Monday, January 31, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள்   167-168     நாமங்கள் 898-911

वीरगोष्ठीप्रिया वीरा नैष्कर्म्या नादरूपिणी ।
विज्ञानकलना कल्या विदग्धा बैन्दवासना ॥ १६७॥

 Viragoshtipriya vira naishkarmya nadarupini
vigynanakalana kalyavidagdha vhaindavasana – 167

வீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாதரூபிணீ
விஜ்ஞாநகலநா கல்யா விதக்தா பைந்தவாஸநா 167

तत्त्वाधिका तत्त्वमयी तत्त्वमर्थ-स्वरूपिणी ।
सामगानप्रिया सौम्या सदाशिव-कुटुम्बिनी ॥ १६८॥

Tatvadhika tatvamaei tatvamardha svarupini
samagana priya saomya sadashiva kutunbini – 168

தத்வாதிகா தத்வமயி தத்வமர்த்த ஸ்வரூபிணீ
ஸாமகாநப்ரியா ஸௌம்யா ஸதாசிகுடும்பிநீ 168

*898* वीरगोष्टि-प्रिया   வீரகோஷ்டீப்ரியா  
அம்பாள் லலிதை  ஒரு வீரம்மாள்.  அதனால் தான் அவளைச்சுற்றி  ஒரு வீரர்கள் கோஷ்டி இருந்து கொண்டே இருக்கும். வீரர்கள் என்றால் கத்தி கபடா  தூக்கியவர்கள் இல்லை.  புலன்களை ஜெயித்தவர்கள். அதல்லவோ வீரம், வைராக்கியத்திலிருந்து வந்த வீரம்.  வீர மாதா அல்லவா?

*899*  वीरा   வீரா
லலிதாம்பாள் வீராங்கனை.  அவள் குடும்பமே  வீரர்கள் நிறைந்தது தானே.  கணவன் பரமசிவன் திரிபுரம் எரித்தவன்.  மகன் கணேசன்  சிவகணங்களுக்கு  தளபதி  கணபதி.   ஆறுமுகன்  சூரர்களை வென்ற  தேவ சேனாபதி.   அம்பாளே  பல ராக்ஷஸர்களை அழித்தவள்.   ராக்ஷஸன் என்பவன் ஏமாற்று பேர்வழி,   (கீதை  XVI.4) , அஹம்காரம் கொண்டவன்,  கர்வி , கோபி,  அறியாமையில் உழல்பவன், இரக்கமற்றவன்.இத்தகையக குணங்களை கொண்டவன்  ராக்ஷஸன் என்கிறது.

*900*     नैष्कर्म्या  நைஷ்கர்ம்யா
அம்பாள் கர்மா தன்னை  அணுகாதவள்.  அழியக்கூடிய ஜீவர்களுக்கு தான் கர்மா. கர்மாவை  உணர்த்தியவளே அம்பாள்.  ப்ரம்மத்துக்கு கர்மம் சம்பந்தமே இல்லாதது. கிருஷ்ணன்  கீதையில்  (V.10) எவன்  தன் செயல்கள் எண்ணங்களை  ப்ரம்மத்திடம் அர்பணித்துவிட்டவனோ, அவனை   மாயை,  பற்று, பாபங்கள் எதுவும்  அணுகாது'' என்கிறான்

*901*   नाद-रूपिणी நாதரூபிணீ
ஸப்த (ஒலி )சுஷும்னா நாடியில் குண்டலினி பிரவேசிக்கும்போது உண்டாவது தான்  ஓம் எனும் பிரணவ சப்தம். நாதம்.  வள்ளலார் அருட் ஜோதி  தெய்வத்தை ''நாதாந்த''தெய்வம் என்பாரே   அது இது தான்.  அருணகிரி நாதர் சொல்லும்   ''நாத பிந்து  கலா''  வும் இதுவே.

*902*   विज्ञान-कलना    விஜ்ஞாநகலநா
விஞ்ஞானம் என்றால்  நாம்  புரிந்து கொள்ளும்   சயின்ஸ் பாடம்  அல்ல.  பிரம்மத்தை அறிந்து கொள்ளும்  ஞானம்.  அறிவு.   கலனா   என்றால் அறியும்,    காரணமாகும்  செயல் பாடு.  *727* வது  நாமத்தில்  சிவஞான ப்ரதாயினி என்று வந்ததல்லவா. அம்பாள்  ஞான காரணி .  ஞானதா. 
அவளே  மிக உயர்ந்த  பிரம்மத்தை அறியும் ஞானத்தை தருபவள்.அதுவே  ஆனவள்.  வித்யை எனப்படுவது 14 வகை.   நான்கு வேதங்கள்,  ஆறு வேதாங்கங்கள் (சிக்ஷா, சந்தஸ், வ்யாகரணம், ந்ருக்தம் , ஜ்யோதிஷம், கல்பம்)  மீமாம்சம், நியாயம்,  புராணம்  போன்றவை..இதெல்லாம்  அறிவது தான் விஞ்ஞானம். போதுமா?

*903*  कल्या கல்யா
கல்யா  எத்தனையோ  விஷயங்களை குறிக்கும்  சுப  வார்த்தை.   புண்யமானது, ஆரோக்கியமானது, நேர்மை நியாயமானது, பரிசுத்தமானது, தயாரான  நிலையில் இருப்பது,   பிறருக்கு அறிவை புகட்டுவது, விடியற்காலை,  சகல கலா வல்லி அம்பாள். 

*904*   विदग्धा  விதக்தா
அம்பாள் அதி புத்திசாலி.   இல்லாவிட்டால்  அவளால்  ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்  எனும் முத்தொழில்களை   வெற்றிகரமாக  நடத்த முடியுமா? 

*905*  बैन्दवासना   பைந்தவாஸநா
பிந்து என்ற நுண்ணிய  வஸ்துவை  ஆசனமாக, பீடமாக,  கொண்டவள் அம்பாள்.  ஸ்ரீ சக்ரத்தின் மத்திய பாகம் பிந்து.  த்ரிகோண மத்யம் எனும் புள்ளி அது தான்.  சர்வானந்த  மய  சக்ரம். பைந்தவஸ்தானம்  என்றும் அதற்கு பெயர்.   நவாவரணத்தில்  ஒன்பதாவது  ஆவரணத்தில் உள்ளது.
இங்கே  வீற்றிருக்கும் அம்பிகையை  தான் மஹா திரிபுர சுந்தரி என்றும் வணங்குவது.

*906*  तत्त्वादिका   தத்வாதிகா
தத்வங்கள்   பொதுவாக  24  அல்லது  36 எனப்படும்.  அம்பாள் அதற்கு அப்பாற்பட்டவள் .  

*907*   तत्त्वमयी   தத்வமயி
தத்வங்களின்  சாரம் அம்பாள் எனலாம்.  ஆத்மஞான எல்லைக்கு எல்லை.  தத்துவத்தை அறிவது தர்சனம் எனப்படும்.   தத்துவங்களை பாஹ்ய காரணம் என்பார்கள்.  பஞ்சபூதங்களின் ஆதி காரணம். பஞ்ச  பூதங்களிலிருந்து  24 காரணங்கள்  தோற்றம்.  இதில் அந்தக்கரணம் 4 தத்துவங்களும் சேர்ந்தது தான்.  இதோடு  6  தத்துவங்கள் ஆத்ம தத்வம்.  இன்னொரு ஆறு  வித்யா தத்வம். மொத்தம் 36 ஆகிறது அல்லவா?  அம்பாள்  இதெல்லாவற்றின் ஒட்டுமொத்தம்,. அதற்கப்பாலும் கூட. 

*908*  तत्त्वमर्थ-स्वरूपिणी   தத்வமர்த்த ஸ்வரூபிணீ
''தத்''  என்பது ப்ரம்மத்தை .  ''த்வம்''  என்பது ஆத்மாவை. இந்த ரெண்டையும் அறிவது தான் ஆத்மஞான தத்வம்.   அம்பாள் தான்  உபநிஷத் மஹா வாக்கியத்தில் வரும்  ''தத் த்வம்  அஸி''     நீதான் அது  என்பது.  பெரியதில் மஹா பெரியது. சின்னதில்  எல்லாவற்றிலும் நுண்ணிய அணு தான் அம்பாள் ஸ்ரீ லலிதை.

*909*  सामगान-प्रिया  ஸாமகானப்ரியா
சாமம் என்றால் சாம வேதம். அதற்கென்று ஒரு  தனி சந்தஸ், ராகம் உண்டு. அதை சாமகானம் என்பார்கள்.  பரமேஸ்வரனைப் போலவே  அம்பாளும்  அதை விரும்பி கேட்பவள்.    சாம கானத்தை வாசித்து தான்  ராவணன்  சிவன் அருளால், வரத்தால், ராவணேஸ்வரன் ஆனான்.  வால்மீகி  ராமாயண உத்தர காண்ட  ஸ்லோகம்  (
XVI.34): “தஸானனன்  சிவனை சாம வேத  ஸ்லோகங்களைப் பாடி  வரங்கள்  பெற்றான்''  என்கிறது.  கிருஷ்ணனும் கீதையில்   (X.22) “ வேதங்களில் நான் சாமவேதம்'' என்கிறான்.

*910*  सोम्या ஸௌம்யா
சோமன் என்றால் சிவன்.  உமாவுடன் சேர்ந்தவன் என்று ஒரு பொருள்.   சோமன் என்றால் சந்திரன்அவனை  சைகையில் சூடிய பிறை சூடி தான் சோமசேகரன்.  சோமநாதன். அம்பாள் தான் சிவஸ்வரூபம்.  அவளை ஸௌம்யா என்று  வணங்குகிறோம். 

*911*  सदाशिव-कुटुम्बिनी  ஸதாசிவ குடும்பினி
சதாசிவன்  தேவி அல்லவா?  அவளை சதாசிவ குடும்பஸ்திரீ என்று சொல்லாமல் எப்படி அடையாளம் காட்டுவது?   சதாசிவம் என்பது அதி உன்னத  தத்வம்.   பிரபஞ்சத்தை தன்னுடைய  அங்கமாக  உணர்வது.  ஆத்ம   ஸ்வரூபமாக எதையும்  நோக்குவது.   ஆத்ம ஞானம் பெறுவதில்  ஐந்து  விஷயங்கள்  மூல ஸ்தானங்கள்.  சுத்த வித்யை,  ஈஸ்வரன்,  சதாசிவன்,  சக்தி, சிவம்.

சக்தி பீடம்:   ஜ்வாலாமுகி   ஆலயம்.  

பாரத தேசத்தின்   ஹிமாசலப் பிரதேசத்தில் காங்ரா என்று ஒரு ஜில்லா. கிராமத்தின் பெயரும்  காங்க்ரா. தரம்சாலாவிலிருந்து  55 கி.மீ. தூரம்.  இமயமலை  அடிவாரத்தில்  உள்ளது இந்த  புகழ் பெற்ற ஜ்வாலாமுகி அம்மன் கோயில். 51 சக்தி பீடங்களில்  ஜ்வாலாமுகியும் ஒன்று மட்டுமல்ல. இதுவே  நவ சக்தி பீடங்களிலும்  ஒன்றாகவும் கருதப்படுகிறது.   கடல் மட்டத்திலிருந்து 2,001 அடி உயரத்தில் அமைந்ததாக  சொல்கிறார்கள். இங்குள்ள பாறைகளிலிருந்து நெருப்பு உமிழ்ந்து கொண்டே உள்ளது. இங்கு உமிழும் நெருப்பே ஜுவாலாமுகி தேவியின் உருவமாகவும், கருவறையாகவும் பூஜிக்கப்படுகிறது.  சதி தேவியின் நாக்கு விழுந்த ஸ்தலமாக  நம்புகிறார்கள்.
இங்கே தேவி அக்னி ஸ்வரூபம்.  பாறைகளுக்கு நடுவே, ஆங்காங்கு, 11  இடத்தில்  விடாது அக்னி. ஜ்வாலை  விட்டு  எரிகிறது.   ஒவ்வொரு ஜ்வாலைக்கும் ஒரு பெயர்.  மஹாகாளி, அன்னபூர்ணி, சண்டிதேவி, சரஸ்வதி, துர்க்கா தேவி, லக்ஷ்மி என  உபாசித்து  வழிபடுகிறார்கள். 
 பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டு   அதனுள் நீல வர்ணத்தில்  எரிந்து கொண்டிருப்பது  தான்    ஜ்வாலா முகி  அம்மன். மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமாய் அன்னபூர்ணி. பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா, சண்டி தேவி. பக்கத்தில் மா ஹிங்க்லாஜ் தேவி [சர்வ வ்யாதிகளுக்கும் நிவாரணம் தருபவள்], விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்க்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம்.
எல்லா தேவிகளுமே ஜோதி ரூபமாக இங்கே  அருள்பாலிக்கிறார்கள்.  பாறைகளுக்கு நடுவிலிருந்து எப்படி  அக்னி?  எங்கேயிருந்து பல வருஷங்களாக அணையாமல்  ஜ்வாலை வருகிறது?  என்ன காரணம்?   இதற்கெல்லாம் விஞ்ஞானம் இன்னும் பதில் சொல்லவில்லை.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜுவாலாமுகி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,361 ஆகும். அதில் 2,782 ஆண்கள் ஆகவும்; 2,579 பெண்கள் ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 559 (10.43%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.19% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 94.33% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.94%. ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 927 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 95.24% ஆகவும்; இசுலாமியர்கள் 3.71% ஆகவும்; சீக்கியர்கள் 0.86% ஆகவும்; பௌத்தர்கள் 0.09% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.09% ஆகவும் உள்ளனர்.  இந்த கணக்கெல்லாம் நம்மை  பகவதி   அம்பாளிடமிருந்து தேவையில்லாத விஷயங்களில் கவனத்தை கொண்டு சேர்க்குமென்பதால் மேற்கொண்டு இது மாதிரி தகவலை சேகரிக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...