Thursday, December 23, 2021

KOTHAIYIN GEETHAI

 கோதையின் கீதை  -  நங்கநல்லூர்  J K   SIVAN 

மார்கழி 9ம் நாள்:   

9.  மாமாயன் மாதவன்

தனக்கு தெரிந்த, தெரிய வந்த, விஷயங்களை பிறரோடு பங்கிட்டுக் கொள்வதில் உள்ள ஆனந்தம் எனக்கு அனுபவ பூர்வமாக உள்ளது. அந்த மகிழ்ச்சியை எடுத்துச் சொல்ல வார்த்தை கிடைக்கா மல் திணறுகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒரு  புத்தம் புதிய நாளாக, ஆவலுடன் எதிர்பார்க்கும் நாளாக, இப்படியே காலம் கழிய வேண்டும்.  மகிழ்ச்சியை சொல்ல இயலவில்லை. கொரோனா காலம் இப்படி  ஒரு அமைதியான  தனிமையைத் தரும்  என்று கனவிலும் தோன்றியதில்லை.  வருஷம்  ரெண்டுக்கு மேல் ஓடிவிட்டது. இன்னமும் கொரோனா  பயம்.  புதுசாக அதன் வாரிசு  ஓமைக்ரான்.  ஆகவே நான் உண்டு என் கம்ப்யூட்டர்  உண்டு என்று இருப்பதில் தான் என்ன சுகம்.  உலகத்துடன் நிறைய சம்பாஷணை செய்ய இப்படி ஒரு வசதி இருக்கிறதே.  கிருஷ்ணா  உனக்கு நன்றி.

என் மனதில் ஆண்டாளை நான் எப்படி காண்கிறேனோ அதை முடிந்த வரையில் எனக்குத் தெரிந்த  வார்த்தைகளில்  வெளிப்படுத்துகிறேன்.இதையும்  பல அன்பர்கள், நண்பர்கள், ரசிக்கும்போது  ஒரு நல்ல சமையல் செய்து அதை பரிமாறிய  சந்தோஷம்.

ஆயர்பாடியில் ஆண்டாள் மனம் கலங்கவில்லை. எல்லோருக்கும் ஊக்கமளித்து உற்சாகத்தோடு அவர்களை பாவை நோன்பில் பங்கு கொள்ள சகல முயற்சிகளிலும் துவள வில்லை. நீங்கள் கேட்டதனைத்தும் அந்த கண்ணன் தருவான். அவன் புகழ் பாடி மகிழ்வோம் என்று விடியற் காலையில் வீடு வீடாகச் சென்று பெண்களைத் திரட்டினாள்

''என் உற்ற சிநேகிதிகளா, நீங்களாவது என்னோடு தினமும் வந்து மற்றவர்களை எழுப்புவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்றும் (மார்கழி 9 தேதி) வழக்கமான வேலை - அது தான்,கதவை தட்டி எழுப்புவது- நடக்கட்டும்.

‘’அடியே! செவிடே, பதிலே சொல்லாமல் தூங்குகிற ஊமையே , பைத்தியமே , சுகமாக கொசு கடிக்காமல் அகில் புகை போட்டுகொண்டு வாசனையாக , மெத்து மெத்து என்று கட்டில் மேலே கால் நீட்டி படுத்து கனவு கண்டு கொண்டே இருக்கின்றவளே!, எழுந்து வாடி வெளியே,   நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் உனக்காக. நாங்கள் மட்டுமில்லை அந்த கிருஷ்ணனான நாராயணனும் நம்முடைய நோன்பு பாட்டு எல்லாம் கேட்க ஆசையாக காத்துக் கொண்டு இருக்கிறானே , எதற்கு என்று தெரியவில்லையா?  அதைக் கேட்டு விட்டு நமக்கு அருள்வதற்கு தான்! இது கூடவா புரியாது.

வீட்டினுள்ளே அந்த தூங்கி வழியும் பெண்ணின் தாய்  வாசலில் நிற்கும்  ஆண்டாள் கண்ணில் படுகிறாள். அந்த தாயின் தயவை நாடுகிறாள் ஆண்டாள்.

''மாமி, மாமி, கொஞ்சம்  உங்கள் பெண்ணை  எழுப்புகிறீர்களா? பாருங்களேன், எத்தனை நாழி தூங்குகிறாள் உங்கள் பெண்'. 

 ஆண்டாளை ஏற இறங்க பார்த்துவிட்டு முகத்தில் உணர்ச்சி எதுவும் காட்டாமல் அந்த தாய் உள்ளே செல்கிறாள்.
வில்லிப்புத்தூரில் இந்த காட்சியைப் படம் பிடித்து ஏட்டுச்சுவடியில் எழுத்தாக்கினாள் கோதை.
விஷ்ணுசித்தர் நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் இந்த சுடர்க்கொடியின் கைவண்ணத்தில், கற்பனைச்  சுரங்கத்தில் மகிழ்ந்து போனார்.

''கொழந்தே, இன்னிக்கு பாசுரத்தை நீ இப்போ பாடினே பார், அதை என்னாலே வர்ணிக்க முடியாதும்மா, நானும் தான் நிறைய எழுதறேன், உன் கைவண்ணமே, தனி, அலாதி அம்மா.''

அப்படி என்ன கோதை எழுதினாள் அன்று ?--
ஆண்டாள் ஒரு வீட்டில் ஒரு பெண்ணை துயிலெழுப்பும் வழக்கமான சாதாரண   நிகழ்ச்சி போல் தான் தோன்றுகிறது  அந்தச் சிறு பாசுரம் .

''தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.''

''காலையில் பூப் பறித்து மாலை தொடுக்க நேரமாகிவிட்டதே . நந்தவனத்தில் பூக்கள் எனக்காக காத்திருக்கும்'' என்று முணுமுணுக்கிறார்   விஷ்ணு சித்தர்.

 'ஓய்,    வைஷ்ணவரே, ஏன் ஐயா இவ்வளவு  லேட்  இன்று?   நாங்கள் நீர் தொடுக்கும் மாலையில் உட்கார்ந்தவாறு ரங்கனை அணைக்க வேண்டாமா? சீக்கிரம் வாரும். எங்கள் வாழ்வு குறுகியது. ஒருநாள்  வாழ்க்கையாளர்கள்.  சீக்கிரமே  வாடிவிடுவோம். அதற்குள் அந்த மா மாயன் தோள்களை அடைந்து எங்கள் மணத்தை மாதவனுக்கு அளித்து பிறகு மரணிக்கிறோம் ' என்று சொல்லாமல் சொல்லி  செடியில் இருந்த பூக்கள் அவரை வரவேற்றன.   கிடுகிடுவென்று  அவ்வளவு  பூக்களையும் பறித்தார். சீக்கிரமே நிறைய மலர்கள் அவர் கூடையில் நிரம்பின.

பூக்களை பறித்துக் கொண்டே விஷ்ணு சித்தர் என்ன  சிந்தித்தார்?

''என் பெண்  கோதை  சொல்லுகிற   ஆயர்குடிப்  பெண், ஏன், எதற்காக,  இப்படித் தூங்குகிறாள்? அவளுக்கு ஒரு கவலையும் இல்லை. அனைத்தையும் அந்த கிருஷ்ணனிடமே சரணாகதி என்று விட்டு விட்ட சந்தோஷத்தில் நிம்மதியாக தூங்குகிறாளோ ? '   இப்படி  ஒரு  உபாயத்தை ஆண்டாள் மறைமுகமாக அறிவிக்கிறாளா ?

கூரத்தாழ்வான் ஒரு இடத்தில் ''ரங்கா, இந்த ராமானுஜருடன் எனக்கு ரத்த சம்பந்த உறவு என்று ஒன்று இல்லையே. அந்த பாக்கியம் முதலியாண்டானுக்கும் எம்பாருக்கும் அல்லவா கிட்டியது'' என்று உணர்த்துவதுபோல் ஆண்டாள்    ''மாமி, உங்கள் பெண் '' என்று அந்த பெண்ணின் உறவைப் பற்றி குறிப்பிடுவது அந்தப்  பெண்ணால் அந்தக்குடும்பமே கண்ணன் அருளைப் பெறும் பாக்யத்தை பெற்றது என்று குறிப்பிடவே தான்.

விஷ்ணு சித்தரின் எண்ணத்தை அன்றலர்ந்த ஒரு பெரிய அழகிய மலர் கலைத்தது

(many friends are asking me to  send them my earlier posts.  Owing to paucity of time I am unable to accede to this request. My blog contains  nearly 5000 articles posted in the last 8 years topic wise..Just click the link at your leisure time and read the articles you wish.  
https://jksivansaalayadharshan.blogspot.com

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...