Monday, January 24, 2022

PESUM DHEIVAM

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K   SIVAN

107, பிரயாகை திரிவேணி சங்கம  ஸ்னானம் 

ஜபல்பூர் மத்திய பிரதேசத்தில்  மூன்றாவது பெரிய நகரம்.  மற்ற  முதல் ரெண்டு நகரங்கள் இந்தூர், போபால்  ஆகியவை.  பண்பாட்டுக்கும்  கலைக்கும், பெயர்போன ஒரு ஊர்  ஜபல்பூர்.   மராத்தியர்கள்,  முகலாயர்கள் ஆண்ட காலத்தில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன.    பெரிய  ரயில் தொழிற்சாலை இருப்பதால் நிறைய  தமிழர்கள் குடியேறி வெகுகாலமாக  பணி புரிந்தனர்.  

1934 ம் வருஷம் ஜுன் 3ம் தேதி  முதல்  6ம் தேதி வரை மஹா பெரியவா ஜபல்பூரில்  உள்ள  ரயில்வே காலனியில் முகாமிட்டார். மஹா பெரியவா  வருகை அறிந்து முன்னேற்பாடாக அங்குள்ள
 தமிழர்கள்  மஹா பெரியவா  தங்க  தக்க  வசதிகள் செய்திருந்தனர். .இங்கும் ஆயிரக்கணக் கானோர்  மஹா பெரியவா அன்றாடம்  செய்யும்  சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையை பார்க்க வந்தனர். அதோடு  மஹா பெரியவா தரிசனமும் கிடைத்ததில்  மஹா திருப்தி.    நர்மதா நதி  கௌரி கட்டம் எனும் இடத்தில்   4ம் தேதி  அன்று  மஹா பெரியவா  ஸ்னானனம்  செய்தார்.  

ஜபல்பூரை விட்டு  கிளம்பி, பன்ராகார்,  கோஷபுர், சிஹோரா, சீமனாபாத்,  வழியாக  காதினி என்னும்  ஊருக்கு  ஜூலை 10ம் தேதி விஜயம் செய்தார். அங்கிருந்து பிறகு  ஜுக்கேரி , எனும் மெஹர் ராஜ்ய நகரை  அடைந்தார்.  அந்த ராஜ்ய  அதிகாரிகள்  மஹா பெரியவாளை அழைத்து வரவேற்று, உரிய  மரியாதைகள் செலுத்தினார்கள். ராஜாங்கமே அவர்  தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.   15ம் தேதி  ரீவா  எல்லையை  அடைந்தார்.   ரீவாவில்  21ம் தேதி வரை கேம்ப் .  அந்த ராஜ்ய  உயர்  மட்ட  அரசாங்க அதிகாரிகள், காவல் துறை  அதிகாரிகள் ஆகியோர்  மஹா பெரியவாவை வரவேற்று உபசரித்தனர். மஹா பெரியவா புகழ் அவருக்கு முன் எல்லா இடங்களிலும் சென்றிருந்ததே காரணம்.

மஹா பெரியவா 23ம் தேதி ஜூலை அன்று  அலஹாபாத்   நகரத்தில்    ப்ரயாகைக்கு  வந்து சேர்ந்தார். ஆயிரக்கணக்கானோர்  வரவேற்பு குழு ஒன்றை  நியமித்து  சிறந்த ஏற்பாடுகள் செய்து  மஹா பெரியவாவை உபசரித்தனர்.  

மஹாமஹோபாத்யாய  கங்காநாத்  ஜா  என்பவர்  அந்த ஊர்  பல்கலைக் கழக  தலைவர்.  அவரைத்தவிர, ஹை கோர்ட்  ஜட்ஜ்  கன்னையா லால் , பத்ரிகாசிரியர்  C.Y. சிந்தாமணி,  டெபுடி மேயர்  வெங்கடேச சாஸ்திரி, ஆகியோர்   பக்தர்கள் எண்ணற்று கூடி இருக்க,   ப்ரயாக்  எல்லை யில் பூர்ணகும்பத்தோடு  வேதகோஷம், நாதஸ்வர மேள தாள மங்கள  வாத்ய கோஷ்டி  இசையோடு  வரவேற்றனர். அங்கிருந்து  மஹா பெரியவா ஊர்வலம்  அழைத்துச் செல்லப்பட்டார்.  தாராகான்ச்  ஊர் வரை ஊர்வலம் சென்றது.  அங்கே தான்   மஹா பெரியவா தங்க இடவசதி செய்திருந்தார்கள்.  ''ஹரஹர சங்கர, ஜெயஜெய''  சங்கர சப்தத்தோடு,   ''குரு மஹாராஜ் கி  ஜெய்''  சப்தமும்  வானைப் பிளந்தது. 

ஜூலை 25ம் தேதி  1934 ம் வருஷம், அன்று  ராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவந்திருந்த  மண்ணை  கங்கா, யமுனா, ஸரஸ்வதி  மூன்று நதிகளும் சங்கமமாகும்  திரிவேணி சங்கமத்தில் கரைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.   இதற்காக  அக்டோபர் 1922 லிருந்து அந்த மண்  ஜாக்கிரதையாக பாதுகாக்கப் பட்டு இருந்தது.   உள்ளூர்  பக்தர்கள்,  சாஸ்திரிகள், வேத விற்பன்னர்கள் புடைசூழ  மஹா பெரியவா சங்கல்பம் பண்ணிய பின், பிராமணர்களுக்கு  தானம்  அளித்துவிட்டு ,    சேது விலிருந்து சேகரிக்கப்பட்ட   மண்ணை அடைத்திருந்த   வெள்ளிச் சொம்பை  எடுத்துக் கொண்டு திரிவேணி சங்கமத்துக்கு நடந்தார்.  வேணி மாதவர்  சந்நிதி தரிசனத்துக்குப் பின், திரிவேணி சங்கமத்தில்  மண்ணை கரைத்தார்.   வெள்ளி சொம்பு   அங்கிருந்த பண்டாவுக்கு  (அர்ச்சகர்) தானமாக கொடுக்கப் பட்டது.  ஆயிரக்கணக்கானோர்  அங்கே  கங்கையில்  மஹா பெரியவாளோடு  சேர்ந்து  ஸ்னானம் செய்தார்கள்.  எவ்வளவு புண்யம் செய்தவர்கள். கொடுத்து வைத்தவர்கள். 

கங்கைக் கரையில் இருக்கும்  சோமேஸ்வர்  ஆலயத்துக்கு  சென்று   ஸ்னானம் செய்தபின் மஹா பெரியவா  மடத்துக்கு திரும்பினார். 

அடுத்தநாள்  1934ம் வருஷம், ஜூலை 26அன்று   தாரா கான்ச்  ஊரில்  வியாஸ பூஜை , அட இவ்வளவு தென்னிந்திய  பக்தர்கள் இங்கிருக்கிறார்களா? என்று அதிசயிக்க வைத்தது. 

 ஆயிரக்கணக்கானோர் வியாஸ பூஜையை நேரில் கண்டு களித்து    மஹா  பெரியவாளை தரிசித்தார்கள்.  அன்று   சாதுர் மாஸ்ய விரதம் மஹா பெரியவா  சங்கல்பம் செய்து கொண்டபின்   துவங்கியது.   அன்று சந்திர கிரஹணம் என்பதால் அன்றிரவு  கங்கையில்  ஸ்னானம் செய்த  பின்  மடத்துக்கு வந்து  விசேஷ  பௌர்ணமி பூஜை செய்தார்.  24ம் தேதி செப்டம்பர் வரை பிரயாகையில்  மஹா பெரியவா தங்கி இருந்த  போது   வித்வத் ஸபா  ஒன்று கூட்டினார்.  அது செப்டம்பர் 1 அன்று  நடந்தது.   வட  இந்திய  வித்வான்கள் பலர்  அதில் கலந்து கொண்டார்கள்.  விவாதங்கள் பல நடந்தன.  அனைவருக்கும் தக்க  சன்மானங்கள் அளித்தார்.   18ம் தேதி செப்டம்பர் அன்று   பாரத் வாஜர்  ஆஸ்ரமம்   வாசுகி ஆஸ்ரமம்  சென்று  தர்சனம் செய்தார்.  

காசி வாழ் மக்கள்  மஹா பெரியவாவுக்கு அழைப்பு அனுப்பி, காசியில் அந்த வருஷ நவராத்ரி வைபவம் நடத்த கேட்டுக்கொண்டார்கள்.    22ம் தேதி  அக்ஷய வட  விருக்ஷம் தரிசனம் செய்தார்.

24ம் தேதி  சாதுர்மாஸ்ய  விரத  கடைசி தானம் அன்று  பூஜையை பார்க்க  மஹா பெரியவா தரிசனம் பெற ஆயிரக்கணக்கானோர் வந்தார்கள்.  மஹா பெரியவர்கள்  விஜய யாத்திரை  காசி செல்ல தொடங்குவதற்கு முன் அவரை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் அநேகரிடம் இருந்தது.   அனைவருக்கும்  ஆசி, மந்த்ரக்ஷத்தை   பிரசாதம் வழங்கினார்.   இனி மஹா பெரியவா காசியில் தங்குவார் என்று  செய்தி  பரவியது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...