Sunday, December 19, 2021

OUR BODY

 நம்ம உடம்பு  --    நங்கநல்லூர்  J K  SIVAN 


அடிக்கடி அல்லது  எப்போதும்  ஆத்மா  பகவத் விஷயங்கள் பற்றி மட்டுமே  எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள் என்று சொல்லக்கூடாது என்பதால் கொஞ்சம் தேஹத்தை பற்றியும் சொல்ல ஆசைப்பட்டேன்.

உடம்பை  பற்றி  கொஞ்சம்  பேசுவோம்.  ஞானிகள்  உடம்பை ''இது''  '' இந்த கட்டை '' என்கிறார்கள்.  வள்ளுவர் மாதிரி சிலர்  என்பு தோல் போர்த்த உடம்பு என்றும்  யோகிகள்  ஒன்பது வாசல் வீடு,  பகவானின்  ஆலயம்  என்றெல்லாம் சொல்கிறார்கள்.  டாக்டர்கள்  பிழைப்பே நமது உடலால் தான். இதை வைத்து தான் பல பங்களாக்கள் கார் எல்லாம்  வாங்குகிறார்கள்.  

இந்த உடம்பை பற்றி சில விஷயங்கள் நாம் அறிந்து கொள்ளவில்லை.
ஒரு மனித உடலில்  206 எலும்புகள் இருக்கு.   குழந்தையாக இருக்கும்போது  300 எலும்புகள் இருக்கும்  என்றாலும்   வளர வளர அதில்  94 எலும்புகள் மற்றதோடு  சேர்ந்து விடுகிறது. .

கண்ணடிப்பது  என்றால் அது  கெட்ட  வார்த்தை.  கண்ணை அமைப்பது என்றால்  நாகரீகமானது.   ஆறு செகண்டுக்கு ஒரு தடவை  கண் இமைக்கிறோம்.  வாழ்நாள் பூரா நாம்  கண் அமைப்பது குறைந்தது  25 கோடி தடவை. 

இது தெரியுமா  ஸார் ?    2 கால்,  2 கண், 2 காது 2 கை ,-  இதெல்லாம்  ஒரே  அளவு கிடையாது.  கருவில் குழந்தை வளரும்போது  ஒரே  சீராக  உறுப்புகள் வளர்வதில்லை. கவனித்தீர்களா? உங்கள்  இடது கால் செருப்பை விட  வலது கால்  செருப்பு சந்திரவளையம் போல்  சீக்கிரமாகவே  ஏன் தேய்கிறது? 

செத்தபிறகும்   மனிதனின்  ஜீரண உறுப்புகள்  ஒரு நாள் பூரா  வேலை செய்கிறது.  இதை வைத்தே  ஒரு மனிதன் எப்போது  செத்தான்  என்று கணக்கிடுகிறார்கள். எலும்பு  இன்னும்  நாலு நாள் , தோல்  5 நாள், தசைநார்கள் 5 மணி நேரம், சிறுநீரகம் 6 மணி நேரம்   செயல்படுமாம்.   ஆகவே  மனிதன் செத்தாலும்  முழுதாக  சாகவில்லை.

இன்னொரு  விஷயம்.   50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.  தெரிந்தவர்களுக்கு  சொல்லுங்கள் 

நாம்  சுருங்கி விரிபவர்களாம். . பகலில் 8  mm   சுருங்கி  இரவில் 8mm   உயரமாகிறோம்.  காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறதாம். இதற்கு மேல் கேட்டால் என்னிடம் பதில் இல்லை. 

எல்லோருடைய ரத்தம் நிறமும் சிவப்பு தான்.   இரத்தத்தில் சிவப்பணுக்களின்   ஆயுசு  127 நாள் தான்.   புதுசாக  சிவப்பணுக்கள் உருவாகும்.  வெள்ளை அணுக்களின் ஆயுள் 120 நாட்கள்.

நமக்கு  வியர்த்து கொட்டுகிறதா. சட்டையெல்லாம் ஈரமாகிறதே. கைக்குட்டையால்  அடிக்கடி துடைத்துக் கொள்கிறோம்.  நம்  உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.  இது போதாதா?

நடுவிரல் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கிறது. நமது உடல்  வெய்ட்டை   எடையை, கால் தாங்குவதால் , கால்  விரல் நகம் மெதுவாக  slow  ஆக வளர்கிறது.

ஒவ்வொரு ராத்திரியும் நாம்  படுக்கையில்  தூங்குகிறோமே அப்போது குறைந்தது  40 தடவையாவது  அந்தப் பக்கம், இந்தப் பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.

மூளை  யாரை அதிகம் வேலை வாங்குகிறது தெரியுமா ?   கட் டை விரல்களை .  அது இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.  யோசித்து பாருங்கள்.நமது உடலில் மிகவும் கடினமானது  தாடை எலும்பு.

மனிதனின் மூளை  80- 85 %  தண்ணீர் தான்.   ஒருவனுக்கு  நெஞ்சு, இதயம்  ஈரமோ ஈரமில்லையோ, நிச்சயம்  மூளை ஈரமானது என்று புரிகிறது.கல்லீரல் என்பது  500 விதமான காரியங்கள் செயகிறது.  லிஸ்ட்  போட நேரமில்லை...

உடம்பிலே  சதை வேறு தசை வேறு.சதையை  கூட்டலாம் குறைக்கலாம். தசை அப்படியில்லை. மொத்தம் 630 தான். அது தான் எலும்பை பிணைத்து  செயல் பட வைக்கும்  சூத்ரம்.

நம் உடலில் ரத்தம்  ஊறிக்கொண்டே இருப்பதால் பிறர்க்கும் அவ்வப்போது கொடுக்கலாம். ரத்ததானம் ரொம்ப உயர்ந்த வகை தானம்.  விஷயம் தெரியாமல் நிறைய பேர் ரத்தம் கொடுத்தால் நம் உடலில் குறைந்து விடுவோம், உயிருக்கு ஆபத்து என்று நினைக்கிறோம்.  நமது நினைப்பு அநேகம் தப்பு தப்பாக வே இருக்கிறது. நம்   தேகத்தில் மொத்த  எடையில்  12% ரத்தம்  தான்.  நாம்  ரத்ன சாமியோ இல்லையோ, நிச்சயம்  ரத்தசாமிகள் தான்.

இன்னும் சொல்லட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...