Saturday, January 15, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K   SIVAN 

ஸ்லோகங்கள்  150 -152 நாமங்கள்  785-800 .

मार्ताण्ड-भैरवाराध्या मन्त्रिणीन्यस्त-राज्यधूः । or मार्तण्ड
त्रिपुरेशी जयत्सेना निस्त्रैगुण्या परापरा ॥ १५०॥

Martanda bairavaradhya mantrini nyastarajyadhuh
tripureshi jayatsena nistraigunya parapara – 150

மார்தாண்ட பைரவாராத்யா, மம்த்ரிணீ ன்யஸ்தராஜ்யதூஃ |
த்ரிபுரேஶீ, ஜயத்ஸேனா, னிஸ்த்ரைகுண்யா, பராபரா || 150 ||
 
सत्य-ज्ञानानन्द-रूपा सामरस्य-परायणा ।
कपर्दिनी कलामाला कामधुक् कामरूपिणी ॥ १५१॥

Satyagynananandarupa samarsya parayana
kapardini kalamala kamadhukamarupini – 151

ஸத்யஜ்ஞானா‌உனம்தரூபா, ஸாமரஸ்ய பராயணா |
கபர்தினீ, கலாமாலா, காமதுக்,காமரூபிணீ || 151 ||

कलानिधिः काव्यकला रसज्ञा रसशेवधिः ।
पुष्टा पुरातना पूज्या पुष्करा पुष्करेक्षणा ॥ १५२॥

Kalanidhih kavyakala rasagyna rasashevadhih
pushtapuratana pujya pushkara pushkarekshana – 152


களானிதிஃ, காவ்யகளா, ரஸஜ்ஞா, ரஸஶேவதிஃ |
புஷ்டா, புராதனா, பூஜ்யா, புஷ்கரா, புஷ்கரேக்ஷணா || 152 ||


லலிதா ஸஹஸ்ரநாமம் - (785- 800 ) அர்த்தம்

 *785*
मार्ताण्ड-भैरवाराध्या மார்த்தாண்ட பைரவாராத்யா 
அம்பாளை மார்த்தாண்ட பைரவர் உபாசிக்கிறார். வழிபடுகிறார். அம்பாள் சம்பந்தப்பட்டது எதுவுமே ஸ்ரீ என்று அடைமொழி யோடு தான் துவங்கும்.

துர்வாச மகரிஷி மார்த்தாண்ட பைரவர் என்பது  சூரியன் தான் என்கிறார். தான் சாயாதேவியோடு சூரியனையும் வழிபடுகிறவன் என்கிறார். 64 பைரவர்களில் ஒருவர் மார்த்தாண்ட பைரவர். இந்த 64 பைரவர்களை எட்டு அங்கங்களாக பிரித்து ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு பைரவர் அதிகாரி. இந்த பைரவர்களை அஷ்டாங்க பைரவர்கள் என்கிறோம். முதல் அஷ்டாங்கத்தின் அதிகாரி தான் மார்த்தாண்ட பைரவர். பிரம்மத்தை அறிவது, உணர்வது தான் சத்யம், உண்மை, எனப்படும் ஞானம். எங்கும் நிறைந்தது ப்ரம்மம்.  பைரவர்கள் பற்றி  ஏற்கனவே எழுதி இருக்கிறேன். மீண்டும் எழுதுகிறேன்.

சிவபெருமானை 25 உருவங்களில் வழிபாட்டு தெய்வமாக ஆகம சாஸ்திரம் காட்டுகிறது. அதில் முக்கியமான உருவங்கள் லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, காலசம்ஹாரர், சரபேஸ்வரர், நீலகண்டர், பைரவர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், நடராஜர், கங்காதரர் போன்றவை. பைரவர் உருவம் முக்கியமானது. பைரவருக்கு இதர சில பெயர்களும் உண்டு. முக்கியமாக ஆபத்துத்தாரணர், வடுகர், க்ஷேத்ரபாலர், ப்ரம்ம சிரச்சேதர். இது தவிர வேறே ஒரு நம்பிக்கையும் உண்டு. அதாவது சிவன் பைரவர் இல்லை, சிவன் தான் பைரவரை உண்டாக்கி னார் என்று. இதை ஒரு கதை விளக்குகிறது.  மறந்து போவதற்கு முன் அதை சுருக்கமாக சொல்கிறேன்:
தஹூராசுரன் என்று ஒரு ராக்ஷஸன் பெண்களைத் தவிர வேறு யாராலும் தன்னை கொல்லமுடியாது என்று வரம் பெற்றான். அவன் அட்டகாசம், கொடுமைகள் அதிகரிக்க, தேவர்களின் வேண்டு கோளால், சக்தியால் உருவான காளி அசுரனைக்  கொல்கிறாள் . அவனைக்  கொன்ற பாவம் ஒரு குழந்தையாக அவளை அடைய, அவளையும் அந்த குழந்தையையும் தன்னுள் கலந்துவிடும்படி செய்கிறார் சிவன். இப்படி உருக் கொண்ட சிவனிலிருந்து பைரவர் தோன்றினார் என்பார் கள்.சிவனிலிருந்து தோன்றியதால் பைரவர் சிவபெருமானின் புத்ரன் என்பார்கள். மற்ற புத்திரர்கள்  கணேசர், சுப்பிரமணியர், ஐயனார் மற்றும் வீரபத்ரர். பைரு என்றால் பயங்கரமான என்று ஒரு அர்த்தம். பைரவர் என்ற உருவமே பயம் கொள்ள செய்வது.   உண்மையில்  பைரவர் நம்ம்ம்  பயமுறுத்துபவர்  இல்லை.  பக்தர்களின் சகல பயங்களையும் போக்குபவர். எதிரிகளான பேராசை, கோபம் போன்றவற்றிலிருந்து  நம்மைக் காப்பவர்.

ஒருதடவை ப்ரம்மனுக்கு அகம்பாவம் மேலிட்டு கர்வமடைந்தபோது சிவனால் உருவெடுத்த பைரவன் பிரம்மாவின் ஐந்தாம் தலையை க் கொய்து அதன் கபாலத்தை சிவனிடம் அளிக்கிறான். அஷ்ட  பைரவர்களின் மனைவிமார்களே அஷ்டமாதாக்கள். அனைவருமே பயங்கர உரு கொண்டவர்கள். இவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான் 64  பைரவர்களும் யோகினிகளும்.  மீண்டும் எட்டுவிதமான அஷ்ட பைரவர்களை பட்டியலிடுகிறேன். 
மஹா பைரவர். 
ஸம்ஹார பைரவர், 
அஷ்டாங்க பைரவர், 
ருரு பைரவர், 
கால பைரவர், 
க்ரோத பைரவர், 
தாம்ரசூட பைரவர், (கபால பைரவர்) 
சந்திர சூட பைரவர், 
ருத்ர பைரவர் ஆகியோர். 

இவர்களைத்தவிர, இன்னொருஉருவமும் உண்டு. அது ஸ்வர்ணாகர்ஷண பைரவர். சிவன் தான் மஹா பைரவர். சிவன் கோவில்களில் சைவ ஆலயங்களில் வடக்கு பார்த்து பைரவர் நின்று கொண்டிருப்பார். அவரை க்ஷேத்ர பாலர் என்றும் அழைப்பதுண்டு. நான்கு கைகள் கொண்ட மூர்த்தி. பாசம், உடுக்கை, திரிசூலம் கபாலம் இவற்றை தாங்கி நிற்பார். சில பைரவர்கள் இன்னும் அதிக கரங்களோடு காண்பவர்கள் . அவதூதராக ஆடையின்றி நிற்பார். அவருடன் நெருக்கமாக இனைந்து நின்று கொண்டு  ஓரு நாய் பல்லை கடித்துக்கொண்டு கோபமாக  நம்மைப் பார்க்கும். பைரவருக்கு  சிவப்பு மலர் மாலைகளை சாற்றுகிறார்கள். 
 
சிவாலயங்களில் முதலில் பூஜையை சூரியனிடமிருந்து துவங்கி பைரவரோடு முடிப்பார்கள். பைரவருக்கு பிடித்தமானது நெய் அபிஷேகம், நெய்தீபம், சிவப்பு மலர்கள், மட்டை தேங்காய், தேன் , மேற்கு பார்த்த பைரவர் தீவிர சக்தி வாய்ந்தவர், தெற்கு பார்த்தவர் பரவாயில்லை, சுமாரான தீவிரம் கொண்டவர்.   பைரவர் கிழக்கு பார்ப்பதில்லை.  நள்ளிரவில் தான் பைரவ பைரவி தரிசனம் கிடைக்கும். அப்போது தான் பூஜைகள் செய்வார்கள். வெள்ளி நள்ளிரவு அதி விசேஷமானது. பைரவருக்கு அர்ச்சனை என்று எட்டு தினுசு மலர்கள் இலைகள் உண்டு.

அஷ்டபைரவர்கள் பஞ்ச பூதங்களின் உருவ அமைப்பு என்பதால் அவர்களின் தோற்றம் வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொருவர் ஆயுதமும் வெவ்வேறு. வெவ்வேறு வாகனங்கள். அஷ்ட லக்ஷ்மி  அருள்களை வழங்குபவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி த்யான ஸ்லோகங்கள், மூல மந்த்ரங்கள் உண்டு. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிவந்த மேனியுடையவர். பொன்னிற வஸ்திரங்கள் அணிபவர். சந்திர சூடர்.சதுர் புஜங்கள். ஒரு கையில் தங்க பாத்திரம். ஆகாச பைரவரருக்கு சரபேஸ்வரர் என்று ஒரு பெயர். முப்பத்திரண்டு கரங்கள்,பக்ஷி போன்ற தோற்றம், பொன்னிறம், பயங்கரமான கூறிய பற்கள், இடுப்புக்கு மேலே மனித உடல்.
மொத்தத்தில் பைரவரை போற்றி பணிந்தால் செல்வம் பெருகும், வம்சவ்ருத்தியாகும்.   அகால மரணம் சம்பவிக்காது. கடன் தொல்லைகள் சச்சரவு தீரும். அத்தனை பைரவர்களூமே மஹா பைரவர் எனும்  பரம சிவனது  வெவ்வேறு  தோற்றங்கள்.

*786* 
मन्त्रिणी-न्यस्त-राज्यधूः  மந்த்ரிணீ ன்யஸ்தராஜ்யதூஃ 
லலிதாம்பிகை தன்னுடைய சாம்ராஜ்யத்தில் பிரபஞ்ச நிர்வாக பொறுப்பை மந்த்ரிணீயிடம் ஒப்படைத்திருக்கிறாள். மந்திரி  என்றால்  ஆண் .  அதன் பெண்பால் மந்த்ரிணி. அந்த மந்திரிணி யின் பெயர் ஸ்யாமளா. அவளைத்  தான் ராஜ மாதங்கி, ராஜ ஸ்யாமளா என்கிறோம். அவளை மந்த்ரங்களால் வழிபடுவதாலும் மந்த்ரிணி என்று சொல்வதும் பொருத்தமானது. மந்த்ரங்கள் என்று சொல்லும்போது அவை பஞ்சதசி, ஷோடசி மட்டும் அல்ல. இன்னும் எத்தனையோ. ஆகவே தான் அவளை சர்வ மந்த்ர ஸ்வரூபிணி என்றும் சொல்வது. சரியான அக்ஷரங்களை சரியானபடி பிரயோகித்து, உபயோகித்து தகுந்த வார்த்தைகளால் உச்சரிப்பது தான் மந்திரம்.

*787* 
 त्रिपुरेशी  த்ரிபுரேஶீ,
பரமசிவன் முப்புரங்களை, திரிபுரங்களை எரித்தவர். அங்கிருந்த கொடிய அசுரர்களைக் கொன்று பொசுக்கியவர். அவர் மனைவி திரிபுரேஸி . பைரவி, தந்த்ர சாஸ்திரங்களின் தேவி. மூன்று லோகங்களின் அதிபதி என்பதாலும் அவளை திரிபுரேஸி என்று சொல்லலாம்.

*788* 
 जयत्सेना  ஜயத்ஸேனா 
ஜெயிக்கும் படைக்கு தலைவி. அசுரர்கள் ராக்ஷஸர்களை  எல்லாம்  த்வம்ஸம்  செய்து,வெற்றி கொண்ட  சக்தி வாய்ந்த படையை உடையவள். அந்த அசுரர்கள் தீமையின் கெடுதியின் மொத்த உருவங்கள்.  அம்பாள் அவர்களை அழிப்பவள்.

*789*  
निस्त्रैगुण्या  நிஸ்த்ரைகுண்யா, 
குணங்களே காண முடியாதவள் அம்பாள் என்கிறது இந்த நாமம்.  சத்வ ரஜோ தமோ,மூன்று குணங்களும் இல்லாதவள். இந்த மூன்று குணங்களும் ப்ரக்ரிதியோடு இணையும்போது தான் ஸ்ரிருஷ்டி தோன்றுகிறது.
 
*790* 
परापरा பராபரா  
பிரம்மத்தை மூன்றாக பிரிப்பார்கள். பரா, அபரா, பராபரா என்று அவை அறியப்படும். பரா எனும் உருவத்தை மூன்று நிலைகளாக சொல்வது வழக்கம். அதன் ஆதாரம்,  ஸ்வரூபம்,  மிக உன்னதமானது. மிகுந்த சக்தி கொண்டது. தன்னை வெளிப்படுத்தும்போது அது சக்தியை குறைத்துக் கொண்டு நடுவாந்தர சக்தியாக பராபரா எனும் உயர்ந்த நிலையை அடைகிறது. இன்னும் தன்னை தாழ்த்திக்கொண்டு அபரா என்று காட்டிக்  கொள்கிறது. ப்ரம்மம் என்பது உயர்ந்த தாழ்ந்த இரு நிலைகளையும் காட்டிக்  கொள்வது . ஸ்ரீ மகா ருத்ரத்தில் இது அழகாக விளக்கப் படுகிறது. ப்ரம்மம் எஜமானன் மட்டுமல்ல, சேவகனும் கூட.  கொடுப்பவன் மட்டும் அல்ல பெறுபவனும் கூட  என்று.  ஸ்ரிஷ்டிகர்த்தா ஸம்ஹார மூர்த்தி இரண்டுமே ஒன்று . இப்படி ஒரு விசேஷ தன்மையுள்ளது ப்ரம்மம். இதை முழுதும் புரிந்து  கொள்ள  முடியாவிட்டால் பிரம்மத்தை உணரமுடியாது. அடைய  முடியாது. உதாரணமாக ஒரு கடும் விஷம் கொண்ட நாக சர்ப்பமும் அமைதியான சாதுவான ஒரு ரிஷியும் ப்ரம்மம் தான். ஆத்மாவில் உள்ள பிரம்மத்தை நாம் மாயையால் உணரமுடியவில்லை. ரமண மஹரிஷி சொல்வாரே ஞாபகம் இருக்கிறதா?:

 “அஞ்ஞானி நாமத்தையும் ரூபத்தையும் மட்டுமே அறிபவன்''. நான் எதிலும் சமமாக உள்ளேன். எதிரியோ உற்ற நண்பனோ இரண்டும் நானே என்கிறார் கிருஷ்ணன் கீதையில். சிவன் நிர்குண ப்ரம்மம். சக்தி சகுண ப்ரம்மம். ஆகவே சிவசக்தி பரப்ரம்மத்தை குறிக்கும்.

*791* 
सत्यज्ञानानन्द रूपा  ஸத்யஜ்ஞானானந்த ரூபா
சத்யம் என்றால் உண்மை.    ஞானம் என்பது அறிவு.   ஆனந்தம் என்றால் எல்லையற்ற இன்பம். அம்பாள் இம்மூன்றின் அம்சமாக விளங்குகிறாள். இம்மூன்றும் சேர்ந்தது தான் ப்ரம்மம். ஆனந்தம் என்பது அம்பாளின் தனி சிறப்பு அம்சம். ப்ரஹதாரண்ய உபநிஷத் (III.ix.28.2) ''அறிவு, ஆனந்தம், ப்ரம்மம் ஆகிய மூன்றும் ஒன்றே'' என்கிறது. எல்லையற்ற சந்தோஷ  ரூபம் தான்  அம்பாள். 

*792*  
 सामरस्य-परायणा   ஸாமரஸ்ய பராயணா 
அதிக அதிகாரம் கொண்டவள் அம்பாள். எல்லோரையும் பாரபக்ஷம் இன்றி சமமாக பாவிப்பவள். அவள் யாருக்கு சமமாமனவள் என்றால் பரமேஸ்வரன் ஒருவருக்கு தான். ஒருவரின்றி மற்றவர் இயங்க முடியாதே. சிவன் தானே ஒளிரும் ப்ரம்மம். சக்தி அவருடைய ஸ்வபாவம். ஸ்வபாவம் என்றால் தெரியுமல்லவா? இயற்கையாக,   சுயமாக, உள்ள நிலை. எனவே சிவனின் ஸ்வபாவ, இயற்கையான தன்மை சக்தி மூலம் பிரதிபலிக்கிறது.சிவன் தன்னுடைய ஆத்மாவை சக்தியில்,  கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல் காணமுடிகிறது. சக்தியின்றி சிவன் இல்லை. .

*793* 
 कपर्दिनी  கபர்தினீ 
சிவபெருமானின் சிகையை கபர்த என்பார்கள். சடை மிகுந்த ஜடாமுடியை கொண்டவர். கபர்தீஸ்வரர்.  திருவலஞ்சுழி க்ஷேத்ரத்தில்  சிவன் பெயர்  கபர்தீஸ்வரர்.  அருமையான ஆலயம்.  கபர்தனின் மனைவி கபர்தினி.

*794* 
 कलामाला  கலாமாலா 
அறுபத்து நான்கு கலைகளையும் மலர்களாக தொடுத்த மாலை அணிபவள் அம்பாள். அறுபத்து நான்கும் தந்த்ர சாஸ்த்ர கலைகள். எல்லையற்ற அழகை கொண்டவள் அம்பாள். அவளோடு சம்பந்தப்பட்டது எல்லாமே எல்லையில்லாதது.

*795*  
कामधुक्   காமதுக்  
''பக்தர்களே,  நீங்கள்  இச்சிப்பதை, விரும்புவதை,  தருகிறேன் என்பவள் அம்பாள். விரும்பிக் கேட்டதை கொடுப்பவள். அதற்காக யார் எதைக்  கேட்டாலும் கிடைக்காது. முண்டக உபநிஷத் (III.i.10) சொல்வது போல்   “யார் பரிசுத்தமான மனதோடு வேண்டுகிறார்களோ அவர்களுக்கு விரும்பியதை தருபவள். ஒரு படி மேலே போய் கேட்காததையும் தருபவள்.

*796* 
कामरूपिणी  காமரூபிணீ  - 
காமன் என்றால் சிவன் என்று ஒரு அர்த்தம். சிவனே அம்பாள் தான். அம்பாளே சிவன் தான். ஆகவே அவளை காம ரூபிணி என்கிறது இந்த நாமம். எல்லாமே common ஆக உள்ளவர்கள் இருவரும். நிறம் தான் வேறு. சிவன் ஸ்படிக, சங்கு நிற வெள்ளை நிறம். அம்பாள் கரும் சிவப்பு. இருவரும் சேர்ந்து காணும்போது காலை உதிக்கும் உதய சூரியன் போல் தோன்றுவார்கள்.

797* 
कलानिधिः கலாநிதி  
எல்லா கலைகளுக்கும் ஆதாரமானவள் ஸ்ரீ லலிதாம்பிகை. சிவ சூத்ரம் (I.3) ''கலா சரீரம்'' என்கிறது. கலைகளின் உருவகம். மேனி. அவளது செயல்பாட்டால் பிரபஞ்சம் இயங்குகிறது. இதைத்தான் கிருஷ்ணனும் கீதையில் (IV.33) “ எல்லா செயல்களின் முடிவும் ஞானத்தில் கொண்டு சேர்க்கிறது'' என்கிறார் . இங்கு ஞானம் ப்ரம்மத்தை குறிக்கும்

*798* 
काव्यकला  காவ்யகலா  
சிறந்த கலைகளை காவியம் என்போம் . ஒரு உயர்ந்த கவிஞன், ரிஷி, ஞானி, ஆகியோரின் சிந்தனைகளின் எல்லை ப்ரம்மம். அம்பாள் தான் அது. ராமாயணத்தில் சீதா காவியநாயகி என்பது போல் எல்லா கலைகளின் நாயகி அம்பாள்

*799* रसज्ञा ரஸஜ்ஞா 
எதிலும் முடிவான மணமிகுந்த சாறு தான் ரசம். மனத்திலும் இதயத்திலும் தோன்றி பிழிந்தெடுக் கப்பட்ட பக்தி சார்ந்த எண்ணச்சாறு. இந்த பக்தி ரசத்தை ஐந்து வரிசையாக பிரிப்பதுண்டு : 
சாந்தி, தாஸ்யம், சாக்யம் , வாத்சல்யம், மாதுர்யம்  என்பவை  அவை.  அம்பாள் தான் இத்தனையும். ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி எட்டு வகை ரசங்களை சொல்கிறது. அன்பு, எதிர்ப்பு, கோபம், ஆச்சர்யம், பயம், மந்தஹாசம், பரிவு எனும் காருண்யம்.

*800* 
रस-शेवधिः  ரஸஶேவதி  
வித விதமான குணங்களின் உன்னத தன்மையை சாறு, ரசம் என்பதால் அத்தனையும் தானாக உள்ளவள் அம்பாள். எதிலும் இனிமையான தன்மையை ரசம் என்கிறோம் என்று சொல்கிறது தைத்ரிய உபநிஷத் (II.vii.2) ;ரஸோ வி ரஸா.
இப்படி எதிலும் உன்னதத்தை அறிபவன் தான் ப்ரம்ம ஞானி.


சக்தி பீடம்  -   காலு கோலம்மா  சாம்பவி  ஆலயம்   -  காவாலி.

தென்னிந்தியாவில்  பக்தி அதிகமாக  காணப்பட்ட  இடங்கள்  எல்லாமே  என்று சொல்லப்பட்ட காலம் அரசியல் சூழ்நிலையில் மக்கள் மனநிலை மாற்றப்பட்டு, பக்தி இன்னும் வெளிப்படையாக காணப்படுவது ஆந்திராவில் எனலாம். இப்போது அங்கும் எப்படியோ. கேரளாவில் ஆண்கள் பெண்கள் இருவருமே  பக்தியோடு விடிகாலை குளித்துவிட்டு ஈரத்தலையோடு கோவிலுக்கு செல்வதை இன்னும் பார்க்க முடிகிறது.  கர்நாடகா  தமிழ்நாட்டுக்கு குறைந்ததில்லை.
ஆந்திராவில்  ஒரு சாம்பவி ஆலயம் இருக்கிறது.  காலுகோலம்மா ஆலயம்  காவாலி என்ற நகரத்தில் நெல்லூர் ஜில்லாவில் உள்ளது.  காவாலி  வளர்ச்சி  பெற்ற, நெல்லூருக்கு அடுத்தபடியாக,  ரெண்டாவது பெரிய  தெலுங்கு நகரம்.

அந்த  காவாலி  என்கிற  ஊர்லே, ஒரு சின்ன கிராமம்   சர்வ பாளையம் என்று பேர்.  அதில் சிலருக்கு  கனவில்  இந்த  காலு கோலம்மா சாம்பவி தேடி  தரிசனம் கொடுத்ததாக  ஊர்க்காரர்கள் சொல்லகிறார்கள்.  இந்த ஊரில்  குறிப்பிட்ட  இடத்தில் ஒரு விக்ரஹம்  பூமியில் கிடைக்கும், அது  பார்வதி தேவி  அவதாரம்.  அதை எடுத்துக்கொண்டு போய், ஒரு இடத்தில் நின்று சேவல் ஒன்று விடாமல் கூவும். அங்கே கோவில் கட்டி  ஸ்தாபனம் செய்யவேண்டும் என்று  கட்டளை இட்டாள்  அம்பாள்.
கிராமத்தார்  ஒன்று கூடி பேசி அவ்வாறே  சென்று தேடி  விக்ரஹத்தை  கண்டுபிடித்து, அதை எடுத்துக்கொண்டு சென்றபோது ஒரு இடத்தில் ஒரு சேவல் நின்று வெகுநேரம் கூவியதைக் கண்டார்கள்.   அது காவாலி நகர்த்தி மேற்கு பகுதி ஓரம். 15ம் நூற்றாண்டில் நடந்த விஷயம் இது என்கிறார்கள். அங்கே  வருஷத்துக்கு ஒருதரம்,  12 வருஷத்துக்கு ஒரு முறை ''திருநள்ளா'' எனும்  விசேஷ  வைபவம், நமது மாமாங்கம் மாதிரி நடைபெறுமாம்.   முடிந்தால்  ஒருமுறை இந்த ஆலயம் செல்ல விருப்பம் அம்பாள் சங்கல்பம் எப்படியோ.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...