Wednesday, December 15, 2021

thiruvembavai

 


திருவெம்பாவை   -  நங்கநல்லூர்  J K  SIVAN
மாணிக்க வாசகர்.


2.  பிறவா வரம் தரும் பெம்மான்


நண்பர்களே,  ஒரு  சின்ன  வேண்டுகோள் விடுக்கட்டுமா?  

நீங்கள்  தேவார திருவாசக  புராண புத்தகங்களை எடுத்து புரட்டி படிக்கப்  போவதில்லை. கேட்டால் ''அதற்கெல்லாம் நேரம் இல்லை''.  இதற்கென்ன  அர்த்தம்?  இப்போது இல்லை என்றாவது ஒருநாள் உட்கார்ந்து படிக்க நேரம் வரும். அப்போது பார்க்கலாம்'' என்பீர்கள்.  என்னுடைய  அனுபவத்தில் நிறைய பேருக்கு   அந்த  ''நேரம்''   வருவதில்லை.   வரப்போவது,  இல்லை. நான்  ரிட்டையர் ஆனப்பறம்  நிறைய  இதெல்லாம் படிக்கப்போறேன்  என்று சொன்னவர்கள் அநேகரை நான் அறிவேன்.  ஒன்று அவர்களது உடல் நலம் இடம் கொடுக்கவில்லை, அல்லது குடும்ப  பந்தம்  புத்தகம் படிக்க  நேரம் ஒதுக்க விடவில்லை.  அல்லது.  இன்னும் கூட பக்குவம் வரவில்லை.  சம்பாதிக்க புத்தி போய்விட்டது. சிலரை மரணம்  அதற்குள்  அழைத்துக் கொண்டு போய் விடுகிறது.

கோவிலுக்குச்  செல்லும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.  நீங்கள் போனால் தான் அவர்கள் வருவார்கள். முக்கியமாக தாத்தா பாட்டிகள், அத்தைகள் மாமிகளுக்கு இந்த வார்த்தை.  பல கோவிலில் அற்புதமான ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேவாரம், திருப்புகழ், பிரபந்தங்கள், திருவாசகம், திருஅருட்பா  எல்லாம் கொட்டை  எழுத்தில்  படிக்க வசதியாக  சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு ஐந்து நிமிஷம் குழந்தைகளோடு நீங்களும் அதெல்லாம் படியுங்கள். அத்தனையும் வேண்டாம்  ஒரு சுவர் அல்லது   பாதி  சுவர்  என்று ஒவ்வொரு  தடவையும் படித்தால் மனப்பாடம் ஆகிவிடும்.  அப்புறம் பின்னால் அர்த்தம் அசைபோடலாம்.

''குனித்த புருவன் கொவ்வைச் செவ்வாயன் '' என கேட்கும்போது செவியில் தேன் பாய எழுதியதால் தான் அந்த சிவ பக்தர் நாவுக்கே அரசரானார். திரு நாவுக்கரசர். கண் முன்னே சிவனை நரத்தனமாடச் செய்யும் எழுத்து வலிமை, நா வன்மை. . அண்ட சராசரமும் அசைந்து அசைந்து ஆட    மனதில் பிரபஞ்ச சுழற்சியை பிரதிபலிக்கும் சொல் வன்மை. சிவனின் ஆண்டருளும் தன்மை அவருக்கு பரிபூர்ணமாக  இருந்தது..

என் மனதில் இருந்த ஆசையின் வெளிப்பாடு இது.  திருப்பாவையோடு  திருவெம்பாவையும்  கலந்து தர  வேண்டும் என்பது.  ''சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார், சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் ' - எவ்வளவு அர்த்த புஷ்டி நிறைந்த பாட்டு இது.  என் அம்மா பாடி நிறைய கேட்டிருக்கிறேன். 

2. பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

''ஹே ,பெண்ணே, சிறந்த ஆபரணங்களை உடலில் அணிந்தவளே! என்னடி,  இரவு பகலெல்லாம் எப்போதும் பேசுகிறாயே, யாரைப்பற்றி?'' என்று கேட்பேனே , அப்போது நீ என்ன சொல்வாய் என்று  உனக்கு  நினைவிருக்கிறதா? நானே சொல்கிறேன் கேள்.

இரவும் பகலும் நாம் பேசுவது ஒன்று தான். அது தான் எப்போதும் என் உள்ளே நிறைந்திருக்கும் அந்த தில்லை நாதனைப் பற்றியது  தான். என் அன்பு, அந்த பரம்பொருள் ஒருவரிடத்தில் மட்டுமே,  அது மேலான ஒளிப் பிழம்பானஅந்த தில்லை நாதன் மட்டும் தான்'' என்று சொல்வாய்.  

அப்படிப்பட்ட நீ ஏன் இப்போது இந்த பட்டு விரித்த படுக்கையிடம் அன்பு வைத்து அதை விட்டு எழுந்திருக்கவே மனம் இல்லையா?  அப்படித்தான் என்கிறார்கள் அந்த தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் தோழிகள். அவளுக்காக காத்திருக்கிறார்கள் 

மார்கழி 2ம் நாள் விடியற்காலை எழுந்து நீராடச் செல்வதற்கு. நாம் பேசும் பொழுதெல்லாம் அந்த பரமேசன் புகழ் பாடி எங்களோடு இன்பம் துய்த்தாய், பாசம் நேசம் எல்லாம் எல்லாம் படுக்கை மீது விழுந்துவிட்டதா?

அந்த தூங்கு மூஞ்சி தோழி தான் இப்போது விழித்துக் கொண்டு விட்டாளே!, அவள் என்ன பதில் சொல்கிறாள்?

''பெண்களே! சீச்சி. போதுமடி ..... நீங்கள் பேசும் நகை மொழிகளில் இதுவும் ஒன்று , இதைப்போல் பல பேச்சுகள் நான் உங்களிடம் கேட்டிருக்கிறேன். என்னோடு விளையாடி என்னை கேலி செய்ய இது சரியான ஒரு சமயம் என்று முடிவெடுத்து விட்டீர்களா?

தேவர்களும் வழிபடுதற்கு கூச்சப்படும் அழகிய தாமரை மலர் போன்ற தனது திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவமானவன் என் தெய்வம்.  ஆனந்த நடமிதும்  பாதன்.   தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு, ஒரு காலைத் தூக்கி நின்றாடும் கண்கண்ட தெய்வம் அந்த சபாபதி மீது அன்பு பொருந்திய நாம்-- அது தான் நானும் நீங்களும்... என்னைப்போய் நீங்கள் இப்படி............!! அந்த பெண் எழுந்து விரைந்து வாயிலில் காத்திருக்கும் பெண்களோடு சேர்ந்து கொள்கிறாள்

'' அப்படியென்றால் ரொம்ப நல்லது. உனது எண்ணம் பிடிப்பு, விருப்பு எல்லாமே அந்த சர்வேஸ்வரனின் மேலேயே இருக்கட்டும். ஏன் தெரியுமா? விண்ணவர்களும் மண்ணவர்களும் போற்றி வணங்கும் ஒளியை, சிவலோகநாதனை, சிற்றம்பலனை, பொன்னம்பலனை, நம்மை வாஞ்சையுடன் ரக்ஷிக்கும் விஸ்வேஸ்வரனை ''நினையா நாளெல்லாம் பிறவா நாளே''.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...