Sunday, December 26, 2021

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி 


ஒன்று கவனித்தீர்களா?  இந்த  வைணவ விண்ணொளி என்ற தலைப்பில்  பன்னிரண்டு ஆழ்வார்களைப்  பற்றி முதலில்  ஆரம்பித்தேன்.  அதில்  பதினோரு ஆழ்வார்களைப்   பற்றிய பதிவுகள் இதுவரை வந்தன.  எழுத வேண்டியது 12வது  ஆழ்வாரைப் பற்றி.
யார்  அந்த பன்னிரெண்டாம் ஆழ்வார்  என்றால் அது ஆழ்வார் அல்ல ஆழ்வாள். ஆம்  ஒரே  பெண் ஆழ்வார் ஆண்டாள் எனும்  கோதை நாச்சியார்.  அற்புதமான பெண். அவள்  இறைவனோடு  இணைந்தவள். ஒவ்வொரு  வைணவ ஆலயத்திலும்  பெருமாளுக்கீடாக  தனி சந்நிதி பெற்றவள். பல கோடி  மக்களால் பக்தர்களால்  வழிபடப்பட்டு வருபவள். மார்கழி மாதத்துக்கு ஏகபோக சொந்தக்காரி.

 இந்த மார்கழி முழுதும்  அவள் இயற்றிய  திருப்பாவையை ''கோதையின் கீதை'' என்ற தலைப்பில் தினமும் ஒரு  பாசுரமாக  பதிவிட்டு வருகிறேன்.  இந்த வைணவ விண்ணொளி தொடருக்காக  இனி 12வது ஆழ்வாரான
 ஆண்டாளை பற்றி எழுத இன்னொரு வாய்ப்பு கிடைத்ததால்  நான் உண்மையிலேயே பாக்யசாலி என்று  கிருஷ்ணனுக்கு  நன்றி கூறுகிறேன்.

நிறைய  கற்றறிந்த வித்தகர்கள் ஏற்கனவே ஆண்டாளை பற்றி கூடை கூடையாக சொல்லியிருக்கிறார்கள், சொல்கிறார்கள், சொல்லவும் போகிறார்கள். ஏதோ சாஸ்திரத்துக்கு நானும் கொஞ்சம் சொல்லி அது  இந்த   பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய  பதிவை   நிறைவு செய்ய உத்தேசம்.

எதற்கு ஆண்டாளை பற்றி மட்டும் கொஞ்சம் அதிகப்படியான, நீளமான  பதிவு?  இதற்கு  காரணம் உண்டு. அவள் ஒருவள் மட்டுமே  வயதில் சிறிய  ஆழ்வார். ஒரு பெண்.  அவள் ஒருவள்தான் இறைவனோடு ஐக்கிய மானவள்.. பெரியாழ்வாரின் செல்லப்பெண். அவளது முப்பது பாசுரங்களே  சைவ வைணவர்கள் அனைவராலும் மனப்பாடம் செய்யப்பட்டு ரசிக்கப் பட்டு பாடப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள். அவள் ஒருவளுக்கே ஒரு ஆழ்வாருக்கு மட்டுமே தனி சந்நிதி எல்லா வைணவ ஆலயங்களிலும்.  இன்னும் என்ன தகுதி வேண்டும்.?

 விஷ்ணு சித்தரைப் பொருத்தவரை அவரது ஒரே லட்சியம் தினந்தோறும் தனது பெரிய அகண்ட நந்தவனத்தில் துளசி மற்றும் அநேக நறுமண மலர்கள் பூத்துக்குலுங்க வேண்டும். அவற்றை மாலையாக தொடுத்து ரங்கமானாருக்கு சார்த்தவேண்டும். தினமும். அதற்காகத்தான் நிறைய துளசி செடிகள், மலர்க் கொடிகள் எல்லாம் வளர்த்தார். குழந்தை போல் வளர்த்த அந்த நந்த வனம் புஷ்ப வனமாக காட்சியளித்தது. அன்றாடம் விடிகாலை பரந்தாமனைப் பாடியவாறு பெரிய பூக்குடலை யோடு விஷ்ணுசித்தர் நந்தவனம் முழுதும் சுற்றி அந்த மலர்கள் கொடிகளோடு பாசத்தோடு பேசியவாறு துளசியையும், மற்ற பூக்களையும் பறித்து ஆஸ்ரமத்துக்கு கொண்டு வந்து தானே அவற்றை தொடுத்து மாலையாக்கி தனது கையாலேயே அழகிய மணவாளனுக்கு, ரங்க மன்னாருக்கு, வட பத்ர சாயீக்கு சூட்டி மகிழ்வார். விசிறுவார். அப்படி ஒருநாள் பூப்பறிக்கும் நேரத்தில் தான் கோதையை துளசி வனத்தில் காண நேர்ந்தது.

''அது சரி, திருப்பாவை, திருப்பாவை, என்கிறீரே சுவாமி. அதற்கு என்ன அப்படி ஒரு சிறப்பு, மகத்வம்'' என்று ஒருவர் ஒரு ஆழ்வாரைக் கேட்டிருக்கிறார். புரியும்படியாக ''நச்'' சென்று பொறுமையாக ஒரு பாடல் பதிலாக வந்தது: அதுதான் இது:

''பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் (5x5)+5=30) அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.''

இதற்கு பல அர்த்தம் இருந்தாலும் மேலெழுந்தவாரியாக இப்படியும் ஒரு அர்த்தம்:

''இப்படி கேட்டீரே ஒரு கேள்வி, திருப்பாவையை பற்றி அறியாத உம்மைப்போல ஆசாமிகளை இந்த பூமாதேவி சுமக்கிறாளே அது தேவையில்லாத வம்பு தானே அவளுக்கு'' என்று வைணவர்  நகைச்சுவை நிரம்பி பொங்கிவழியும் மேற்கண்ட ஒரு இனிய பாசுரம் அமைத்தார். ஆண்டாளின் 30 திருப்பாவையையும் பற்றி     ''அப்படி என்றால் என்ன?'' என்று இன்னமும் கேட்போர் திருப்பாவையைப் படித்தால், கேட்டால், அது நாம் செய்த, செய்யும், பஞ்ச மகா பாதகங்க ளையும் அழிக்கும் வல்லமை வாய்ந்த புண்யம்..

திருப்பாவை ஒன்றே நமக்கு அந்த பரமனின் திருவடியை அடைய வைக்கும் வழிகாட்டி .  திருப்பாவை சாமான்யமான ஒரு பாடல் புத்தகமல்ல. நான்கு வேதத்தையும் தன்னுள்ளே அடக்கிகே கொண்டிருக்கும் ஒரு அதிசய அபூர்வ நூல். அழகு தமிழில், எளிதில் கண்ணனைக் காட்டும் கோதை என்கிற ஆண்டாள் எழுதிய திருப்பாவையை பற்றி ஒன்றுமே தெரியாத மூடர்களை இந்த பூமாதேவி சுமப்பது வேண்டாத ஒரு வேலை. தேவையில்லாத வம்பு இது. அந்த பூமா தேவிக்கு எதற்கு? என்று ஆழ்வார் கேட்டதில் என்ன தப்பு?

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆண்டாளைப் போற்றி புகழ்ந்து பாடிய கோதாஸ்துதியில் ஒரு ஸ்லோகம். இதில் ஆண்டாள் ரங்கனுக்கு ரெண்டு மாலைகள் தொடுத்தாள் ஒன்று பாமாலை மற்றொன்று பூமாலை என்கிறார்.

तातस्तु ते मधुभिदः स्तुतिलेश वश्यात्
कर्णामृतैः स्तुतिशतैरनवाप्त पूर्वम्।
त्वन्मौलिगन्धसुभगामुपहृत्य मालां
लेभे महत्तरपदानुगुणं प्रसादम् ॥१०॥

10.THatha sthu  madhuptha   sthuthi lesa  vasyaadh,
Karnamruthai   sthuthi sathair anavabdha  poorvam,
‘Thwan mouli gandha   subhagaam   upahruthya maalaam,
Lebe  mahathara padaa anugunam prasaadham.

'''தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசா வஸ்யாத்
கர்ணாம்ருதை : ஸ்துதி ஸதை: அநவாப்த பூர்வம்
த்வன் மௌலி கந்த சுபகாம்: உபஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதானுகுணாம் பிரசாதம்

 "எண்ணற்ற நூற்றுக் கணக்கான பாசுரங்களை அரங்கனைப் போற்றி விஷ்ணு சித்தர் பாடியிருக்கலாம். இருந்து விட்டு போகட்டுமே. இதற்காக பகவான் மதுசூதனன் அவருக்கு எந்த பட்டமும் சிறப்பும் அளிக்க வில்லையே. அம்மா, கோதையே , சுடர்க்கொடியே, எப்போது நீ சூடிய மலர் மாலையை, உன் கூந்தல் சுகந்தத்துடன் விஷ்ணு சித்தர் அரங்கனுக்கு சூட்டினாரோ அக்கணமே அவர் அரங்கனைப் புகழ் பாடும் ஆழ்வார் களிலேயே ''பெரிய'' ஆழ்வார் என்ற பட்டம் பதவி பெற்றுவிட்டார். '' என்று அமைகிறது ஸ்ரீ தேசிகரின் மேற்கண்ட கோதாஸ்துதி ஸ்லோகம்.

மார்கழி மாத அனைத்து நாட்களும் இறைவனுக்கு உகந்த நாளாயிற்றே. கோதை நாச்சியார் இயற்றிய 30 பாசுரங்களையுமே ஒவ்வொரு நாளிலும் ஒரு அமுதப்பாடலை படைத்ததாகவே எடுத்துக்கொள்வோம். அன்றாடம் இறைவனுக்கு மலர்களைத்தொடுத்து தந்தையோடு சேர்ந்து மாலையாக்கி அரங்கனுக்கு அனுப்பினாள். பூமாலையோடு இந்த அழகிய என்றும் வாடாத பாமாலையும் தொடுத்து அரங்கனுக்கு சூட்டினதாகவே ஸ்ரீ தேசிகர் மனத்தில் எழுந்த அற்புத எண்ணத்தில் பங்கு கொள்வோமே.

நாம் எதை நினைக்கிறோமோ, எதை விழைகிறோமோ, மனம் பூரா நிரப்பிக் கொள்கிறோமோ நாம் அதுவே ஆகி விடுகிறோம், என்பது தெரிந்தது தானே. கிருஷ்ணன் அதைத்தானே கீதையில் தெளிவாக சொல்கிறான்.

பெரியாழ்வாரிடமிருந்து அரங்கனைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு அவன் மேல் பற்று வளர்ந்து, அவனன்றி தான் இல்லை என்ற நிலை அடைந்து, அவனே மூச்சு, அவனே ஜீவன், என் இக வாழ்வில் கணவன் என்ற ஒருவன் உண்டென்றால் அது அவனன்றி வேறில்லை என்ற முடிவெடுத்தாள் கோதை.

அழகன் அவனுக்கு தான் நிகராக வேண்டுமே என்றே மிக கவனமாக தன்னை அலங்கரித்துக்கொண்டாள். ஒருவருமறியாமல் ரங்கனுக்கு என்று தொடுத்த வித விதமான மலர் மாலையைத் தன் கழுத்தில் முதலில் அணிந்து அழகு பார்த்தாள். தனக்கு பிடித்திருந்தால் அது அரங்கனுக்கும் பிடிக்குமே. இருவர் எண்ணமும் ஒன்று தானே, என்று ராதாவைப் போல் கோதாவும் தீர்மானித்தாள் .

ஒரு மனித ஜீவன் அணிந்த மலர் இறைவனுக்கு ஏற்காது என்று தெரியாதா என்ன அவளுக்கு? அவள் வேறு அவன் வேறு என்று இருந்தால் தான் இது வாஸ்தவம். ஆனால் மனத்தால் எப்போதோ ஆண்டாள் அரங்கனாகி விட்டாளே ! எனவேதான் அவள் அணிந்த மாலை அரங்கன் தோளில் அவன் விருப்பத்தோடு பரிமளித்தது.

ஒருநாள் இதை அறிந்த தந்தை வெகுண்டார். அபசாரம் என்று அரற்றினார். அரங்கனிடம் ''நடந்த தவறை மன்னித்தருள். என் பெண் சிறியவள் அறியாமல் செய்த தவறு என்று வேண்டி வேறு மாலையை உடனே தயார் செய்து எடுத்துக் கொண்டு சென்றார்.

''ஆண்டாள், சூடிய மாலையே எனக்கு ஆனந்தமளிக்கிறது, அதையே கொண்டு வா. அவளையும் இங்கே அழைத்துக் கொண்டு வா '' என்று அரங்கனே அங்கீகரிக்க அரசன் மற்றும் அவள் அப்பாவின் கனவில் ஆண்டாளை அலங்கரித்து மேள தாளங்களோடு வரவழைத்து தன்னோடு இணைத்துக்கொண்டான் அரங்கன். தெரிந்த விஷயம் என்றாலும் தெவிட்டாத அமுது ஆண்டாளின் வரலாறு.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...