல்லோரும் சொர்க்கத்திற்கு போக விரும்புவது ஞாயம். ஆனால் அதற்கு தகுதி என்று ஒன்று இருக்கிறது. சொர்க்கத்துக்கு போக சிபாரிசு நுழைவு சீட்டு பணம் எல்லாம் வேண்டாம். நமது எண்ணங்களும் செயல்களுமே நம்மை அங்கே கொண்டு தள்ளும்.
''தாத்தா நரகம் சொர்க்கம் என்றால் என்ன? பேரன் ரெங்குடு கேட்டான்..
''இதுதான் அது''.
''அப்படின்னா?''.
''நாம இப்போ தண்ணி இல்லாம, காற்று இல்லாம, இடம் இல்லாம, சோறு கிடைக்காம, யாருமே நீ வேண்டாம்னு ஒதுக்கி வாழறது தான் நரகம். எவ்வளவோ பெரிய மில்லியனர், கோடிஸ்வரன் என்றாலும் அவன் அயோக்கியன், திருடன், கொள்ளையடித்தவன், அவனைப் பிடித்து அவன் சொத்துகளை பிடுங்கி அவனை இங்கே கொண்டுவந்து ஜெயிலில் தள்ளி முட்டியை பேக்கணும் என்று டிவியில், பேப்பரில் சிலர் பெயர் பெருகிறார்களே அவர்கள் வாழ்க்கை, பணம் கொள்ளை கொள்ளையாக இருந்தும் நரகம். அவன் எவ்வளவு புழுங்குகிறான் என்று. வெளியே காட்டிக்கொள்வது எல்லாம் பொய் , நடிப்பு. மரத்தடியில் ஒரு வாய் தண்ணீர் மட்டும் கிடைத்து குடித்து நிம்மதியாய் தூங்குகிறான் பார் வேலை செய்து களைத்து, கந்தல் துணியோடு, அவன் சொர்க்கத்தில் இருப்பவன்.''
''அப்படின்னா சொர்க்கத்துக்கு போக பணம் தேவை இல்லையா?''.
''வேண்டாம். நரகத்துக்கு போக தான் நிறைய பணம் தேவை.
என்ன தாத்தா உளர்றே?''
கெட்ட பழக்கங்களுக்கு காசு தேவைடா ரெங்குடு. சூதாட காசு கீழே வைக்கவேண்டும். டாஸ்மாக்கிலே கும்பல்லே நின்னு ஒரு குவார்ட்டர் வாங்க பணம் வேண்டும். சிகரெட் வெலை வருஷா வருஷம் ஏறினாலும் அது வாங்காம புகைக்க முடியாது. அவுத்து போட்டுண்டு ஆடறதை பார்க்கற இடம் போனாலும் பணம் இல்லேன்னா உள்ளே உடமாட்டான். பணம் கொள்ளை அடித்தா கூட பொய் சொல்லி சப்பை கட்டு கட்ட பெரிய பெரிய வக்கீல் பணத்தை பாக்கெட்லே கையை உட்டு எடுத்துண்டு தான் சொல்லித்தருவான்''.
'' ஓஹோ. நல்லவனா இருக்கிறதுக்கு, சுவர்க்கம் போக பணம் வேண்டாமோ?''
''குளிச்சு நாமமோ விபூதியோ சந்தனமோ இட்டுக்கொள்ள பணம் வேண்டாம். கோவிலுக்குள்ள போக சாமி கும்பிட பணம் வேண்டாம். பணம் கொடுத்து சாமி பாக்கவே வேண்டாம். அந்த பணம் சாமிக்கு போறதில்ல. நாம்ப உண்டாக்கினது,நமபளை உண்டாக்கினவருக்கு தேவை இல்லை. நாலு பேருக்கு நல்லது செய்ய, நினைக்க, பணம் வேண்டாம்டா ரெங்குடு. விரதம் நோம்பு உபவாசம் இருக்க துளியும் செலவில்லை. உடம்புக்கு அவ்வளவும் ரெஸ்ட். நல்லது. எல்லோர் கிட்டேயும் அன்பா பேச, உதவ, பழக பணம், கார்டு , எதுவும் வேண்டாம். நீ விரும்புற கடவுளை கொண்டாட, அவன் பேரை சொல்ல பணம் அவசியம் இல்லை.''

''இப்போ சொல்லுடா உனக்கு என்ன வேணும். நரகமா, சொர்க்கமா?''



ரெங்குடு பதில் நம்முடைய பதில் தான். எளிதில் சொர்க்கம் அடைய வழியை பார்ப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...