Saturday, January 8, 2022

THIRUPPALI EZHUCHCHI

 திருப்பள்ளி எழுச்சி  -  நங்கநல்லூர்  J K   SIVAN

மார்கழி 25ம்  நாள்.

5.  பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!

தமிழ் பெற்றெடுத்த  அரும் பெரும்  புதல்வர்களில் முக்கியமானவர்  மாணிக்க வாசகர். அவருடைய  வாக்கு எழுத்துக்கள் எல்லாம்  பொன்னும் மணியாக  இருப்பதால் இயற்பெயரான   வாதவூரர் என்பது கூட  மறந்து போய்  அவரை  மணி வாசகர், மாணிக்க வாசகர்  என்று தான் அறிகிறோம். 
திருப்பெருந்துறை எனும்  ஆவுடையார் கோவில் அவரை நமக்கு மணிவாசகராக மாற்றி தந்த  அற்புத  ஸ்தலம்.

அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம் திருப்பெருந்துறை. . மாணிக்கவாசகர் அருள் பெற்ற புண்ணி பூமி. அருபரத்து ஒருவன் குருபரனாக வந்து காட்சி தந்த பதி. இத்திருக்கோயில், இறைவனின் கட்டைள்பபடி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது. கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். பண்டைநாளில் ஸ்தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன் படிக்கை எழுதுங்கால் ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைப் போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார் கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்ற எழுதும் வழக்கம் இருந்ததாம். பெரிய கனமுடைய கருங்கல்லை, மெல்லியதாக இழைத்து, பல மடிப்புக்களாக அமைத்துள்ள இக்கலைத் திறனைப் பார்க்குங்கால் நம் அறிவுக்கும் எட்டாத அபூர்வ ஆற்றலை அறிந்தின்புறலாம்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட கோயில். ஆதினக் கட்டளைத் தம்பிரான் ஒருவரின்  மேற்பார்வையில்  ஆலயம்  பராமரிப்பு பெறுகிறது.
இங்கே  சிவனின் பெயர்  - ஆம்நாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, ஆத்மநாதர்.
அம்பாள்: - யோகாம்பாள்.
ஸ்தல விருக்ஷம் - குருந்த மரம்.
தீர்த்தம் - அக்கினித் தீர்த்தம் (திருத்தமரம் பொய்கை)
உலகவுயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தளம் ஆதலின் பெருந்துறை எனப் பெயர் பெற்றது. வெள்ளாறு (சுவதேநதி) பாய்கின்ற வயற்பரப்புக்கள் நிறைந்த பகுதி. "தெள்ளுநீர் வெள்ளாறுபாய், திருமிழலை நாட்டுப் பெருந்துறை" என்பது சிவலோக நாயகி பொன்னூசலில் வருந்தொடர்.

திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளில் 20 பகுதிகள் (சிவபுராணம்) , திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாய நான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.

இனி  இன்றைய  மேலே காணும்  திருப்பள்ளி எழுச்சி  பாடலின்  விளக்கம் அறிவோம்: 

பரமசிவா,  ஆத்மநாதா, குளிர்ந்த  பச்சைப் பசேலென  வயல்கள் நிரம்பியிருக்கும்  வயல்கள்  சூழ்ந்த   திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தாலே  இனிப்பவனே, அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வா.  எங்களுடைய  தவறுகள்,  குற்றங்களை எல்லாம்  போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற  தலைவா,   உன்னை,  பஞ்ச பூதங்களிலும் நிரம்பியவன்  என்று அறிவேன்.  எங்கும்  வருவதும்  போவதும்  இல்லாதவனே எதிலும் எங்கும் நிலையானவனே, அறிவுடையோர், கற்றோர்,   இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...