Friday, January 14, 2022

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர் -  J K  SIVAN 

காமாக்ஷி  தரிசனம் 

மஹா பெரியவா  சம்பந்தமான  ஏராளமான  விஷயங்களை  தேனீ போல் சேர்த்து அற்புதமாக அளிப்பவர்  ஸ்ரீ  வரகூரான்  நாராயணன் என்ற   மஹா பெரியவா  பக்தர் என்று பலமுறை சொல்லி இருக்கிறேன்.  அவர்  என்னுடன் டெலிபோனில்  பேசியிருக்கிறார், என் புத்தகங்களை அவருக்கு சமர்ப்பித்திருக்கிறேன். இதுவரை நேரில் சந்தித்ததில்லை. நேரம் கிடைத்த போதெல்லாம் அவர்  கட்டுரைகளை ஆர்வமாக படிப்பேன். அதில் ஒன்றின்  சாராம்சம் இது.
 
கலவையில்  மஹா பெரியவா  கலந்து கொண்ட  ஒரு நவராத்திரி மகோத்ஸவ வைபவம் கோலாகலமாக நடந்த சமயம். காலை பதினோரு மணி. நெரிசலோடு  உஷ்ணம்.  வெயிலின் தாபம்.  இருந்தும்  ஏராளமான  பக்தர்கள்  கூட்டம்.  

ஒரு  டூரிஸ்ட்  பெண், வெள்ளையாக  ஒரு ஆஸ்திரிய நாட்டு பெண்ணோடு வந்து பெரியவா தரிசனம் கிடைக்குமா என்று கேட்கிறார்.  அந்த வெள்ளைக்கார பெண்மணி மறுநாள்  இந்தியாவை விட்டு  பறக்க வேண்டும்.  விசா அடுத்த நாளோடு முடிகிறது.  இந்தியாவில் அதற்கு மேல் தங்க இயலாது.  பாண்ட்ஸ் கம்பெனி நாராயணன் என்பவர் பெரியவாளிடம் நெருக்கமான  பக்தர்.  

டூரிஸ்ட் கைடு , வெள்ளைக்கார பெண் இருவரும்  பாண்ட்ஸ் நாராயணனை அணுகி  கலவையில் கிணற்றருகில் மஹா பெரியவாளை ஒரு நிமிஷம் எப்படியாவது தரிசிக்க  உதவுமாறு கேட்டு, அவர்  பெரியவாளிடம்  அனுமதி பெற்று அவளை அவரிடம்  அழைத்து சென்றார்.

'என்ன சொல்லணுமோ,சொல்லச் சொல்லு. இல்லே...ஏதாவது வேணும்னா கேட்கச் சொல்லு..."

வெள்ளைக்காரம்மாள்  ஒன்றும்  பேசாமல் கண் இமைக்காமல் பிரமிப்போடு மஹா பெரியவாளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.  ஹா என்று பிளந்த வாய் மூட வில்லை. ஒன்றும் பேசவில்லை. கேட்கவில்லை.   பகவானை நேரில் பார்க்கும் சமயம் பேச்சு வருமா?

மஹா பெரியவா ஒரு ஆப்பிள் பழத்தை அவளிடம் பிரசாதமாக தந்தவுடன் அவள் சென்றாள் .

எப்படி, எதற்கு, அந்த ஆஸ்திரிய நாட்டுப்   பெண்ணுக்கு மஹா பெரியவா மேல் ஒரு  பக்தி ஈடுபாடு? அவள் சகோதரி இந்தியாவில் சில காலம் இருந்தவள். அவள் மூலம்  பாரதத்தின் அருமை பெருமை, பண்பாடு, சீலம், எல்லாம் அறிந்து,   ''நானும் ஒரு பாரத தேசப்  பெண்'' என்று அடிமனதில் ஒரு ஆழ்ந்த உணர்வு வந்ததால்  எப்படியாவது பாரத தேசம் செல்ல  வேண்டும் என்ற தீர்மானம்.

குருவி  மாதிரி  மாதா மாதம் சம்பளத்தில், வருமானத்தில்,  கொஞ்சம் கொஞ்சமாக  பணம் சேர்த்தவள் , முப்பதாவது வயதில்,  ஒரு மாத லீவில் இதோ வந்துவிட்டாளே.  இந்தியாவில் எத்தனையோ இடங்கள், எத்தனையோ பேரைச் சந்தித்தாள் . உள்மனதின்  தாகம்  ஏனோ   தீரவில்லை.  எதையோ தேடுகிறாள்? யாரை? எங்கே? என் மனதில் தோன்றும் அவளை எங்காவது எப்போதாவது சந்திப்பேனா? என்ற  பசி.

''தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்  அருகே, கலவை என்ற ஊரில் ஒரு மஹா பெரியவர்  எளிமையானவர், இருக்கிறார் அவரை சென்று தரிசித்து ஆசி பெறுங்கள்'' --  

இப்படி யாரிடமோ கேள்விப்பட்டு  காஞ்சிபுரம் கலவை வந்தவள்.   மறுநாள் விசா முடியப்போகிறது.  இந்திய பிரயாணம் முடிவுக்கு வந்துவிட்டது.  உடனே  ஆஸ்திரியாவுக்கு திரும்ப வேண்டும். 
நல்லவேளை  ஒரு டூரிஸ்ட் நிறுவன உதவியாளர் பெண் மூலம் கலவைக்கு வந்தவளுக்கு  ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒரே சமயம். 

அடிக்கடி  கனவில் தோன்றிய  ஒரு தெய்வீக பெண்மணி இருக்கும் இடமா இது? அவளைத் தான் தேடினேனா? இந்தியா வந்தேனா, கடைசியில் கலவையில் கண்டேனா?  

கிணற்றடியில் அமர்ந்திருக்கும் முகத்தில் ஒளி வீசும்  வயோதிக பெண் அவள் தானா?  முகம் கனவில் கண்டது போலவே இருக்கிறதே.....கண்ணில் அதே காந்த சக்தி.. அருள் கருணை என்கிறார்களே அதெல்லாம் வெள்ளமாக வழிந்தோடுகிறதே.. இல்லையென்றால் இத்தனை பேர்  சூழ்ந்து நிற்பார்களா? என் அடிமனதில் ஒரு திருப்தி,  குதூகலம், என் முயற்சி பலன் அளித்து
விட்டதே ''

மிகுந்த  சந்தோஷத்தோடு மனம் நெகிழ்ந்து அந்த பெண் போகும்போது பாண்ட்ஸ் நாராயணனுக்கு நன்றி செலுத்தினாள் .

''ஐயா, உங்கள்  உதவியால் என் மனதில் வெகுநாளாக   தோன்றிய, நான்  வெகு காலம் தேடிய  ஒரு தெய்வீக பெண்மணியை  இங்கே இன்று  நேரில் பார்க்கும்   பாக்யம் கிடைத்தது.மிக்க நன்றி''

நாராயணனுக்கு  ஒன்றும் புரியவில்லை. ''என்ன இவள்  மஹா பெரியவாளை ஒரு பெண் என்கிறாளே?''  கொஞ்சம்  மறை லூசானவளோ....

ஆஸ்திரியாவுக்கு நீண்ட பயணம்.   விமானத்தில் திரும்பும்போது ஆகாயத்தில் அவள் மனதில் மேலே சொன்ன எண்ணங்களும்  வேகமாக  பறந்து ஒன்றன் பின் ஒன்றாக  உருவம் காட்டின.
அவள் கலவைக்கு வந்து  தரிசனம் பெற்று, பிரசாதம் வாங்கி கொண்டு  திருப்தியுடன் சென்ற அன்று மாலை  பிற்பகல்  3மணிக்கு, கலவையில்,  அவளை அழைத்து வந்த பாண்ட்ஸ் நாராயணனை  பெரியவா  பார்த்தார்.
 
"நாராயணா, அந்த  வெள்ளைக்கார  பொண்ணு உன்னண்டை  என்ன சொல்லித்து?"  
கையைக்கட்டிக் கொண்டு மனப்பாடம் ஒப்பிக்கும்  5ம் வகுப்பு மாணவனைப் போல்  நாராயணன் நடந்ததை ஒப்பித்தார்.

அடுத்த நாள்  ப்ரம்ம முகூர்த்தத்தில் விடிகாலை 4 மணிக்கு  வழக்கம்போல் கலவையில் மஹா பெரியவா விசுவரூப தரிசனம்.  பக்தர்கள் கூட்டத்தில் பாண்ட்ஸ் நாராயணனும். 
யாரோ ஒரு துறவி  மஹா பெரியவாளை அப்போது சந்தித்து அவருக்கு  மஹா பெரியவா  எதையோ சொல்கிறார்.

'மூக பஞ்ச சதி - ஆர்யா சதகத்தில் ஒரு ஸ்லோகம், தெரியுமா,  ஞாபகம் இருக்கா?

कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।
गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥46॥

குண்டலி குமாரி குடிலே சராசர  ஸவித்ர சாமுண்டே
குணினி குஹாரிணி குஹ்யே குருமூர்த்தே  த்வாம் நமாமி காமாக்ஷி.''

இந்த  காமாக்ஷி அம்பாள் இருக்கிறாளே, அவளை  பாலா என்கிறோம்,  குமாரி என்கிறோம்,  ஹ்ருதய வாஸினி,   மூலாதார சக்ர  குண்டலினி, என்கிறோம்,  சண்டிகை என்ற  சக்தி தேவியாக வணங்குகிறோம்,  ஹ்ருதய  குகையில் வாழ்பவள்,  மாயா தேவியாக  பிரபஞ்சத்தில் தோன்றுபவள்,  அவள் தான் நமக்கு  நெஞ்சில் நிரந்தவளாக, ப்ரம்ம ஞானத்தை  புகட்டி அறியாமை இருட்டிலிருந்து விடுவிக்கும்  ஞான குரு.  சாஷ்டாங்கமாக அவளை  வணங்குகிறோம்''

நிசப்தமாக  எல்லோரும் பெரியவா அந்த யோகிக்கு சொல்வதை செவி மடுத்து கேட்டுக் கொண்டி ருந்த போது,  நாராயணனுக்கு  சட்டென்று ஒரு பொறிதட்டியது. 
ஆஸ்திரிய பெண்மணி போகும்போது நன்றி சொன்னாளே  அப்போது என்ன சொன்னாள் ?

"நான், முதிய வயதான எளிமையான  ஒரு  பெரியவரை இங்கே  காணவில்லை.  அவருக்கு பதில் அங்கே  என் மனதில் தேடிய  பெண் தெய்வத்தை தான்  பார்த்தேன்!" 

மஹா பெரியவா,  நீங்க தான்  அந்த ஆஸ்திரிய பெண்ணுக்கு  இத்தனை காலம்  கனவில்  காமாக்ஷி யாக  தரிசனம் தந்து, அவள் பயணத்துக்கு  உதவி,  விஸா  முடிவதற்குள் உங்களை இங்கே கலவையில் வந்து கண்டு  தரிசனம் பெற  ஆசிர்வதித்தவரா?  உங்களை எல்லோரும் காமாக்ஷி அவதாரம் என்பது என் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டதே. நான் புண்யம் பண்ணவில்லையே.

ஜாதி, மதம், தேசம், வயது, குலம் , பாஷை, வாழ்க்கை முறை எல்லாம் கடந்து  பக்தர்கள் மனதில் தோன்றி, பக்தியை மனதில் விதைத்து மலரச்செய்து   அம்பாளின் அருள் பெற செய்யும்  மஹா பெரியவா நிச்சயம்  ''ஜகத்துக்கே  குரு  என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

பான்ட்ஸ் நாராயணன், வரகூரான், அன்று கலவையில்  கூடியிருந்த பக்தர்கள், அவர்களில்  நாராயணன்கள், இதைப் படிக்கும்  எல்லா நாராயணன்கள் ,-   எல்லோருக்கும்  நன்றி, நன்றி, நன்றி.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...