Monday, January 3, 2022

KOTHAIYIN GEETHAI

 கோதையின்  கீதை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


 20  ''திருவே துயில் எழாய்''

நாள் வேகமாக ஓடுகிறது என்று சொல்வார்களே   அவர்கள் தெரியுமா? நிறைய வேலை செய்பவர்கள். சுறு சுறுப்பானவர்கள்.

''பொழுது போகவில்லை. ஒவ்வொரு நாளையும் ஓட்டுவது ப்ரம்மத் ப்ரயத்தனமாக இருக்குடா சுப்புடு'' என்பவன் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன்.

ஆண்டாள் பம்பரமாக சுழல்பவள். மார்கழி 20வது நாளான இன்று ஆண்டாளும் சிறுமியர்களும் வழக்கம் போலவே அதிகாலையில் நந்தகோபன் மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர் . யாரைப் பிடித்தால் காரியம் நடைபெறும் என்பது ஆண்டாள் என்கிற கெட்டிக்கார சிறுமிக்கு சுலபமாக தெரிந்து விட்டது. தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவருடைய ஆசியும் அருளும் தேவையோ அவரையே இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை பிராட்டியே என்பதால் ஆண்டாளின் சிறுமியர் குழாம் நப்பின்னையையே வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில் முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயணனையும் கிருஷ்ணனையும் போற்றி பாடுவது ரொம்ப ரம்மியமாக இருந்தது.

ஆண்டாள் வேண்டினாள்:

''முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கும் தேவாதி  தேவா,நாராயணா, கேளாமலேயே அனை வரையும் ரட்சிக்கும் தேவனே துயிலெழு. அம்மா, நப்பின்னை பிராட்டியே, உலக நாயகியே, நீயும் துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று தொடர வாழ்த்தி அருளவேண்டும். தூய மனங்களில் என்றும் வீற்றிருக்கும் நாராயணனும் பிராட்டியும் தேவர்களை எல்லாம் காத்ததுபோல் நம்மையும், நாம் வேண்டாமலேயே, கேளாமலேயே, காப்பார்கள்.'' என்பது தான் ஆண்டாள் பாடிய இன்றைய பாசுர அர்த்தம்.

அச்சிறுமிகள் அன்றும் யமுனையில் நீராடி விரதம் வழக்கம் போல் கொண்டாடினர். கை நிறைய புஷ்பங்களை எடுத்துக் கொண்டு , வாய் நிறைய நாமாவளி சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த பெருமாள் கோயில் சென்று வழிபட்டு அன்றைய விரதம் முடிந்தது.

மார்கழியில் இந்த புனித நாளில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையுடன், மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று வேறுபாடு. அவ்வளவே!

எப்போதோ யார் செய்த புண்ணியமோ, நமக்கெல்லாம் அந்த சிறுமி கோதை ஆண்டாளாக உருவெடுத்துக் கொண்டு அளித்த புதையல் இதோ :

''முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்''

ஆயர் பாடியில் இவ்வாறு நடக்கும்போது வில்லிப்புத்தூரில் நந்தவன ஆஸ்ரமத்தில் நடப்பதையும்  நாம்  கவனிக்க தவறுவதில்லையே.

வாசலில் அரிசி மாவு எடுத்து பெரிதாக கோலம் போட்டிருந்தாள் கோதை. கலர்ப்பொடிகளை உபயோகித்து செடி கொடிகளை தத்ரூபமாக வரைந்திருந்தாள் அல்லவா? அவளுக்கு மிகவும் நெருக்கமான வைதேகி என்கிற பசு அந்த கோலத்தை அருகில் நின்று பார்த்துக்  கொண்டிருந்தது. பாவம் அந்தப் பசு அவள் வரைந்த செடி கொடிகளை நிஜமானவை என்று நம்பி ஆர்வமுடன் மேய்வதற்கு எண்ணி, நக்கி தின்ன முயற்சித்தது. கோலம் கலைந்து விட்டது. நமக்கென்றால் மிக்க கோபம் வரும். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் ஒரு கொம்பினால் அதை அடித்து விரட்டு வோம். ஆண்டாள் நம் போல் இல்லையே. மெச்சினாள்.  அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்

'அடியே, என் கட்டிக் கரும்பே, வைதேகி, நீ ஏமாந்தாயா, நான் அவ்வளவு தத்ரூபமாக நீ ஏமாறும் அளவிற்கு உண்மையான செடி கொடி போல வரைந்திருக்கிறேன் என்று நீ நிரூபித்து விட்டாய். பாவம், நிஜம் என்று நம்பின நீ எமாறக்கூடாதே, உனக்கு நிஜமான இலையையே தருகிறேன்'' என்று உள்ளே சென்று நிறைய அகத்திக்கீரை கட்டு கட்டாக கொண்டு வந்து வைதேகியின் வாயில் ஊட்டினாள் . வைதேகியின் கண்களில் தெரிந்த நன்றியையும், அன்பையும், பாசத்தையும் எனக்கு எழுதத் தெரியவில்லை. வார்த்தை தேடிக் கொண்டிருக் கிறேன்.  கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.

இப்போதெல்லாம் வடபத்ர சாயி கோவிலில் விஷ்ணு சித்தரைச் சுற்றி நிறைய பக்தர்கள் அன்றாடம் ஆண்டாள் எழுதிய பாசுரங்களை படிக்கச்   சொல்லி கேட்டு அர்த்தமும் அவர் சொல்லி புரிந்து கொண்டு மகிழ்கிறார்களே. மேற்கண்ட 20வது நாள் பாசுரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...