Saturday, December 25, 2021



 பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN


102. சிவசைலத்தில் சிவராத்திரி.

''ஏண்டா , ஸ்ரீசைலம் போற பாதையைப் பத்தி சரியா கேட்டு வச்சிண்டேளா . ரூட் போட்டு கொடுத்திருக்கே. சரியானபடி போறோமான்னு பாக்கணும்'' என்று மஹா பெரியவா கர்நூலிலிருந்தபோதே மடத்து சிப்பந்திகளுக்கு அறிவுறுத்தினார். ஏனென்றால் ஸ்ரீ சைலம் போகிறவர்கள் அநேகமாக சிவராத்திரி மற்றும் உற்சவ காலங்களில் தான் அதிகம் நடப்பார்கள்.

''அடுத்த மாதம் சிவராத்திரி சமயம் போறது உசிதம் பெரியவா '
மஹா பெரியவாளுக்கு இந்த கங்கா யாத்திரை ரொம்ப கால தாமதமாகி தள்ளி போட்டுக் கொண்டே போகிறது. என்பதால் கர்னூல் கடப்பா கால்வாய் வழியாக படகில் உடனே புறப்படுவது சரி என்று பட்டது.
இன்னொரு காரணம் சிவராத்திரி சமயம் மல்லிகார்ஜுன தர்சனத்துக்கு ரொம்ப கூட்டம் சேர்ந்துவிடும். ஏகாந்தமாக தரிசனம் இப்போது புறப்பட்டால் கிடைக்கும் என்று தீர்மானித்தார்.

2ம் நாள் ஜனவரி 1934ல் சந்திரமௌலீஸ்வரர் பூஜா த்ரவியங்கள், ஸாமக்ரியைகளோடும் சில உதவியாளர்களோடும் கர்நூலிலிருந்து படகில் புறப்பட்டார். அடுத்த நாள் 25.ஜனவரி அன்று பகடிபலா என்கிற ஊர் அடைந்தார். 26ம் தேதி ஆத்மகூர் வந்தார். 27ம் தேதி நாகலூட்டி , 28ம் தேதி பெத்தசரிவு வந்தாயிற்று.மேலே சொன்ன ஊர்களில் இறங்கி ஆங்காங்கே பூஜை நடத்திய பிறகு பிரயாணம் தொடர்ந்தது.
பெத்தசரிவு மலை அடிவாரத்திலிருந்து மலை ஏறத் தொடங்கினார் . மெதுவாக நடந்து சுக்ல பர்வதம் சென்றடைந்தார். அந்த மலைப்பாதை ரொம்ப செங்குத்தானது. கஷ்டம் தான். எப்படி யோ மஹா பெரியவா மெதுவாக ஏறி 29ம் தேதி ஜனவரி 1934 ஸ்ரீசைலம் சென்றடைந்துவிட்டார். அவர் விரும்பியபடியே ஏகாந்தமாக ஸ்ரீ மல்லிகார்ஜுனர் ஸ்ரீ பிரம்மராம்பிகை தரிசனம் அனுபவித்தார். ஆலய நிர்வாகிகளுக்கு முன்பே மஹா பெரியவா வருகை அறிவிக்கப் பட்டிருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள். ஆர்வமாக வரவேற்றார்கள்.
ஈஸ்வரன் அம்பாள் சந்நிதிகளில் வெகுநேரம் நின்று கண்மூடி த்யானம் செய்தார். ஆதி சங்கரர் விஜயம் செயது பாடிய சிவானந்த லஹரி ஸ்தோத்ரம், பிரம்மராம்பிகை ஸ்தோத்ரம் எல்லாம் ஆத்ம திருப்தியோடு பாடினார். மறுநாள் அங்கிருந்து மலையிறங்கி கீழே பாதாளகங்கை புண்யதீர்த்தத்துக்கு வந்துவிட்டார். அன்று சந்திர கிரஹணம். 31.1..1934 அன்று ராத்திரி 9.30 மணிக்கு கிரஹணம் பிடித்து ராத்திரி 10.30க்கு விட்டது. பாதாளகங்கை படிக்கட்டில் சந்திரமௌலீஸ்வரர் பூஜை நிகழ்த்தினார். மட சிப்பந்திகள், ஆலய பணியாளர்கள் இரவெல் லாம் எண்ணெய் தீபங்கள், தீவர்த்திகள் கொளுத்தி வெளிச்சமாக இருந்தது.
காட்டுப் பகுதி என்பதால் பல இடங்களில் நெருப்பு எரியும் சுளுந்து பற்ற வைத்திருந்தார்கள். துஷ்ட மிருகங்கள் நெருங்காது என்பது மட்டும் அல்ல. குளிருக்கு அவற்றிற்கு அந்த உஷ்ணம் சுகமாக இருந்தது.

அடுத்தநாள் மஹா பெரியவா மீண்டும் 900 படிகள் மலை ஏறி மேலே மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் பெற்றார். ஒரு நாள் அங்கே தங்கிவிட்டு அடுத்தநாள் மலையடிவாரத்துக்கு, பெத்த சரிவுக்கு யாத்திரை நடந்தார்.

6.2.1934அன்று மஹா பெரியவா யாத்திரை பயணிகள் அனைவரும் கர்னூல் திரும்பி வந்து சேர்ந்தார்கள். ஆலம்பூர் என்கிற ஊரில் 12.2.1934 அன்று மகா சிவராத்ரிக்காக மஹா பெரியவா வந்து சேர்ந்தார்.
ஆலம்பூர் சிவன்கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா? சுருக்கமாக சொல்கிறேன்.
அம்பாளுக்கு அங்கே ஜோகுலம்பா, யோகாம்பா, யோகுலாம்பா என்றெல்லாம் பெயர். 18 சக்தி பீடங்களில் ஒன்று. அம்பாள் ரொம்ப உக்ரமானவள். அவளது அடர்ந்த சிகையில் , பல்லி, தேள் வௌவால்,கபாலம் எல்லாம் காணப்படுகிறது. அமர்ந்த திருக்கோலம். சதி தேவியின் கருகிய உடலிலிருந்து வாய் மேல் அண்ணம் பற்கள் விழுந்த இடம். சிவன் பெயர் இங்கே பால ப்ரம்மேஸ்வர சுவாமி. இந்த யோகாம்பா சமேத பாலா ப்ரம்மேஸ்வர சுவாமி ஆலயம் 6- 7ம் நூற்றாண்டு கிருஷ்ணா - துங்கபத்திரா நதிக்கரையில் சாளுக்கிய ராஜா புலிகேசியால் கட்டப்பட்டது. ஆயிரங்கால் மண்டபம் உள்ள ஆலயம். மூன்று வாசல்கள். கோபுரத்தில் பல சிவ பெருமான் திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டவை. இப்போதிருக்கும் ஆலயம் ஒரிஜினல் இல்லை. அதை பாமணி சுல்தான்கள் உடைத்து சிதைத்து விட்டார் கள்.ஆனால் அவர்கள் சிதைக்கும் முன்பே, சிவன் அம்பாள் மற்றும் சண்டி முண்டி அவதாரங்கள் மற்றும் சில சிலைகளை பக்தர்கள் ஜாக்கிரதையாக அப்புறப்படுத்தி மறைத்து வைத்து விட்டார்கள். அப்புறம் புனருத்தாரணம் செய்யப்பட இந்த ஆலயத்தில் அவை பிரதிஷ்டை செய்யப்பட்டன. சப்த மாதாக்கள் இருக்கிறார்கள். ஆலயத்தில் நுழைந்தவுடன் நந்திகேஸ்வரன். ப்ரஹாரங்களில் வீரபத்திரர் , நவதுர்கைகள், தக்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியன், காலபைரவர், யோக நரசிம்மர், விக்னேஸ்வரர் தனித்தனி கோஷ்ட சந்நிதியில் அருள் பாலிக்கிறார்கள். அருகே ஒன்பது கோவில்கள் அற்புதமானவை.. நவ ப்ரஹ்மா ஆலயங்கள் என்று பெயர்.
மஹா பெரியவா இந்த பாலபிரம்மேஸ்வரர் ஆலயத்தில் தான் நாலு கால சந்திரமௌலீஸ்வரர் பூஜையை மஹா சிவராத்திரியை உத்தேசித்து நிகழ்த்தினார். எண்ணற்ற பக்தர்கள் தரிசித்த புண்யம் பண்ணியவர்கள்.
அருகிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்துவிட்டு மஹா பெரியவா 21ம் தேதி ஹைதராபாத் சென்றடைந்தார்.
தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...