Wednesday, December 22, 2021

  

நினைவு நூலிழைகள்  - நங்கநல்லூர்  J K  SIVAN 

 காமேஷ்   என்று  எங்களுக்கு  ஒரு  குடும்ப  வாத்தியார் --  வாத்தியார்  என்றால்   பள்ளிக்கூடத்தில்  கணக்கு, தமிழ்,  ஆங்கிலம்  எல்லாம்  சொல்லிக்  கொடுப்பவர்  என்று ஒரு  பொருள்  இருந்தாலும்  இந்த  வார்த்தைக்கு  மற்றும்  சில  அர்த்தங்கள்  உண்டு.

 குடும்ப சடங்குகளில்  வைதீக காரியங்களுக்கு  வழக்கமாக  வந்து  நடத்திக்கொடுப்பவர்களும்  வாத்யார்கள்  என்றே  அழைக்கப்படுவார்கள். வைதீகர்கள்  என்பது வேகமாக  காலப்போக்கில்  வாத்தியார்கள் ஆகிவிட்டது.   அதில் ஒருத்தர்   தான்  இந்த   காமேஷ்.  வயது 41.  அவரது  அண்ணாவும்  வாத்தியார், மற்றும் சில  சகோதரர்கள்.   எல்லோருமே  நாற்பதை  நெருங்கும் அல்லது  கடந்த கட்டை பிரம்மச்சாரி  வாத்யார்கள்.   ஏன்?    இப்போதுள்ள  நிலையில்  வைதீக  உத்தியோகத்தில்  இருப்போர்க்கு  எவரும்  பெண்   கொடுக்க முன் வருவதில்லை.  அவர்களுக்கு  நிறைய வருமானம்  வருகிறது. குடும்பத்தை  காப்பாற்ற தைர்யம், நம்பிக்கை  எல்லாம் இருக்கிறது. இருந்தும் சமூகத்தில் மாப்பிள்ளையாக உகந்தவர்  என்கிற அந்தஸ்து  பெண் வீட்டார்களுக்கு இல்லையே.  இப்படி எல்லோரும்  பழி வாங்கினால்   இந்த வைதீக குடும்பங்கள்  அழிவை நோக்கி  தான்  மெதுவாக  நகர்ந்து கொண்டிருக்கிறது   ஒருவர்  வாழ்வில்  சந்தோஷமாக  இருக்க  IT ,அமெரிக்காவில்  உத்தியோகம்,  பட்டம்  டிகிரி   கோட்டு   சூட்டு  தான்  அவசியம்  என்றால்  அப்படி இருப்பவர்கள்  சந்தோஷமாக  இல்லையே. நிறைய கோர்ட்டுகளில்  திருமண  முறிவு  வழக்குகள்  நிரம்பி  வழிகின்றதே.  பெற்றோர்கள் நிச்சயித்ததும்   தானாகவே தேடிக்  கொண்டதும்  இதில்  அடக்கம்.  பணம் பிரதானம்  என்றால்   சில  வைதிகர்கள்  சம்பாதிப்பது  மற்ற உத்யோகங்களுக்கு  குறைவற்றது என்பது கண்கூடு.  நமது  சம்பிரதாயங்கள்  தலை கீழாக  விழுந்து கொண்டிருக்கிறதை  யாராவது  தடுத்து  நிறுத்த  முயற்சிக்கிறார்களா?  

மனதை வருத்தும்  இந்த  விஷயத்தை  மறக்க  மற்றொரு  வாத்யார்  பற்றி  பேசுவோம்.

பொழுது போக சினிமாவுக்கு  போனால்   அந்த காலத்தில்   ஒரே சமயத்தில்  கையில்  ஒன்றுமே ஆயுதமில்லாமல்  கயிற்றைப்  பிடித்து  தொங்கியபடியே  குறைந்த து  இருபது  பேரையாவது  பாடிக்கொண்டே  அடித்து  வீழ்த்திய  அசகாய  சூரனாக  ஒருவர்  கருப்பு  வெளுப்பில்   தோன்றிய  ஒருவர்  ஆவார்.  எதற்கு  அவர் அட்டைக்கத்தி வாத்யார்   என்று  பேர்  பெற்றார்  என்று எனக்கு  இன்னும்  கூட  தெரியவில்லை. ஆனால் அந்த  பெயர்  பல காலம்  அவருக்கு  மறையும் வரை, மறைந்தபிறகும்  கூட  வழங்கி வந்தது .  இன்னும்  அவரையோ  அவரது வாத்யார்  எனும் பட்டப் பெயரையோ மறக்க முடியவில்லை.   பலரும்  போற்ற வாழ்ந்த மாபெரும்  மனிதர்.   யாரும்  மறக்கவில்லை.  மறக்க முடியாதவர்களில்  அவர்  ஒருவர்.  அவருடைய  உடையே  வித்யாசமாக  இருக்கும்.  பஞ்ச கச்சம்  மாதிரி  அவசரத்திற்கு  அவிழ்க்கமுடியாதபடி  ஒரு  வேஷ்டி.  அதற்கு மேல்  ரெண்டு  சைஸ் சின்னதாக  தைத்தது  போல் இறுகப்பிடித்தபடி,  இடுப்புக்கு கீழே  போகாத   உடலோடு  ஒட்டிய  ஒரு  சட்டை  மாதிரி  ஒன்று .  காலர்  இல்லாத, பட்டன் இல்லாத  கயிறுகளால் இழுத்துக் கட்டியபடி ஒரு  அங்கி.,  வயிற்றுக்கு  மேல்  பெல்ட்  மாதிரி கட்டி கொசுவம் வைத்த ஒரு துணி   சைடில்  தொங்கும். சில  சட்டைகள்  ஸ்கர்ட்  மாதிரி  கொசுவம் கொசுவமாக  இடுப்பில்  தொங்கும்.  அழகாக  இருக்கும்.   திட காத்ர  உடல்.  ரெட்டை  முகவாய்க்கட்டை . மயக்கும் சிரிப்பு. கூடை  கவிழ்த்தாற் போல் படிப்  படியாகஅலை அலையாக   நிறைய  முடி  கழுத்து  வரை.  காதில்  புது மாதிரியான  வளையங்கள் தொங்குவதும்  உண்டு.  கணீரென்ற  TMS  குரலில் பாட்டு.

உணர்ச்சி வசப்பட்டு  வருத்தமாக    சோகமாக அவர்    நடிக்கும்போது  பக்கத்தில்  அவசியம்   பிடித்துக்கொள்ள  ஒரு  தூணோ,  சுவரோ,  மரக்கிளையோ  வைத்து இருப்பார்கள்.   எப்போதும்   நல்லவராகவே  வருவார்.  குழந்தைகளையும்  கிழவிகளையும்   அணைத்துக்கொண்டே பாடுவார்.  எனது  அம்மாவுக்கு  அவரை   ரொம்ப பிடிக்கும்.   அவருக்கு  ஜன்ம  விரோதியாக  நம்பியார்  என்று  ஒரு  கோப முகம்  கொண்ட,  சற்றே  குள்ளமாக  ஒருவர் எல்லாப் படத்திலும்  கெட்டவராகவே வருவார்.  கண்கள்  ஒளி  மிக்கவையாக,  கோலிக் குண்டுகளாக இருக்கும்.  கோபம்  கொப்புளிக்கும்.  பல்லைக்கடித்தபடி,  சிறிய  முகவாய்க்கட்டையொடு   உள்ளங்கை  களை தேய்த்துக்கொண்டு  முகத்தை  அஷ்ட கோணலாக்கிக்கொண்டு  கீழ்க்கண்ணால்  பார்த்தபடி ''ஜம்புவை''  நோக்கி ஒரு  அக்ரமத்துக்கு  திட்டம் போடும்போது  ஒரு  கால்  நாற்காலி மேல்  தான்  இருக்கும்.  அவரைச்  சுற்றிலும்  நிச்சயமாக  ஒரு  மொட்டையோ,   முகத்தில் கீறல் காயத்தோடோ    சிலர்  லுங்கி பனியன்களில்  படு  குண்டாக  இருப்பது  அப்போதைய  சம்ப்ரதாயம்.  

வாத்யார்  நம்பியாரை  கடைசியில்  ரொம்ப  பிரயாசைப்பட்டு  பல  அட்டைப்பெட்டிகள், சீசாக்கள்,  பிப்பாய்கள் எல்லாம்  சிதறடித்து,  கத்தியை  கழுத்தில் அருகில்  நெருங்க வைத்து, ஆனால் காயப்படுத்தாமல்   கையால்  அடித்து  நொறுக்குவார்.   சில  படங்களில்  ஜன்னல் சீலைத்  துணியெல்லாம்  அறுத்து,  அதன்  கதவுகள்,  நாற்காலி, மேஜைகள்  எல்லாம்  உடைத்துவிட்டு தாவி குதித்து கீழே  தயாராக  இருக்கும்  குதிரை மேல்  குதித்து   தாவி  அமர்ந்து  வாத்யாரோ  நம்பியாரோ  தப்பிப்பார்கள்.   கூடவே  சில  படங்களில் கதாநாயகி  அவரை  அணைத்துக்  கொண்டு அவரது வீர சண்டையை பார்த்துக்  கொண்டிருப்பாள்.  குதிரை மீது  அவரோடு  குதிப்பாள்.   ஒரு கையால்  அவளைக்  காப்பாற்றிக்கொண்டே  ஆறேழு  பேர்களை  கீழே  புரட்டுவார்.

இதெல்லாம்  சின்ன  வயதில்  கண் கொட்டாமல் எங்களை   பார்க்க வைத்து   எங்கள்  வேப்ப மரத்தடியில்  சில பேர்  நாங்களே  அந்த  காட்சிகளை  மீண்டும்  நடிப்போம்.  யாருக்காவது  உண்மையிலே  அடிபட்டால்  மற்றவர்களுக்கும் , அடிபட்டவனுக்கும்  சேர்த்து  என்   அம்மா தக்க  ''சன்மானம்''  தருவாள்.  

கதா நாயகி தற்கொலை செய்து கொள்ள  எண்ணும்போது   ஒரு நீள  பாட்டு  பாடுவதும்  சில  படங்களில்  வழக்கம்  உண்டு.  ஒரு  1 1/2  லிட்டர்  சீசாவின்  மீது   விஷம்  என்று  16 இஞ்சு  எழுத்து  இருக்கும். அதை  திரும்ப  திரும்ப  காமிரா  காட்டும்.  ஆனால் கடைசிவரை  அவள்  அதை  குடிக்க மாட்டாள்.  பாட்டு  கடைசி  வரி  வரும்போது  குதிரையிலோ,  ஜன்னல்  வழியாக  வெளியே தோட்டத்திலிருந்து  ஒரு   நூல் ஏணியில்  அவர்  தக்க  சமயத்தில்  வந்து  அவளை   காப்பாற்று வார்.  எல்லோரும்  கைதட்டுவார்கள்.  

எப்போதாவது  அந்த  மாபெரும்  நடிகர்  பின்னால்   நம்பியாரோ,  அவருக்கு முன்பு சில படங்களில் எதிர்த்த   வீரப்பா  என்று--  கோட்டை சிரிப்பு சிரித்துக்கொண்டு விழிகளை உருட்டி,அற்களைக் கடித்துக்கொண்டு  --  ஒருவரோ  மெதுவாக  வரும்போது  என்  அம்மா ''  டேய்   திரும்பிப்பார்ரா,   உன் பின்னால்   அவன்  உன்னை  அடிக்க  வரான். ''என்று   கத்தி  அவரை,வாத்யாரை,   காப்பாற்ற  முயற்சிப்பாள்.  பாவம்  கடைசி  வரை  அவளுக்கு இது  நிழல் படம்  என்று  தோன்றவில்லை.  நிழலை  நிஜம்  என்று நம்பிய எத்தனையோ  ஜீவன்களில்  அவளும்  ஒருவள்.  அவருக்கு ஒரு  காட்சியில்   அடிபட்டால்,  அந்த  கதாநாயகி  வேறு  ஒரு துணியும்  தேடாமல் தன்  புடவையில்  ஒரு  சிறிய முனையை  கிழித்து  அவர் நெற்றியில்  கட்டிவிடும்போது நடுவே  குங்குமம்  தீற்றினாற்   போல  கருப்பு  வெளுப்பில்  ஒரு  திட்டு  ரத்தம் என்று கட்டுவார்கள். அது  என்  அம்மா  போன்ற  ரசிகர்களை  குமுறச்செய்யும் வழக்கமான  பலப்படங்களில் வரும் காட்சி.

 இன்னும் நிறையவே  சொல்லலாம்.   கடைசியில்  சில  படங்களில்  சுபம்  சுபம்  சுபம்  என்று  மூன்று முறை  பெரிதாக எழுதி  காட்டுவார்கள்.  

அதைப் பார்த்தபிறகு   தான்  அனேக  ரசிகர்கள்  அக்காலத்தில்   சந்தோஷமாக   வெளியேறு

வார்கள்.  
 
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...