Wednesday, January 12, 2022

VAIKUNDA EKADASI

  வைகுண்ட ஏகாதசி - பரமபத வாசல் தரிசனம்-      நங்கநல்லூர்    J.K. SIVAN


புராண  காலத்தில்  ராஷஸர்கள்  இப்போது  போல்  வேஷ்டி சட்டை வெள்ளையாக போட்டுக்  கொண்டு  பாக்கெட்டில் படம் வைத்துக் கொள்ளும்  பழக்கம்  இல்லை என்பதால்,  தூரத்தில் இருந்து பார்க்கும்போதே  அவர்களது  தலையில் ரெண்டு பக்கமும்  கொம்பு,  சிவப்பு பெரிய  கண், கோரைப்பல், நிறைய  கழுத்தில்  கையில் ஆபரணம், ஆயுதங்கள், உடம்பெல்லாம் பெரிசு பெரிசாக மண்டையோடு  மாலைகள், இடுப்பில் பாவாடை போல் ஒரு ஆடை முழங்காலுக்கு மேலாக, மட்டும் கட்டிக்கொண்டு  எது பேசினாலும்   ''ஹா ஹா'' என்று சிரித்து விட்டு தான் பேசுவார்கள்.

அப்படி ஒருவன்  கிருதயுகத்தில் முரன் என்ற  பேர் கொண்ட அசுரன் இருந்தான்.  . தேவர்கள் உட்பட அனைவரையும் பாரபக்ஷமின்றி  துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மஹா  விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்கள் , ஆயுதங்கள், படைகள், எல்லாம்  க்ளோஸ்.   என்றாலும் முரன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று  கிருஷ்ணன் நினைத்ததால் போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.

அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண்,  ஹைமவதி, தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், 'ஹூம்' என்று ஓர் ஒலி எழுப்பினாள்.  யுத்தம் முடிந்தது. ஏனென்றால்  முரன் பிடி சாம்பலாகிப் போய்விட்டானே.

அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி,

''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி  என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. இன்னொரு விவரமும் இருக்கிறது.

பிரம்மாவுக்கு ஏனோ அடிக்கடி தண்டனை கிடைப்பது வழக்கம். காரணம் அவருக்கு தன் மேல் ரொம்ப சுய மதிப்பு. அந்த அகங்காரத்தை ஒடுக்க மகா விஷ்ணு யோசித்தார்.

அவர் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் தோன்றினார்கள்.  அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்து பிரம்மாவை காத்து, , அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாக சொல்கிறார்.

''ஹே,  மஹா விஷ்ணு,  நீ என்ன எங்களுக்கு வரம் தருவதற்கு. நாங்கள் வேண்டுமானால் உனக்கு வரம் தருகிறோம் '' என்கிறார்கள்.

''ஓஹோ,   நீங்கள் வரம் தருவதானால் நான் கேட்கும் வரம் உங்களுக்கும் என்னால் மரணம் '' என்றார் விஷ்ணு.

அந்த கால அசுரர்கள் இப்போது போல் இல்லை  என்று ஏற்கனவே சொன்னேனே.  சொன்ன  வாக்கை காப்பாற்றுவார்கள்.  ஆகவே. ''நாராயணா, ஒரு வேண்டுகோள். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்றார்கள்.
''சரி அப்படியே ஆகட்டும்'' என்கிறார்  விஷ்ணு.

விஷ்ணுவுக்கும் மது கைடபர்களுக்கும் யுத்தம். முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார்.

''நாராயணா, இனி நாங்கள் வரம் கேட்கிறோம். ''விஷ்ணுவின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும்'' என வரம் கேட்டதுடன் ''ஐயா விஷ்ணு பரமாத்மா. ஒரு சின்ன ரிக்வெஸ்ட். (request ).எங்களுடைய இந்த கதையை யாராவது கேட்டு இந்த தினத்தில்   நீங்கள் உள்ளே இருந்து  கதவு திறந்து வருவதை பார்த்தால் அவர்களுக்கும் உள்ளே மோக்ஷம் செல்ல வழிவிட வேண்டும்''' என்று பெரிய மனசு பண்ணி கேட்டார்கள். விஷ்ணு சரி என்றதால் நாம் பரம பத வாசல் நுழைகிறோம். மோக்ஷம் பெறப்போகிறோம்.

ஏகாதசி என்றால் பதினொன்று. ஞானேந்திரியம் ஐந்து+கர்மேந்திரியம் ஐந்து+ மனம் ஒன்று = 11. இதெல்லாம் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும். பெருமாள் கோவில்களில் இன்று வழக்கத்தை விட அமோக கூட்டம் கூடும்  காரணம்  அனைவருக்கும் மோக்ஷம் கிடைக்க வேண்டாமா?

இன்றைக்கு உபவாசம் இருப்பவன் மீதி 23 ஏகாதசிகளில் உபவாசம் இருந்த பலனை பெறுகிறான் என்கிறது விஷ்ணு புராணம். ஒவ்வொரு மாசம் ரெண்டு ஏகாதசிகள்.   ஒன்று சுக்ல பக்ஷம்,   இன்னொன்று கிருஷ்ண பக்ஷம். மொத்தம் வருஷத்திற்கு 24 ஏகாதசி.

ஒரு சித்தாந்த விளக்கம். முரன் என்னும் அசுரன் உண்மையில் நமக்குள் இருக்கும் ரஜோ, தமோ குணம். பேராசை, ஆசை, பாசம் சோம்பல், கர்வம், கோபம் ,  டம்பம் எல்லாம் அதால் தான் உண்டாகிறது. இதைப் போக்க தான் பட்டினி. உபவாசம். அதனால் கிடைப்பது சத்வ குணம்.. அது தான் மோக்ஷ சுகம் தரும். நல்ல எண்ணங்களும் சாத்வீக சிந்தனையும் நிறைந்தால் அது தான் சுகம். மனம் அமைதிபெறுகிறது. ஆன்மாவுடன் தொடர்பு நீடிக்கிறது. அப்புறம் விஷ்ணு தெரியமாட்டாரா ?

வைகுண்ட ஏகாதசிக்கும் ராக்ஷஸர்களுக்கும் தொடர்பு இருப்பதால் உங்களுக்கு துன்பம் விளைவித்து நீங்கள் விடுதலை பெற வேண்டி, நாராயணன் அருளி மோக்ஷம் பெறும்போது துன்பம் விளைவித்த ராக்ஷஸனுக்கும் மோக்ஷம் கிடைக்குமே.  ஒரு  நாரயணன்  பாட்டு  கேட்போம்.  அதை கேட்டு, நாம் மோக்ஷம் பெற உத்தேசம்.      

https://youtu.be/B7Zo0-E0lZM


ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாள் பகல் பத்து வைபவம். அடுத்து பத்து நாட்கள் ராப்பத்து. இந்த இருபது நாளும் ரங்கனுக்கு முத்து அங்கி. பகல் பத்து முடிந்த அன்று நம்பெருமாள் மோஹினி அலங்காரத்தில் காட்சி தருவார்.

வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் என்று ஒரு வழி அமைத்து எல்லோரும் உள்ளே சென்று பெருமாளை தரிசிப்பார்கள் . பெருமாள் கோவில்களில் இன்று வழக்கத்தை விட அமோக கூட்டம் சேரும். இந்த வருஷம் கொரோனா ராக்ஷஸன் தடுத்து விட்டான்.

புராண கதை என்று பாராமல் ஒரு சித்தாந்தத்துடன் பார்த்தால் முரன் என்பது நம்மிடையே உள்ள ரஜோ, தமோ குணம். அதனால் தான் பேராசை, ஆசை, பாசம் சோம்பல், கர்வம், கோபம் தம்பம் எல்லாம் உண்டாகிறது. இதெல்லாம் தொலைப்பது தான் உபவாசம். அதனால் விளைவது தான் சத்வ குணம் என்பது மனதில் குடியேறுகிறது. அது தான் மோக்ஷ சுகம் தருவது. உபவாசம் இருந்து கண் விழிப்பதால் மனதில் நல்ல எண்ணங்களும் சாத்வீக சிந்தனையும் நிறைகிறது. மனம் அமைதியுறுகிறது. ஆன்மாவுடன் தொடர்பு நீடிக்கிறது. விஷ்ணு தெரியமாட்டாரா அப்பறம்.

சாப்பாடு தான் முரன். சாப்பிட்டால் தூக்கம், கோபம் தாபம், உணர்ச்சிகள் பெருகும். ஆன்மாவை மனம் தேடாமல் செய்து விடும். அர்த்தம் தெரிந்தோ தெரியாமலேயோ சில சடங்குகளை செய்யவேண்டும். மனது தானாகவே அதில் ஈடுபட்டு கேட்ட, தீய சிந்தனைகளுக்கு இடம் இல்லாமல் செய்யும் . மஹாபாரதத்தில் அர்ஜுனன் கீதை பெற்றது இந்த மாதிரி ஏகாதசி அன்று தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...