Wednesday, December 29, 2021

THIRUVEMBAVAI

 திருவெம்பாவை -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மார்கழி 15ம் நாள் 

15   வினா விடைகள்

''ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்''


ஆஹா இந்த  புனித  திருவண்ணாமலையை சேர்ந்த  அழகிய பெண்களே!    இதோ இந்த  அதிசய பெண்ணை  பாருங்கள்.... பித்தா பிறை சூடி  பெம்மானே, என்று சதா   ஆடிப் பாடி  ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான்,   என் பெருமான்  என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினால்  உச்சரிப்பதை  விடாதவளாக மன மகிழ்ச்சிகொண்டவளாக இருக்கிறாள்.  பித்தன் மேல் பிச்சியாக  அலைகிறாள்.  அவளது  விழிகளினின்றும்,   ஒருபொழுதும் அவன்   நீங்காதவனாக ,   பொய்கையில்  நீராடிய  நீர்  உடலில் சொட்ட சொட்ட ,  அதைவிட  கண்களில் பக்தியால்  கண்ணீர் பிரவாஹமாக  நீண்ட தாரை தாரையாக ஒழுக,  பூமியின்மேல்  வீழ்ந்து  பரம சிவனை   வணங்குகிறாள்.  என் சிவனே போதும் வேறொன்றும் நான் அறியேன் பராபரமே  என்கிறாள்.

பெரிய தலைவனாகிய  பரமேஸ்வரன் பால்  ஒருவர்  இப்படி  பித்தராக  மாறுவது  சுலபமா?   நான்  ஏன்  நீர் சொட்ட  சொட்ட  ஈரமாக  குளித்துவிட்டு  நிற்கிறேன். அதோ என் சிவன் சிரத்தில் கங்கை ஆறாக பெருகி அவன் உடல் வழியாக ஓடுவது தெரியவில்லையா.  அவன் மீது வைத்த அன்பினால் தானே   ஈரமான அவனை என் நெஞ்சில்  ஈரத்தோடு  பக்தி ப்ரவாஹத்தோடு,  ''அன்பே சிவமாக  அமர்ந்திருக்கிறேன்'' .   பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில்  குதித்து   ஆனந்தமாக  நீராடுவோம்  வாருங்கள்'' என்கிறாள் ஒரு பெண்..

சிவபெருமான்,எம்  பரமேஸ்வரன்  எப்படி   தடுத்தாட்கொள்பவர்?  எப்படி கருணை உள்ளம் கொண்டவர்?  இதற்கு விடை தேடினால்  சுந்தரரைக்  கேளுங்கள்.   கதை கதையாக தன் அனுபவத்தைச்  சொல்வார்.  சேக்கிழார்  தான் அதையெல்லாம்  கேட்டு  பெரிய  புஸ்தகமாக  ''பெரிய''  புராணமாக   எழுதி வைத்திருக் கிறாரே.

மணிவாசகரின்  அழகு தமிழில் அற்புத  பாடலை ர் ரசிக்கிறோமே . நமக்கு  இப்படிப்பட்ட அரிய  அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் சைவ சமய சிவனடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை.

பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும் . வேறொன்றும் கற்க தேவையில்லை எனலாம். முதலாவது  நமது  வாழ்வி ன்  நீளம் இதெல்லாம் முழுதும் கற்க  போதுமா?  என்பது தான் கேள்வி.

இறைவன்  அருளால்  எதுவும்  நிகழும்  என்பதை  ஆழ்வார்களும்  சிவனடியார்களும்  வாழ்வில்  அனுபவித்து
உணர்ந்ததைப் பற்றி நாம் நிறைய  கேள்விப்  பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.   பரமேஸ்வரன் அடியார்களுக்கு இவ்வாறு அருள் புரிந்ததை  திருவிளையாடல் என்கிறோம். 

 மணிவாசகர் வாழ்வில் நடந்த  ஒரே  ஒரு  அற்புத சம்பவத் தை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.   இந்த அதிசயம் நடந்தது சிதம்பரத்தில்.

மணி வாசகர் வாழ்ந்த காலத்தில் சோழநாடு பாண்டியநாட்டில் எல்லாம் சைவமதம் தக்க ஆதரவு பெறாமல் தவிக்க நேர்ந்தது. ஈழத்தில் இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து அவர்கள் மதத்தை பரப்பி சைவ  மதத்தை இழிவாக பேசினார்கள்.  தமிழ் அரசர்கள் சிலரும்   அவர் களை  ஆதரித்தார்கள். ஈழத்தில்  பௌத்த மதத்தின்  கை  ஓங்கி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  தென்னகத்தில் பரவ ஆரம்பித்தது.   பௌத்த மத  குருமார்கள்  சோழ தேசம் வந்து அரசனை மற்றவர்களை பௌத்தர்  களாக்க  வரப்போகிறார்கள். சைவ மதத்திற்கு  அழிவு நிச்சயம், என்ற பயம் எங்கும்  நிலவியது.

இந்த  பௌத்த   மதம் பரவாமல் தடுக்க  பௌத்தர்களை வாதத்தில் வெல்வது தான் அப்போதைய நடைமுறை. இதை சிறப்பாக நடத்த  தக்க சைவ   மத தலைவர் எவருள்ளார் ? என்று  தேடும் நேரத்தில் தான்  மணி வாசகர் சிதம்பரத்திற்கு நடராஜனை தரிசிக்க வந்தார். தில்லை மூவாயிரவ தீட்சிதர்கள்  இந்த சந்தர்ப்பத்தை விடுவார்களா?
நேராக  சோழ ராஜா விடம் சென்றார்கள் 

'மன்னா, சிறந்த சிவ பக்தர்  மாணிக்க வாசகர் என்பவர்  நமது ஊரான சிதம்பரம் வந்திருக் கிறார். தவச்சாலையில் தங்கி இருக்கிறார் . அவரால் பௌத்தர்களை வாதத்தில் வெல்ல முடியும்,தயவு செயது தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்''   என அரசனிடம் உணர்த்தி யாதும்  ராஜா ஒப்புக்கொண்டான்.    மணிவாசகரை  அழைக்க அவர்களை அனுப்பினான்.   சிதம்பரம்  தீக்ஷிதர்கள் மணிவாசகரை அணுகி  விஷயம் சொல்கிறார்கள்.
  
''என்ன சொல்கிறீர்கள்,   சோழ ராஜா, என்னை ஈழத்திலிருந்து வந்திருக்கும் பௌத்த குருவோடு வாதத்தில் ஈடுபட அழைக்கிறாரா?  என் இறைவனுக்கு நான் செய்யும் ஒரு தொண்டாக மன்னன் அழைப்பை மதித்து தில்லை நடராஜன் அருளோடு வருகிறேன்''

தில்லையில் ஒரு மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள், புலவர்கள், பண்டிதர்கள் சபையில் கூடி விட்டார்கள். பௌத்த குரு   படாடோபமாக தன்னுடைய சீடர்களோடு ஏராளமான ஓலைகள், , சுவடிகள் சகிதம் வந்து அமர்ந்து விட்டான். வாதத்தில் சைவத்தை தவிடு பொடியாக்கி விடுவோம் என்கிற நம்பிக்கை அவன் முகத்தில் ஆணவமாக தெரிந்தது.

எதிரே  ஒடிசலாக  காவி உடை அணிந்த  ஒரு ஒற்றை மனிதன் கையில் எதுவுமின்றி தான்  மட்டும்  வந்து உட்கார்ந்தி ருப்பதை பார்த்த பௌத்த குரு  ஏளனமாக  சிரித்தான்.

''ஹெ ...  ஹெ ...  ஹெ   .... இந்த பரதேசியா என்னை எதிர்ப்பவன்? சோழனுக்கு  பைத்தியம்  தான் பிடித்திருக்கிறது. எந்த  நம்பிக்கையோடு வாதவூரன்   என்கிற இவன்  என்னை வாதத்தில் வெல்வான்  என்ற  நம்பிக்கை அந்த பௌத்த குருவுக்கு. ..  இந்த  பரதேசி ஒன்றுமே  அறியாத  அன்றாடங்காய்ச்சியாக தெரிகிறானே !''  இவனை ஒரே கேள்வியில் ஊதித்தள்ளி சிறையிலடைக்கச் செய்கிறேன்''

''தீயாரைக் காண்பதுவும் தீது'' என்று தீர்மானித்த மணிவாசகர்   ''சோழ மன்னா நான் இந்த  பௌத்தகுருவை  நேரில் பார்த்து  வாதாட விரும்பவில்லை..  ஆகவே  எனக்கும் இவருக்கும் இடையே ஒரு திரை போடுங்கள்   எங்கள் வாதம் தொடரட்டும்''

பௌத்தகுருவின் கேள்விகள் பிறகு தொடர  திரையின் பின்னாலிருந்து  சைவ மத பண்பாடு, சிறப்புகளை  பதிலாக  மேற்கோள்களோடு  விளக்குகிறார்  மணிவாசகர். சபையில் அரசன் உட்பட அனைவரும்  அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய  ஞானியா  இவன்  என்று  பௌத்த குரு  திணறினான்.   வாதத்தில் சைவத்தின் கோட்பாடுகளை எதிர்க்க  அவனால்  இயலவில்லை.  உடனே  அவன்   சிவபெருமானை தூஷணையாக, இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டான். மணிவாசகர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் வாதத்தை முறையாக தொடராமல் இப்படியே இழிவாக பேசிக் கொண்டிருக்கவே மனம் நெகிழ்ந்த மணிவாசகர் மனதால் கலைவாணியாகிய  ஸரஸ்வதியை தியானித்தார்.

'அம்மா,    கலைவாணியே , நாவுக்கரசியே, நாமகளே , இந்த பாதகன் எம்பிரானை இழிவாக பேசுவது என் காதில் நாராசமாக இடிபோல் விழுந்து என்னை வாட்டுகிறதே. அவன்  நாவிலும்   உறையும் நீ எப்படி அம்மா இப்படி அவன் பேசுவதை அனுமதிக்க முடிந்தது? . என் ஈசன் மீது ஆணை, நீ அவன் நாவில் இதை சகித்துக் கொண்டு இந்த பாதகர்கள் நாவில் உறைவது இனியும் ஞாயமாகாது இல்லையா''

என்ன ஆச்சர்யம்!   அடுத்த கணமே பௌத்த குரு மட்டுமல்ல, அவனுடன் வந்த அனைத்து சீடர்களும் வாய் பேசமுடியாமல் ஊமையாகி விடுகிறார்கள். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வாதவூரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். அவரது தெய்வ சக்தியை உணர்கிறார்கள். எங்களை மன்னித்து, எங்கள் தவறைப்  பொருட்படுத்தாது மீண்டும் பேசும் சக்தியைத்   தந்து  அருளவேண்டும். எங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு சைவ மதத்தில் இணைகிறோம் .  அதை ஆதரிக்கிறோம்'' என்று  பேசமுடியாமல்  ஜாடையாக காட்டி  கதறுகிறார்கள்.

''சிதம்பரேசா,  நாவுக்கரசியே,  இந்த  பாதகர்கள்  தவறை உணர்ந்து  திருந்தி விட்டார்கள் என்ப தால்  தயை கூர்ந்து மன்னித்தருள வேண்டும். ''

மணிவாசகரின் வேண்டுகோளுக்கு  செவி சாய்த்த   நாமகள்  அருளால் பௌத்தர்கள் பேசும்  சக்தியை மீண்டும் பெற்று அங்கேயே சைவ மதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கி றார்கள்.

ஈழத்தை  ஆண்ட  பௌத்த ராஜா  தனது  மதத்தை தமிழ்  நாட்டில் ஸ்தாபிக்க  தான் அனுப்பிய   குருவும் சிஷ்யர்களும் தோற்று, ஊமையாகி பின்னர் மணிவாசகர்  என்ற சிவனடியார் அருளால் பேசும் சக்தி  பிறகு திரும்பப்பெற்று  சைவர்களானதை  அறிகி றான்.  ஈழ தேசத்து  ராஜாவுக்கு  ஒரே மகள்.   அவளும் பிறவி ஊமை.  அவளையும்  மணிவாசகர் பேச வைத்தால் தானும் தனது நாடும் சைவத்தில் இணையும்'' என்று  அறிவிக்கிறான்.

''அழைத்து கொண்டு  வாருங்கள் அந்த பெண்ணை ''என்கிறார் மணிவாசகர்

.தில்லை நடராஜன் சந்நிதியில் மீண்டும் பெருங்கூட்டம்.  அன்போடும் பாசத்தோடும் அந்த சிறிய   ஈழப் பெண்ணைப் பார்க்கிறார்.
''வா குழந்தாய்  வந்து என் அருகில் உட்கார் ''.
அவள்  மெளனமாக அவர் அருகே  உட்காரு கிறாள்.எதிரே ஈழ ராஜா,  சோழ ராஜா,  பௌத்த குருமார்கள், மற்றவர்கள்.  பௌத்தகுருவை அழைக்கிறார்.

''நீங்கள்  என்னைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இந்த சிறிய பெண்ணே பதில் சொல்வாள். கேளுங்கள் '' என்கிறார். தானே பௌத்தகுரு கேட்ட கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்கிறார். கணீரென்ற குரலில் இதுவரை பேசா  மடந்தையாக இருந்தவள் பட் பட்டென்று பௌத்த குருவின் கேள்விகளுக்கு சைவமதத்தின் பெருமையை கூறி வாதிடு கிறாள். வெல்கிறாள். அப்புறம் என்ன? ஈழ மன்னனும் மக்களும் சைவத்தை தழுவினார்கள். 

 இது என் கட்டுக்கதை அல்ல.  சரித்திரம்  இதை சொல்கிறது. பண்டைய நூல்கள் பொய்  சொல்ல  வேண்டிய  அவசியம் இல்லை.மணி வாசகர் கேட்ட  கேள்விகள்  என்ன?  அந்த பெண் கூறிய  பதில் என்ன ?  திருவாசகத்தில்  மணிவாசகரின் திருச்சாழல் பதிகங்கள்  தான்  இந்த  வினா விடையாக காட்டுகிறது.  கொஞ்சம்  சாவகாசமாக  அதை முடிந்தால் எழுதுகிறேன்.

   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...