Friday, December 31, 2021

thiruvembavai

 திருவெம்பாவை -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மார்கழி 17ம் நாள்.
                  
 17.  திரு வாசகரும் திருவெம்பாவையும்

ஆண்டாள் இயற்றிய  திருப்பாவை  மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது.   எனவே அதை ஒட்டி  தானும்  
ஒரு  திருப்பள்ளி எழுச்சியும்  திருவெம்பாவையும்  பாடினாரோ என்று எண்ண  வைக்கிறது.  நல்ல விஷயம்  ரெட்டிப்பாக கிடைப்பது நமது நல்ல காலம். நல்லதிர்ஷ்டம். திருப்பாவை முடிந்ததும்  திருப்பள்ளி எழுச்சி தொடரும்.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

திருவண்ணாமலையை சார்ந்த  சில   கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவதாக  அமைந்துள்ளது.

இருபது பாடல்களை கொண்ட  திருவெம்பாவை   சிவ பிரான் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிக்கிறது.  முதல்  எட்டு பாடல்கள்  பெண்களை துயிலெழுப்புவதாகவும்,  ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும்   தீந்தமிழில்  பாடப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது இதைப் பாட வேண்டும் என்று எண்ணம் தோன்றி  இயற்றியவை  திருவெம்பாவை பாடல்கள் . சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி.

இருபது பாடல்களிலும் பாட்டின் முடிவில்  ''எம்பாவாய்''  வருவதால் அதையே  பெயராக  திரு அடைமொழி சேர்த்து  ''திருவெம்பாவை''  ஆகிவிட்டது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் பொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள்  தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன.

சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவம்.   மனோன்மணி, சர்வ பூதமணி பலப்பிரதமணி , பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

இந்த அறிமுகத்துடன் இன்றைய  17வது  திருவெம்பாவைக்குச் செல்வோம்:

17. செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

 கம கம வென நறுமண மலர்கள் வாசம் வீசும் கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திரு மாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாத, எல்லையற்ற ஆனந்தம் எங்களிடம் உண்டாகும்படி பெருமைப் படுத்தி விட்டாய். நம் இல்லத்தில் வந்து செந்தாமரை போன்ற அழகிய திருவடியை தரிசிக்க தந்தருளும் அந்த ஆடலரசனை, இணையற்ற மா வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, நம்மை தடுத்தாட் கொள்ளும் பேர் அமுதனை எம்பிரானைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, எழுந்து வா. எங்களோடு இந்த பொற்றாமரை நிறைந்த நீரில் குதித்து நீராடுவோம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...