Monday, January 10, 2022

SURDAS

 ஸூர்தாஸ்  -   நங்கநல்லூர் J K   SIVAN 



8. '' எப்படிச் சொல்வேனடா ?

உணர்ச்சியின் உச்சத்தில் திளைத்திருக்கும் போது பேச்சு வராது என்பது நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவமானது. புரிகிறது எனக்கு. வாய் பேச வரவில்லையே ? பேச  மறந்து போய்விட்டேனா? பேச தெரிந்தும் வார்த்தைகளே அகப்படவில்லையா ? திடீரென்று   ஊமையாகிவிட்டேனா ? மற்ற நேரத்தில் எல்லாம் பொட்டுக் கூடை பேச்சு பேசும் என் வாய் அந்த கறுப்புப் பயல் கிருஷ்ணனைப் பற்றி பேச நினைக்கும் போது மட்டும் ஏன் இப்படி மக்கர் செய்கிறது? நெஞ்சில் நிறைந்தது வாயில் வரவில்லையே? என்ன  காரணமாக  இருக்கும்? ஒருவேளை அவனது பெருமைகளை அருமைகளை, அதீத செயல்களை  எல்லாம் நினைத்தால் இந்த மாபெருங் கருணா சமுத்திரத்தை எந்த வாய்ச் சொற்களால் அளந்து சொல்லமுடியும் என்ற மலைப்பா? திகைப்பா? பிரமிப்பா? நிச்சயம் இதில்  ஏதோ ஒன்று அல்லது சொல்லத்தெரியாத வேறு எதுவோ ஒன்று.

சரி, அந்த பயல்  கிருஷ்ணன் சிறு குழந்தை தானே, சுலபத்தில் அவனை விஷ  மூட்டி கொன்றுவிடலாம். அது ஒரு  சுண்டைக் காய் வேலை என்ற திமிரோடு வந்த பூதகிக்கு , ''இந்தா எனக்கு பால் ஊட்ட   ''தாயென வந்த பேயே, உனக்கு என் பரிசு''  என்று அவள் உயிரையே குடித்து விட்டு பொக்கை வாய் சிரிப்பைக் காட்டியதை எந்த வார்த்தைகளால் விவரிப்பேன்?

சர்வ வேதங்களும் சகல உபநிஷதங்களும் , மகரிஷிகளும் ஞானிகளும் அவனை முழுமையாக விவரிக்க திணறும்போது, ஒரு சாதாரண கோபி, யசோதா எனும் தாய்   'இனி எப்படி வெளியே சென்று விஷமம் பண்ணுவாய் என பார்க்கிறேன்''   என்று அவன் கண்களில் நீர் ததும்ப  கெஞ்ச கெஞ்ச, அவனை ஒரு சிறு கயிற்றால் வயிற்றில் கட்டினதை எப்படி விவரிப்பேன்?

''அதிசயம்'' என்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தது?   இந்தா ஐயா  வா. உன் வாயைக் காட்டு. அதில் உனக்கு ஒரு பிடி சர்க்கரை.  அதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்ல வழியில்லையே! பல காலம் கம்சனால் சிறையில் வாடிய உக்கிரசேனனை, கம்சனைக் கொன்று மதுராபுரியை மீட்டு, மீண்டும் ராஜாவாக்கினாயே, எப்படி?

பவ்யமாக மரியாதையோடு, வணங்கி, உன் தலையைக் குனிந்து    ''நீங்களே மீண்டும் எம்அரசனாக ஆள வேண்டும்'' என்றாயே அதை எந்த  வார்த்தையால்   விவரிப்பேன்? மேலே சொன்னதை மட்டுமே தானே திருப்பித்  திருப்பி சொல்ல முடிகிறது? அது அந்த உக்கிரசேனனின் உணர்ச்சியையோ, உன் கருணையையோ விவரித்ததாக ஆகுமா?    

சரி, அதை விடுவோம். ஜராசந்தன் பல ராஜாக்களை வென்று அடிமைப்படுத்தி சிறையில் அடைத்து வைத்து வாட்டினபோது, அவனை பீமனை  விட்டு கொல்லச்   செய்து, அந்த ராஜாக்களை மீட்டாயே அப்போது அவர்கள் உன்னை வாழ்த்தினதை எத்தனை வார்த்தைகளில், எந்தெந்த வார்த்தைகளில் சொல்வது?, யாரால்முடியும்?  

கிருஷ்ணனாக, நீ  சொன்னதை, ராமனாக நீ செய்ததையாவது சொல்வோம் என்றால், ஒரு சின்ன சம்பவத்தை கூட சொல்ல முடியவில்லையே. உதாரணமாக தனது கணவர் ரிஷி கௌதமர் இட்ட சாபத்தில் பல வருஷங்கள் கல்லாக மாறி வாடிய அஹல்யாவை ஒரு நொடியில் உன் காலடியால் மீண்டும் உயிர்ப்பித்தாயே அவள் அப்போது கடல் மடையாக கொட்டிய   கண்ணீரால் கலந்த  நிறைந்த வார்த்தைகளை வெறும் அர்த்தமற்ற, நாம்  அடிக்கடி காரணமில்லாமல் நன்றி உணர்ச்சியே இல்லாமல் சொல்லும்  ''தேங்க்ஸ்'' என்ற வார்த்தையால் சொன்னால் சரியா? முறையா? அடுக்குமா? நியாயமா?

எப்போதோ நாராயணனாக,  கஜேந்திரனை முதலை வாயிலிருந்து கண நேரத்தில் மீட்டாயே அதையாவது விவரிக்கலா மென்றால் அது கூட முடியவில்லையே கிருஷ்ணா!!  கஜேந்த்ரனின் நன்றி  உணர்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் அவனை  விட பெரியதாக இருக்கும் போல் இருக்கிறதே. நான் எங்கே போவேன்?

விடாத மழையில் அந்த தொத்தல் குடிசை  கூரைகள்  காற்றில் பறந்து விழுந்த போது உடனே ஒரு கூரை வேய்ந்தாயே, அப்போது அந்த ஏழை பக்தர் நாமதேவர் வாய் பிளந்து ''பாண்டு ரங்கா ஆஆஆ'' என்று அடி வயிற்றிலிருந்து ஒலித்தாரே,   அதன் பின் ஒளிந்து கொண்டிருந்த நன்றி உணர்ச்சி களை எந்த வார்த்தைகளால், எப்படி எழுத்தால், விவரிப்பேன் சொல் ?

மேலே சொன்னதெல்லாம் நான் எழுப்பும் கேள்விகள் அல்லவே  அல்ல, கண்ணில்லாத சூர்தாஸ் அருமையான ப்ரஜ்பாஸி எனும் பழைய வடமொழியில் எவ்வளவு அழகாக கேட்கிறார். அது எந்த மொழி வார்த்தை களாக இருந்தால் என்ன?

மனதில் நிரம்பி வழியும் என் பிரார்த்தனைகளை என் ஊமைக்  கண்ணீரால்  புரிந்து ஏற்றுக் கொள் கிருஷ்ணா. என் வார்த்தைகள்  என்னால் முடிந்தவரை தான் அதை சொல்ல முடிந்தது அவ்வளவு  தான்'' என்கிறார் சூர்தாஸ் இந்த பாடலில். எனக்கு பிரிஜ்பாசி வடமொழிகள் எதுவும்  தெரியாது. யாரோ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு        கிருஷ்ணா, என்னையே  ஸூர்தாசாக நினைத்துக்கொண்டு மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.

The voice falters
when it sings of the deeds of the Lord
who's an ocean of mercy.
He gave guileful Putana, who posed as his mother, a
mother's reward!
He of whom the Vedas and the Upanishads sing as the Unmanifest,
let Yashoda bind him with a rope,
lamented Ugrasena's grief,
and after killing Kansa made him king
paying him obeisance, bowing low;
Freed the kings held captive by jarAsandha
at which the kingly hosts sang his praises;
removing Gautama's curse
he restored life to stone-turned Ahalya:'
all in a moment he rescued Braj's ruler from the sea-monster running to his
aid as a cow to her calf,"
he came hastening to rescue the king of the elephants;
he got Namadeva's hut thatched.
says Suradasa, O, make Hari hear my prayer


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...