Sunday, January 30, 2022

PESUM DHEIVAM



 பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K   SIVAN


10   காசியில் நேரமே  போதவில்லை.

நமக்கு தெரியாததால்  சரித்திரத்தில்  மிக முக்கியமான ஒரு சம்பவம் மறைந்து போய்விடாது.  மஹா பெரியவாளின்  முதல் காசி  விஜயம்  அப்படி பெருமை வாய்ந்தது.  நேரில் கண்டு அனுபவித்தார்கள் இப்போது ஒரு சிலர் மட்டுமே  இருக்கலாம்.  

காசியில்  சங்க வேத வித்யாலயா  என்ற  ஒரு வேத பாடசாலை  ராம்காட் டில் இருந்தது.  காசியை அடைந்த அன்று  இரவே மஹா பெரியவா  அதற்கு விஜயம் செய்தார்.   அதன் தலைவர்  மஹா பெரியவாளை அழைத்து பாத பூஜை  செய்து மகிழ்ந்தார்.   தவிர  காஞ்சி பெரியவாளிடம்  அந்த பள்ளியின் சார்பாக   501 ரூபாய் காணிக்கை அளித்தார்.  88 வருஷங்களுக்கு முன்பு  501 ரூபாய் என்பது ஐந்து லக்ஷத்துக்கு சமானம்  என்று தான் தோன்றுகிறது.  

ஒரு சின்ன டயரி மாதிரி காசியில் தொடர்ந்து மஹா பெரியவா  பங்கேற்ற  சம்பவங்கள் நிகழ்ச்சிகள் பற்றி சொல்கிறேன்:  பக்தர்களுக்கு படிக்க ஸ்வராஸ்யமாக இருக்கும் 
அல்லவா?

1934  அக்டோபர்  7ம் தேதி 
காசியில் சாரத நவராத்ரி ஆரம்பமாயிற்று. மணிகர்ணிகா கட்டத்தில்  மஹா பெரியவா ஸ்னானம் செய்து விட்டு சந்திரமௌலீஸ்வரர் பூஜையை  காசி விஸ்வநாதர்  ஆலயத்தில் துவங்கினார்.   ஹனுமான் காட் எனுமிடத்திற்கு  அருகே  காஞ்சி  சங்கரமடம் ஒன்று உள்ளது. அதில் ஆதி சங்கரர் விக்ரஹம்   பிரதிஷ்டை பண்ணி இருக்கிறது. அங்கே  சென்று ஆதி சங்கரரை  தரிசனம் செய்தார்.   
அக்டோபர்  8ம் தேதி.
இன்று  சாரதா மடம் , மற்றும் பஞ்ச கங்கா மடத்திலும்  பூஜைகளை ஏற்றார் . கேதாரேஸ்வரர் ஆலயம்,  மற்றும்  பிந்து  மாதவர் ஆலயம்  இரண்டுக்கும்  சென்று தரிசனம் செய்து மகிழ்ந்தார்.   

 அக்டோபர்  9ம் தேதி 
நவராத்ரி பூஜை ஆரம்பமாயிற்று.    மஹா பெரியவா  தங்கியிருந்த  மாதவ ராம்  சாந்த்   வீட்டிலேயே  நவராத்ரி பூஜைகளை ஆரம்பித்தார்.  ரிக்வேத  ஸம்ஹிதா  ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம்,  சண்டி  ஹோமம்,  மஹா ருத்ர ஹோமம்,  சகலமும் சாஸ்த்ரோக்தமாக நடந்தது.   நான்கு வேதங்களும்.   உபநிஷத்துக்களும், துர்கா சப்தசதியும்    பாராயணம் பண்ணினார்கள். இதைப்போன்ற  ரொம்ப விமரிசையான  நவராத்ரி வைபவம்  அந்த ஊரில் அதுவரை யாரும் பார்த்ததில்லை. 

அக்டோபர்  16ம் தேதி.
இன்று  சரஸ்வதி பூஜையோடு கன்யா பூஜை  மஹாநவமி அன்று  நடை பெற்றது.  கன்யா பெண்  குழந்தைகள் நிறைய பேர், திருமணமான  ஸ்த்ரீகள் அனைவருமே  பங்கேற்றார்கள்.  எல்லோருக்கும்   போஜனம் ,  வஸ்திரம் , ஸ்வர்ண  தானம் செய்யப்பட்டது.  ஹோமங்கள்
 பூர்த்தியாகி, பூர்ணாஹுதி  நிறைவேறியது.   காசி மஹாராஜா மற்றும் உயர்  அதிகாரிகள் முக்கிய மனிதர்கள் அனைவருமே  வந்திருந்து  தரிசனம்  பெறறார்கள். அன்று  காசி விஸ்வநாதருக்கு விசேஷ  அபிஷேகம் ஏற்பாடாகி இருந்தது.

அக்டோபர்  17ம் தேதி 
 விஜயதசமி.  கங்கையில்  மஹா பெரியவா   யாகத்தின் முடிவில் செய்யும்  அவப்ருத ஸ்னானம் செய்தார்.   வேத உபநிஷத்  சாஸ்த்ர  பாராயணங்களை   ஹோமங்கள் நடந்த போது  நிகழ்த்தி   அவற்றில் பங்கேற்ற ப்ராமண வேத பண்டிதர்களுக்கு தானம் சன்மானம் எல்லாம்  வழங்கினார்.   ஆயிரக்கணக்கான பக்தர்கள்  மஹா பெரியவா தரிசனம் செய்து மகிழ்ந்தார்கள். நமக்கு அத்தகைய  பாக்யம் கிட்டாததால்  அவர்களை நினைத்து வணங்கினால் போதும்.

மொத்தம்  ஏழு  மோக்ஷபுரிகள் நமது பாரத தேசத்தில் இருப்பவை.  அதில் பிரதானமானது  காசி க்ஷேத்திரம். காசியில்  இறந்தவனுக்கு மறுபிறவி கிடையாது என்று ஐதீகம்.  காசியில்  கங்கையில் ஸ்நானம் செய்ய சில  படித்துறைகள் இருக்கின்றன.   அங்கு தான் எல்லோரும்  சென்று ஸ்னானம் செயகிறார்கள். அவை  பஞ்சகங்கா காட்,   மணிகர்ணிகா காட்,   அஸி  காட்,  தஸாஸ்வமேதா காட். பத்து  அஸ்வமேத யாகம் பண்ணின புண்யம் இங்கே ஸ்னானம் செய்தால் கிடைக்கும்  என்று பெயர் கொண்டது.  வாராண சங்கம காட்  ஆகியவை. காசி யில்    தரிசனம் செய்ய  காசி விஸ்வநாதர் ஆலயத்தோடு, விசாலாக்ஷி ஆலயம், அன்னபூரணி ஆலயம்,  தந்தி  ஆலயம்  எல்லாம் வேறு இருக்கிறது.
கங்கை நதியின்   அக்கரையில் உள்ள  தக்ஷிணாமுர்த்தி மடத்துக்கு  செல்ல  படகில் கங்கையைக் கடந்தார்.  தரிசனம் செய்து விட்டு அங்கே  பக்தர்கள்  வேண்டிக்கொண்டு  செய்த பாதபூஜையை ஏற்றார்.  
அக்டோபர்  19ம் தேதி,  
தர்பங்கா ராஜ்ய  மஹாராணி  மஹாபெரியவா தரிசனம் பெற  வந்தார்.  பாதபூஜை செய்தார்.  
அக்டோபர் 27ம் தேதி.
காசி வட்டாரத்திலுள்ள வடக்கத்திய  சந்யாசிகள் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய  பாத பூஜை, பிக்ஷா வந்தனங்களை ஏற்றுக்கொண்டார்.   தமிழ்நாட்டிலிருந்து அங்கே குடியேறிய  சந்யாசிகள், பக்தர்கள் ஒன்று கூடி  பாத பூஜை, பிக்ஷா வந்தனம் செய்தார்கள். 

நவம்பர்  16ம் தேதி.
ஹனுமான் காட் எனும் படித்துறையில்  அஸி நதியில்  ஸ்னானம் செய்தார். 

நவம்பர்  18ம் தேதி 
ஹனுமான் காட்டில்  பஞ்சகங்கா  புண்ய நதி ஸ்னானம். குகை கோயில், மற்றும்  காசி எல்லை தேவதை ஆலயத்தில்  தரிசனம் பெற்றார்.  

1934ம் வருஷம்  டிசம்பர் மாதம்  17ம் தேதி  
இன்று  தனுர் மாசம் துவங்கியது.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...