Friday, December 17, 2021

KRISHNA'S PRESENCE

 


அப்பாக்கு  என்ன  ஆச்சு?  --   நங்கநல்லூர்  J K  SIVAN 


ஏன்  எல்லோரும் அந்த மாடு மேய்க்கும் பயலை  தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள்?
ராஜப்பாவுக்கு  இந்த கேள்வி  வெகுகாலமாக  மனதை குடைந்து கொண்டே இருந்தது.  
அவனுக்கு சிறு வயது முதல்  அவ்வளவாக  எதுவும் தெரியாமலேயே  வளர்ந்தவன்.  வீட்டில் யாரும் அவனுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கும்  நிலையில் இல்லை.  பள்ளிக்கூடத்திலும்  அவன்  கடைசி பென்ச் ஆசாமி..  பேசாமலே 
இருப்பான், அதிகம் விளையாடமாட்டான், யாருடனும் சண்டை சச்சரவு கிடையாது. எதையும்  கேட்கமாட் 
டான், கொடுத்ததை உண்பான்.

கிருஷ்ணஜெயந்தி அன்று ஒரு சம்பவம்.

எதிர் வீட்டு  கிருஷ்ணவேணி மாமிக்கு  குழந்தை பாக்யம் இல்லை.  ராஜப்பாவிடம்  அன்பும் பாசமும் கொண்டவள்.
அவன் பக்தி பாராயணம் பிரார்த்தனை, கோயிலுக் மாதிரி மாமி ஒரு கிருஷ்ண பக்தை.  பக்தி இருந்தால்  கிருஷ்னன் தானே  நம்மை தேடி வருவான் என்பாள்.  

ஒரு நாள்  ராஜப்புவுக்கு  அவள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. 

ஒரு பெண்  தன்னுடைய தந்தை வேலுச்சாமி உடல் நலம் குன்றி மரண தருவாயில் உள்ளதால்   ராமு பாகவதரை வீட்டுக்கு வரவழைத்து அப்பாவுக்காக   ஒரு சப்தாஹம்  பாகவதம் படிக்க சொன்னாள். வேலுச்சாமி வீட்டுக்கு வந்த பாகவதர்  நோயாளி படுக்கையில் ரெண்டு தலையணைகளை வைத்து உயரமாக தலை வைத்து படுத்திருந்ததையும், தலைமாட்டில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்ததையும்  பார்த்தார்.    வேலுச்சாமி   பாகவதர்  வருவார் என்று அறிந்து தான் உட்கார  அந்த நாற்காலி போட்டிருக்கிறார் என்று சந்தோஷப்பட்டார். 
''என்ன  ஸார் நான் வருவேன்  என்று தெரியுமா ?''
''இல்லையே,   நீங்க  யாரு?''
''நான்  ராமு பாகவதர்.  உங்க பொண்ணு  கூப்பிட்டா. ஒரு வேளை  நான் வருவேன்  என்று எதிர்பார்த்து இந்த காலி நாற்காலி போட்டிருக்கோன்னு நினைச்சேன். 
''ஓஹோ.  அந்த நாற்காலி பத்தி கேக்கறீங்களா.  கதவை சாத்திட்டு வாங்க  சொல்றேன் .” என்கிறார் வேலுச்சாமி 
“கதவை சாத்திட்டேன்.  இதிலே  என்ன ரஹஸ்யம் இருக்கு?''  ஆவலாக கேட்டார்  பாகவதர் 
''இதை பத்தி என் பொண்ணு கிட்டே கூட  சொல்லலை.  இத்தனை வருஷம் வாழ்ந்த  எனக்கு கிருஷ்ணனை பிடிக்கும். ஆனால்   எப்படி பிரார்த்தனை பண்றதுன்னு கூட  தெரியாது ஐயா . கோவிலுக்கு போவேன். அங்கே  உபன்யாசம் நடக்கும்.  கேட்பேன்.  அது விஷயம் எதுவும் என் மனசுலே  ஏறலை . இந்த காதிலே வாங்கி அந்த காதிலே  விட்டுடுவேன். எவ்வளவோ காலம் இப்படியே  ஓடிடுத்து.  நாலு வருஷம் முன்னாலே ஒரு நெருங்கிய நண்பன் கோபாலன் வந்து பார்த்தான். அவனுக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும். அவன் கிட்டே கேட்டேன் எப்படிடா பிரார்த்தனை பண்றதுன்னு ''

''வேலு,  உனக்கு ஒரு சிம்பிள் வழி சொல்றேன் கேளு.   நீ ஒரு நாற்காலி லே  உட்கார்.  எதிரே  ஒரு காலி நாற்காலியை போட்டு வை. கிருஷ்ணன் அதிலே வந்து உட்காருகிறார் என்று  நினைத்துக்கொள்.உன் மனசிலே  என்னென்ன எண்ணங்கள் இருக்கோ அதெல்லாம் கொட்டு. அவன் கேட்பான். உனக்கு வழி சொல்வான். இப்போ  உன்  கிட்டே எப்படி பேசுறேனோ  அப்படி அவன் கிட்ட பேசற பழக்கம் வந்துடும்''  என்றான்.   அவன் நல்ல நண்பன்.  பொய் பித்தலாட்டம் அவன் கிட்டே கிடையாது.     எனக்கு  கோபால்  சொன்னது ரொம்ப  பிடிச்சுடுத்து.
ஒவ்வொருநாளும்   ரெண்டு ;மூணு மணி நேரம் தனியாக  நான்  அந்த நாற்காலியை பார்த்து கிருஷ்ணன் கிட்டே பேசுவேன்.   மனசுலே இருக்கிறதை எல்லாம் சொல்வேன்.  அவன் கண்ணுக்கு தெரியலே. இருந்தாலும்  அவன்  சொல்றதெல்லாம்  மனசிலே  பதியும்.   அது எனக்கு ரொம்ப  ஆறுதலா இருந்தது   நான் ஒரு  காலி நாற்காலியோடு பேசறது பார்த்தால் என் பொண்ணு என்னை பைத்தியம் என்று பைத்தியக்கார  ஆஸ்பத்திரியில் சேர்த்துடுவா.  ஆகவே  இந்த  சம்பாஷணை ரஹஸ்யமாகவே நடந்து வருகிறது. இது தான் விஷயம். நீங்க கேட்டதால்  சொல்றேன்.
யாருக்கும் இதை பத்தி சொல்லாதீங்கோ ''  என்கிறார் வேலுச்சாமி.

பாகவதர் இதை கேட்டு  அசந்து போய்விட்டார்.  பாகவதர்  சப்தாஹம்  கடகடவென்று சீக்கிரமே  முடிந்தது விட்டது.
சப்தாஹம் முடிந்த  மறுநாள்  அந்த பெண்  ராமு  பாகவதருக்கு  போன் பண்ணி  அன்று மத்தியானம்  அப்பா வேலுச்சாமி  இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லிவிட்டாள் .
''அடாடா,  அப்பா அமைதியாக  இறந்தாரா அம்மா?''
மத்தியானம்  ரெண்டு மணிக்கு  என்னை கூப்பிட்டார்.  அம்மா  உன்னை நான் ரொம்ப  நேசிக்கிறேன் என்று ஆசையாக பாசமாக திக்கி தடுமாறி சொன்னார்.  தலையில் முத்தமிட்டார்.  நான் வெளியே கடைக்கு சென்று விட்டு  ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினேன்.  அப்பா அதற்குள் இறந்து போயிருந்தார்''
''அடடா . அப்புறம் ?''

அதிலே  ஏதோ ஒரு விஷயம்  கொஞ்சம்  மனசுக்கு நெரடலா  இருந்துது மாமா. ஏன் அப்பா இப்படி பண்ணார், என்ன ஆச்சுன்னு தெரியல.''
''ஆஹா அப்படியா.  அப்பா  என்ன பண்ணிட்டார்  அப்படி.''

''அப்பா  எதிர்லே இருக்கிற  நாற்காலி கால்களுக்கு இடையே  கையை கும்பிட்டவாறு கீழே தலையை வைத்து  விழுந்து கிடந்தார்  மாமா.  எதுக்கு, ஏன் மாமா  அப்படி பண்ணியிருந்தார் ?''

ராமு பாகவதர் கண்களில் நீர் வடிந்தது.    வேலுச்சாமி  ரஹஸ்யமாக தன்னிடம் மட்டுமே  தான் கிருஷ்ணனுடன் தினமும் சம்பாஷிப்பது பற்றி  சொன்னது ஞாபகம் வந்தது.  ஆஹா  அந்த கிருஷ்ணனே  வேலுச்சாமி எதிரில் வந்து அமர்ந்து இருக்கிறார். வழக்க ம் போல்  பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.  இன்று அவர் தரிசனம் கிடைத்து  அவர் பாதார விந்தங்களில்  கரம் குவித்து, சிரம் கவிந்து வேலுச்சாமி வணங்கியவர்  வைகுண்டம்  சென்றிருக்கிறார்  என்று புரிந்தது. 

என்ன மாமா  பேசாமேலே  இருக்கிறீங்க.  அப்பாக்கு என்ன  ஆயிருக்கும்?

ஒண்ணுமில்லேல்லம்மா. அவர்  கொடுத்து வைச்ச புண்யவான். அவர் மாதிரி நமக்கும்  பாக்யம் கிடைக்கணும்  மா.''

யாரிடமும் சொல்லவேண்டாம் என்ற வேலுச்சாமியின்   ரஹஸ்யத்தை   பாகவதர் காப்பாற்றி விட்டார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...