Sunday, December 19, 2021

ARUDHRA DHARSAN

  ''ஆ  ருத்ரா !! நங்கநல்லூர்   K   SIVAN  


மாதங்களில் சிறந்த மார்கழியில்  வரும்  திருவாதிரை  ரொம்ப  விசேஷமான  நாள்.   ஸம்ஸ்
க்ரிதத்தில்   திருவாதிரைக்கு  ஆருத்ரா என ப்பெயர், 20.12.2021  திங்கட்கிழமை  இந்த விசேஷ  ஆருத்ரா.  விடியல்களையிலேயே  குளித்து  நித்ய கர்மாநுஷ்டானங்கள் முடித்து  பக்தர்ககள்   நடராஜ  தரிசனத்துக்கு  சிதம்பரம்  திருவண்ணாமலை மற்றும் அநேக  நாடு தழுவிய  சிவ   ஸ்தலங்களுக்கு செல்வார்கள்.  எங்கும்   ஓம் நமசிவாய, சிவ சிவ, ஹர  ஹர மாஹாதேவா   என்று செவிக்கினிய சப்தமாக எங்கும் ஒலிக்கும்.     பரமேஸ்வரனுக்கு   மிகவும் உகந்த நாள் மார்கழி திருவாதிரை.   ஆகவே  ஆதிரையான் என்று   சிவனுக்கு  ஒரு பெயர்.
  
 பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் மார்கழி மாதத்தில், ஆர்த்ரா நட்சத்திரம் இணையும் போது “கர்மா தான் பிரதானமே தவிர பகவான் பெரியது இல்லை'' என்று கூறிய சாங்கிய யோகிகளின் அறியாமையை போக்குவதற்கு ஈஸ்வரன் முடிவெடுத்தான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைக் கொன்று அதன் தோலை தன் ஆடையாக்கி, உடுக்கு, அக்னி , அரவம் முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் தான் மார்கழி   திருவாதிரை.    சிதம்பரத்தை  மனதால் அடைந்து    நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்ததை  நினைவு கூர்வோம்.

ஆருத்ரா  அன்று   நடேசனை  தரிசித்து 'ஆஹா ...ருத்ரா' என்று மகிழ்வோம்.  நடராஜனின் அங்க வளைவு. அத்தகைய அழகு கோலம்  வேறு  எவருக்கும் இல்லை.  இடது பதம் எதற்காக  தூக்கி  நிற்கிறார்? மனைவி பச்சைப் பெண் பார்வதி  அந்த பக்கத்தில் தானே  இருக்கிறாள். வாம பாகி.

சிவபக்தன்  மார்க்கண்டேயனுக்கு  ஆயுஸு   16 வயதில் முடியப்போகிறது.   பெற்றோருக்கு இது தெரியும். ரொம்ப  சோகம்.  துக்கம்.  மார்கண்டன் வேறு வழியின்றி    பெற்றோர் தனது   பிறிவால்  வாடுகிறார்களே. என்ன செய்வது.  நேராக   தான்  வணங்கும்  சிவலிங்கத்தை  இறுகக்  கட்டி அணைத்துக் கொள்கிறான். குறித்த  நேரத்தில் எமதர்மன் தனது   கடமையைச்  செய்ய  மார்கண்டன் உயிரைப்  பறிக்க வந்துவிட்டான்.  அவன் சிவனை அணைத்துக்கொண்டு இருப்பதை கண்டான்.  பாசக்கயிற்றை   வீசினான். அது  மார்க்கண்டேயனை மட்டும் அல்ல  அவன் அனைத்து நின்ற  சிவனையும்  சேர்த்து இழுக்கிறது.  சிவலிங்கத்தில் இருந்து எழுந்த பரமேஸ்வரன் தூக்கிய  இடதுகால் யமனை  எட்டி உதைக்கிறது.  பக்தனை  காக்க பரமேஸ்வரன் அருள் செய்த நிகழ்ச்சி இது.   எமன் திடுக்கிட்டு  வணங்குகிறான் மார்க்கண்டேயன் உயிர் தப்பியது.

ஆருத்ரா அன்று   சிவனுக்கு  நைவேத்யம்  '' களி''  எதற்காக?   களி  என்றால் சந்தோஷம், ஆனந்தம்  என்று ஒரு  அர்த்தம். கொஞ்சம்  சந்தோஷமாக இருக்கும்போதே    நாம் வீட்டில் தையா தக்கா என்று  குதிக்கிறோம். ஆடுகிறோம்.  சிவபெருமான் சதா ஆனந்தத்தில் திளைப்பவர். எனவே தான் ஆனந்தமாக   ஆடுகிறார்  நடேசன் , நடராஜன். நடனத்தை  சபாவில்,  சபையில் தானே  பார்க்கிறோம்.   ஆகவே  தான் கனகசபையில் ஆடுகிறான்  ஆடல் வல்லான். சபேசன். மொத்த 108 நடனங்களில் 48 நடனங்களை சிவன் தனியாக ஆடினான்  என புராணங்கள் சொல்கிறது. மார்கழி திருவாதிரை அன்று  சிவன் ஆடியது  ''ஆனந்த''  நடனம். அதைப் தரிசிக்க அநேக லக்ஷம் பக்தர்கள் சிதம்பரத்துக்கும்  எல்லா சிவன் கோவில்களுக்கும் மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) போகிறோம்.    காணக்  கண் கோடி  வேண்டும் கனகசபாபதியை, கபாலியை காண.

ஒரு நாள்  என்ன நடந்தது  திருப்பாற்கடலில்?   நாராயணனுக்கு  அளவற்ற மகிழ்ச்சி. முகம் முழு நிலவானது. ஆதிசேஷனுக்கு   ஏன் நாராயணனுக்கு  இன்று  இவ்வளவு சந்தோஷம் என்று புரியவில்லை.

''ஹரி ப்ரபு , இன்று என்ன  விசேஷம்  எனக்கு சொல்லுங்களேன்?'' என்கிறார் ஆதிசேஷன்

''சேஷா,  இன்று  ஆருத்ரா.  திருவாதிரை.   அதோ பார்  சிதம்பரத்தில்.   ஈஸ்வரன்  நடராஜராக  அற்புதமாக ஆடும் திருத் தாண்டவத்தை  கண்ணாரக்கண்டு  களிக்க  ஆதிசேஷன் ஒரே ஓட்டமாக  சிதம்பரம் ஓடுகிறார்.  
ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆகி தவமிருந்து நடராஜரின் திரு நடனத்தை காண  ஈசனை  வேண்டி கி தவம் புரிகிறார்.

‘பதஞ்சலி’ - மெதுவாக ஒரு குரல்  கேட்டு  ஆதிசேஷன் கண்   திறக்க, எதிரே சாந்தஸ்வரூபனாக சர்வேஸ்வரன். கைகள் தொழுதன .

‘பதஞ்சலி! உன்னைப் போலவே, வியாக்ர பாதர் என்பவரும் எனது நடனம் காண தவம் செய்கிறார். எனவே உங்கள் இருவருக்குமே சிதம்பரத்தில் காட்சி தருகிறேன்'' என்கிறார் தில்லை சபேசன்.

தாருகாவன ரிஷிகள் ஒரு மார்கழி திருவாதிரை அன்று  நடத்திய யாகத்தில்  வெகுண்டெழுந்த ஒரு  ராக்ஷஸன் மதயானை  உருவில் , முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு ஆகியவற்றை சிவன் மீது திசை திருப்ப, சிவனால் அந்த  பலமிக்க  யானை  ராக்ஷஸன் கொல்லப்பட்டு   அவன் சருமத்தை ஆடையாக அணிகிறார். உடுக்கையும் , மானும், தீப்பிழம்பும் ,  அக்னி,  அவர் கரங்களில் ஐக்கியமாகி, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடியது தான் ஆருத்ரா தரிசனம்.

இன்னொரு  விஷயம்.  சேந்தனார்  என்று ஒரு சிவபக்தர்.  காட்டிற்கு சென்று விறகு வெட்டி, விற்று ஜீவனம் செய்பவர். சிதம்பரம் அருகேயுள்ள ஓர் கிராம வாசி.    தினமும்  யாராவது  ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகு  தான் அவரது  போஜனம்.

 ஒருநாள் விடாமல் மழைபெய்து விறகுகள் ஈரமாகி விற்பனையாக வில்லை.   ஈர வ விறகை எப்படி விற்பது. வருமானம் இல்லாததால் வீட்டில் சமைக்க அரிசி  இல்லை. வேறு வழி இல்லாமல், வீட்டில் இருந்த கேழ்வரகில் களி செய்து அதிதியாக யாராவது ஒரு சிவனடியார்  வருவதற்கு  காத்திருந்தார்.  நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர யாரும் தென்படவில்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் சேந்தனார் வாட சிதம்பரேசன் இதை பார்த்துக் கொண்டிருப்பானா?  
சிறிது நேரத்தில்   வயதான  ஒரு சிவனடியார்   வருகிறார்.
''வாருங்கள்'' என்று முகமும் அகமும் மகிழ  அழைக்கிறார்
''இங்கே   சேந்தனார்  யார்?  அவரிடம் சென்றால்     கிடைக்குமாமே  எனக்கு ரொம்ப  பசி.   காதடைக்கிறது''
''அடியேன்  தான்  சேந்தனார்.  இந்தாருங்கள் என்று  கேழ்வரகு களியை சிவனடியாருக்குப் படைக்கிறார் . முதியவர்  கேழ்வரகு  களியை ''ஆஹா பிரமாதம் என்று சாப்பிட்டுவிட்டு   மீதியை  மூட்டை கட்டிக்கொண்டு  போய்விட்டார்.  '' இது அடுத்த வேளைக்கு  சாப்பிட'',    சேந்தனாருக்கு   ஒன்றும் மிச்சம் இல்லை. அன்று அவருக்கு  முழு உபவாசம் ! .

மறுநாள்   காலையில் சிதம்பரம் ஆலயத்தில்  விடிகாலை வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் கர்பகிரஹத்தை திறக்க, ''இது என்ன அதிசயம்; நடராஜப் பெருமானைச்  சுற்றி எங்கு பார்த்தாலும் கேழ்வரகு களி சிந்தி கிடக்கிறது. யாருடைய வேலை இது? ''
விஷயம் ராஜா காதுக்கு எட்டியது . ராஜாவுக்கு ஏற்கனவே கனவில் ஒரு சேதி வந்து ஆச்சர்யத்தில் இருந்தான்

''எனக்கு திருவாதிரை அன்று சேந்தன் வீட்டில் அருமையான கேழ்வரகு களி கிடைத்தது '' என்று நடராஜர் கனவில் ராஜாவிடம் சொன்னது   அவனுக்கு ஆச்சர்யம்.   சிதம்பரம் நடராஜப் பெருமான் தேர்த்திருவிழாவில் ராஜா மும்முரமாக இருந்ததால் சேந்தனைத் தேட இன்னும் ஆள் அனுப்பவில்லை. ஆனால் அந்த தேர்த் திருவிழாவிற்கு சேந்தனாரும் வந்திருந்தார்.

சிவனைத் தேரில் ஏற்றியாகிவிட்டது. ராஜாவும் மற்றவர்களும் தேர் வடம் இழுக்கிறார்கள். மழையினால் சேற்றில் தேர் சக்கரம் அழுந்தி நகரவில்லை. ராஜா வருந்தினான்.

அசரீரி ஒன்று அப்போது எல்லோருக்கும் கேட்டது "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று.
''நானோ ஒரு விறகுவெட்டி, ஒன்றுமே  பாடத்  தெரியாதே, எப்படி    உங்களுக்குப்  பல்லாண்டு பாடுவேன்''
என்று  வருந்தினார் சேந்தனார்.

 ஆனால்  அடுத்த கணமே தன்னை அறியாமல் சேந்தனார் கணீர் என்று உரக்க பாடினார். நமக்கு அதிர்ஷ்டம். நல்ல பாடல்கள் 13 கிடைத்திருக்கிறது.

"மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" ............பல்லாண்டு கூறுதுமே" என்று முடிபவை.
ஒருநாள் இதை முடிந்தபோது எழுதவேண்டும்.
பாடி முடித்தார் சேந்தனார். தேர் நகர்ந்தது. அவர் கால்களில் அரசரும், தில்லை அந்தணர்களும், சிவனடி யார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். ''ஐயா எனக்கு கனவில் சிவன் சொன்னார் '' என்று விஷயம் சொல்ல அனைவரும் மகிழ்ந்தார்கள். அன்றுமுதல் இன்றுவரை திருவாதிரை நாளில் நடராஜருக்கு களி நைவேத்தியம். உளுந்து மாவினால் செய்த களி. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என்ற வார்த்தை இதனால் கிடைத்தது.

மார்கழி திருவாதிரையன்று சிவன் கோவில் செல்லும் பழக்கம் சின்னவயதிலிருந்து உண்டு. வீட்டில் ரேடியோவில் விடியற்காலை ''மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுது ஐயே '' என்று கணீரென்று S.G . கிட்டப்பா குரல் ஒலித்தது இன்னும் காதில் ரீங்காரமிடுகிறது. என்ன குரல். கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் கீர்த்தனைகள் அபூர்வமானவை அல்லவா. அவற்றில் ஒரு மணி இந்த பாடல். நந்தனார் தனது எஜமானனிடம் மார்கழி மாதம் சிதம்பரம் நடராஜனை திருவாதிரை அன்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கும் பாடல்.

அன்பர்களே,  உங்களுக்கு  திருவாதிரை பரிசு தருகிறேன்.  இத்துடன்  மஹா பெரியவர்  ஆருத்ரா பற்றி  அற்புதமாக பேசுகிறார்   கேளுங்கள்.  நமக்கு எல்லாம் தெரியாத விஷயங்கள்  கடல் மடை திறந்தாற்போல் வருகிறது பாருங்கள் அவரது குரலில்.  

https://youtu.be/RhA7EG84GxA

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...