Friday, December 24, 2021

THIRUVEMBAVAI

 திருவெம்பாவை -  நங்கநல்லூர் J K  SIVAN 

மார்கழி 10ம் நாள்.

10 ஊர் ஏது , பேர் ஏது உற்றார் யார், அயலார் யார்?

மணிவாசகர் என்ற பெயர் ரொம்ப பொருத்தமாக அமைந்த ஒரு சிவபக்தர், சிவனடியார், மாணிக்கவாசகர்.   வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் இதை செய்ய முடியாது.

சொல்லில் எழுத்தில் பேச்சில், பக்திரசம் பொங்க வேண்டுமானால் உள்ளே மனம், அடுப்பில் ரசம் போல் அன்பு மணத்துடன் கொதிக்க வேண்டும். அப்போது தானே பக்தி ரஸம் பொங்கி வழியும். அப்படிப்பட்டவர் தனது உணர்ச்சிகளை அப்படியே  படம் பிடித்தாற்போல் எழுத  வேண்டுமானால் மீண்டும்   மணிவாசகராகர்  மாதிரி  பிறக்கவேண்டும்.  அது முடியாது என்பதால்  மணிவாசகரே  மீண்டும் பிறக்கவேண்டும்.

அதோ திருவண்ணாமலையில் பெண்கள் கூட்டமாக வீடு வீடாக சென்று மற்ற பெண்களை துயில் எழுப்புகிறார்கள். தானே அவர்களில் ஒருவளாக அவர்கள் பாடுவதை தான் தன் எழுத்தில் படம் பிடித்து காட்டுகிறார் மணிவாசகர். பாடலின் அர்த்தம் எளிதில் புரிகிறது. தெள்ளு தமிழில் தெளிவாக எழுதியிருக்கிறார்: 

 இது  திருவெம்பாவையில்  பத்தாவது  பாடல்:

 10. ''பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். ''

மாணிக்கவாசகர் எப்போது ஆண்டாளை சந்தித்தார்?  
 இருவர் காலமும்  வேறு வேறு ஆயிற்றே? 
எப்படி இருவரும் சொல்லி வைத்தாற் போல் மார்கழி குளிரில் சுகமாக போர்த்திக்கொண்டு தூங்கும் மற்ற பெண்களை எழுப்ப முடிவெடுத்தார்கள்? 
வீடு வீடாக சென்று கதவை தட்டலாம் என்று யோசனை சொன்னது யார்? 
இதனால் நமக்கெல்லாம் ஒரு பெரிய நன்மை கிடைத்து விட்டது.    ஒருபக்கம் ஆண்டாளின் திருப்பாவை. இன்னொரு பக்கம் மணி வாசகரின் திருவெம்பாவை. என்ன சுகம்.!

இந்த 10 வது திருவெம்பாவை பாடல் அழகாக அமைந்துள்ளது.  அது என்ன சொல்கிறது:

''ஐயனே, ஆடலரசனே,  மேலே  ஏழு உலகம். ;கீழே  ஏழு உலகம்.   நினது திருவடிக் கமலங்கள், பாதாளம் எனும் கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய் ஊடுருவி நின்றது.   ஆழம் காழமுடியாத அளவு படாதவையாய் இருக்கிறது.   கீழே  ஏழு மேலே  ஏழு பதினாலு லோகங்கள் என்பார்கள்.   திருமாலான விஷ்ணுவால் கூட கண்டு பிடிக்க  முடியவில்லையே. மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட உனது திருமுடியோ, வானிலுள்ள எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அடி முடி காண முடியா ஸ்தாணு அல்லவா நீ.? அறியமுடியாத பிரமன் கண்டதாக பொய் அல்லவோ சொல்லவேண்டியதாயிற்று.  பிரம்மன் எப்போதுமே  கொஞ்சம்  டிஃபரென்ட்   different   டைப்.
 பரமேஸ்வரா,  ஒரே வகையானவன் அல்லவே நீ. ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; மறுபக்கம் சர்வ லோக புருஷனான நீ.   வேத  முதல்வன். விண்ணுலகத்தாரும், மண்ணுலகத் தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் குழாம் சூழ நடுவாக இருப்பவன்''.

தூங்கும் பெண்களே, இப்படிப்பட்ட சிவபெருமானது ஆலயம்  உள்ள  ஊரில் வசிக்கும் , குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது? இதனால் தான் ஒரு அருமையான பாட்டு எனக்கு பிடித்து அடிக்கடி பாடுவேன். ''தந்தை தாய் இருந்தால் உனக்கிந்த தாழ்வெலாம்.....''  ஆஹா   இசைக்குயில்   N C வசந்தகோகிலத்தின் குரலில் இந்த பாடல் எவ்வளவு திவ்யமாக இருக்கும் கேட்பதற்கு.!!

உத்தராயணம்  ஆறு மாச காலம்,  தை முதல் ஆறுமாதம் ஆனி வரை தொடரும். அத்தனையும் ஒரு பகல் வேளை --தேவர்களுக்கு! தக்ஷிணாயனம் மற்ற ஆறுமாதம். ஆடி முதல் மார்கழி வரை... அது தேவர்களின் ஒரு இரவு வேளை-- அதாவது நமது ஒரு வருஷம் அவர்களுக்கு ஒரு நாள்!

ப்ரம்ம முஹூர்த்தத்துக்கு   நேரமே பார்க்க தேவையில்லை. விடிகாலை 4லிருந்து காலை 6 வரை. சூரியன் தலை தூக்கும் முன்பு. அதுவும் மார்கழியில் இது உசத்தி.  ஆண்டாள்  மணிவாசகர்  இருவருமே தேர்ந்தெடுத்த நல்ல நேரம்.

கல்வி வேறு. அருள் வேறு. முதலாவதை வைத்து இறைவனை தேட வேண்டும். இரண்டாவது இறைவனால் பெறப்படும் பரிசு. இப்படி அருள் பெற்றவர்களில் முதன்மையானவர் சைவ சமயத்தில் மணிவாசகர்.    திருவாதவூரர்.   அருள் பொதிந்த  அவருடைய  வார்த்தைகள் மணி மணியாக கோர்க்கப்பட்டவை. அவருடைய வாசகம்  அதனால்  ''திரு ''வாசகம் என்று பெயர் தாங்கி அவரை மணி வாசகராக்கியது. கடல் மடையென்ன அவர் பாடல்களில் சிவ பெருமா னையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களை நமக்கருளியவர். நெஞ்சை உருக்கும் பக்தி கொண்ட வார்த்தைகள். ஆகவே தான் திருவாசகம் என்ற பக்தி பாடல்களை பற்றி ''திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்று எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. .

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே மார்கழி மாதம் விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் முக்கியமாக சொல்லப்படுகிறது. மணமாகாத கன்னிப்பெண்கள் காத்யாயினி விரதம் இருந்து , அதிகாலையில் ஒருவரை ஒருவர்  எழுப்பி, ஒன்றாகக் கூடிக்  கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கும் நிகழ்வு. .

மாணிக்க வாசகர் திருவெம்பாவை யில் இலக்கிய ரசத்தை பிழிந்து பக்திரசத்தோடு சேர்த்து சுவை கூட்டி அளிக்கிறார். சிவபெருமான் மீது எல்லையற்ற பக்தி ஒருபுறம். அவனது அருள் அதனால் .விளைவது மறுபுறம். மொத்தமே திருவெம்பாவைப் பாடல்கள் 20 தான்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...